சா. ஜார்ஜ்டேவிட்
உலகத்தின் ஆகச்சிறந்த இலக்கியங்கள் அனைத்தும் கடந்த கால நினைவுகளுடன் குறிப்பாக, குழந்தைப் பருவத்தை மையமிட்டே இருக்கும். எனவே இலக்கியத்தின் மையமாகக் குழந்தைப் பருவமும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தைக் குறித்து தனித்த எழுத்துகள் ஏன் அதிக அளவில் எழுதப்படுவதில்லை? அப்படி எழுதினாலும் அவை ஏன் பெரிதளவில் விவாதிக்கப் படுவதில்லை. இத்தகையச் சூழலில் எழுத்தாளர் சி.முத்துகந்தனின் “இன்னும் கேட்கலாம்” மற்றும் “குழந்தைகளைப் புகழுங்கள்” எனும் சிறுவர் பாடல்களும் மற்றும் சிறுவர் கதைகளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளாக உள்ளன.
எத்தனையோ சிந்தனைப் போக்குகள் இருந்தாலும் பொதுவாக அவைகளை மூன்று விதமாக பிரிக்கலாம். மறுமலர்ச்சி காலத்திற்கு முந்தைய சிந்தனை போக்கானது கடவுளை மையமிட்டே (Theo-Centeric) இருந்தது. இங்கு மனிதனும் இயற்கையும் வெகு தொலைவில் இருந்தன. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு இத்தாலியில் தோன்றிய மறுமலர்ச்சி சிந்தனைகள் அவை மனிதனை மையமிட்டு (Anthropo-Centeric) இருந்தது. இங்கு மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியது.

உலகமயமாக்கல் பின்னர் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் என்னும் கொள்கைகள் மனிதனுக்கும் இயற்கைக்குமான மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் இக்காலகட்டத்தில்தான் பெரிதளவில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் மட்டுமில்லாமல் எப்பொழுதும் இயற்கையை மையமிட்டே(Eco-centeric) நம்முடைய சிந்தனை போக்கு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் மானுடத்தின் தேவையாகவும் இருக்கிறது. முத்துகந்தனின் இவ்விரண்டு நூல்களும் இயற்கையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியே மானுட நல்லறத்தை இயல்பாகப் பேசுகிறது.
18ஆம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையாளரும் மற்றும் குழந்தை கல்வியின் முறை குறித்து அதிகம் எழுதியவருமான ரூசோ, குழந்தைகள் கல்வி முறையானது அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதன் வாயிலாகவே கற்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இவ்விரு குழந்தை நூல்களைப் படிக்கும் பொழுது அவர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பி அவைகளை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுகிறது. இதன் வாயிலாக அவர்கள் விடைகளையும் அறிய முயல்வார்கள். அதுமட்டுமின்றி சிறுவர்களையும் இந்நூல் படைப்பாளர்களாக்குகிறது.
பெரியவர்கள் படிக்கும் பொழுது அவர்களைக் குழந்தை பருவத்திற்கு எடுத்துச்செல்கிறது. அத்துடன் இப்பொழுது அவர்கள் இருக்கும் சூழலுக்கும் கடந்த காலத்திற்கும் இருக்கும் இடைவெளிக்கான காரணத்தையும் தீர்வுகளையும் சிந்திக்க வைப்பதுடன் பார்வையாளரையும் எழுதவும் வைக்கிறது.
இவ்விரு நூல்களும் சமகால அரசியல் சூழலியத்தின் (political ecology) முக்கியத்துவத்தையும் அதன் எழுத்துகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் இச்சூழலில் இதன் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.
கலையும் அறிவியலும் எழுத்தில் மட்டும் ஒன்றாக இருக்கிறது. சொல்லப்போனால், யதார்த்தத்தில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே இவ்விரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நூலில் சில கதைகள் அறிவியல் புனைவாக (Science-fiction) இருக்கிறது. அவை படிப்பவர்களையும் அவ்வடிவில் எழுத வைக்கிறது.
அறிவியல் புனைகதைகள் என்றால் பிரமாண்டம் என்னும் பிம்பத்தை, லாவகமாக அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி அதனைச் சிதைக்கிறது.
தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத் தளங்களின் வாயிலாக முதலாளித்துவம் அதன் சந்தை பொருட்களை விற்கிறது. தாத்தா பாட்டிகள் அதிகம் காணாமல் போனதால் அவர்கள் இடத்தை கார்ட்டூன்கள் நிரப்புகிறது.
இந்தியா போன்ற நாடுகளில் முதலாளியத்தை பார்க்கும் பொழுது சாதியத்தையும் சேர்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் முதலாளித்துவம் எப்படி தன்னுடைய சந்தை பொருட்களைத் தொலைக்காட்சியின் வாயிலாக விற்கிறதோ? அதுபோலவே சாதியவாதிகள் வர்ணாசிரம தர்மத்தைப் பரப்பி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவார்கள்.
இந்தியாவில் நாம் காணும் பெரும்பாலான கார்ட்டூன்கள் அதித புனைவுகளாகவும் உருவகேலிகள் அதிகமாகவும் இருக்கிறது. இவை வர்ணாஸ்ரம தர்மத்தின் பின்னணியில் இயக்கப்படுகிறது. அறிந்தே குழந்தைகளிடையே மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி அந்நியமாக்கிறது. இங்குதான் எதிர்க் கதையாடலின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.

இந்நூல்களும் இவ்வமைப்பில் அமைந்திருக்கின்றன. இவை மானுட நல்லறத்திற்கு எதிரான எதிர் கதைகள்.குழந்தைகள் இயல்பிலே பகுத்தறிவுவாதிகள். அவர்களைச் சிதைக்கும் பிற்போக்குத் தனங்களை எதிர்க் கதையாடல் வாயிலாக அவர்களின் இயல்புக்கே முற்போக்காக இட்டுச்செல்கிறது இவ்விரு நூல்கள்.
காணாமல் போன கரப்பான் பூச்சிகளும் சிட்டுக் குருவிகளும், தொழிற்சாலைகளும் வீடுகளுமாக மாறிய ஏரிகளும் குளங்களும். அன்பு அறம் மானுட நல்லறம், படைப்பாக்கத்தின் முக்கியத்துவம், அம்பேத்கர் பெரியார் தேவையையும், அறிவியல் தாய்மொழி முக்கியத்துவத்தையும் என அனைத்து தளங்களிலும் படிக்கும் வாசகர்களுடன் ஒரு தத்துவார்த்த உரையாடலை இவ்விரு நூல்களும் நிகழ்த்துகின்றன.