சா. ஜார்ஜ் டேவிட்
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் சம்பவங்கள். இவை இன்பம், துன்பம், கோரம், சிரிப்பு, அழுகை, ஏளனம், எள்ளல், கோபம், ஆசை அருவருப்பென அனைத்தும் குரோதங்களுடனும் உள்ளடக்கியிருக்கும். இதனை தத்ரூபமாகவும் சுய விமர்சனத்தோடும் அணுகி வாசகர்களை நெருடலுக்கு உள்ளாக்கியிருக்கிறது இமையத்தின் சமீபத்திய நாவலான
“இப்போது உயிரோடிருக்கிறேன்”.

இந்நாவல் மானுடமற்ற மருத்துவமனைகள், லட்சியமற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் விஷமாக மாறிய உணவுகள் இவைகளின் மீது காறி உமிழச் செய்கிறது. மேலும் படிப்பவர்களை சமூக அநீதிக்கு எதிராக வெகுண்டெழவும் தூண்டுகிறது.
இருத்தலியல், அபத்தவியல் தன்மைகளுடன் நாவல் தொடங்குகிறது. “தனிமை வெறும் கட்டாந்தரையாக…” என்ற சொற்களின் வாயிலாக நாவலுக்கான நிலப்பரப்பைத் தேர்வு செய்கிறார் இமையம். அதேபோல முதல் அத்தியாயத்தில் வரும் கனவினை பிராய்டின் கனவுகளின் உளப்பகுப்பாய்வோடு பொருத்திப் பார்க்க முடியும். நாவலின் மொத்த கதையும் உளவியல் ரீதியாக நம்முள் ஆழப் பதிகிறது.
மருத்துவமனையில் மூளைக்குச் சரிவர ரத்தம் போகாததால் தலை பெரிதாகி அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தையின் அழுகை, அதனைச் சமாளிக்க தாய் படும் கஷ்டம். ஒருசில வார்த்தைகளாகவே மட்டும் வரும் இந்நிகழ்வின் வழி குழந்தைக்கும் பெற்றோருக்குமான உறவு என்ன என்பதை அறிய வைக்கிறார். ஏன் குழந்தைகள் பெற்றோர்களுக்குக் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதை இந்நாவலில் ஒரு தத்துவார்த்த உரையாடலாக முன்வைத்து நகர்கிறார்.
அன்புக்கான இலக்கணத்தைக் கோபத்தின் வாயிலாகவும் கோபத்திற்கான இலக்கணத்தை அன்பின் மூலமாகவும் செலுத்த முடியும், இப்படி அன்புக்கான இலக்கணத்தை கட்டுடைத்தல் செய்து அன்பாகவே நெகிழ வைக்கிறது இந்நூல்.
‘டேய்’ என்ற சொல் ‘என்னப்பா தம்பி…’ என்று மாறுகிறபொழுது தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்ன என்பதனை இந்த இரண்டு சொல்லிலே மிக ஆழமாகப் புரிய வைக்கிறது.
“தன்னுடைய சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தார். பணத்தைவிட மருத்துவமனைக்குக் கட்டணம் கட்டிய பண ரசீதுகள் அதிகமாக இருந்தன” நாவலில் வரும் இவ்வரிகள் மக்களின் தேவைக்காக இருக்க வேண்டிய மருத்துவம் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டிருக்கிறதை அறியச் செய்கிறது.
உலகமயமாக்கலுக்குப் பின்னர் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் மருத்துவம், கல்வி போன்ற அனைத்து அடிப்படைத் தேவைகளும் தனியார்மயமாக்கலாக ஆக்கப்பட்டு வருகிறது. இவைகள் முழுக்க பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அங்கு அறத்திற்கு இடமில்லை. அன்பு, அர்ப்பணிப்பு, சேவை என்றிருந்த மருத்துவமும் கல்வியும் இன்று பணம்தான் என்றாகிவிட்டது.

எழுத்தாளர் இமையத்தின் எழுத்துகள் ஒரு சில பக்கங்களிலேயே நம்மை கதை களத்தின் மிக அருகாமையில் இழுத்துச்செல்லும். அந்நிகழ்வை நாமே நேரில் பார்த்தது போல் தோன்றுமளவிற்கு இழுத்து குந்த வைக்கும். குறிப்பாக மனித மனங்களுடன் உரையாடச்செய்யும். இது இமையத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். இந்நாவலில் இவ்வசியம் கூடுதலாக வெளிப்பட்டிருப்பது நூலின் கூடுதல் சிறப்பு.
மனித மனங்களை உயிர்ப்புடன் பதிவு செய்வதால் காலம் கடந்தும் எப்பொழுதும் அவை உயிர்ப்புடன் இருக்கும். இதற்கு “இப்போது உயிரோடிருக்கிறேன்”சான்று.
மரணம் அவ்வளவு எளிமையாக நம்மைக் கடக்காது. பெத்தவனில் பழனியின் மரணம். ஆறுமுகத்தில் தனபாக்கியத்தின் மரணம். கவர்மென்ட் பிணத்தில் ஐய்யனாரின் மரணம்.
இவைகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. எங்கதெயில் கமலாவின் கழுத்து வரை சென்ற பிளேடைப் பின்னர் அப்படியே கீழேபோட்டு விட்டுச் சென்ற விநாயகம். அடிப்படையில் எழுத்தாளர் இமையம் ஆங்கில இலக்கிய மாணவரென்பதால் என்னவோ ஷேக்ஸ்பியரின் துன்பியலின் தாக்கம் அவருடைய எழுத்தில் கொஞ்சம் தூக்கலாகத் தென்படுகிறது.
இவற்றை விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். இது ஒரு விதமான ஏக்கத்திற்கு வேண்டுவது போல உள்ளது. அவை நம்மை கண்ணீரில் நனைக்கும், ஆனால் அவை நம்மை அமைப்பாக்குமா அரசியல்படுத்துமா என்ற கேள்விகளை எழுப்புகின்றன. அவரின் மனித மனங்களை எளிதில் வசப்படுத்துகிற எழுத்து, நம்மை இவையனைத்தையும் மறக்க வைக்கிறது. இருந்த போதிலும் இவை கருத்தில் கொள்ள வேண்டியவை.
அவரால் இதனைத் தாண்டியும் எழுத முடியும் என்பதற்கு இந்நூலில் சில அத்தியாயத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர் என்று ஊர் பெயர்களை வைத்து அவர் செய்யும் பகடை நகைச்சுவை உணர்வுக்கு சான்றாகும்.