நிகழ் அய்க்கண்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த தோழர் சு.பொ. அகத்தியலிங்கத்தின் நூலிது. இந்நூலில் “யுத்தம் – பஞ்சம் – நோய் – தொழுகை என்கிற நான்கிற்குள் பந்தாடப்படும் ஆப்கன்” மக்களின் அழுகுரலுக்கான பின்னணியைப்பற்றி அலசுகிறார்.

ஆப்கானிஸ்தான் நாடானது, இந்தியா – பாகிஸ்தான் – ஈரான் – முன்னாள் சோவியத் நாடுகள் – சீனா ஆகிய நாடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 2.8 கோடி மக்கள்தொகையைக் கொண்டு, பல்வேறு இனக்குழுக்களாய் இயற்கையிலேயே பிளவுண்டு கிடக்கின்றனர். இங்கே, பத்தானியர்கள் தஜிக்ஸ் 25%, உஸ்பெக்ஸ் 6%, ஹஜாரா 19%, சாகர், ஜமக்ஸ், துர்க்மன், பாலோச் மற்றும் இதரர்கள் 18% என வசித்துவருகின்றனர்.
கி.மு 500 களில் மகா அலெக்ஸாண்டர் மறைவுக்குப்பிறகு ஆப்கன் தேசமானது ‘செலுசிட்’ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்த ஆட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த ‘பக்தீரியா’ தனியாகப் பிரிந்தது. பக்தீரியாவின் தெற்குப்பகுதி புத்தமதம் ஓங்கி வளர்ந்த மவுரிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பக்தீரிய அரசை தெற்கு நோக்கி விஸ்தரிக்க முயன்றபோது, பத்தானிய பழங்குடியினர்களின் எதிர்கலகத்தால் வீழ்ந்தது.
அடுத்து, பெஷாவரை தலைநகராகக்கொண்ட குஷானர்களின் பேரரசு கி.மு 3 மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் உருவாகி, பின்னர் அதுவும் வீழ்ந்தது. பழங்குடியின மக்களுக்கிடையேயான வேறுபாடுகளின் காரணமாகவே பல்வேறு முஸ்லீம் அரசுகள் எழுவதும் – வீழ்வதுமாகிப்போயின. இந்தியா மீது படையெடுத்த முகமது கஜினியின் ஆட்சிதான் ஆப்கனில் நீண்ட காலம் நீடித்தது. இந்த ஆட்சியானது ஈரான் முதல் பஞ்சாப்வரை பரவிக்கிடந்தது.
11 ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படையெடுத்த செங்கிஸ்கானும், 14 ஆம் நூற்றாண்டில் படையெடுத்துவந்த தைமூரும் ஆப்கன் நாட்டின் காபூல் வழியாகவே வந்து இந்தியா மீது படையெடுத்தனர். பாபரும் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க காபூலையே தளமாக்கினார். 18 ஆம் நூற்றாண்டில் நாதிர்ஷா, ஈரான் முதல் இந்துகுஷ் மலைவரை தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். ஒரு நள்ளிரவில் நாதிர்ஷா கொல்லப்பட்டதும், அவரது படையில் தளபதியாக இருந்த பத்தானிய பழங்குடியைச்சார்ந்த அகமதுஷா அப்தலி மன்னராகி, அன்றைய துரானியாக இருந்துவந்த இன்றைய ஆப்கனை உருவாக்கினார்.
இந்தியாவில் தம் காலனி ஆட்சியைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன், சுதந்திரமான ஆப்கன் அரசை வசப்படுத்திக்கொள்ள பிரிட்டிஷார் முயன்றனர். இதனையொட்டி
1838இல் பிரிட்டிஷாரின் இராணுவம் ஆப்கன்மீது படையெடுத்து தோல்வியைத்தழுவியது. பின்னர் 1878-1880 களில் மீண்டும் போர்தொடுத்து அடுத்த தோல்வியைக் கண்டனர். இதனையடுத்து, ஆப்கனை ஆண்டுவந்த எமிர் அப்துல்கானை தங்களது சூழ்ச்சியின் மூலம் வளைத்துப்போட்டு தன் கையாளாக மாற்றிவிட்டனர். அதன்பிறகான காலத்தில், அப்துல்கானின் ஆட்சியானது, கிட்டத்தட்ட பிரிட்டிஷாரின் அரைக்காலனியாகிவிட்டது. இந்த காலகட்டத்தில்தான் ரஷ்யாவோடும், பிரிட்டிஷ் இந்தியாவோடும் ஆப்கனின் எல்லையை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1917இல் ரஷ்யாவில் சோசலிஸப்புரட்சி ஏற்பட்டு சோசலிஸக்குடியரசு மலர்ந்ததும், சோவியத்துக்கு எதிராக சீர்குலைவு வேலைகளை துவங்க ஆப்கனை தளமாக்கியது பிரிட்டிஷ் அரசு. 1917-18 களில் ஆப்கனின் மன்னராக இருந்த ஹபிபுல்லாகான் பிரிட்டிஷ் அரசின் தாசனாகவும் இருந்தார். இவர், பிரிட்டிஷாரின் ஆணைக்கிணங்க எதிர்ப்புரட்சியாளர்கள் சோவியத்தின் துர்க்மெனிஸ்தானுக்குள் ஊடுருவி நாசவேலைகள் செய்ய உதவினார். பிறகு, 1918இல் உஸ்பெகிஸ்தானில் சில எதிர்புரட்சியாளர்கள் கலக முயற்சியில் ஈடுபட்டபோது ஆப்கன் வழியாக ஆயுதங்கள் வழங்கினார்.
