சி. முத்துகந்தன்
ஒரு படைப்பாளரின் கதையோ கவிதையோ கட்டுரையோ அது வாசிக்கப்படும் போதுதான் படைப்பாக ஆகிறது. அதுவரை வெறுமனே அனுபவமாக மட்டுமே இருந்ததை பதிவு செய்பவரே இங்கு படைப்பாளராகிறார். அதிலும் எவரது எழுத்து புதிய உத்தியை வடிவத்தைக் கொண்டு கவனம் ஈர்த்தவையோ அதுவே நிராகரிக்க முடியாத படைப்பாகிறது.

அந்தவகையில் த. செபுலோன்பிரபு துரையின் “அதுவன்” நூலின் அனுபவம் என்பது ஆடு, மாடு, கோழி, நாய், பூனை வளர்த்த அனைவரது அனுபவங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. அதனை வாசிக்கும் வாசகர்களின் நினைவுகளில் வாழும் வாழ்ந்த உயிரினங்களை ஆத்மார்த்தமாக நினைவுபடுத்திக் கொள்ள மீண்டும் வழிவகை செய்கிறது இந்நூல்.
பொதுவாக எப்பேர்ப்பட்ட கலை இலக்கிய அரசியல் ஆளுமைகளாக இருந்தாலும் அவர்கள் நம்முள் ஒரு பகுதியாகவோ ஒரு வரிகளாகவோ அல்லது இரண்டு மூன்று சொற்களாகவும் சுருங்கி நம்முள் ஆழப்பதிந்திருப்பார்கள். ‘உன்னைப் போல பிறரையும் நேசி. மாற்றம் ஒன்றே மாறாதது. கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு. செயலே செயலும் பரப்புரையுமாகும். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை…’ என்று இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘அதுவன்-ஞமலியுடன் ஒரு உரையாடல்’ எனும் இந்நூல் எண்பது பக்கங்களை மட்டுமே கொண்ட கவித்துவமான ஒரு உரையாடல் பதிவு. தமிழ் நாட்டார் நிகழ்த்துகலை மரபிலிருந்த ‘இலாவணி’ எனும் நிகழ்த்துகலை, கேள்வி-பதிலாக நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வுகலை வடிவமாகும். தற்போது இலாவணி பாடுபவர்களே இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. அதுவனில் கேள்வி பதிலாய் இருவரின் உரையாடலாக இருப்பதே இந்நூலின் சிறப்பு.
நூலினை வெளியிட்டு உரையாற்றிய சுப.வீரபாண்டியனின் ஒற்றை வரிப் பதிவு…
“இந்நூல் அன்பில் நனைந்த குழந்தைமையைக் கொண்டிருக்கிறது” என்பதாகும். வாசகர்களின் பார்வைக்காகவே நூலின் இறுதியில் இருந்து தொடக்கம் வரையுள்ள சில உரையாடல்கள்…

உனக்கு என்னென்ன மொழி தெரியும்?
படைப்புகள் பேசும் அனைத்தும் புரியும்
நாங்கள் என்ன மனிதர்களா.
அம்மா உன் தலையைத் தடவிக்
கொடுத்த பின்னரே
இமை மூடி உடல் பிரிந்தாயாமே?
எனக்காய் இறை வேண்டி
என்னைத் தொட்டார்
இது கடைசி பிள்ளையின் கடைசி ஆசை.
உனக்குத் தெரியாதல்லவா
என்னை அழைத்துச் செல்ல
அப்பா வந்திருந்தார்.
நீ நோயுற்ற காலத்தில்
நம் வீடு துயரத்தை நோக்கி நகர்ந்தது?
எனக்காக நீங்கள்
சிரிக்காமல் இருந்ததும்
அம்மா அழுததும்
என் வலியை அதிகமாக்கின
உன் காதலியை கழனிப்பக்கம்
அழைத்துச் செல்வாயாமே?
நீங்கள் பொது இடத்தைப் பயன்படுத்துவதால்
நான் ஒதுக்குப்புறத்தைப் பயன்படுத்த
திட்டமிட்டேன்
வேற்று மாநில, நாட்டு, வழியே, பருத்த
உன் இனத்தவரைப் பார்க்கும் போது
என்ன நினைத்தாய்?
வேற்று நாட்டவர், மாநிலத்தவர்,
ஜாதி, மதம்
எல்லாம் உங்களுக்குள்தான்
எங்களுக்கு இதுவரை இல்லை
கோழி, ஆடு, பன்றி, மாடு
இறைச்சிகளில் எது
உனக்குப் பிடித்திருந்தது?
நாம் கடித்த எலும்புகளை
எறும்புகள் கூட தொடாதே
அதுதான் பிடிக்கும்.
கோடைகால அனல் தாங்காமல்
மாடி சென்று இரவு உறங்கினால்
படி முகப்பில் படுத்து விழித்து
எம் வீடு காத்தாய்!
அப்போது மட்டும்தான்
நமக்கிடையே கதவு இருக்காது
அணில், ஓணான், எலி, பூனை
இவற்றைப் பார்த்தால்
உனக்கு ஏன் அவ்வளவு கிண்டல்!
அது படைப்பின் கமுக்கம்
ஐயம் இருந்தால் டார்வினிடம் கேள்.
இனி தொடக்கம் முதல் நேசிக்க அதுவனை வாசிப்போம். இந்நூலை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் வள்ளுவர் நினைவிற்கு வருவார்.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”.
ஆக இப்படைப்பு கவிதையா? நாவலா? இதில் கற்பனை உள்ளதா? நாய் எப்படிப் பேசும்? ஆமாம், இப்படித்தான் பேசும் படிக்கும் பொழுது நம்முடைய வீட்டில் வளர்ந்த பிள்ளையும் நினைவிற்கு வரும். நாமும் நூலினை வாசித்துப் பார்ப்போம்.