சைதை ஜெ.

தோழர் கருணாவின் திடீர் இறப்பு அதிர்ச்சியையும் வேதனையையும் ஒருங்கே கொண்டு வந்து சோகத்தில் ஆழ்த்தியது. கண்ணீர் மல்க விடை கொடுக்க, நேரிலும் இணையத்திலும் பலரும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கருணாவோடு சேர்ந்து இயங்கியவர்கள் – அதிகாரத்திற்கு எதிரான செயல்பாட்டோடு தங்களை அவருடன் ஒருமித்துக் கொண்டவர்கள் தான். அந்த அடித்தளத்தின் மேல் இருந்து கருணாவோடு தங்களை – இணைத்துக் கொண்டவர்கள், கைகுலுக்கியவர்கள், சமூக இடைவெளியோடு நின்று கொண்டவர்கள், தூரத்தே நின்று புன்னகைத்தவர்கள் – இப்படியாகப் பலரும் கருணாவின் மரணம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நான் கருணாவின் தோழனாகப் பயணித்தவன். அதனால் கருணாவை அரசியல் தளத்தில் நன்கு அறிய முடிந்தவன். எனவே நான் கருணாவை -ஒரு பரிவிராஜகனாக, பௌத்த பிக்குவாக, பண்பாட்டு ஊழியனாக, என் சக தோழனாக உணர்ந்தேன்.
பௌத்தம் என்றதும், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள பௌத்தம் சிலருக்கு நினைவில் வரக்கூடும். இந்தியாவில் பார்ப்பனியம் தின்று செரித்து இந்து மதத்தின் ஓர் பகுதியாகிப்போன இந்தியப் பௌத்தமும் அதன் நீட்சியாக உலகின் பிற பகுதிகளில் பரவி இருக்கும் இன்றைய வடிவமும் இன்னும் சிலருக்கு நினைவில் வரக்கூடும். இங்கு குறிப்பிடப்படும் பௌத்தம் என்பது வைதீகத்தை அதன் சொந்தக் களத்தில் நேருக்குநேர் எதிர் கொண்டு தத்துவச் சமர் புரிந்து வென்று முடித்த பௌத்தம் – இது அடிப்படைப் புரிதலுக்காக.
பௌத்தம் உருவாக்கிய அறிவுப் புரட்சி மக்களுக்கு புதிய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்தது. நரகம், மறு உலகம் போன்ற பயமுறுத்தல்கள் இன்றி மக்கள் வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொண்டார்கள். மகிழ்ச்சி நிறைந்த, வெறுப்பு உணர்வு இல்லாத, கவலையற்ற மனப்பான்மையோடு வாழ்ந்தார்கள். விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கோட்பாடுகள் அவர்களை வழி நடத்தியது. சமூகக் கடமை, அயலாரிடம் அன்பு, கூட்டுறவு, இணக்கமுடன் வாழ்தல் போன்ற குணங்களுடன் சமூகம் மாறியது.
