சுரேஷ் இசக்கிபாண்டி
இந்த உலகில் ஆசிரிய நல்ல நினைவுகளை போல் மகிழ்ச்சியைத் தரக்கூடியது வேறு ஏதும் இல்லை. அதேபோல் தீய அல்லது பிரிவின் நினைவுகள் தரும் வலியும் வேதனையும் போல் கொடியது ஏதுமில்லை. வருடத்தில் ஆறு மாதங்கள் பச்சைப்பசேலென பசுமையும், அடுத்த ஆறு மாதங்கள் வறண்டு காய்ந்து போய் வானம் பார்த்த பூமியாய் இருந்த எங்களது கரிசல்காட்டுக் கிராமத்தின் கதையே இந்நாவலின் சாரம்.

கிறிஸ்தவ மதத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், இயேசுவின் அன்புக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஏழைக் கிராம மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளை (ஹரிஜனங்களுக்கு வீடு மற்றும் மருத்துவமனை கட்டுவது) செய்யவந்த பிரான்ஸ் நாட்டுக் குழுவினருக்கும், அவர்களது வழிகாட்டியாக வந்த மார்க்சியத் தத்துவத்தின்மீது அதீத நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்ட பள்ளித் தமிழ் ஆசிரியரான கதையின் நாயகன் பழனி முருகனுக்கும் இடையே நடக்கும் உரையாடலும், கருத்துப் பரிமாற்றமும், இந்தியாவும் இன்றைய இந்தியக் கிராமங்களின் நிலையும் காந்தி கண்ட கனவு போல் இல்லை. ஏனெனில் அது இன்றைக்கு காந்தியின் தேசமல்ல.
சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடின்றி சுரண்டினார்கள். ஆனால் இன்று இந்திய ஆட்சியாளர்கள் முதலாளிகளோடு கைகோர்த்து ஏழைகளை மட்டுமே சுரண்டிக் கொழுக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் கட்டி வரும் மருத்துவமனை தற்காலிக வலி நிவாரணம் மட்டுமே; நிரந்தரத் தீர்வாக அது இருக்கப்போவதில்லை. ஆகவே தான் நாயகன் இந்தியாவின் எதிர்காலம் மார்க்சியத் தால் மட்டுமே தீர்மானிக்கப்படும் உறுதிப்பாட்டுடன் நம்புகிறார்.
நம்நாடு காந்தியின் கொள்கையால் நடவடிக்கையால் இப்புனித நிலையை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை அடைந்து இருப்பதாக, இந்தியாவில் படித்த அறிவிலிகள் ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்கள் புத்தகமாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியதை வைத்து மதிப்பிடும் பிரான்ஸ் குழுவினர், இந்தியாவின் கிராமங்களில் நிலைமையை குறிப்பாக கரிசல்காட்டுக் கிராமத்தின் வழியே வறுமையையும் அது தரும் பசியையும், அம்மக்களின் சூழ்நிலைகளும் வாசிப்போரின் மனதை உலுக்கி எடுக்கும்.
இன்றைக்கும் இந்தியாவில் பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகளும், என்.ஜி.ஓ.க்களும் ஏழைகளுக்குச் சேவை செய்வது போல் அவர்களுடன் பழகி அரசுக்கு ஆதரவாக சில வேலைகளையும் செய்து, அம்மக்கள் அரசின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை, கேள்வி கேட்கும் எண்ணத்தை, போராடும் உணர்வை மட்டுப்படுத்தும் வேலையை இன்றைக்கு சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
அதேபோல் காலணிகளில் ஊரில் உள்ள பெரிய வீடுகளின் அடையாளம் இன்று ஆளும் வர்க்கத்தின் நிறமாக மாறிப் போயுள்ளது. ஏனெனில் அவர்கள் வந்த பாதையை என்றுமே திரும்பிப் பார்ப்பதில்லை. ஏனெனில் அவர்களும் நாடார், தேவர், வன்னியர் சமூகத்தினர் போன்று கருப்பாக இருப்பதால் அவர்களில் ஒருவராக தன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நிலைமை இன்றளவும் இந்தியா முழுவதும் நீடித்து வருகிறது.
