ஸ்ரீதர் மணியன்
அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றுமே சுவாரசியத்தைத் தருபவை. இலகுவான, சிரமமற்ற வாழ்க்கைக்கு அடித்தளமமைத்துத் தருபவை. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல சாதனங்கள் முதன் முதலாக எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றை உண்டாக்கியோர் அதற்காக மேற்கொண்ட முயற்சிகள், பட்ட சிரமங்கள், அவமானங்கள், வலிகள் போன்ற கூறுகளை எளிய நுகர்வோன் அறியமாட்டான். இருப்பினும் இன்றைய துரித வாழ்வில் அவனுக்கு மேன்மேலும் இத்தகைய சாதனங்கள் அவசியமாகின்றன.

பதினைந்து தலைப்புகளில் நம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் பல செயல்களுக்கும் பயன்படுத்தும் சாதனங்களுக்குமான விளக்கங்களும் இப்புத்தகத்தில் எளிமையாகக் கூறப்பட்டுள்ளது நூலின் சிறப்பு. இப்புத்தகம் சிறுவர்களுக்காக நடைமுறை அறிவியலை அறிமுகம் செய்கிறது. நூலாசிரியர் முனைவர் சசிகுமார் மத்திய அரசு நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிபவர். தனது இளம் வயதில் நூல் நூற்கக் கற்றுக் கொடுத்த தனது பெற்றோர்களுக்கு இதனை சமர்ப்பணம் செய்துள்ளார். கைத்தறிக்கான வடிவமைப்பினை பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜக்காடின் பலகால அயராத முயற்சியே சார்லஸ் பாபேஜின் கணிப்பொறிக்கான அடித்தளமமைத்தது என்ற செய்தி எவரும் அறியாதது.
அதுபோன்றே எளிய மக்களின் வாகனமாக இருந்த மிதிவண்டி குறித்த பகுதியும் குறிப்பிடத்தக்கது. சாதாரண மிதிவண்டியின் சக்கரங்களில் உள்ள காற்றின் அழுத்தமானது மகிழுந்தான கார் சக்கரங்களில் உள்ள காற்றின் அழுத்தத்தைக் காட்டிலும் அதிகம் என்ற தகவல் வியப்புக்குரியது. சாதாரண மிதிவண்டி இன்று பந்தய வீரர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் சைக்கிள் வரை எவ்வாறு பல்வேறு மாற்றம் கொண்டுள்ளது என்பதையும் சசிகுமார் விவரிக்கிறார். நிகழ்தகவு குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்கது. நிகழ்தகவின் ஆலயமணி தத்துவத்தின் அடிப்படையினை எளிய முறையில் விளக்குவதுடன் அன்றாட வாழ்வில் அது எவ்வாறு பயனாகிறது என்ற தரவுகள் சிறப்பாக கூறப்பட்டுள்ளன.
குளிர்சாதனப் பெட்டியின் அடிப்படை அதில் வைக்கப்படும் பொருட்களை ஏன் துணியில் சுற்றி வைக்க வேண்டும்? வாழைப்பழத்தினை எவ்வாறு வைக்கவேண்டும் என பல்வேறு தகவல்கள் ஒரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல பொருட்களில் பொதிந்துள்ள அடிப்படை அறிவியலை சுவைபட இப்புத்தகம் கூறுவது சிறப்பு. உப்பிற்கான பெயர்க் காரணம், அது பயன்பாட்டிற்கு வந்த தொடக்கக் காலங்களில் அது எவ்வாறு மதிப்பிற்குரியதாக இருந்தது, அதன் வேதியியல் பண்புகள், கூறுகள் என உப்பு குறித்த பகுதி பேசுகிறது.

சமகால விவசாய முறையான திரிமுனை நீர் மேலாண்மை குறித்த கட்டுரையும் மிகவும் பயனுள்ளது. இத்தகைய வேளாண் முறை அடுக்குமாடி குடியிருப்புகளிலும், வீடுகளின் மேல் காலியாக உள்ள குறைந்த இடப்பரப்புகளிலும் குறைந்த நீரினைப் பயன்படுத்தி அன்றாடத் தேவைகளுக்கான காய்கறிகளை உண்டாக்கிக் கொள்வது எப்படி எனக்கூறுகிறது. இஃது வளரும் குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக மட்டுமன்றி அவர்களுக்கு விளைவித்தல் என்னும் கலையினையும் அறிமுகப்படுத்துவதாக உள்ளது.
அரசின் தோட்டக்கலைத் துறையும் இந்நாட்களில் விதை, நார்க்கழிவு கட்டிகள், அதற்கான நெகிழிப் பைகள், சிறு அளவில் அதற்குத் தக்கவாறான ஊட்டச்சத்துகள் என அனைத்தையும் சிறு தொகை பெற்றுக் கொண்டு இதனை ஊக்குவிப்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. மேலும் காரட் மற்றும் கேரட் என்பதன் அடிப்படைகள் குறித்துக் கூறும் பகுதியும் உண்டு. நிறைவாக உடல் வெப்பநிலை, அதன் செயல்பாடுகள் என்பதாக இக்கட்டுரை உள்ளது.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு வாசகர்களுக்கும் பயனாக வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் இப்புத்தகத்தினை சசிகுமார் உருவாக்கியுள்ளார். இவ்வாறான குறுநூல்கள் வளரும் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவது மிக்க அவசியமானதாகும். இதனை சுவைபட எடுத்துக்கூறி அவர்களை வாசிக்கத் தூண்டுவதும் செயல்படுத்தப்படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் நூலாசிரியரின் நோக்கம் நிறைவாகும்.
சசிகுமாரின் முதல் முயற்சியான அவரது இந்த புத்தகத்தினை புக்ஸ் ஃபார் சில்ரன் (BOOKS FOR CHILDREN) வரிசையில் பாரதி புத்தகாலயம் இந்நூலினை வெளியிட்டுள்ளது. சசிகுமார் மற்றும் பாரதி புத்தகாலயத்தின் இம்முயற்சி பாராட்டுக்குரியது
