சு.அழகேஸ்வரன்
லெஃப்ட் வேல்டு பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாளரான விஜய் பிரசாத் ஆங்கிலத்தில் எழுதிய “வாஷிங்டன் தோட்டாக்கள்” என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு
(பேரா.பொன்ராஜ்) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் மேற்கத்திய மக்களுக்குச் சமமானவர்களாக மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் முன்னேற முயற்சித்த போதெல்லாம் அம்முயற்சிகள் எப்படித் தோற்கடிக்கப்பட்டன என்பதை விளக்குகிறது. இதற்காக 1823 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

200 ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்யும் இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 1823 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மன்றோ கோட்பாடு முதல் 1962 இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் கென்னடி அரசால் வெளியிடப்பட்ட “அயல்நாடுகள் உள் பாதுகாப்புக் கொள்கை” வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இந்த மன்றோ கோட்பாடானது, உலகின் ஒரு பாதியை அமெரிக்காவிற்கு சொந்தம் என்பதை சட்டபூர்வமாக வடிவமைத்த கோட்பாடாகக் கருதப்படுகிறது.
அடுத்ததாக, ஏகாதிபத்தியத்தின் சர்வதேசக் சட்டத்தை வரையறுத்த பேராசிரியர் ஜான் வெஸ்ட்லேக் 1894 இல் எழுதி வெளியிட்ட சட்ட நூலில், பூர்வ குடியினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிலங்களையும், வளங்களையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். சரணடைவது, ஏகாதிபத்திய கொள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே பூர்வ குடிகளுக்கு பலன்தரும் என்று வரையறுத்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், அமெரிக்காவின் அதிகார இலக்குகளை வரையறுத்த ‘உயர் அதிகாரம்’ என்ற கருத்தாக்கத்தை அமெரிக்காவின் உள்துறையைச் சேர்ந்த நிட்சே குழு உருவாக்கியது. அதன்பின்னர் உயர் அதிகாரம் பெறுவதென்பது அமெரிக்காவின் கொள்கைகளை வடிவமைப்பதில் ஒரு பகுதியாக மாறிப்போனது. உயர் அதிகாரம் என்பது அமெரிக்காவுடைய கொள்கை இலக்குகளாக இருத்தல் வேண்டும்.
கூடுதல் அதிகாரத்திற்குக் குறைவான எதையும் ஏற்றுக்கொள்வது என்பது தோல்வியை ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும் என்று அக்கொள்கை வரையறுத்தது. அதைத் தொடர்ந்துதான் 1962 இல் “அயல் நாடுகள் உள் பாதுகாப்புக் கொள்கை” வெளியிடப்பட்டது. இக்கொள்கை பன்னாட்டு நிறுவனங்களை முக்கியப் பங்காளிகளாகக் கொண்டுள்ள முதலாளித்துவ சமூக முறையை பாதுகாக்கும். மேலும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்கள், சந்தைகளை சுதந்திர உலகின் நாடுகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் அக்கரை, அமெரிக்காவிற்கு உண்டு என்று வலியுறுத்தியது.
ஆக, மன்றோ கோட்பாடு, சட்ட நூல், நிட்சே குழு கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகிய நான்கு கருத்தாக்கங்களும், ஆவணங்களும்தான், மூன்றாம் உலக நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தி அதன் வளங்களை சுரண்டவும், அதற்கேற்றாற்போல் உலக அமைப்புகளை உருவாக்கவும் வகை செய்தது. அதாவது 1919 இல் உலக நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னர் உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் தாங்களே பொறுப்பு என்று ஏகாதிபத்திய நாடுகள் எழுதி வைத்துக் கொண்டன. மற்றும் உள்ளூர்வாசிகளின் நில அறங்காவலர்களாக தங்களை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டன.
அதைத் தொடர்ந்து 1984 இல் ஏகாதிபத்திய நாடுகள் பெர்லினில் கூடி ஆப்பிரிக்க நாடுகளைப் பங்கு போட்டுக் கொண்டன. மேலும் 1946 இல் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கு குறித்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது. அந்த மாநாட்டிற்குப் பின்னர் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்கச் சார்பு நாடுகளாக மாறிப் போயின.
தனது தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி, ராணுவ ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக உலகின் முதன்மையான அதிகாரம் பெற்ற நாடாக அமெரிக்கா மாறிப்போனது. மேலும் நிலைகுலைந்து போன உலகை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் முதலாளித்துவத்தின் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளுடன் (நேட்டோ) இணைக்கப்பட்டது.