1918ஆம் ஆண்டு கோடையில் ஈரானை பிரிட்டன் படைகள் கைப்பற்றின. அதன்பின், ஈரானிலிருந்து சோவியத்தின் துர்க்மெனிஸ்தனை கைப்பற்ற பிரிட்டிஷ் இராணுவம் போர்தொடுத்தது. அப்போது, ஆப்கனுக்கும் சோவியத்துக்கும் இடையேயுள்ள குஷ்கா கோட்டையை கைப்பற்றிக்கொண்ட பிரிட்டிஷ் படைகள், ஆப்கனையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும், அதன்பின் அங்கிருந்து சோவியத்தைத்தாக்கி அழிக்கவும் திட்டமிட்டிருந்தது.
சோவியத்தின் செஞ்சேனைப்படைகளுடன் நடந்த போரில் பிரிட்டிஷ்படை தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே ஆப்கன் மன்னர் ஹபிபுல்லாக்கான் கொல்லப்பட்டு, அவரது மகன் அமானுல்லாக்கான் பட்டத்துக்கு வந்தார். இவர்தான் 1919 மார்ச் 27 அன்று, ஆப்கன் நாட்டினை சுதந்திர நாடாக பிரகடனம் செய்தார். இந்தச் சுதந்திரக்குடியரசு ஆப்கனை முதன்முதலாக அங்கீகரித்தது சோவியத்யூனியனாகும். அதுமட்டுமல்லாது, 1921 பிப்ரவரி. 28ந்தேதி மாஸ்கோவில் ஆப்கன் – சோவியத்துக்கிடையே பரஸ்பர நல்லெண்ண ஒப்பந்தமொன்றும் ஏற்பட்டது.
பிரிட்டிஷ் அரசும் சும்மா இருக்காமல் ஆப்கனுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து, ஒருபக்கம் ஆப்கனின் கிழக்கு எல்லையில் அரண்களை அமைக்கவும், விமானங்கள் இறங்கிப்போவதற்கான வசதியையும் ஏற்படுத்திக்கொண்டது. இன்னொருபக்கம் இராணுவப்படைகளையும் குவித்துவந்தது. இதன் உச்சக்கட்டமாக, 1923 டிசம்பரில் சோவியத்துடனான உறவை முறிக்காவிடில் போர் தொடுக்கப்படும் என ஆப்கனுக்கு பிரிட்டிஷ் இராணுவம் எச்சரிக்கவும் செய்தது.
ஆப்கன் மக்களில் 84% பேர் சன்னி பிரிவையும், 15%பேர் ஷியா பிரிவையும், 1% இதரராகவும் இருந்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொண்டு, 1924களில் குல மரபுக்குழுக்கள் மூலம் கலகத்தை ஏகாதிபத்தியம் உசுப்பிவிட்டது. குறிப்பாக, முற்போக்குச் சட்டங்களுக்கு எதிராக – பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு எதிராக – சோவியத்துக்கு எதிராக கலவரம் எழுந்தது. அப்போதைய மன்னர் அமானுல்லாக்கான் சோவியத்தின் உதவியைப்பெற்று கலவரத்தை அடக்கினார்.
மீண்டும் 1928இல் ஆப்கனின் கிழக்குப்பகுதியில் குலமரபுக்குழுவிடையேயும், பச்சா-இ- சாக்கோ என்பவரது தலைமையில் வடக்குப்பகுதியிலும் கலகம் வெடித்தது. பிரிட்டிஷாரின் உதவியைப்பெற்றிருந்த பச்சா-இ-சாக்கோ 1929இல் காபூலைக் கைப்பற்றி, ஆப்கன் மன்னராக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார். இப்படியான நிலைமையில், இதற்குமுன்பு ஆண்ட மன்னர் அமானுல்லாக்கானின் மைத்துனர் முகமது நாதிர்கான் என்பவர் சாக்கோவை விரட்டியடித்துவிட்டு ஆப்கனின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.
