ராஜசங்கீதன்
தன்னை யாரென வரையறுக்கும்போது,
“இரண்டு வகையான கம்யூனிச அறிஞர்கள் உண்டு. சங்கங்கள் முதலிய கட்சியின் உள்மட்ட வர்க்க அமைப்புகளில் பணிபுரிபவர்கள் ஒரு தரப்பு. பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி பரந்தளவு வெகுஜனப் பரப்புகளில் இயங்குவோர் இன்னொரு தரப்பு. ஒவ்வொரு தரப்பும் அவரவரின் வேலைக்களத்துக்கு ஏற்ப, கட்சித் திட்டத்தின் வழிகாட்டலில் கட்சிக்கு உபயோகப்படும் அறிவை உருவாக்க வேண்டும்.
அந்த வகைப்பாடின்படி நான் பாகிஸ்தானில் இருக்கும்போது கம்யூனிச அறிஞராக இருந்திருக்கிறேன். கட்சி உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு நான் உறுப்பினராக இல்லை. இத்தகைய வகைப்பாடில் இருப்பவர்களைக் குறிக்க ஒரு சொல்லாடல் உண்டு. ‘சக பயணி’ என்கிற சொல்லாடல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சக பயணியாக இருந்தவர் அய்ஜாஸ் அகமது. கடந்த மார்ச் 9ம் தேதி இயற்கை எய்தினார். அவரின் வாழ்வும் பணியும் நமக்களிக்கும் கொடை ஏராளம்.
1941ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர் அய்ஜாஸ். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது அவரின் குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். பிறகு இந்தியாவுக்கு வந்து இருபது வருடங்களுக்கு மேல் வசித்தார். வருகைதரு பேராசிரியராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். சோசியல் சயிண்டிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் பத்திரிகைகளிலும் எழுதி வந்தார். Leftword Books பதிப்பகத்துடனும் தொடர்ந்து இயங்கி வந்தார்.
இந்தியா இடதுசாரி இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்கியவர். பல உரைகள் வழங்கியிருக்கிறார். இலக்கிய விமர்சனங்கள் அளித்திருக்கிறார்.
பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தபோது தனக்கு ஒவ்வாத அல்லது பரிச்சயமில்லாத ஒரு நிலத்துக்குச் செல்வதாகவே அய்ஜாஸ் உணர்ந்திருக்கிறார். பாகிஸ்தானில் கல்விக்காலம் அவருக்கு திரும்பத் திரும்ப இந்திய நினைவுகளையே கொண்டு வந்திருக்கிறது. பிறகு பால்யகாலத்தில் படித்த உருது எழுத்துகளின் பக்கம் கவனம் திரும்பியது. உருது இலக்கியம் படைக்கத் தொடங்கினார். உருது மொழிபெயர்ப்புகளை செய்தார்.
பாகிஸ்தானில் கம்யூனிச இயக்கங்களுடன் இயங்கி இருக்கிறார். அரசியல் சூழல் கொந்தளிப்புக்கு உள்ளாகி, இஸ்லாமியவாதம் வளர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்படத் தொடங்கியதும் அமெரிக்காவுக்குச் செல்கிறார். அங்கு மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்துகிறார். எனினும் அரசியலைத் தவிர்க்க முடியவில்லை. வியட்நாம் போரெதிர்ப்பு இயக்கங்களிலும் கறுப்பின உரிமைப் போராட்டங்களில் பங்கு பெறுகிறார்.
பாகிஸ்தானில் மதவாதம் தலையெடுக்கக் காரணமான அரசியல் நிகழ்வுகளையும் அதை ஏகாதிபத்தியம் இயக்கும் பாங்கையும் ஒருசேர அவதானிக்கும் சூழலை அய்ஜாஸுக்கு வாழ்க்கை வழங்குகிறது. அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறார் அய்ஜாஸ். அரசியல் மட்டுமென இன்றி, இலக்கியம் பற்றியும் எழுத்து பற்றியும் தேர்ந்த புரிதலும் தெளிந்த சிந்தனையும் அய்ஜாஸுக்கு இருந்தது. மிர்சா காலிப் என்கிற உருதுக் கவிஞரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வேலை அய்ஜாஸ் அகமதுக்கு வருகிறது.
அய்ஜாஸ் அகமது உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். ஆனால் காலிப்பின் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் ஒரு பிரச்சினை இருப்பதாக அவர் நினைக்கிறார். உருது மொழிக்கே உரிய பிரத்யேக நடை மற்றும் வாழ்வியல், மொழிபெயர்ப்பில் காணாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார். அப்பிரச்சினையை சரிக்கட்டவென ஓர் உத்தியை அவர் பயன்படுத்துகிறார்.
காலிப்பின் கவிதைகளை ‘கறார் மொழிபெயர்ப்பு’ செய்ய முடியாது என சொல்லி விடுகிறார் அய்ஜாஸ் அகமது. பிறகு அக்கவிதைகளை ஆங்கிலத்தின் சிறந்தக் கவிகளாக இருந்த சிலருக்கு அனுப்பி, கவிதையின் கருவை வெளிப்படுத்தும் ஆங்கிலக் கவிதைகளை எழுதக் கேட்கிறார். அக்கவிதைகளை அவர் மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிடாமல் ‘பிரதிகள்’ எனக் குறிப்பிடுகிறார்.
