தேனி சீருடையான்
அன்று மகாகவி பாரதி பாடினார்.
“கரும்புத் தோட்டத்தினிலே-அந்தக்
கரும்புத் தோட்டத்தினிலே.
அவர் கால்களும் கைகளும்
சோர்ந்து விழும்படி
வருத்துகின்றனரே.
…………………அவர்
விம்மிவிம்மி விம்மிவிம்மி அழும் குரல்
கேட்டிருப்பாய் காற்றே.-துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ.-அவர்
விம்மி, அழத் திறம் கெட்டுப் போயினரே.”
அன்று பிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் நடந்த பெண் தொழிலாளிகளுக்கு எதிரான கொடூர நடைமுறையை சோகம் பிழியும் வார்த்தைகளால் பாடியிருக்கிறார் பாரதி. இந்தக் கருவை அடித்தளமாகக் கொண்டு எழுத்தாளர் வாசந்தி ஒரு குறுநாவல் புனைந்திருக்கிறார். வாழ்வுரிமையையும் இழந்ததோடு சாகவும் உரிமை இல்லாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் நிராதரவான நிலையை, ரத்தமும் சதையுமாக வர்ணித்திருக்கிறார்.

மாமியார் கொடுமையில் இருந்து விடுபடுவதற்காக இளம்பெண்ணும் கைக்குழந்தையும் முகவர் ஒருவர் மூலம் பிஜித் தீவு சென்று கரும்புத் தோட்டத்தில் உழைக்கிறாள். இரவும் பகலும் உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. ஓய்வில்லாப் பணிச்சுமை. உபாதையைக் கழிக்கச் சென்றாலும் சாட்டையடி கிடைக்கிறது. விஷ வண்டுகள் பாய்ந்து பாய்ந்து கடிக்கின்றன. மகளுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருந்த நாளிலும் விடுப்புக் கிடைக்காமல் அவதிப்படுகிறாள், மருத்துவம் பார்க்கவோ உணவு செய்து தரவோ முடியாமல் அழுதபடி கரும்புத் தோட்டத்தில் கிடக்கிறாள்.
பிறந்த நாட்டுக்குப் போகமுடியாது. அங்கேயே இருந்து வாழவும் முடியாது. செத்துப் போகலாம்; ஆனால் சாகவும் விட மாட்டார்களே. மகளிடம் புலம்புகிறள் தாய். அதிகாலை ஐந்து மணிக்குத் தோட்டத்துக்குப் போயாக வேண்டும். அருகில் இருக்கும் கடல் சீற்றத்தோடு கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. கடலில் விழுந்து மாய்ந்து போகலாம் என முடிவெடுக்கிறாள். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கடல் நோக்கி நகர்கிறாள். குழந்தை சொல்கிறது, “சீக்கிரம் வாம்மா; யாராச்சும் பாத்துரப் போறாங்க.”
இந்தப் படைப்பை வாசித்துக் கல் நெஞ்சுக்காரர்கள் மட்டுந்தான் கண் கலங்காமல் இருப்பார்கள்.
“ரெட் டீ” என்றொரு ஆங்கில நாவல். “எரியும் பனிக்காடு” என்ற தலைப்பில் எழுத்தாளர் முருகவேள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். “நீங்கள் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் ரத்தம் கலந்திருக்கிறது” என்ற புகழ்பெற்ற வாசகம் இந்த நாவலின்மூலம் தமிழுக்குக் கிடைத்தது.. வறுமை காரணமாக நிலத்திலிருந்து மலைநோக்கி முகவர்களால் அழைத்துச் செல்லப்படும் தொழிலாளிகள் கடைசிவரை அங்கேயே கிடந்து சாகவேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆங்கில முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் அவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது. வலையில் மாட்டிய பறவையாய் அவர்கள் கடன் சுமையில் மாட்டிக் கொள்கிறார்கள். தப்பித்து வர முடியாமல் அட்டைக் கடியிலும் நோய்த் தொற்றிலும் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை “எரியும் பனிக்காடு” விவரித்துச் செல்கிறது.