அரக்கர்களால் நோய் உண்டாகிறது, நோய் குணமாவதற்கு மந்திரம் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு உடலை சோதித்து நோய்க்கான காரணத்தைக் கண்டறியும் அறிவியல் முறை உருவானது. சார்வாகர் எழுதிய சம்கிதை எனும் மருத்துவ நூலும் புகழ்பெற்ற சிசுருதர் எழுதிய சிசுருதம் எனும் மருத்துவ நூலும் இக்காலகட்டத்தில் உருவாகி இருக்கின்றன. மானுடருக்கு மட்டுமின்றி மாவினத்திற்கும் மருத்துவம் பார்க்க மருத்துவக் குடில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உணவுப்பொருட்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று சேகரிக்கும் முறையைக் கைவிட்டு உணவுப்பொருள் உற்பத்தியை, விவசாயத்தை மக்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆண்டு முழுவதும் வளம் கொழிக்கும் நிலப்பரப்பை தங்கள் உழைப்பின் மூலம் உருவாக்கி பயிர் செய்திருக்கிறார்கள். வறட்சி, வெள்ளப்பெருக்கை எதிர் கொள்ள யாகங்கள் செய்து, பலியிட்டு புரோகிதர்களுக்கு தட்சிணை கொடுக்கும் நிலை மாறி திட்டமிட்ட பாசன முறையால் வறட்சியையும் வெள்ளப்பெருக்கையும் மக்கள் கூட்டாக எதிர் கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் புரோகித மொழியான சமஸ்கிருதம் புறம் தள்ளப்பட்டு மக்கள் பேசும் பாலி, பிராகிருத மொழிகள் இலக்கிய மொழிகளாக வளர்ச்சி அடைந்திருக்கின்றன. கல்வி கற்றலும் கற்பித்தலும் பார்ப்பனர்களுக்கு உரித்தானது என்ற நிலை மாற்றப்பட்டு அனைவருக்கும் கல்வியும் ஒழுக்க நெறிகளும் பௌத்த விகாரங்களில் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
புரோகித ஆட்சியில் பாலுறவுக்காகவும் பிள்ளைபெறும் இயந்திரமாகவும் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்கள் சமூக சமய நடவடிக்கைகளில் பங்கு பெறும் மரியாதைக்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்களிடம் திணிக்கப்பட்டிருந்த – மாந்திரீகம், சோதிடம், நாள் நட்சத்திரம் பார்த்தல், யாகம், யாகப் பலி போன்ற புரோகிதச் சடங்குகள் – பார்ப்பனர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்ட வேத சமய நடைமுறைகள் – நால் வர்ணப் பிரிவினைகள் விதித்த நீதியற்றக் கட்டுப்பாடுகள் – பொருளாதாரச் சரண்டல்கள்-வேதக்கடவுள்களின் கட்டளைகள் என்ற பெயரால் அரங்கேற்றப்பட்ட இவைகள் அனைத்தும் – துடைத்து எறியப்பட்டு, பார்ப்பன அதிகாரத்திற்கு எதிராக மிகுந்த அறிவுத் தாகத்தோடும் ஆன்மிக எழுச்சியோடும் எழுந்திருந்திருக்கிறது புதிய சமூகம். புத்தர் தனது முதன்மைச் சீடரான ஆனந்தாவிடம் கூறியதைப்போல,
‘அழகின் சிரிப்பில் அன்புடன் கலந்திடவே
அழகின் சிரிப்பில் அணி சேர்ந்து நின்றிடவே
அழகின் சிரிப்பில் அகமகிழ்ந்து இருந்திடவே’
மனித சமூகம் பார்ப்பனத் தளைகள் உதிர்த்து ஒரு மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி முன்னேறி இருக்கிறது.
இந்திய சிந்தனை மரபின் வரலாறு என்பது பார்ப்பனியச் சிந்தனை எனும் கருத்து முதல்வாதத் தத்துவம் மற்றும் அதற்கு எதிரில் நின்ற லோகாயதம், சாங்கியம், சமணம், பௌத்தம் போன்ற பொருள் முதல்வாதத் தத்துவங்களின் போராட்ட வரலாறே ஆகும். சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரரின் காலத்தில் 363 வேத சமய எதிர்ப்பு அமைப்புகள் இருந்ததாக சமண இலக்கியங்கள் கூறுகின்றன. அத்தகைய 62 அமைப்புகள் இருந்ததாக பௌத்த இலக்கியங்கள் கூறுகின்றன.
