
“Fire of Sumatra’ நாவலாசிரியர் ரமணகைலாஷ்-வுடன் நேர்காணல்
- சுற்றுச்சூழல் வன உயிரிகள் பாதுகாப்பு குறித்து எழுதும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
சுற்றுச்சூழல், வன உயிரிகள் குறித்த ஆர்வம் எனக்குள் இயல்பான உணர்வாக பதிந்து உள்ளதாகவே உணர்கிறேன்.
வன உயிரிகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், கடல் உயிரினங்கள் குறித்த விவரணைப் படங்கள் (Documentaries) புத்தகங்களை சிறு வயதிலேயே பார்க்கவும், படிக்கவும் துவங்கினேன் . 8 வயது முதலே இதுகுறித்து எழுத ஆரம்பித்தேன். - “Fire of Sumatra” நாவலில் புலிகளின் பெயரை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?
இந்தோனேசியாவில் புலிகளுக்கு பெயர் வைக்கும் மரபு உண்டா என எனக்குத் தெரியாது.
இந்நாவலில் வரும் புலிகளின் இயல்புக்கு ஏற்ப அவைகளின் பெயர்களும் இடம் பெற வேண்டும் என எண்ணினேன். அதன் அடிப்படையில் “ரான் தம்பூர் புலிகள் காப்பகத்தைச் சார்ந்த “Satra” என்ற தாய்ப்புலியின் பெயரை, இந்நாவலில் வரும் தாய்ப்புலிக்கு வைத்தேன். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள Zalim என்ற ஆண்புலி தனது குட்டிப்புலிகளைப் பாதுகாத்த, வளர்த்த செய்தி உண்டு. “Zalim” பாத்திரம் இவ்வாறு உருவானது.
“Wali” என்ற பெண்புலி மத்திய பிரதேச காடுகளில் வாழ்ந்த ஒன்று.
இப்படி, இந்திய வனச்சூழலில் உள்ள புலிகளின் பெயரை நாவலில் பயன்படுத்திக் கொண்டேன் . - சுமித்ரா காடுகளை நேரில் பார்த்திருக்கிறீர்களா? எப்படி சுமித்ரா காடுகளை காட்சிப்படுத்த முடிந்தது?
சுமித்ரா மழைக்காடுகள் குறித்து நான் பார்த்த, படித்த விஷயங்களுடன், மழைக்காடுகள் குறித்து எனக்குள் விரிந்த கற்பனையுமே “சுமித்ரா காடுகளாக” விரிந்தது. மற்றபடி, சுமித்ரா காடுகளை நான் நேரில் பார்க்கவில்லை. - நாவலை அத்தியாயங்களாக எப்படி பிரித்தீர்கள்?
இந்நாவலை எழுதத் துவங்கும் முன்னரே, கதைக்களம், நிகழ்வுகள் குறித்து எனக்குள் ஒரு வடிவம் இருந்தது. முப்பரிமாணக்கோணங்களில் சம காலத்தில் கதை நகர்வதாக தீர்மானித்து எழுதினேன்.
அதன் அடிப்படையில் அத்தியாயங்களை வரிசைப்படுத்தினேன். வாசிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக, இவ்விஷயம் இயல்பாய் பொருந்திப் போனது. - இந்த நாவலை எழுதுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா?
அப்படி ஒன்றும் இல்லை. கொரோனா பேரிடர் கால விடுமுறையில் இந்நாவலை எழுதி முடித்தேன். ஒருவேளை பள்ளி இயங்கும் காலங்களில் எழுத ஆரம்பித்து இருந்தால், நேரம் போதாமை ஏற்பட்டிருக்கும். - தீவிர வாசிப்பினால் என்ன பயன்கள் கிடைக்கும்?
பல துறைச்சார்ந்த புத்தகங்களையும் வாசிக்கிறேன். விவரணைப்படங்களையும் பார்க்கிறேன். பயணக்கட்டுரைகள், புனைவுகள், உயிரிகளின் நடத்தைகள், அறிவியல், மானுடவியல், வரலாறு என பலவகைப்பட்டதையும் படிக்கிறேன். வாசிப்பு எனது சிந்தனையை விரிவுபடுத்துகிறது. கால இடைவெளிவிட்டு, மறுவாசிப்பு செய்யும்போது, புத்தகங்கள் புதுப்புது அர்த்தங்களை என்னுள் விதைக்கின்றன. - உங்களுக்கான Role Model யார்? ஏன் ?
இயற்கை வனஉயிரிகள் குறித்து பேசும், எழுதும் அனைவருமே நான் மிக நெருக்கமாக உணர்கிறேன்.
டேவிட் அட்டன்ப்ரோ , ஜேன் கூடால் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உணர்கிறேன்.
எழுத்திலும், களப்பணியிலும் தொடர்ந்து செயல்படும் திரு. தியோடர் பாஸ்கரன், திரு.கோவை சதாசிவம் என பலரும் நம்பிக்கையை விதைப்பவர்களாக உள்ளனர். - சுற்றுச்சூழல், இயற்கைச் சார்ந்து வெளிவரும் இதழ்களைப் படிப்பதுண்டா?
காட்டுயிர் சார்ந்த எழுத்துகளை தொடர்ந்து படிக்கிறேன். காடு, உயிர், சுட்டியானை, பூஉலகு என தமிழில் இயற்கை ஆர்வலர்களுக்காகப் பல இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் இந்துவில் வெளிவரும் “உயிர்மூச்சு” இளந்தலைமுறைக்கானது என்று நம்புகிறேன். - உங்களது எதிர்கால திட்டம் என்ன?
தீவிர காலநிலை மாற்றம் ஏற்படுவது ஒரு பேரிடர். ஒட்டுமொத்த உலகமும் இதுகுறித்து விழிப்படையவும், செயல்படவும் வேண்டும்.
எனது களப்பணி என்பது எப்போதும் இயற்கைச் சார்ந்ததாகவே இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை அறிவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல் என பல தளங்களையும் படித்துணர்ந்து எழுத வேண்டும் என்பதே என் ஆசை/லட்சியம். - பறவைகளை நோக்குதல் (Bird Watching) என்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
வனத்துறை நடத்தும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலராக கலந்துகொள்கிறேன். முதலில் பறவைகள் பற்றி கவனிப்பது, பறவைகள் கையேட்டுடன் ஒப்பிட்டு அறிவது என பல தளங்களில் பயணித்தால், பறவைகளை நோக்குதல் அனைவரும் சாத்தியமானது தான். - உங்கள் வாழ்வியல் இலக்கு என்று எதைச் சொல்லுவீர்கள்?
“இந்த பூமி மனிதனுக்கானது மட்டும் அல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் ஆனது. நாம் புவியில் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்”. இந்த சிந்தனையை அனைவருக்கும் விதைப்பதே எனது இலக்கு.