டி. செல்வராஜ் எழுதிய “தேநீர்” கு.சின்னப்ப பாரதியின் “சங்கம்” ஆகிய படைப்புகளும் மலைத் தோட்டத் தொழிலாளிகளின் சுரண்டலுக்குள்ளான வாழ்க்கையை யதார்த்தம் சிதையாமல் சித்தரிக்கின்றன. டீ எஸ்டேட்டிலும் கரும்புத் தோட்டத்திலும் தொழிலாளிகள் அனுபவித்த கொடூரத்துக்கு நிகரான இன்னொரு கொடூரம் ஏலத் தோட்டங்களிலும் நிகழ்ந்திருப்பதை “ஏலோ…லம்” நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ஜனநேசன்.
இதுநாள் வரை சிறுகதைப் படைப்பாளி என்று அறியப்பட்டிருந்த தோழர் ஜனநேசன் “ஏலோ…லம்” மூலம் நாவலாசிரியராகப் பரிணமித்திருக்கிறார். ஜனநேசன் இயல்பில் ஒரு தமிழர், அரசு ஊழியராகப் பணியாற்றினார் என்பதால் ஆங்கிலப் புலமையும் உண்டு; தொழில் மற்றும் வாழ்விடம் சார்ந்து மலையாளமும் தெலுங்கும் கற்று மேடையில் பேசும் திறம் பெற்றார். ஆகவே, அவர் ஒரு பன்மொழிப் புலவர் என்று கூறினால் அது மிகையன்று. தேனி மாவட்டம் போடி மெட்டுப் பகுதியிலும் கம்பம் மெட்டுப் பகுதியிலும் முதல் தரமான ஏலக்காய் விளைகிறது. உலகச் சந்தையில் அதிக விலை கிடைக்கக் கூடிய சரக்கு அது.
நாவல் நிகழ்விடம் போடிமெட்டுப் பகுதியைத் தாண்டிய கேரள நிலத்தின் ஏலத் தோட்டம் என்றால் நிகழும் காலம் 1970களின் மத்தியப் பகுதி. இந்திராகாந்தி ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார். ஆங்கிலேயர் காலம் போல ஆழமான அழுத்தமான சுரண்டல் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வறுமை காரணமாகவே ஆண்களும் பெண்களும் பிழைப்புத் தேடி மலையேறுகின்றனர்.
பல ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஒரே உரிமையாளர் கிருஷ்ண ராஜா. அவரின் தாத்தனும் அப்பனும் சேர்த்து வைத்த சொத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றப் பெரும்பாடு படுகிறார். ஒரு முதலாளி, ஒரு மேலாளர், இரண்டு கணக்குப் பிள்ளைகள், நான்கைந்து கங்காணிகள், வேலை செய்யும் தொழிலாளிகள், மடுவிலிருந்து மலைக்குக் கூலிகளை அழைத்து வரும் முகவர்கள்! இவைதான் தோட்ட நிர்வாக இயத்தின் மானுட வடிவம். கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிகளின் உழைப்பின் விளைவாகிய லாபத்தை மேல் முனையில் இருக்கும் முதலாளி முழுமையாய் அனுபவிக்கிறார்.
எரியும் பனிக்காடு போன்ற நாவல்களின் தொழிலாளிகளுக்கும் ஏலோ….லம் நாவலின் தொழிலாளிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் முதலாளியின் சுரண்டலுக்கு ஆளானபோது ஆளும் அரசாங்கமும் அவர்களின் அடியாட்களாகிய போலீஸும் முதலாளிக்குத் துணை நின்றார்கள். பின்னவர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு இருந்தது. இந்தியாவின் அனைத்துத் தொழிலாளிகளையும் பாதுகாக்க சட்டரீதியான பாதுகாப்பு வளையங்கள் வந்துவிட்டன. இந்த சட்டத்தைத் தெரியாமலும் புரியாமலும் இருந்த தொழிலாளிகளுக்கு மத்தியில் தொழிற்சங்க நிர்வாகிகள் புகுந்து அவர்களுக்கு இருக்கிற பாதுகாப்பு நிவாரணங்களை எடுத்துச் சொல்லி விழிப்படைய வைத்தனர்.