அதற்குக் காரணமாக அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார். இன்றைய மொழிபெயர்ப்பாளர்களுக்கு அவசியப்படக் கூடிய காரணம்:
“மொழிபெயர்க்கும்போது அடிப்படையில் கவிதையின் பொருளே முக்கியம். பிறமொழிகளில் அப்பொருள் சென்று சேர வேண்டியதே முக்கியம். அதற்காக நேரடியாக மொழிபெயர்ப்பதாக சொல்லிக்கொண்டு கவிதையின் பொருளை சிதைத்துவிடக் கூடாது. பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு மொழிபெயர்க்கப்படும் மொழியின் நயத்துடன் கவிதை எழுதப்பட வேண்டும். ஏனெனில் ஒரு நல்லக் கவிதையின் வேர்கள் அதன் சொந்த மொழியில்தான் இருக்க முடியும்.”
மதங்களையும் அடையாளங்களையும் உடைத்த நவீன காலம் மீண்டும் சிதைக்கப்பட்டு மதங்களும் அடையாளங்களும் ஏகாதிபத்தியத்தால் வளர்த்தெடுக்கப்பட்டன. அதற்குப் பின்நவீனத்துவம் என்ற கோட்பாட்டு முலாம் பூசப்பட்டது. அய்ஜாஸ் அகமது பின்நவீனத்துவக் கோட்பாடு கொண்டிருக்கும் அரசியலை உலகளாவிய அரசியல் வரலாற்று அனுபவத்துடன் தன் எழுத்துகளில் அணுகுகிறார்.
கலாச்சாரவாதம், அடித்தள மக்களியல் என்றெல்லாம் மச்சம் வைத்து மாறுவேடத்தில் உலவும் ஏகாதிபத்தியத்தை தோலுரிப்பதே வாழ்க்கையின் பெரும் பணியாகச் செய்தார். அதே நேரத்தில் பெரும்பாலான கம்யூனிஸ்டுகளிடையே இருக்கும் கோட்பாட்டுவாதத்தையும் விமர்சிக்கிறார். ‘சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடத்தில் இப்போது நேரும் அடிப்படைப் பிரச்சினைகளை, மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டியதே’ ஓர் மார்க்சிய அறிஞனின் பணி என்றார்.
In Theory, On Communalism and Globalization, A World to Win, Iraq, Afghanistan & Imperialism of Our Time, In the Mirror of Urdu, India: Liberal Democracy And The Extreme Right உட்பட பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மார்க்சிய அறிஞர் விஜய் பிரசாத்துடன் அவர் பேசிய உரையாடல் Nothing Human is Alien to Me என்கிறப் பெயரில் 2020ஆம் ஆண்டு புத்தகமாக வெளியானது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு, ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ என்கிற பெயரில் பாரதி புத்தகாலய வெளியீடாக இந்த வருடம் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து அரசியல் மற்றும் இலக்கியத்தின் அரசியலென எழுதி வந்தவர் தன்னுடைய பணியை அவரின் வாழ்வுக்கான செய்தியாகவே நமக்களித்துச் சென்றிருக்கிறார்:
‘ஒரு மார்க்சிய அறிஞராக நான் செய்ய முயன்றது இதைத்தான்: எல்லா எல்லைகளையும் தாண்டி இயங்க வேண்டும். குறுகிய தன்மையில் இயங்கும் ஏட்டறிவு நிபுணனாக இருக்க நான் விரும்பியதில்லை.
கிராம்சி குறிக்கும் பொது அறிஞராக (general intellect) இருந்து, மானுட விசாரணை சார்ந்து எல்லாத் துறைகளிலும் சமூக அறிவியல்கள் மற்றும் மனிதவியல்கள் என்ற பேதமின்றி எழுதவும் வாசிக்கவுமே விரும்பியிருக்கிறேன். மேட்டுக்குடி கலாசாரத்தில் கருத்தியல் போராட்டத்தை நடத்துவது முக்கியமென கருதியிருக்கிறேன். அதே போல முற்போக்குக் கருத்துகளுக்கான பரந்துபட்ட கலாசாரத்தை தக்க வைக்க உதவுவதையும் முக்கியமான பணியாக கருதி மேற்கொண்டிருக்கிறேன்.
நம் காலத்தின் மையப் பிரச்சினைகளில் ஒருவரின் புரிதல் மேம்பட, நீடித்த குறுக்கீடும் நிரந்தர பங்கேற்பும் தேவையென நான் நம்புகிறேன். மார்க்சின் நுட்பமாக எழுத்தாக இருந்தாலும் சரி, இந்துத்துவத்தின் சிக்கலான பணிகளிலானாலும் சரி எதிலும் முடிவான புரிதல் என ஒன்று கிடையவே கிடையாது. எப்போதுமே ஒருவர் ஒரு விஷயத்தை மீண்டும் திரும்பி இன்னொரு பார்வையில் பார்க்க வேண்டும். புதிதாய் சிந்திக்க வேண்டும். ஆழ்ந்த புரிதல் கொள்ள வேண்டும்.’
