ச.சுப்பாராவ்
புத்தகங்கள் நிரம்பி வழியும் அலமாரிக்கு முன்பாக அமர்ந்து போஸ் தருவது அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. காரணம் புத்தகங்களை படிக்காமலேயே சொந்தமாக வைத்திருக்க முடியும். அவற்றால் உங்களைப் பற்றிய ஒரு பெரிய நன்மதிப்பை உங்கள் நட்பு, உறவு வட்டாரங்களில் ஏற்படுத்த முடியும். அவை மிகவும் பயனுள்ளதாக சிலருக்கு இருக்கும். பலருக்கு செட்டிங்ஸ் பிராப்பர்ட்டியாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் பல நூற்றாண்டுகளாகவே புத்தகங்கள் சூழ ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் போன்ற ஓவியங்கள் உலகெங்கும் வரையப்பட்டன.

புகைப்படங்களும் பின்னாளில் அதே போல் எடுக்கப்பட்டன. இன்று புதிதாய் கட்டப்படும் வீடுகளுக்கு உள் அலங்கார நிபுணர்கள் தாமே மிக அழகான புத்தக அலமாரிகளையும், பல்வேறு அளவுகளில், நிறங்களில் அழகழகான புத்தகங்களையும் வாங்கி அடுக்கி, வீட்டை அலங்கரித்துத் தருகிறார்கள். வீட்டுக் கட்டிட ஒப்பந்தத்தில் புத்தக அலமாரிக்கும், அதற்கான புத்தகங்களுக்கும் சேர்த்தே பணம் வாங்கப்படுகிறது.
நியூயார்க்கின் தி ஸ்ட்ராண்ட் என்ற புத்தகக் கடை இது போன்ற வீட்டு உள் அலங்கார நிபுணர்களுக்காக இத்தனை அடி நீளத்திற்கு இத்தனை புத்தகங்கள் என்பது போன்று புத்தகங்கள் விற்கிறதாம். இது பல்லாண்டுகளாக நடக்கும் ஒரு விவகாரம். 1940களில் ஐரிஷ் நகைச்சுவை எழுத்தாளரான ஃபிளான் ஓ பிரியன் இது குறித்து அற்புதமான நகைச்சுவைக் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் புக் ஹாண்ட்லிங் என்றொரு நிறுவனம் படிக்க விருப்பமோ, நேரமோ இல்லாத பெரிய மனிதர்களின் வீட்டு அலமாரிகளுக்கு இது போல் புத்தகங்கள் சப்ளை செய்யும். அதில் மூன்று ரகங்கள் உண்டு.
சாதாரண விலைக்கு தரப்படும் புத்தகங்கள் பல முறை எடுத்துப் படித்தது போல் சற்று பழமையோடு இருக்கும். எல்லாவற்றிலும் நான்கு பக்கங்கள் அடிக்கடி புரட்டப் பட்டது போல் நைந்து போயிருக்கும். ஒரு பழைய டிராம் டிக்கெட்டோ, நாடக டிக்கெட்டோ, சில புத்தகங்களில் புக் மார்க் போல் எப்போதோ வைத்தது போன்ற தோற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அடுத்தது பிரிமியம் மாடல் புத்தகங்கள். இதில் எல்லாமே படித்துக் கிழித்தது போன்ற தோற்றம் உள்ள புத்தகங்களாக இருக்கும். இவற்றில் எல்லாவற்றிலும் ஏதேனும் 8 பக்கங்கள் அடிக்கடி புரட்டப்பட்ட தோற்றத்தில் நைந்து போயிருக்கும். குறைந்தபட்சம் 25 புத்தகங்களில் பொருத்தமான பத்திகள் சிவப்பு பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும். இதிலும் பழைய டிக்கெட்டுகள், விக்டர் ஹ்யூகோ பற்றிய பழைய பிரெஞ்சு செய்தித்தாள் கட்டிங் போன்றவை வைக்கப்பட்டிருக்கும்.
டீலக்ஸ் மாடலில் சிறிய புத்தகங்கள் பேண்ட் பாக்கெட்டில் வைத்து போகுமிடங்களுக்கு எல்லாம் எடுத்துச் சென்றது போன்ற தோற்றத்தில் கசக்கித் தரப்படும். அடிக்கோடுகளுடன், மார்ஜினில் ஆங்காங்கே கேள்விக்குறி, ஆச்சரியக் குறி எல்லாம் போடப்பட்டிருக்கும். முன்பு சொன்ன புக் மார்க்குகளோடு கூடவே குறைந்த பட்சம் 30 புத்தகங்களில் காபி, டீ, வைன் கறை சேர்க்கப்பட்டிருக்கும். குறைந்த பட்சம் 5 புத்தகங்களில் நூலாசிரியர் உங்களுக்குத் தந்தது போல் அவரது கையெழுத்து கள்ளத்தனமாகப் போடப்பட்டு வழங்கப்படும்.