12 வயதுச் சிறுவன் ரவி. தன் தாய் பொன்னம்மாவோடு போடியில் இருந்து வட்டப்பாரை எஸ்டேட்டுக்குப் போகிறான். அவனுடைய கனவு படித்துப் பெரியாளாக வேண்டும் என்பதே. தாயும் அதையே நினைக்கிறாள். ஆனால் நடைமுறை வாழ்க்கை அவர்களை ஏலத் தோட்டத்துக்கு விரட்டிவிட்டது. அவர்களை ஒத்த பலரும் அங்கே வேலை செய்கிறார்கள். சதுரப்பாறை, கூம்புப்பாறை போன்ற வேறு பல எஸ்டேட்டுகளில் பெண்களுக்கு இரண்டு ரூபாயும் ஆண்களுக்கு மூன்று ரூபாயும் கூலி தரப்பட்ட அதே வேளையில் வட்டப்பாறையில் பெண்களுக்கு ஒண்ணேகால் ரூபா ஆண்களுக்கு ரெண்டேகால் ரூபா என்ற அளவில்தான் தரப்படுகிறது. கூலி அதிகம் கேட்டால் வேலைநீக்கம் செய்வார்களோ என்ற பயம்.
ரவிக்கு மாடு மேய்க்கும் வேலை தரப்படுகிறது. மேய்த்துக் கொண்டே வாய்ப்பாடு உட்பட பாடப் புத்தகங்கள் வாசிக்கிறான். வார லீவில் பொருள் வாங்க சாந்தாம்பாறைக்குப் போகும்போது சுவரொட்டிகள் மூலமாகவும் செய்தித்தாள்கள் வாயிலாகவும் மலையாளம் பழகுகிறான். அது பின்னாளில் பெண் தொழிலாளிகளின் எழுச்சிக்கு உதவுகிறது. குரங்குவிரட்டி ரெங்கசாமி, பொன்னையன், கணக்குப்பிள்ளையான துரைச்சாமி, குப்பையா, கங்காணிகளான பரமன், வெள்ளைச்சாமி, மேலாளரான வைரம் செட்டியார், கூலிப் பெண்கள் லட்சுமியம்மா, செவனம்மா உள்ளிட்டோர் நாவலை இயக்குகின்றனர்.
இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது அட்டைப் பூச்சி. தலைமுடி போல கறுப்பு நிறம் கொண்டது. தரையில் ஊரும் பிராணி அது. காலில் ஒட்டிக்கொண்டால் தனக்குத் தேவையான ரத்தம் முழுவதையும் உறிஞ்சிய பிறகுதான் கீழே விழும். சிறப்பம்சம் என்னவென்றால் அது கடிக்கும்போதோ ரத்தம் உறிஞ்சும்போதோ வலி தெரியாது. அட்டை கீழே விழுந்த பிறகு ரத்தம் உறையாமல் வழிந்துகொண்டே இருக்கும். வெட்டுக்காயம் உண்டாகும்போது சில நொடிகளில் ரத்தம் உறைந்து குருதிப்போக்கு நின்றுவிடுவதை அனுபவத்தில் நாம் கண்டிருக்கிறோம்.. ஆனால் அட்டைக்கடி பெரிய அளவில் ரத்தச் சேதாரம் உண்டாக்கும்.
நாவல் முழுவதும் அட்டைகள் ஊறிக்கொண்டும் உறிஞ்சிக்கொண்டும் இருக்கின்றன. ஏலச்செடிகள் செழித்துக்கிடக்கும் வீதியில் நடந்து செல்லும் வாசகன் காலில் அட்டை ஏறிவிடுமோ என அஞ்சும் அளவுக்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதே போலதான் செந்தட்டி என்ற தாவரம். உடம்பில் பட்டுவிட்டால் எரிச்சல் உண்டாகி பட்ட இடம் தடித்துவிடும். வறுமையில் துவண்டிருந்த உடல்கள் இந்த மாதிரியான இயற்கைத் தாக்குதல்களால் மேலும் மேலும் தவங்கின.