பார்ப்பனியம் உருவாக்கிய நால்வர்ண அமைப்பு வலுவிழந்ததால் பார்ப்பனர்கள் மதிப்பிழந்து அதிகாரமிழந்து போயிருக்கிறார்கள். பார்ப்பனர்களில் அநேகம் பேர் உழவர்களாக, கைவினைஞர்களாக, குற்றேவலராக, ஆடு மாடுகள் வளர்ப்போராக, கதாகாலட்சேபம் செய்பவர்களாக, வண்டியோட்டிகளாக, ஊர் காவலாளியாக, பால் விற்பவராக, முயல் வேட்டையாடுபவராக, மீன் ஆமைகளைப் பிடித்துத் தின்பவராக, பரட்டைத் தலையும் அழுக்கேறிய நகங்களோடும் மண் வெட்டும் வேலை செய்பவர்களாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார்கள். நான்கு நூற்றாண்டுகளாக
கி.மு.300 முதல் கி.பி.100 வரை பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இல்லை. பார்ப்பன கோயில்களில் வழிபாடுகள் இல்லை. யாகங்களோ பார்ப்பனியப் புரோகிதச் சடங்குகளோ நடைபெற்றதாக ஒரே ஒரு குறிப்பு கூட வரலாற்றில் காணக் கிடைக்கவில்லை. பார்ப்பனர்கள் தேடுவாரின்றி திரிந்து அலைந்தார்கள். பார்ப்பனியக் கடவுளர்கள் பதுங்கிக் கிடந்தார்கள் என்கிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் பண்டார்கர். (இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்).
வட இந்தியச் சமூகத்தில் வேத சமய வைதீகர்களின் நிலை இதுவென்றால் தமிழ்ச் சமூகத்திலும் அவர்கள் குன்றிப் போயிருந்தார்கள் என்கிறார் பேராசிரியர் அருணன். ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் சமணர்களே. தவச்சாலைகளையும் கல்விச்சாலைகளாக நடத்தியவர்கள் சமண – பௌத்த சமயத்தவர். கி. பி. 200 முதல் கி. பி. 700 வரை சுமார் 500 ஆண்டு காலம் தமிழ் கூறும் நல்லுலகில் பெரும்பான்மை சமயத்தவராக இருந்து தத்துவச் சிந்தனையை வளர்த்தவர்கள், தமிழ் இலக்கியங்களைத் தந்தவர்கள் இவர்களே. இந்தக் காலம் முழுக்க எந்த ஒரு உருப்படியான தமிழ் இலக்கியத்தையும் வேத சமயம் தந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் சமஸ்கிருதத்தில் மூழ்கி இருந்தார்கள் அல்லது அந்த அளவிற்கு குன்றிப் போயிருந்தார்கள் என்பது உறுதியாகிறது. (தமிழரின் தத்துவ மரபு, பகுதி ஒன்று – அருணன்.)
இது நடந்தது இந்தியாவில். வேதங்களின் நாடு என்றும் வேதத் தத்துவங்களே இந்தியாவின் மாண்பு என்றும் புகழப்படுகிற இந்தியாவில் தான். இந்திய வரலாறு என்பது வேத மறுப்பு இயக்கங்களின் வெற்றி வரலாறும் ஆகும்.
இது எப்படி நடந்தேறியது.
கி. மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி, வட இந்தியாவில் நால் வர்ணத் தத்துவ அடிப்படையில் உருவான வேதகால பழங்குடி சமூகம் சிதைவுற்று மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய காலம். பார்ப்பன புரோகிதரல்லாத நாடோடிகளும் அறிஞர் பெருமக்களும் பரிவிராஜகர் என்ற சமயப்பணி அமைப்பு ஒன்றை தோற்றுவித்திருக்கிறார்கள். குடும்பத்தை விட்டு வெளியேறி ஊர் ஊராகப் பயணித்து வேத சமய மறுப்பு வாதத்தை மக்களிடையே பரப்பி இருக்கிறார்கள்.
கௌதமரும் துவக்க காலத்தில் பரிவிராஜகராக மக்களிடையே பயணித்திருக்கிறார். ஆதிக்கத்திலிருந்த வைதீகப் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் புறம் தள்ளி வட இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரிவிராஜகர் இயக்கம் பரவி இருக்கிறது. மக்களின் புதிய நம்பிக்கையாளர்களாக பரிவிராஜகர்கள் திகழ்ந்திருக்கின்றார்கள்.