உள் அலங்கார நிபுணர்கள் இவற்றையெல்லாம் இன்று நிஜமாகவே செய்கிறார்கள்.
பல பந்தா பரமசிவம்கள் இப்படியான புத்தக அலமாரி பின்னணியோடு படத்தில் புன்னகைக்கிறார்கள். ஆனால் மறுபுறம் உண்மையான வாசகர்கள், படைப்பாளிகள் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களை சேகரித்துக் கொண்டு, அதுவே தமது உலகம் என்று வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட புத்தகக் காதலர்களான எழுத்தாளர்கள் 13 பேரிடம் 28 கேள்விகளைக் கேட்டு, அவர்களது பதில்களை அவர்களது புத்தக அலமாரிகளின் விதவிதமான, அழகான புகைப்படங்களோடு ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார் லீ பிரைஸ்.
இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். Unpacking my Library– Writers and their Books என்ற இவரது அந்த சிறிய புத்தகம் காட்டும் புத்தகக் காதலும், புத்தக உலகமும் மிக அற்புதமானவை. புத்தகங்களை எவ்வாறு அடுக்கி வைக்கிறீர்கள்? அகர வரிசைப்படியா? துறைவாரியாகவா? பக்க அளவின் அடிப்படையிலா? இஷ்டப்படியா? புத்தகங்களில் எழுதுவதுண்டா? தேவையற்ற புத்தகங்களை என்ன செய்வீர்கள்? கழித்துக் கட்டுவது பற்றி சங்கடப்படுவதுண்டா? சேகரிப்பின் ஒரு புத்தகம் மிகவும் கிழிந்து போய் விட்டால் அதே புத்தகத்தை திரும்பவும் வேறொரு பிரதி வாங்கி வைத்துக் கொள்வீர்களா? இன்னும் 5, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நூலகம் எப்படி இருக்கும்? இந்த அச்சுப் புத்தகங்கள் அப்படியே நீடிக்குமா? உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் நூலகத்தின் கதி என்னவாகும்? உங்கள் டாப் 10 புத்தகங்கள் எவையெவை? அதற்கான காரணம்?
எந்த வயதில் புத்தகம் வாங்க ஆரம்பித்தீர்கள்? ஆரம்ப காலத்தில் வாங்கியவை இன்னும் உங்களிடம் இருக்கின்றனவா? எந்த வயதில் படிக்க ஆரம்பித்தீர்கள்? எந்த வயதில் புத்தக சேகரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்ந்தீர்கள்? கிண்டில் பயன்படுத்துகிறீர்களா? போனில் புத்தகம் படிப்பீர்களா? உங்கள் கருத்து கேட்டு அனுப்பப்படும் புத்தகங்களைப் படிப்பீர்களா? படித்த பிறகு அவற்றை என்ன செய்வீர்கள்? உங்கள் வீட்டில் திடீரென தீப்பிடித்து விட்டால் எந்தெந்த புத்தகங்களைக் காப்பாற்ற ஓடுவீர்கள்? அலமாரியில் வைக்கக் கூச்சப்படும்படியான புத்தகங்கள் உங்கள் சேகரிப்பில் உண்டா? அவற்றை எங்கேனும் ரகசியமாக வைத்திருக்கிறீர்களா?
உங்கள் புத்தக அலமாரி எதனால் செய்யப்பட்டது? எங்கு, எப்படி வாங்கினீர்கள்? உங்கள் சேகரிப்பில் எவ்வளவு நீங்கள் படித்து முடித்தவை? புத்தகங்களை இரவல் தருவீர்களா? ஒலி நூல்கள் கேட்பதுண்டா? உரக்க வாசிக்கும் பழக்கம் உண்டா? பிறரை உரக்க வாசிக்கச் சொல்லி கேட்பதுண்டா? இந்த எளிய கேள்விகளுக்கு அந்தப் புத்தகக் காதலர்கள் தரும் பதில்கள் சில எளிமையானவை. சில ஆழமானவை. சில நினைத்து நினைத்து இன்புற வைப்பவை.