உலக நாடுகள் சபையின் தோல்வியிலிருந்து உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைப்பின் அறிக்கையானது, “சர்வதேசப் பாதுகாப்பிற்கு வல்லரசுகளே பொறுப்பு” என்ற முந்தைய உலக நாடுகள் சபையின் நிலையை ஏற்றுக் கொண்டது. அதன் முடிவுகளை நிறைவேற்ற ஆயுத நடவடிக்கைகள் அல்லாத பிற நடவடிக்கைகளைப் பயன்படுத்த உறுப்பு நாடுகளுக்கு அனுமதி அளித்தது. அதாவது முந்தைய காலனி ஆதிக்க நாடுகள் காலனிப் போரை தொடர்வதற்கு பின் வாசலைத் திறந்து விடும் பல ஓட்டைகளை கொண்டிருந்தது அந்த ஐ.நா. அறிக்கை.
இந்தக் காலகட்டத்தில் 1911 இல் சீனா, இந்தியா மற்றும் மெக்சிகோவில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகள் 1917 இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தேச விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்று ஏகாதிபத்தியத்தின் தாக்குதலைத் தாக்குப்பிடித்தன. இதையொட்டி 1927-28 ஆம் ஆண்டுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு குழு உருவாக்கப்பட்டது. அதற்குப் பின்னர் முந்தைய காலனிய நாடுகள் காலனிப் போரைத் தொடர்வதற்கு பின்வாசலைத் திறந்து விட்ட ஐ.நா. சபையில் சோவியத் ரஷ்ய தடுப்பு அரணாக செயல்பட்டது.
பின்னர் அணிசேரா நாடுகள் அமைப்பு உருவானது. அந்த அமைப்பும் நெருக்கடிகளுக்குள்ளானது. எனவே கியூபாவின் முயற்சியால் விடுதலை இயக்கங்களை நடத்திக் கொண்டிருந்த நாடுகளின் மாநாடு தனியாக நடத்தப்பட்டது. அதில் ஏகாதிபத்தியங்கள் மேற்கொண்டு வந்த அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கான உத்திகள் வகுக்கப்பட்டன. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுப் போக்குகள் முதல் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
பின்னர் 1954 முதல் 1971 ஆம் ஆண்டு வரை லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளின் விளைவாக அந்நாடுகள் சோசலிச கட்டமைப்பாக மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் குறுகிய காலத்தில் கவிழ்க்கப்பட்டன. இந்தக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சி.ஐ.ஏ. வால் உருவாக்கப்பட்ட ஆட்சிமாற்றத்திற்கான கையேட்டின் வழிகாட்டுதல்படி, ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்பட்டது குறித்து இரண்டாம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குவாடேமாலாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜாக்கப் அர்பென்ஸ் அமெரிக்க ஆதரவு நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். உடனே அது ‘கம்யூனிஸ்டுகளின் சதித்திட்டம்’ என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அர்பென்ஸும் அவரது நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளும் தனிமைப்படுத்தப்பட்டது.
மேலும் சிலேயில் அலென்டே தாமிரத்துறையை நாட்டுடைமையாக்கியதால் நிக்சன் அரசு அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. பின்னர் அலென்டே கொல்லப்பட்டார். டொமினிக்கன் குடியரசு தேர்தலில் வெற்றிபெற்றுப் பதவியேற்ற சோஷலிஸ்டான ஜூவன் கோஷ் மிதமான வேளாண் திட்டங்களை அமல்படுத்த முயற்சித்த போதும், பிரிட்டிஷ் கயானா மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று சோசலிசத் திட்டங்களை அமல்படுத்த முயற்சித்த செட்டி ஜெகனின் அரசுகள் பெருந்திரள் போராட்டங்கள் மூலம் கவிழ்க்கப்பட்டன.
மேலும் சி.ஐ.ஏ. வகுத்த பீனிக்ஸ் திட்டத்தின் மூலம் இந்தோனேஷியா, தெற்கு வியட்நாம், குவாடேமாலா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டு ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டது விளக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 1970 இல் உலகவங்கி உருவான பின்னர், சி.ஐ.ஏ. முன்னர் செய்த பணியை சர்வதேச நாணய நிதியம் செய்தது. குறிப்பாக மெக்சிகோ, பெரு உள்ளிட்ட அரசுகள் கவிழ்க்கப்பட்டது முதல் 1983 இல் அப்பர் வோல்டா நாட்டின் தலைவர் தளபதி தாமஸ் சங்கரா படுகொலை செய்யப்பட்டது வரை விளக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் 1973-74 ஆம் ஆண்டுகளில் மூன்றாம் உலக நாடுகள் “புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு” என்ற கருத்தாக்கத்தை சோவியத் ஆதரவுடன் முன்வைத்தது. 1985 இல் ஒட்டுமொத்த கடன்களை கொடுக்க மறுக்கும் நோக்கில் காலனி நாடுகளின் மாநாட்டை கியூபா நடத்தியது. பின்னர் தாமஸ் சங்கரா ஆப்பிரிக்க நாடுகளின் மாநாட்டைக் கூட்டினார். அதையொட்டியே சங்கரா படுகொலை செய்யப்பட்டார். அதாவது “சோவியத் தனது மரணத்தை மெல்ல தொடர்ந்தது, சங்கராவின் படுகொலை தேச விடுதலைச் சங்கிலியை அறுத்தெறிந்தது.”
சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், அதாவது 1989 இல் நடைபெற்ற பனாமா போர் முதல் 2019 இல் பொலிவிய குடியரசு ஆட்சி கவிழ்க்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் “சோவியத் உடைந்து போக, தாராளவாதத்தின் முன் மூன்றாம் உலகத் திட்டங்கள் மண்டியிட புதிய சகாப்தம் பிறந்தது. மேற்குலகின் தலையீடுகள், சீர்திருத்தங்கள் வேகத்தோடும் அரங்கேறின.

இந்த புதிய சகாப்தத்தின் எடுத்துக்காட்டாக பனாமா போர் நடந்தது” என்று மூன்றாவது பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. இறுதியாக, எதிர்-புரட்சிப் போர்களைத் தோற்கடிக்கும் திறன் மக்களுக்கு உண்டென்ற நம்பிக்கையை விதைக்கும் குவாடேமலா கவிஞர் ஓட்டோ ரெனே காஸ்டில்லோவாவின் கவிதை வரிகளுடன் நூல் நிறைவு பெறுகிறது. இந்நூல் இன்றைய தமிழ்ச் சூழலில் வெளியானது மூன்று வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, தேச விடுதலைக்கு எதிராக ஏகாதிபத்தியங்கள் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்புகள் குறித்து தமிழில் தனித்தனியாக பல நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட) வெளியாகியுள்ளன.
குறிப்பாக அலென்டே படுகொலை, கியூப நடவடிக்கைகள், வளைகுடாப் போர், ஆப்கான் ஆக்கிரமிப்பு, மூன்றாம் உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய உலக வங்கியின் சதிகள் குறித்தவை. ஆனால் அந்த தனித்தனி நிகழ்வுகளை 200 ஆண்டு கால வரலாற்றுப் பின்புலத்துடன் விளங்கிக்கொள்ள விஜய் பிரசாத்தின் இந்த நூலே பயன்படும்.
இரண்டாவதாக, இந்த நூல் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் குறித்து ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். “அமெரிக்க உள்துறை ஆவணங்கள் அல்லது சி.ஐ.ஏ. ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் அல்லது தேசிய பாதுகாப்பு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் அல்லது ஓய்வுபெற்ற சி.ஐ.ஏ., அமெரிக்க உள்துறை அலுவலர்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் ஆகியோரின் தனிப்பட்ட கட்டுரைகள் ஆகியவை கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நாசகார பணியைச் செய்தவர்கள் அப்பணி குறித்து பேச விரும்பாதவர்கள், தங்கள் வாழ்வு முடிகிற பொழுதில் உலகை உலுக்கிய அழிவு வேலைகளில் தங்கள் பங்கு குறித்து நேர்மையாக மனம் திறந்து பேசுவார்கள். அத்தகைய மனிதர்களிடமிருந்து நான் பெற்ற ஆழமான பார்வையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சக் கோகன், ரபேல் குய்ன்டெரோ, டைலர் ட்ரம் கெல்லர் போன்ற முன்னாள் சி.ஐ.ஏ. முகவர்களுடன் நான் நடத்திய உரையாடலுக்கு இணையாக வேறெதுவும் இப்புத்தகம் எழுத எனக்குப் பயன்படவில்லை.”.. ஆக, நூலாசிரியர் இந்நூல் ஆக்கத்திற்கு பயன்படுத்தியதாகச் சொல்லும் மேற்கண்ட முதன்மை ஆதாரங்களே இந்நூலை முக்கியத்துவமுடையதாக்குகிறது.
இறுதியாக, பொலிவியக் குடியரசு உருவான பின்னர், அந்த மண்ணைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக, மொரேல்ஸ் 2006 இல் தேர்வு செய்யப்பட்டு, நான்கு முறை அப்பதவியை வகித்தார். கடைசியாக 2019 ஆம் ஆண்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நிர்ப்பந்தந்தின் காரணமாக பதவி விலக நேர்ந்தது. அந்த ஈவா மொரேல்ஸ் ஆய்மா தான் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்