இந்திய அறிஞர்களில், வேதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆத்திகர் என்றும் நம்பிக்கையற்றவர்கள் நாத்திகர் என்றும் இரு பிரிவுகளாக அறியப்படுவதற்கு பரிவிராஜகர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வேத விரோதிகள் எனும் பொருளில் நாத்திகர் என பார்ப்பனர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சொல் திறம் வாய்ந்த அவர்களின் உரையைக் கேட்பதற்கு மக்கள் உரை மேடைகள் அமைத்து மேன்மைப்படுத்தி இருக்கிறார்கள்.
தமது ஆற்றல் மிக்க வேத எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் பரிவிராஜகர்கள் இந்தியச் சமூகத்தில் அறிவுப் புரட்சி நடைபெறுவதற்கான களம் அமைத்தவர்கள். மக்களை பார்ப்பனியத்திற்கு எதிரான அறிவுப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தியவர்கள். உரை மேடைகளில் தோன்றிய எழுச்சி வீரியத்துடன் செயல்படத் தொடங்கியது.
பரிவிராஜகர் இயக்கத்தைத் தொடர்ந்து வேத மறுப்புத் தத்துவங்களும் அமைப்புகளும் உருவாகி பகுத்தறிவுச் சிந்தனைகள் பரிணமித்தன. பகுத்தறிவுச் சிந்தனை மரபின் மணிமுடியாக பார்ப்பனியக் கருத்தியல் மறுப்பின் உச்சமாக பௌத்தம் திகழ்ந்தது. பௌத்தப் புரட்சியின் – அறிவுப் புரட்சியின் விளைவாக பார்ப்பனியம் துடைத்தெறியப்பட்டது.
பௌத்தம் தனது கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க பிக்குகளின் அமைப்பை உருவாக்கிற்று. பிக்கு என்ற உதாரண மனிதர்களைப் படைத்து சமூகத்தின் முன் நிறுத்தியது. பிக்குகளின் வாழ்க்கை முறையே பார்ப்பனியத்திற்கு எதிரான ஆற்றல்மிக்க பிரச்சாரமாய் அமைந்தது. பிக்குகளுக்கான ஒழுக்க விதிகளைக் கூறும் விநயம் என்ற நூல் புத்தரின் நேர் கூற்றாக எழுதப்பட்டதாகும். பிச்சைப் பாத்திரம், தண்ணீர் குடுவை, சாதாரணத் துணியிலான மூன்று உடுப்புகள், எண்ணெய்க் குப்பி, சவரக் கத்தி, ஊசி நூல், ஊன்று தடி இவைகள் மட்டுமே பிக்குகளுக்கு அனுமதிக்கப்பட்ட சொத்துகள்.
பிக்குகள் தங்குமிடம் ஊருக்கு வெளியே உள்ளத் தோட்டமாகவோ பாறைக்குகையாகவோ சுடுகாடாகவோ இருக்க வேண்டும். பிக்குகள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பயணத்திற்காக தேர், வண்டி, குதிரை, யானை போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது. பிச்சை எடுத்தே புசிக்க வேண்டும். பிக்குகளின் வாழ்க்கை முறை சாதாரண மக்களுக்கு எடுத்துக் காட்டானதாகவும் ஈர்ப்பானதாகவும் அமைந்திருந்தது.

பரிவிராஜகர்கள் தங்களுக்கென அமைத்துக் கொண்ட ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றியே புத்தர், பிக்குகளுக்கான ஒழுக்க விதிகளை அமைத்துக் கொடுத்தார். இந்த பௌத்த பிக்குகளே பார்ப்பனியக் கடவுளர்களை பதுங்கி ஒளியச் செய்தவர்கள். தேடுவாரின்றி பார்ப்பனர்களை அலையவிட்டவர்கள்.வானத்திற்கு கீழே உள்ள அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று அறிவித்துக் கொண்டவர்களின் அதிகாரத்தைத் துடைத்தெறிய அன்றே வரலாறு, இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களை வடிவமைத்திருக்கிறது.
