செல்வம் அருணாசலம்
1938ல் ஹிட்லருடன் போரிடத் தயங்கி போரைத் தவிர்க்கும் முயற்சியில், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைவர்கள் மியூனிக் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கை செக்கோஸ்லோவாக்கியாவின் சில பகுதிகளை ஜெர்மனியுடன் இணைக்க உதவியபோதும், ஹிட்லரின் ஆக்கிரமிப்பு போர் நடவடிக்கைகளை தடுக்கத் தவறியது. மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் ஹிட்லரை போர் மூலம் எதிர் கொள்ளத் தயங்கியது, இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு வழிவகுத்தது.

இப்படி வரலாற்றுப் பெருநிகழ்வுகள் மட்டுமன்றி, தனிமனித வாழ்விலும் விரைவாக முடிவெடுக்க, சந்தேகத்தில் தெளிவு பெற, கருத்துகளை பகிர்ந்துகொள்ள என தயக்கத்தை பற்றிக்கொண்டு தோல்வியை சந்திக்கிறார்கள் ஒரு சிலர். தயக்கம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் அனேகப் படிகளில் தடைகளாக மாறி விடுவதைக் காண்கிறோம்.
பெற்றோர் தன் குழந்தைகளுடன் மனம் விட்டு பேசத் தயக்கம், மாணவர்கள் ஆசிரியர்களுடன் பேசத் தயக்கம், நண்பர்களுடன் மனம் விட்டு கருத்துப் பறிமாறத் தயக்கம், மேலதிகாரிகளின் முடிவுகளில் கருத்துக் கூறத் தயக்கம் என வாழ்வில் தயக்கம் ஏற்படுத்தும் தடைகளை தாண்டுபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.
தயக்கம் என்பது தனிமனிதனின் உள்ளுணர்வு மற்றும் உளவியல் சார்ந்ததாக இருந்த போதும், அது பௌதீக முடிவுகளை பாதிக்கும்போது சமூகம் சார்ந்ததாக உருப்பெறுகிறது. புதுவை முருகுவின் ‘தயங்குவது ஏன் இன்னும்?’ புத்தகம் இதுவரை தமிழ்ப் புத்தகவெளியில் தயக்கம் குறித்து பரவலாக பேசப்படாத நுட்பமான விவரங்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.
‘எண்ணித் துணிக கருமம்’ என்ற வள்ளுவரின் வாக்கு, ஆழ்ந்த சிந்தனை செய்து ஒரு செயலை செய்யத் துணிக என்கிறது, எனினும் சிந்தித்துக்கொண்டே இருந்துவிட்டு செயலைத் துவங்கத் தாமதிப்பது தயக்கம் என்றாகிறது. “தயக்கம் பெரும்பாலும் முடிவெடுக்காமை மற்றும் தாமதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலும், அது நேர்மறையான அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.
தயக்கம், சுயபரிசோதனை மற்றும் (நம்முன் உள்ள) தேர்வுகளை சிந்தனையுடன் பரிசீலிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்கிறார் நூலாசிரியர். எனவே எது வரை சிந்திப்பது, எப்போது செயல்படுவது என்பது தனிமனிதனின் அனுபவம், அகப்புறச்சூழல்கள், பொருளாதாரம், தேர்வுகளின் தன்மை போன்ற அம்சங்களை பொறுத்து அமைகிறது.
“உங்கள் செயல்களின் முடிவுகள் என்னவென்று ஒருபோதும் உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், எந்த விளைவும் ஏற்படாது” என்ற மகாத்மாவின் வரிகளை சுட்டிக்காட்டும் நூலாசிரியர், தயங்காமல் நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்கிறார். நாம் எந்த இலக்கை அடைய விரும்புகிறோமோ, அதை அடைவதற்கு தெளிவான நோக்கங்களும், திட்டங்களும் இருக்க வேண்டும்.
இலக்கை இறுதி செய்தபின்பு அதை அடைவதற்கு விடாப்பிடியான முயற்சியும், ஏற்படும் தோல்விகளிலிருந்து படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, “தோல்வி என்பது வளர்ச்சியின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொண்டு, கடந்த கால தோல்விகளைக்கண்டு அஞ்சாமல் மேலும் கற்றுக் கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அதனை கருத வேண்டும்” என்று வாசகர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கிறார்.

“தவறு நேர்ந்து விடுமோ என்ற எண்ணமே அச்சமாக மாறி, அதுவே தயக்கமாக மனதில் தேங்கி விடுகிறது. அச்சம் தோன்றும்போது மனதைக் கூர்ந்து கவனித்து கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் செயல்படுவதே தயக்கத்தைப் போக்கும் சரியான வழியாகும். தோல்விகளைச் சந்திக்க அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தோல்வி என்பது பிரச்சனைகளால் உருவாவதைவிட பெரும்பாலும் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுவதால்தான் உருவாகின்றன” என்று தயக்கத்தை தவிர்ப்பதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் தருகிறார்.
ஆன்றோர்களின், அறிவியலாளர்களின், மேதமைப் பெரியோர்களின் ஏராளமான வரிகளையும், நூலாசிரியரின் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களால் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்து தயக்கம் ஏன் என்பதை புதிய கோணத்தில் வாசகர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகமாக ‘தயக்கம் ஏன் இன்னும்?’ வெளிவந்துள்ளது.
புதுவை முருகுவின் முதல் புத்தகமான இது பாரதி புத்தகாலய2த்தின் சமீப வெளியீடாகும்.