நீங்கள் நினைப்பது போலவே எல்லோருமே மிக மிக இளம் வயதில் வாசிக்க ஆரம்பித்தவர்கள். இளம் வயதிலேயே புத்தக சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். இளம் வயதில் முதன்முதலில் வாங்கியவை, பள்ளியில் போட்டிகளில் பரிசாக வாங்கிய புத்தகங்களை இன்னும் சேகரிப்பில் வைத்திருப்பவர்கள். தம் காலத்திற்குப் பிறகு தம் நூலகம் என்ன ஆகுமோ என்று அனுதினமும் கவலைப்படுபவர்கள். என்றாலும் புத்தகங்கள் பற்றி விதவிதமான வேறுபட்ட கருத்துகள் உடையவர்கள்.
கிட்டத்தட்ட அனைவருமே கிண்டிலில் படிக்கிறார்கள். ஆனால் போனில் படிப்பதில்லை. காரணம் கிண்டிலில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், மின்னஞ்சல் பற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வருவதில்லை. அச்சுப் புத்தகம் போலவே பக்கங்களைப் புரட்டுகிறோம். திடீரென முப்பதாம் பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்றால் சட்டென்று பார்க்க முடிகிறது. போனில் இடையூறுகள் அதிகம். போனில் புத்தகம் படிப்பது பற்றி ஒரு எழுத்தாளர் சொன்ன பதிலை இங்கு கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். Do you use smart phone for reading என்று லீ பிரைஸ் கேட்கும் போது அவர் சட்டென்று No. No phone is smart enough for books! என்கிறார்.
ஆனாலும், எல்லோரிடமும், ஏதேனும் ஒரு உலகளாவிய பேரழிவில் மின்சாரம் இல்லாமல், போய் கணினிகள் செயலிழந்து விட்டால், என்ன செய்வது? அச்சுப் புத்தகம் கைவசம் இருந்தால்தானே நல்லது என்ற அந்த முன்னெச்சரிக்கை உணர்வும் இருக்கிறது. அதுவே அவர்களது வீடு நிறைந்த புத்தக அலமாரிகளில் புத்தகங்களை நிரப்பி விடுகிறது. மற்றொரு வியப்பான விஷயம் இந்த 13 பேரில் யாருக்குமே ஒலி நூல்களில் அத்தனை ஆர்வம் இல்லை என்ற தகவல்.
புத்தக அலமாரியைப் பற்றிச் சொல்லும் போது ஒருவர் புத்தக அலமாரி என்பது ஒருவரின் மருத்துவ அறிக்கை போன்றது. நீ இப்போது எப்படி இருக்கிறாய்? என்பதை மட்டுமின்றி, முன்பு எப்படி இருந்தாய் என்பதையும் அது காட்டிவிடும் என்கிறார். எல்லோருக்கும் வாசிப்பின் ருசியை ஆசிரியையோ, அம்மாவோ, அக்காவோ, அண்ணனோ, பக்கத்து வீட்டுக்காரரோ தான் காட்டியிருக்கிறார்கள். ஒரு எழுத்தாளர் தம் 15வது வயது வரை காமிக்ஸ் மட்டுமே படித்து வந்திருக்கிறார்.
ஆசிரியை எவ்வளவு சொன்னாலும் மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. ஒரு நாள் ஆசிரியை நீ சிறந்ததாகக் கருதும் 3 புத்தகங்களை எனக்குக் கொடு. நான் படிக்கிறேன். அதே போல் நான் சிறந்ததாகக் கருதும் 3 புத்தகங்களைத் தருவேன். நீ படிக்க வேண்டும் என்கிறார். சரி என்கிறார் இவர். அன்று முதல் அவரது நூலகத்தில் எல்லாவகையான நூல்களும் இடம் பெற ஆரம்பித்தன. அன்று ஆசிரியை தந்த 3 புத்தகங்களால் இன்று சிறந்த படைப்பாளியாக உருவாகிவிட்டார்.
இவர்கள் பெரும்பாலும் தம் புத்தக அலமாரியை தாமே டிசைன் செய்தவர்கள்தான் (என்னைப் போல என்று பெரும் அடக்கத்தோடு பதிவு செய்து கொள்கிறேன்). மற்றொரு விஷயத்திலும் அவர்களில் பலர் என்னைப் போன்றே இருப்பது மிகவும் பெருமையாக இருந்தது. படிக்க வேண்டிய புத்தகங்களுக்கு ஒரு அலமாரி, படித்து முடித்தவற்றிற்கு மற்றொரு மெயின் அலமாரி என்று கிட்டத்தட்ட அனைவருமே இருவித அலமாரி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
டு பி ரெட் அலமாரியில் நிறைய புத்தகங்கள் இருப்பது ஒருவித குற்ற உணர்ச்சியைத் தரும். வேகமாக படித்து முடிக்கத் தூண்டும். மற்றொரு விஷயம், அதில் நிறைய புத்தகங்கள் இருப்பது பற்றி பெரிதாகக் கவலை கொள்ள வேண்டாம். வீட்டில் தூசி அடைந்து கிடக்கும் உடற்பயிற்சி சைக்கிள் எவ்வாறு நமது உடற்பயிற்சி பற்றிய நல்ல நோக்கத்தின் அடையாளமாக நிற்கிறதோ, அது போன்றே இந்த வாசிக்கப்படாத புத்தகங்களும் வாசிப்பு குறித்த என் நல்ல நோக்கத்தின் அடையாளமாக இந்த அலமாரியில் காத்திருக்கின்றன என்கிறார் அவர்.