முதலாளியின் சுரண்டல், அட்டைக்கடி, செந்தட்டி உரசல் ஆகியவற்றால் தொழிலாளிகள் மௌன அழுகையோடும் என்றேனும் ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையோடும் காலம் தள்ளினர். 70 காலகட்டத்தில் அட்டை விரட்டியாகிய ஒருவித லோஷன் புழக்கத்துக்கு வந்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டப்படி முதலாளி அந்த லோஷனை தொழிலாளிகளுக்குத் தேவையான அளவு வழங்கவேண்டும். ஆனால் வட்டப்பாறை முதலாளி லோஷன் மட்டுமில்லை; பனிகாலக் கம்பளியும் தரவில்லை.
அந்த ஏல நிலத்தில் லட்சுமியம்மன் கோயில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கும்பிட்டால் ஏலப் பழம் நல்ல விளைச்சல் தரும் என்பதோடு, யானை, சிறுத்தை, கரடி போன்ற காட்டு விலங்குகளால் ஆபத்து நேராது என்ற நம்பிக்கையும் பரப்பப்பட்டது. ஏழைகளின் இறைநம்பிக்கை முதலாளியின் சுரண்டலுக்கு இன்னொரு சாதகமான அம்சம்.
சாதியும் கூட அந்த மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பொன்னம்மா மகன் ரவியிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை “பள்ளுப் பறை, சக்கிலிகளோட சேராத; அவுக குடுக்குற பொருளத் தொட்டு வாங்காத.” சக்கிலியர்களுக்கு தோட்ட வேலையோடு கூடுதலாக மலம் அள்ளும் வேலையும் தரப்பட்டது.
இப்படியான தருணத்தில்தான் காங்கிரஸ் தொழிற்சங்கம் தானாக முன்வந்து வட்டப்பாரைத் தொழிலாளர்களை அணிதிரட்டுகிறது. படிக்காசு, பஞ்சப்படி, பனிக்கம்பளி, மழைக்கொங்காணி முதலான பொருளாதார நிவாரணங்கள் வாங்கித் தருவதாக வாக்களித்து திரட்டுகின்றனர். தொழிலாளிகள் மனமுவந்து இணைந்துகொள்ள சம்மதிக்கின்றனர். தலைவராக செவணம்மா, செயலாளராக பழனிச்சாமி, பொருளாளராக வெள்ளச்சாமி தேர்வாகின்றனர்.
தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி மாநிலம். கேரளா காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ற பிரதான இரண்டு கட்சிகள் அரசியல் தளத்தில் நேரெதிர் நிலையில் செயல்பட்டாலும் தொழிற்சங்க தளத்தில் தொழிலாளர் நலனுக்காகவே இயங்கின. இந்திராகாந்தி அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியபோது அந்தக் கட்சியின் தொழிற்சங்கத்தால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. வட்டப்பாரை தொழிலாளர்கள், சங்க அலுவலகத்துக்குப் போனபோது ஆள் பற்றாக்குறை காரணமாகத் தங்களால் உதவ முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு கம்யூனிஸ்ட் சங்கத்தை அணுகுமாறு வழிகாட்டுகிறார் அதன் தலைவராகிய ரஹ்மான்.
தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (சி ஐ டி யு) தலைவர் கிருஷ்ணன் குட்டி முந்தைய தலைவரைவிட வீர்யமாகவும் விவேகமாகவும் இயங்குவது தொழிலாளிகளை எழுச்சியடையச் செய்தது. சங்கம் தொழிலாளிகளின் பொருளாதார தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டுத் தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜாதிப் பாகுபாடு குறைந்து ஒன்றுபடத் தொடங்கினர். கீச்சாதியாரின் சமையலை மேச்சாதியார் சுவைக்கத் தொடங்கினர். பாகுபாடில்லாத கம்யூன் போல அவர்கள் வாழத் தொடங்கினர். தொழிற்சங்க இயக்கத்தின் மிக முக்கியமான வெற்றி இது என்று நாவல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
சங்கம் தனது எஸ்டேட்டில் வளர்வதை முதலாளி விரும்பவில்லை. நெல்லைச் சீமையின் ரவுடிகளைக் கொண்டு வந்து இறக்கிப் பயமுறுத்துகிறார். பாண்டியன் தலைமையிலான ரவுடிக் கும்பல் தொழிலாளிகளை பிளவுபடுத்தப் பெருமுயற்சி செய்கிறது. அரிவாள் மற்றும் லத்திக் கம்புகளோடு எஸ்டேட் முழுக்க அலைகிறது. பயங்கரவாதத் தோற்றத்தின் மூலமே தொழிலாளிகளைச் சங்கச் செயல்பாடுகளில் இருந்து விலக்கி விடலாம் என்பது அவர்கள் கணக்கு. ஆனால் அந்தக் கணக்கு செல்லுபடியாகவில்லை. தொழிற்சங்கமோ தொழிலாளிகளோ பயம் கொள்ளாமல் வீரத்தோடு நிற்கின்றனர். கேரளக் காவல்துறை தொழிலாளர் ஆதரவுநிலை எடுத்த போது ரவுடிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட முடியாமல் தோற்கின்றனர்.
முதலாளி வேறு வேறு உத்திகளைக் கையாண்டு தொழிலாளிகளை வஞ்சிக்க முயல்கிறார். அறுவடைக்காலம் முடிந்துவிட்டது என்று சொல்லி தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்புவது, அடுத்த சீசனுக்கு சங்கச் செயல்பாடுகளில் இருந்தவர்களைக் கூப்பிடாமல் வேறு நபர்களை வைத்து தோட்டத்தை இயக்குவது போன்ற விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதை அறிந்த தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்கின்றனர். அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கலாம் என்ற முடிவோடு முதலாளி பேச்சுவார்த்தைக்கு வராமல் காலம் தாழ்த்துகிறார். பட்டினியில் தொழிலாளிகள் துவண்டுவிடுவர் என்பது அவர் கணக்கு. ஆனால் அவர்கள் மசியவில்லை என்றாலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவர்கள் ஒரு புது உத்தியைக் கையாள்கின்றனர்.

காடு என்பது எல்லாவித மனிதத் தேவையையும் பூர்த்தி செய்யும் வாழ்வியல் வளாகம். உணவுத் தேவையைப் பகுதி அளவேனும் ஈடுகட்டிவிடும்.. வேலைநிறுத்தம் எத்துணை நாள் நீடித்தாலும் சமாளிக்க முடியும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் காடுநோக்கிப் பயணிக்கின்றனர். இளந்தாரிகள் தேனெடுக்கச் செல்லவும்; நடுத்தர வயதினர் மிளகு சேகரிக்கவும்; பெண்கள் குங்கிலியப்பூ, லவங்கப் பட்டை எடுக்கவுமான பணிகளைச் செய்கின்றனர்.; அவையெல்லாம் அனாதியாய் முளைத்துக் கிடக்கும் காட்டுத் தாவரங்கள். சேகரமான பொருட்களை சாந்தாம்பாறை சென்று விற்று சமையல் பொருள் வாங்கிவந்து கூட்டாஞ்சோறு காய்ச்சி உண்கின்றனர்.