விகடன் விருது பெற்ற தமிழக மாணவர் செயல்பாட்டாளர் வளர்மதி மேடையில் பேசுகையில் கூறியுள்ளது போல, சாதி என்ற விசயத்தோட வலி என்ன என்பதை கௌசல்யா இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்…
படிப்போட, உரிமையோட வழி என்ன என்பதை அனிதாவோட இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்…
உயிர்களோட வலி என்ன என்பதை தன்னோட உறவினர்களைக் கூட அடையாளம் காட்டமுடியாது, டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கண்டுபிடிக்கிற மீனவர்களுடைய இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்…”
இயலாமையின் வலி என்ன என்பதை உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரின் நிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும்…
ஏனெனில் அவர்களிடத்தில் சிகிச்சை பெறுவதற்கும் கல்வி பெறுவதற்கும் பணம் இல்லை. இம்மக்கள், ஏழை எளிய மக்கள் சாதியின் பெயராலும், பொருளாதாரத்தின் பெயராலும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றளவும் இந்த அவலங்களில் இருந்து வெளியேற முடியாதநிலை தெருக்களில், ஊர்களில், காலனிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதை இந்நாவல் மீண்டும் நமக்கு உணர்த்தும்.
மேற்கண்ட இத்தகைய நிலைமைகளை அனுபவிக்காத, அதில் சிக்காத, செல்வச் செழிப்புடன் வளமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஒரு பிரான்ஸ் கத்தோலிக்க கிறிஸ்தவ குழுவினர்களில் ஒருவரான 21 வயதில் இறுதியை இன்பமாக கடவுளின் பெயரால் பொது மக்களுக்கு சேவை செய்ய நிதி திரட்டி வந்தவள் தான் நமது நாயகி ஷபின்னா மேரி வில்லான். இயேசுவின் தாயார் மரியா போல் அழகிய பொலிவும், மனிதநேயமும் கொண்ட நாயகி. பிரான்ஸ் நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவளுக்கு கம்யூனிசம் என்றாலும், தோழர் என்ற வார்த்தையைக் கேட்டாலும் வேப்பங்காய் போல் கசப்புணர்வு எப்போதும் உள்ளிருந்து மேலெழுந்து வரும்.

“காம்ரேட்” என்ற சொல் அதிகார வெறியில் மனிதர்கள் பிரித்துக்கொண்ட நாட்டின் எல்லைகள்; மனிதர்கள் அறியாமையாலும் நலத்தாலும் வேறுபடுத்திக்கொண்ட மதமாச்சரியங்கள், மொழிகள், தச்சாரங்கள், இன்னும் சொன்னால் இயற்கை பிரித்து வைத்திருக்கிற வெள்ளையர், கருப்பர், சிவப்பர், மஞ்சள் நிறத்தினர், குள்ளர். நெட்டையர்; ஏன் ஆண்டவன் பிரித்துப் படைத்ததாகச் சொல்லப்படுகிற ஆண் – பெண் என்ற வேறுபாடுகள், எத்தனை தடைகள், தளைகள், குறுகிய வட்டங்கள் அனைத்தையும் உடைத்துக்கொண்டு மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அன்போடும்.
மகிழ்வோடும் செயல்படும் தோழர்கள் என்பதை உணர்த்தும் எல்லை கடந்த வலிமையும் வளமும் மிக்க சொல்தான் ‘காம்ரேட்’ என்பது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட மகா உன்னத நோக்கம் கொண்ட அவர்களை பாகற்காய் என எண்ணி கசந்து கடிந்து கொண்ட நாயகியும், அவரது சக பயண நண்பர்களும் எப்படி நாயகன் பழனியின் இதயத்திற்கு நெருக்கமாகிறார்கள். வேறு தேசம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம் கொண்ட இருவரிடையே எப்படி அரும்புகிறது இந்த “டியர் காம்ரேட்” என்பதுவே மையக்கதை.
இந்நாவலின் ஆசிரியர் தனுஷ்கோடி ராமசாமி எப்படிப்பட்ட ஒரு அருமையான கதை சொல்லி என்பதை மிகுந்த உள்ளக்களிப்போடு மீண்டும் மீண்டும் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் எண்ணிக் கொள்ளும் உணர்வு, வாசகரை ஈர்க்கும். இவரைப் போன்ற படைப்பாளிகள் எப்படி இந்தச் சமூகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் போனார்கள் என்ற கேள்வி என்னுள் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருந்தது, இருக்கிறது.
அதுவே இன்னும் அவரது எழுத்துகளை அதிகமாகப் படிக்க வேண்டும் என்கிற உணர்வையும் தந்தது. எனினும் இந்நாவலை 2005இல் வெளியிட்டதற்காகவும், மீண்டும் பதிப்பித்து இரண்டாவது அச்சாகக் கொண்டு வந்ததற்காகவும் பாரதி புத்தகாலயத்திற்கும், ‘இந்நாவலை நீ படிக்க வேண்டும்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்னமே எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பன் காளத்திக்கும் எனது நன்றிகள்.