இந்தக் காலகட்டத்தில், இரண்டாம் உலகப் போருக்கான பாஸிச- நாஸிசக் கூட்டணி உருவாகத் துவங்கியது. இக்கூட்டணியானது சோவியத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு, ஆப்கன் தனக்குத் தேவையென உணர்ந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜிஸக் கூட்டணிக்கெதிராக, சோவியத்- பிரிட்டிஷ் – அமெரிக்கா நாடுகள் சேர்ந்து செயல்பட்டதால், பிரிட்டிஷ் தாங்கள் விரும்பிய சோவியத் எதிர்ப்பு வேலைகளை தற்காலிகமாகத் தொடரமுடியாமல் போய்விட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில், பிரிட்டிஷாரின் தலைமைப்பாத்திரம் பறிபோயிற்று. இருந்தபோதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியமானது தன்னுடைய ஆதிக்கத்தை ஆப்கன் பகுதியில் நிலைநிறுத்திடவும்- விரிவாக்கிடவும் தனக்கான சதிவலைகளைப் பின்னத் துவங்கியது.
எதிர்காலத்தில் சோவியத்தின் மீது தாக்குதல் தொடுக்க ஆப்கனிஸ்தான் பாலமாகப் பயன்படும் என்பதே அமெரிக்காவின் அக்கறையாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, 1960 களில் முதலில் பாகிஸ்தானுக்கும் ஆப்கனுக்கும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் சம்பந்தமாக இருந்துவந்த கருத்துவேறுபாட்டினைக் கிளறிவிட்டது. அடுத்து, 1955களில் பத்தானிய பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து “சுதந்திர பத்தானிஸ்தான்” அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா இருமுறை ஈடுபட்டும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1960-70 களில் அயலுறவுக்கொள்கைகளில் ஆப்கன் நடுநிலை வகித்துவந்த போதிலும், சோவியத் யூனியனைக்காட்டி அமெரிக்காவிடமும், அமெரிக்காவைக்காட்டி சோவியத்யூனியனிடமும் மாறிமாறி உதவிகள் பெறவே செய்தன. அப்படியிருந்தாலும் நெருக்கடி தீரவில்லை. மாறாக தொடர்ச்சியான பஞ்சத்தால் மக்களின் வாழ்வு கடும் சோதனைக்குள்ளானது. கடும் பஞ்சத்தினை முன்வைத்து, மன்னர் ஜாஹிர்ஷாவின் ஆட்சி 1973இல் தூக்கி எறியப்பட்டு. முகமது தாவுத்கான் என்பவர் தன்னை பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். இவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மட்டுமல்லாது பழமைவாதியாகவும் திகழ்ந்தார்.
ஆப்கனில், வறுமையோடு வாழும் மக்கள் நிலம் வேண்டியும், வேலைவாய்ப்புக்கள் வேண்டியும், கல்வியறிவு பெறவும் வேண்டி போராடத்துவங்கினர். மக்கள் நலனைக்கருத்தில் கொண்டு, 1977 களில் மார்க்சிய அடிப்படையில் இயங்கிவந்த பார்ச்சம் மற்றும் கல்க் எனும் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து, ஆப்கன் மக்கள் ஜனநாயக்கட்சியாக மாறி, போராட்டத்தை முன்னெடுத்தன. ஜாஹிர்ஷாவின் ஆட்சி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. போராட்டத்தின்போது, ஒரு தொழிற்சங்கத்தலைவர் கொல்லப்பட்ட சம்பவமானது மக்களிடையே பேரெழுச்சியாக மாறி, 1978 ஏப்ரலில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.
புரட்சியின் கோஷங்களும்,அதனைத் தலைமைதாங்கும் சக்திகளும் முற்போக்கானவை என்பதாலும், சோவியத்துடன் நல்லுறவு கொண்டிருப்பதாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ஆப்கன் பழமைவாதிகளுக்கும் “ஏப்ரல் புரட்சி” பிடிக்காமல் போய்விட்டது. இதற்குமுன்பு, ஜாஹிர்ஷா ஆட்சிக்காலத்திலேயே ஏகாதிபத்திய உதவியுடன் பாகிஸ்தானில் இயங்கிவந்த முஜாஹிதிகன்ளோடு அதிருப்தியுற்ற பலரும் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே பார்ச்சம் மற்றும் கல்க் கட்சியினரிடையே ஒவ்வொரு விஷயத்திலும் முரண்பாடுகள் வெளிப்படவே பார்ச்சம் கட்சியைச்சார்ந்த ஜனாதிபதி தராகியைக்கொன்றுவிட்டு பிரதமரான கல்க் கட்சியைச் சேர்ந்த அமீன் 1979 செப்டம்பரில் தன்னை ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார்.
