கிருபாநந்தினி
“டெலஸ்கோப் மாமா சாகசங்கள்” இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது சிரிப்புடன் கூடிய அட்வெஞ்சரான அனுபவமாகவே இருந்தது. அட்வெஞ்சர் என்றாலே கடினம், வலி தான் அதென்ன சிரிப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக பயமுறுத்தாமல் வன உயிரினங்களை புரியவைத்திருக்கிறார். இப்புத்தகத்தை படித்து முடித்த பின்பு கண்டிப்பாக மாணவர்கள் அட்வெஞ்சர் அனுபவங்களை பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

நானும் 8 புதிய இடங்களுக்கு டெலஸ் கோப் மாமாவுடனும், ஸ்டான்லியுடனும் பயணித்து சுவாரசியமான அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். முன்னுரையிலேயே சொல்லிவிட்டார் அட்வெஞ்சர் என்று அதே போல் முதல் பயணத்திலேயே “ஓடு ஸ்டானிலி ஓடு” என்று ஸ்டான்லியின் மாமா சொல்வது தலைப்பாக வைத்திருப்பது என்ன நடந்திருக்க கூடும் என்று ஆவலாக வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பை பயணமாக மாற்றியது ஆசிரியரின் எழுத்து நடை. முதல் பயணமே பறவை பார்த்தலுக்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். அது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணிக்க வைத்தது. இதில் இன்னும் ஒரு கூடுதல் தகவல்.
புத்தகம் கிடைத்தவுடன் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு நான் பொள்ளாச்சியிலிருந்து, ஈச்சனாரி கற்பகம் கல்லூரிக்கு பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன். பேருந்து கல்லூரி நிறுத்தத்திற்கு அருகில் வந்து சேரும் பொழுது நான் தெப்பக்காடு பயணத்தை வாசித்திருந்தேன். பயணத்தை தொடர முடியவில்லை என்று வருத்தத்துடனே புத்தகத்தை பைக்குள் வைத்துவிட்டு இறங்கினேன். பின்பு அடுத்த நாள் இரவு சென்னைக்குப் பயணம் செய்த பேருந்தில் படித்து முடித்தேன்.
நம்முடைய வாழ்வில் நடப்பதை அப்படியே சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒருவர் காலையில் நேர்த்தியான உடையில் கிளம்பி அலுவலகம் போய் கோப்புகளை கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்பி மாதம் தொடக்கத்தில் கை நிறைய சம்பளம், விடுமுறை நாட்களில் பொழுது போக்காக குடும்பத்துடன் பார்க், பீச், சினிமா, உறவினர்கள் வீடு என்றும் வருடம் ஒரு முறை மலைப் பகுதிகளுக்கு செல்வதுமான வாழ்க்கையே சரியான, ஒழுக்கமான வாழ்க்கை என்று சமூகம் பொதுப் புத்தியுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆதலால் டெலஸ்கோப் மாமா போன்று மேலதிகாரிக்கு பயந்தோ, யாருக்கும் கட்டுப்பட்டு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமோ இல்லாத சுதந்திரமான, இயற்கையுடன், உணமையான வாழ்வை வாழ்ந்தால் யாருக்கும் பிடிப்பதில்லை. அதை அனைத்து பயணங்களின் போதும் பெற்றோர் ஸ்டான்லியை அவனது மாமாவிடம் காப்பாற்ற நினைப்பது, ஸ்டான்லி ரகசியமாக திட்டமிட்டு தப்பித்து மாமாவுடன் செல்வது, திரும்பி வரும்பொழுது பெற்றோரிடம் வாங்கும் அடி ஆகியவை மூலம் அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
டெலஸ்கோப் மாமா ஒவ்வொரு பயணத்திலும் ஸ்டான்லிக்கும் மட்டும் சொல்லித்தரவில்லை, பல்லுயிரங்களைப் பற்றி அறிவை நாமும் அவர்களுடன் சேர்ந்தே வளர்த்துக்கொள்ளும் விதமாக எழுதியுள்ளார். நாம் எப்படி வனத்திற்குள் செல்ல வேண்டும், அதுவும் ஒவ்வொரு விலங்குகள் இருக்கும் சிறப்பான குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொழுது எடுத்து செல்லும் பொருட்கள், நாம் நடந்துகொள்ளவேண்டிய விதம் ஆகியவற்றை பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமில்லாமல் இயற்கை, வன உயிரினம் பற்றிய அக்கறை இல்லாமல், பொழுது போக்கிற்காக மலைப் பகுதிகளுக்கு செல்லும்பொழுதும்கூட ஏதாவது ஆபத்துகள் நேர்ந்தால் அச்சூழலை கையாள பயன்படும் இப்பயணங்கள்.
