ஜெ. பாலசுப்பிரமணியம்
வ.உ.சி சிறைப்பட்டிருந்தபோது வறிய நிலையிலிருந்த அவரது மனைவி மீனாட்சி வழக்குச் செலவுக்கும் குடும்பச் செலவிற்காகவும் பொதுச் சமூகத்திடம் நிதி திரட்டியபோது, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் பெரும் உதவி புரிந்துள்ளனர். வ.உ.சி. சிறையிலிருந்து வெளிவந்த பின்பும் அவர்கள் தொடர்ந்து உதவி புரிந்து வந்துள்ளனர்.

காந்தி இருபது வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்ததால், அவர் வழியாகவும் தென்னாப்பிரிக்காவில் வசித்த தமிழர்களின் பண உதவி வந்து சேர்ந்துள்ளது. ஆனால் காந்தி வ.உ.சி.க்கு வந்த பொருளுதவியை சேர்ப்பிக்காமல் ஏமாற்றி விட்டார் என்ற அவதூறு சமூக ஊடகங்களில் தறிகெட்டு உலவிக்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது இந்த ஆய்வு நூல். வ.உ.சி. எழுதிய எட்டுக் கடிதங்களும், காந்தி எழுதிய 11 கடிதங்களும் இந்நூலுக்கான அடிப்படை ஆதாரங்களாக அமைகின்றன.
ஏற்கெனவே ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரையாக வெளிவந்த இவ்விஷயம், 111 பக்கங்கள் கொண்ட நூலாக விரிந்துள்ளது. பிரிட்டிஷ் காலனிக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் கம்பெனியை நடத்திப் பெரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்ட வ.உ.சி. தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார். பின்னர் விபின் சந்திர பால் சிறையிலிருந்து வெளியாகும் நாளை சுயராஜ்ய நாளாகக் கொண்டாடும் போராட்டத்தையும் மேற்கொண்டார். இதுபோன்ற நேரடி அரசியல் நடவடிக்கைகளால் வ.உ.சி அரசின் கண்காணிப்பில் முக்கிய நபரானார்.
வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதன் விளைவாக திருநெல்வேலி கலகம் ஏற்பட்டது. அரசு அலுவலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தின் விளைவாக வ.உ.சி., சிவா இருவர் மீதும் ராஜத் துரோக வழக்கு சுமத்தப்பட்டுச் சிறைத் தண்டனைக்கு உள்ளாயினர்.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நெருக்கடியான சூழலில் இருபது வயதுகூட நிறையாத வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மையார் வ.உ.சி.யின் நண்பர்கள், ஆதரவாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டு தனது குடும்பச் செலவிற்கும் கணவரின் விடுதலைக்காக முயற்சி செய்வதற்காகவும் பொருள் உதவி வேண்டிப் பல கடிதங்கள் எழுதியுள்ளார். மீனாட்சி அம்மாளின் வேண்டுகோளுக்கு உள்ளூரிலிருந்து பதில் வந்ததோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரவுக் கரம் நீட்டிப் பணம் திரட்டி அனுப்பினர்.
தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் பணம் திரட்டி அனுப்பியதற்கான பின்னணியையும், அதற்கு உறுதுணையாக இருந்த வ.உ.சி.யின் நண்பர்கள் வேதியப்பிள்ளை, விருதாச்சலம் பிள்ளை ஆகியோர் குறித்த தகவல்களையும் புகைப்படத்தையும் திரட்டியுள்ளார் சலபதி. வேதியப் பிள்ளை செய்த உதவிகளைப் பின்னாட்களில் வ.உ.சி. தனது நூலில் பதிவு செய்துள்ளார் என்பதையும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். முன்னுரை; வ.உ.சி. சிறையை நோக்கி; தென்னாப்பிரிக்கத் தமிழர்; கணக்கும் வழக்கும்; முடிவுரை: காவியப் பொருத்தம்; பின்னிணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்ட இந்நூலில் கணக்கும் வழக்கும் என்ற பகுதி காந்திக்கும் வ.உ.சி.க்குமான கடிதத் தொடர்பையும் நேரடிச் சந்திப்பையும் ஒரு புலனாய்வுத் தொடர் போல் விவரித்துச் செல்கிறது.
வ.உ.சி. தனக்காக தென்னாப்பிரிக்காவில் திரட்டிய நிதி என்னவானது என்று தெரியாத நிலையில் அதுகுறித்த காந்தியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வறிய நிலையிலுள்ள ஒரு தேசப் போராளியின் நிலையையும் இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்து தேசியப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற முயன்றுகொண்டிருந்த காந்தியின் பொறுமையான பதிலையும் சரியாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இரண்டு ஆளுமைகளுக்கான கடிதத் தொடர்பு இந்நூலில் மிக முக்கியப்பகுதியாக அமைகிறது.