அனுபவக் கூர்மைகொண்ட அருமையான இந்த உத்தியைக் கையாண்டு முதலாளியின் உத்தியைத் தகர்த்து எறிகின்றனர். தொழிற்சங்க இயக்கத்தின் பணி பொருளாதாரக் கோரிக்கைகளை வென்றெடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. தொழிலாளிகள் தங்கள் கோரிக்கைகளைத் தட்டுத் தடங்கல் இல்லாமல் முன்வைக்கிற வாழ்வியல் கல்வியைப் புகட்டுவதாகவும் அமைகிறது. தலைவர் செவணம்மாவும் செயலாளர் பழனிச்சாமியும் முதலாளி முன்னிலையிலும் சங்கக் கூட்டத்திலும் கோர்வையாகப் பேசப் பழகுகின்றனர். தொழிலாளர் இயங்குதலில் நிகழும் சம்பவங்களை முதலாளிமுன் எப்படி எடுத்து வைப்பது என்ற ஞானச் செறிவு ஏற்பட்டு அறிவுஜீவிகளாய்ப் பரிணமிக்கின்றனர். ஆக, தொழிற்சங்க இயக்கம் மானுட வாழ்வியல் முன்னேற்றத்தின் ஆன்மா என நாவல் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
இந்திராகாந்தியின் ஆட்சி முற்போக்குச் செயல்பாடுகளையும் பிற்போக்கு நடவடிக்கைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. வங்கிகளை நாட்டுடமையாக்கி ஏழைகளுக்கு நிவாரணம் தேடிய அதே வேளையில் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தி, அரசியல் இயக்கங்களை முடக்கி மானுட சுதந்திரத்தை நெருப்புக் குண்டத்துக்குள் இறக்கியது. இந்த இரண்டு போக்குகளையும் நாவல் விரிவாகப் பேசிச் செல்கிறது.
காலப்போக்கில் முதலாளி நஷ்டமடைகிறார். சென்னையில் நடிகைகளின் மடியில் படுத்தும் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டியும் தோற்றுப் போகிறார். எஸ்டேட்டை விற்றுவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.. மல்லுக்கட்டியாவது வாழ முடியும் என்ற நிலையில் இருந்து தொழிலாளிகள் தூக்கி எறியப்படுகின்றனர்.. துயரம் தோய்ந்த முகத்தோடு அவர்கள் கீழ் நிலம் நோக்கி இடம் பெயர்கின்றனர் என்ற காட்சியோடு நாவலின் முதல் பாகம் முற்றுகிறது. இரண்டாம் பாகம் 2016 காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. 45 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ரவி தரைக்காட்டுக்கு இறங்கி, கல்வி பயின்று அரசு ஊழியராய், சப் கலெக்டராய் உயர்வடைந்து ஓய்வு பெற்றுவிட்டார். சொந்த வீடு, சொந்தக் கார் என்று அந்தஸ்தான வாழ்க்கை. தானும் தன் தாயும் வேலை செய்த இடங்களைப் பார்த்து வரலாம் என்று கம்பம் மெட்டுப் பகுதிக்குச் செல்கிறார். எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் சொந்தம் கொண்ட மனிதர்கள் இல்லை. முதலாளிகள் தகாத செயல்களால் கடன்பட்டும் தொழில் செய்ய ஆள் கிடைக்காமலும் நிலத்தை விற்றுவிட்டனர். இப்போது ஐம்பது ஏக்கர் உள்ளவர்தான் பெரிய முதலாளி. தன்னோடு தொழில் செய்தவர்களின் வாரிசுகள் இரண்டு அல்லது ஐந்து ஏக்கர் என்று துண்டு நிலங்களை வாங்கி தாங்களே தொழிலாளிகளாய் மாறி வேலை செய்து ஜீவிக்கின்றனர்.
1950களில் நாடெங்கும் திரைப்படப் பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.
”நாட்டுக்குப் பொருத்தம்
நாமே நடத்தும்
கூட்டுப் பண்ணை விவசாயம்.”
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சோவியத் யூனியன் போல பண்ணை விவசாய முறையை இங்கும் அமல் படுத்தவேண்டும் என்று விரும்பினார். அப்படிச் செய்தால் உழவுத் தொழிலும் உழவு வருமானமும் மக்களுக்கானதாய் மாறும். ஆனால் பெரு முதலாளிகளும் நிலப் பண்ணையார்களும் அமல் ஆகவிடாமல் தடுத்துவிட்டனர்.
விளைவு; உழவு நிலங்கள் துண்டுதுண்டாய்க் கத்தரிக்கப்பட்டு உலைமானம் ஆகிவிட்டன. (இன்று உழவுக் காடுகள் எல்லாம் வீட்டடிகளாய் மாறுவதற்கு அதுதான் காரணம்.)