பதில்களில் என்னைக் கவர்ந்தது புத்தகங்கள் இரவல் தருவது பற்றிய அவர்களது பதில்கள். பலரும் இரவல் தராமல், ஒரு புது பிரதியை வாங்கித் தருபவர்களாகவே இருக்கிறார்கள். தந்தால் திரும்ப வராது. அதற்கு வாங்கியே தந்துவிடலாமே என்பது என்னவொரு
நல்ல மனநிலை!
அவர்களின் டாப் 10 பட்டியலும் சுவாரஸ்யமானது. அவற்றைத் தான் அவர்கள் வீடு தீப்பிடிக்கும் போது காப்பாற்றி தூக்கிச் செல்லப் போகிறார்கள். பெரும்பாலானவர்களின் பட்டியலில் என் அன்பிற்குரிய செகாவ் இருக்கிறார். வெர்ஜீனியா உல்ஃப் இருக்கிறார். அன்னா கரீனினா இருக்கிறது. ஒரு சிலருக்கு கிங்ஸ் பதிப்பு பைபிள். ஒருவருக்கு ஃபிராய்ட். ஒருவருக்கு ஷேக்ஸ்பியரின் முழு தொகுதி. மற்றொரு குழந்தை மனம் கொண்டவளுக்கு திபெத்தில் டின்டின். லார்ட் ஆஃப் ரிங்ஸ். நோம் சாம்ஸ்கியின் ரிஃப்லெக்சன்ஸ் ஆன் லாங்குவேஜ். பிளேட்டோவின் முழு தொகுப்பு.

ஒருவருக்கு புகைப்படக் கலை பற்றிய அரிதான புத்தகம். ஜேன் ஆஸ்டின். மில்டன். பலருக்கும் லோடிடா பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. சல்மான் ருஷ்டியின் மிட்நைட் சில்ரன், வி.எஸ்.நைபாலின் ய ஹவுஸ் ஆஃப் மிஸ்டர். பிஸ்வாஸ், அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் என்றெல்லாம் சிலர் சொல்லியிருப்பதைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு உலகம் முழுவதும் படைப்பாளிகள் ரசிகர்களாக இருக்கிறார்களே என்று வியப்பாக இருக்கிறது. மற்றொரு முக்கிய விஷயம் கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் டாப் 10ல் மொழியின் பண்புகள், இலக்கணம் குறித்த ஏதேனும் ஒரு நூலைக் குறிப்பிடுவது.
இன்று நம்மில் பலரும் ஒற்றுப் பிழைகளோடும், ல, ள,ழ மற்றும் ன, ண தவறுகளோடும் எழுதி வரும் காலத்தில் அவர்கள் இலக்கணத்திற்கு, பிழையின்றி எழுதுவதற்கான வழிகாட்டி நூல்களை, அகராதிகளை, சொற்களஞ்சியங்களை தமது டாப் 10ல் குறிப்பிடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது இலக்கிய வாழ்வின் வெற்றிக்கு அந்த புத்தகங்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன என்றும் தோன்றுகிறது. பட்டியலில் பைபிளும் இருக்கிறது. தீவிர நாத்திக நூலும் இருக்கிறது. கண்டதையும் படிப்பவன்தானே பண்டிதனாகிறான். (பட்டிமன்றப் பேச்சாளர் போல் ஒரு விளக்கம்–கண்டதை படிப்பது என்பதை பார்ப்பதை எல்லாம் படிப்பது என்று பொருள் கொள்வீராக. வீணானவற்றை என்ற பொருளில் அல்ல.)
எழுதுவது மட்டும் எழுத்தாளனைத் தீர்மானிப்பதல்ல. அவனது வாசிப்பும், அவனது புத்தக சேகரமும் சேர்ந்து தான் எழுத்தாளனைப் பற்றிய முழுமையான சித்திரத்தைத் தருகிறது. தமிழில் யாராவது இது மாதிரியான கேள்விகளை படைப்பாளிகளிடம் கேட்டு, பதில்களைத் தொகுத்தால் நன்றாக இருக்கும்.