காந்தி—வ.உ.சி. சந்திப்பு
1915 ஏப்ரல் மாதம் சென்னை வந்த காந்தியும் அவரது மனைவியும் ஏறத்தாழ 12 நாட்கள் தங்கி இருந்தனர். காந்தியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே சந்திக்கச் சென்றிருக்கிறார் வ.உ.சி. பின்பு காந்தியைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டுக் கடிதம் எழுதுகிறார். காந்தியும் காலை 6 மணிக்கு வருமாறு நேரம் ஒதுக்குகிறார். ஆனால் வ.உ.சி. தன்னால் 6.30 மணிக்கு மேல்தான் வர முடியும் என்று சொல்கிறார். அதற்கான காரணத்தை அறியும்போது நம் கண்கள் பனிக்கின்றன.
பிரிட்டிஷ் கம்பெனிக்கெதிராகப் பல லட்சம் மதிப்புள்ள சுதேசியக் கப்பல் ஓட்டிய தமிழன் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோது காந்தியைச் சந்திக்க வாடகைக்கு வண்டி அமர்த்திச் செல்ல முடியாத நிலையில், 5.30 மணிக்கு மயிலாப்பூரிலிருந்து கிளம்பும் ட்ராம் வண்டியைப் பிடித்தால்தான் காந்தி தங்கியிருக்கும் ஜி.ஏ. நடேசனின் சுங்குராம செட்டி தெரு வீட்டைச் சென்றடைய 6.30 ஆகிவிடும் என்பதாலேயே வ.உ.சி. அவ்வாறு கேட்டுள்ளார்.
காந்தியும் வ.உ.சி.யும் நேரில் சந்தித்தபோது என்ன பேசினார்கள் என்பது குறித்த துலக்கமான தகவல்கள் கிடைக்காதபோது, மெட்ராஸ் மெயில் நாளிதழுக்கு காந்தி கொடுத்த பேட்டியில், தென்னாப்பிரிக்காவிலுள்ள ஃபீனிக்ஸ் போன்றதொரு குடியிருப்பை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சபர்மதி ஆசிரமத்தின் முன்வரைவுத் திட்டத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். இத்தகவலை ஐந்து நாட்களுக்கு முன்னரே வ.உ.சி.யிடம் காந்தி பகிர்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை வ.உ.சி. காந்திக்கு எழுதிய கடிதத்தைக் கொண்டு பகுத்தறிந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் சலபதி.

தேசத்திற்காகப் போராடிச் சிறை சென்றதால் பெரும் வருமானம் தரக்கூடிய வழக்கறிஞர் தொழிலையும் இழந்து வ.உ.சி. கடும் வறுமையில் இருந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட நிதி குறித்து சரிவரத் தெரியாதபோது, ஒரு கட்டத்தில் தனக்குக் கிடைக்காவிட்டாலும் நல்ல விசயத்திற்கே பயன்பட்டிருக்கும் என்றும் ஆறுதலடைகிறார். இறுதியாக, வ.உ.சி.க்காகத் திரட்டிய 347 ரூபாய் 12 அணா நிதியை காந்தி அனுப்பியுள்ளார் என்பதை அறியும்போது ஒரு திரைப்படத்தின் சுப முடிவுக்கு வந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது.
வரலாற்று ஆய்வில் பெரும் விசயங்களை விவரிப்பதைக் காட்டிலும் இதுபோன்ற நுணுக்கமான விசயங்களை விவரிப்பது சற்று சிரமமான காரியம். அதை வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி செப்பமாகச் செய்துள்ளார். கிடைக்கும் சொற்ப ஆதாரங்களை முன்னும் பின்னும் சென்று ஒப்பிட்டுப் பகுத்தாய்ந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
படிப்பதற்கும் விறுவிறுப்பாக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இந்நூல் வ.உ.சி. ஆய்வுக்கு மட்டுமல்லாமல் காந்தியியலுக்கும் ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இந்நூலாசிரியர் 1986ஆம் ஆண்டு வ.உ.சி.யின் நண்பரான வேதியப் பிள்ளையின் மகனைத் தொடர்புகொண்டு தகவல்களைத் திரட்டியுள்ளார். அந்த ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இந்நூல் உருவாக்கத்தில் 35 ஆண்டுகால உழைப்பு இருக்கிறது.