இந்த நிலச் சிதைவை மட்டுமல்ல; பணமதிப்பு நீக்க நடவடிக்கையையும் விரிவாகப் பேசுகிறது இரண்டாம் பாகம். சாதாரணக் கூலித் தொழிலாளிகள் முதல் உயர் நடுத்தர மக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதை மக்களின் வாழ்வியலோடு விவரித்துச் செல்கிறது.
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருமுன் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வாக்களிக்கப் பட்ட முக்கியமான சங்கதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பதாகும். இது நடக்காத செயல் என்று தெரிந்தே வாக்களித்தார்கள். நாவலின் இரண்டாம் பாகம் வாசிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. ஆயிரம் ஐநூறு ரூபா நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் பட்டபோது செல்வந்தர்களிடம் கோடிக் கணக்கில் அவை குவிந்து கிடந்தன. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடம் தந்து வெள்ளைப் பணமாய் மாற்றிக் கொள்கின்றனர். இதற்காகத்தான் ஜன் தன் கணக்குப் பதியப் பட்டதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஜன் தன் ராஜதந்திர நடவடிக்கையின் ஆழத்தை மௌனமாய்ப் பேசிச் செல்கிறது நாவல்.
விவசாயச் சிதைவுகளால் பாதிக்கப்பட்ட சந்திரன் என்ற பாத்திரம் பேசுகிறது.“பழைய இலைகள் உதிர்வதும் புதிய இலைகள் தளிர்ப்பதும் தொடர் செயல்பாடு. இதற்கிடையில் மரம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். இழப்புகளை உள்வாங்கிக் கொண்டே அடுத்தகட்ட வளர்ச்சி அதை நோக்கிய நகர்வுகள் இருக்கும். விவசாயமும் இனி செழிக்கும்; இயற்கையின் இயங்கியல் மட்டுமல்ல; சமூகப் பொருளாதார இயங்கியலும் கூட… இந்த மாற்றங்கள் தானாக நிகழ்ந்துவிடாது. மாற்றம் விரும்பிகளின் இடைவிடா செயல்பாடுகள் முக்கியம்.” இப்படி நம்பிக்கை விழுதுகளைப் பரவவிட்டபடி நிறைவடைகிறது நாவல்.
வெறும் வார்த்தையாடல்களோடு நகரவில்லை நாவல். உவமான உவமேய அணிகலன் பூட்டிய நங்கையாய் ஜொலிக்கிறது. “வெகுதூரத்தில் ஒரு கருப்புச் சேலைமேல் வண்டு ஊர்வது மாதிரி ரோட்டில் பஸ் போய்க்கொண்டிருந்தது.” “அந்த இருண்ட காட்டில் பொழுது பார்ப்பதே மகிழ்ச்சியான விஷயம். தங்கத்தினால் உருக்கின தண்ணி மாதிரி பொழுது மரக்கிளைகளுக்கிடையில் விழுந்தது.” “…முகடுகள் பொன்னிறத்தில் சிரித்தன; முகடு சிரிக்கும்போது சலவாய் ஒழுகுது போல சிறுசிறு அருவிகள் வழிந்தன.”
இவற்றோடு புதிய புதிய சொற்களும் கையாளப்பட்டிருக்கின்றன. மாதவிடாய்க் காலப் பெண்களை “விலக்காயிட்டா” என்பார்கள். “தூரமாயிட்டா” என்றும் சொல்வதுண்டு. நாவலாசிரியர் சொல்கிறார் “தூர விலக்கு” ஆய்ட்டா. கிரிசி என்றால் விவசாயி என்கிறார் ஆசிரியர். உதாரணத்துக்கு கேரளத்தில் இன்றைக்கும் கிரிசிக் காடுகள் உண்டு.
இ.எம்.எஸ் முதல்வராய் இருந்த நாளில் விவசாயக் கூலிகளுக்குத் தலா ஐம்பது செண்டு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவைதான் கிரிசிக் காடுகள். காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்கிற நல்ல நாவலைத் தந்த தோழர் ஜனநேசன் பாராட்டுக்குரியவர்.