பதுங்கிக் கிடந்த பார்ப்பனியம், எதிர்ப்பு இயக்கங்களுக்குள் ஊடுருவியும் கொலைபாதகச் செயல்களின் மூலமும் அண்டிக் கெடுத்தும் மீண்டும் உயிர் பெற்றது. இன்றைய நவீன காலம் வரை தன்னைப் புனரமைத்து இந்துத்துவமாக உருமாறி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. சுரண்டலின் இந்திய வடிவமாகத் தோன்றிய பார்ப்பனியம் உலகமய சுரண்டல் கருத்தியல்களை உள்வாங்கி ஏகாதிபத்திய இந்துத்துவமாக பரிணாமம் பெற்றிருக்கிறது.
மறுப்பு இயக்கங்களும் தம்மை உரம் ஏற்றி களம் ஆடி வளர்ந்திருக்கின்றன. பார்ப்பனியத்தால் ஊடுருவ முடியாத இயக்கங்களாக, தத்துவங்களாக அம்பேத்கரியமும் பெரியாரியமும் மார்க்சியமும் திகழ்கின்றன.
புதிய அறிவியல் தரவுகளுடன் உலகளாவிய அனுபவச் செறிவுடன் இளமைத் துடிப்போடு இந்துத்துவ எதிர்ப்பில் முன்னணியில் நிற்பது மார்க்சியம். அரசியல், சமூகம், பொருளாதாரம் எனும் மூன்று தளத்திலும் எதிர் கொள்ளும் ஆற்றல் மிக்கதான தத்துவச் செறிவும் நடைமுறைத் திட்டமும் கொண்டது மார்க்சியம்.
தோழர் எஸ் கருணா, வேத சமய எதிர்ப்பு மரபின் கண்ணியில் பரிவிராஜகனாக, பௌத்த பிக்குவாக, ஆற்றல்மிக்க பிரச்சாரகனாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவன். எனவே தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டான். கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் முழுநேர ஊழியராகத் தன்னை ஒப்புக்கொடுத்தான். தனது வாழ்வின் கடைசி நொடியிலும் ‘நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினன்’ என்று அறிவித்துக் கொண்டான்.
நவீன இந்துத்துவத்தின் வளர்ச்சி சமூகத்தின் அறச்சிந்தனைகளை காவு வாங்கிவிட்டது. அதிகாரத் திமிரோடுதான் எப்போதும் மக்களை அணுகுகிறது. தானே வெற்றியாளன் என்று அறிவித்துக் கொள்கிறது.
எனவேதான் கருணா, அதிகாரத்திற்கு எதிராகவும் அற உணர்வோடும் தோல்வியால் அணுக முடியாத கொண்டாட்ட மன நிலையோடும் மக்களோடு இணைந்து நிற்கிறான்.
மிகுந்த அழகியலோடு இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் வண்ணங்களைச் சேர்த்து, குழைத்துக் குழைத்து ஆனந்தம் அடைகிறான். எக்காளச் சீற்றத்தோடு இணையத்தில் எதிர்வினை ஆற்றுகிறான். மார்க்சியக் கருத்தியலோடு தன் நாடி நரம்பெங்கும் இந்துத்துவ – ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சுருதி கூட்டுகிறான். இந்தியாவில் மீண்டும் ஓர் அறிவுப் புரட்சிக்காக ஆள் திரட்டுகிறான். அணி அமைக்கிறான்.
கருணாவின் தனி மனித ஆளுமையையும் தனித் திறமையையும் உருவாக்கியது அவன் ஏற்றுக்கொண்டத் தத்துவமும் அவன் ஒப்புக்கொடுத்த இயக்கமும். அதை வளர்த்தெடுத்து வளப்படுத்திக் கொண்டவன் அவன். ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக் குரல்களின் உந்து விசையாக வரலாறு நெடுகிலும் கருணா புதைந்து கிடக்கிறான். விதையாக… வேர்களாக… விழுதுகளாக… கருணா- ஒரு பரிவிராஜகன், பௌத்த பிக்கு, பண்பாட்டு ஊழியன், எனக்குத் தோழன். கருணாவின் நினைவுகளுக்குச் செவ்வணக்கம்! (இந்நூலிலிருந்து)