இவர் ஆட்சிக்கு வந்ததும் 1978 டிசம்பர் மாதம் சோவியத்துடன் செய்துகொண்ட நல்லுறவு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, அமெரிக்காவுடன் உறவைப் பேணலானார். இச்சூழலில், ஆப்கன் மக்கள் ஜனநாயகக்கட்சியானது தலையிட்டது. 1979 டிசம்பர் 28ல் பாப்ரக் கார்மல் என்பவர் புரட்சிக்கவுன்சிலின் தலைவர் – ஆப்கன் பிரதமர் – கட்சியின் பொதுச்செயலாளராக மாறினார். ஜனாதிபதி அமீன் தூக்கிலிடப்பட்டார்.
பாப்ரக் கார்மல் ஆட்சியில், விவசாயிகள் லேவாதேவிகாரர்களுக்கு கொடுக்க வேண்டியிருந்த 1.1 கோடி டாலர் கடன் சுமையிலிருந்து விடுவித்தது. ஏழைக்குடும்பங்களுக்கு நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டன. கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வரதட்சணைக்கொடுப்பது அவமானகரமானது என்றாக்கப்பட்டது. நில உச்சவரம்புச்சட்டம் அமலாக்கப்பட்டது. இதனைப்பொறுத்துக்கொள்ளாத, நிலத்தைப்பறிகொடுத்த நிலவுடைமையாளர்கள் பலரும் பாகிஸ்தானில் முஜாஹிதின்களோடு தஞ்சம் புகுந்தனர்.
இச்சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையுடன் பாகிஸ்தானில் ’உலக இஸ்லாம் மாநாடு’ கூடி ஆப்கனுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது மட்டுமின்றி, ஆப்கனை முஸ்லீம் நாடுகள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றவும் செய்தது.
சோவியத்தில் கம்யூனிசத்தை சிதைப்பதற்கும், ஆப்கன் ஆட்சியை அகற்றுவதற்காகவும், அமெரிக்க ஏகாதிபத்தியமானது பாகிஸ்தானில், 80 இராணுவ முகாம்களையும், எதிர்புரட்சியாளர்களான ஜமாய்த்- இ- இஸ்லாமி அமைப்புக்கான பயிற்சிமுகாம்களையும் உருவாக்கியிருந்தது. இதற்கென எதிர்புரட்சியாளர்களுக்கு அமெரிக்காவும், எகிப்தும் பயிற்சியளித்தது மட்டுமின்றி 15 லட்சம் டாலர் நிதியுதவியும் வழங்கின.
சோவியத்யூனியனின் தகர்வு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சரிவின் காரணமாக நிலைமையைத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே ஆப்கனில் கார்மல் பதவி விலகி, நஜிபுல்லா ஜனாதிபதியானார். சோவியத் தகர்வின் காரணமாக, ஆப்கன் மக்களை ஒன்று திரட்டும் முயற்சி வீணாகியது. இச்சூழலில் எதிர்புரட்சியாளர்களின் 50க்கும் மேற்பட்ட கொரில்லாக் குழுக்கள் கூட்டணி சேர்ந்து, புனிதப்போரைத் துவக்கின. நஜிபுல்லா பதவியைத் துறந்து, ஐ.நா. அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
அமெரிக்கத் தயாரிப்பான தாலிபான்கள் அவரைக் கொன்று வீதியில் தொங்க விட்ட கொடுமையும் அரங்கேறியது. 1988 ஏப்ரலில், சோவியத் யூனியன், அமெரிக்கா, ஆப்கன், பாகிஸ்தானிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, அந்நிய நாடுகள் தலையீடின்றி ஆப்கன் மக்களே அவர்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வகைசெய்தது.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஆப்கனில், 2.5 லட்சம் பேர் யுத்தத்திற்குப் பலியாகியுள்ளனர். அதாவது, ஆண்டுக்கு 1,25,000 பேர் வீதம் பலியாகின்றனர். இரண்டு கோடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நாடாகத் திகழுகிறது. ஏகாதிபத்தியம் தன் யுத்த நலனுக்கும், எண்ணெய் கொள்ளைக்கும், கம்யூனிஸ எதிர்ப்புக்காகவும் ஆப்கன் போன்ற நாடுகளை கைப்பாவையாக வைத்திருக்க இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டுமோ தெரியவில்லை