டீ குடிக்கும் பழக்கம். அதிகமாக பயணம் செய்பவர்கள் அதிகமாக டீ குடிப்பதும் வழக்கம். முதல் பயணத்தில் டீக்கடைக்காரரை “நண்பரே” என அழைப்பதும் இறுதிப் பயணத்திலும் அதே டீ கடை நண்பருடன் முடித்திருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது ரெகுலர் கஸ்டமர் என்று. என் உணர்வுடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆவிகளின் பள்ளத்தாக்கு பயணத்தின் போது குட்டி உடும்பை எடுத்து வந்து வளர்த்து அதன் பாதிப்பிற்கு பிறகும் அப்பா கண்டுபிடிக்க முடியவில்லை என்ன நடந்தது என்று. அதில் எனக்கு கொஞ்சம் சுயநல மகிழ்ச்சியே. ஆனால், அடுத்த பயணமான மேலகிரியிலிருந்து திரும்ப வரும்பொழுதே கழுத்தில் பாம்பு சட்டையுடன் வந்ததால் ஸ்டான்லி எப்பவும் போல மாட்டிக்கொண்டான். சினிமா, பைக் ரிப்பேர் என சுற்றிய ரீல் வீணாகிவிட்டது. அது தெரிந்துதான் மாமா எஸ்கேப். அதை ஆசிரியர் சொல்லியிருக்கும் விதம் அருமை.
குரங்குகள் பிராண்டியது, காவல் துறையிடம் மாட்டிக்கொள்வது, தேனீக்களிடம் கோட்டு வாங்கியது என அனைத்தும் உடம்பில் வலித்தாலும், ஆசிரியர் சொல்லியிருக்கும் விதம் நகைச்சுவையாகவும், ஹீரோயிசம் நிறைந்த சாகசமாகவும் உள்ளது. அதை விட ஸ்டான்லி இந்த அனுபவங்களை வகுப்பு தோழர்களிடம் சொல்லி பெருமை அடையும் குழந்தைத் தன்மை மேலும் அழகு சேர்க்கிறது. மாணவர்களின் உண்மையான தேவை நான்கு சுவற்றிற்குள் எடுக்கும் புத்தக பாடம் கடந்த இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சி, கடினம், வலி, மேடு, பள்ளம் என அனைத்தையும் கற்றுத்தர வேண்டிய அவசியத்தை நமக்கும் புரியவைத்துள்ளார் ஆசிரியர்.
அனைத்தையும் கற்றுத் தந்த பிறகு தனியாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடன் டெலஸ்கோப் பரிசளித்துவிட்டு செல்வது மிக அருமை. இறுதி பயணமான பிணந்தின்னிகளுடன் ஒரு செல்பி எனக்கு மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது. நான் இவை பற்றி ஆய்வு செய்துள்ளதால் அவைகளின் உணவு முறை, இனப்பெருக்கம் மற்றும் அழிவு பற்றி நன்றாக உணர்ந்திருந்தேன். ஆனால், மாணவர்களிடம் செய்தியை சொல்வதுண்டு. ஆனால் இப்புத்தகத்தில் மிக எளிமையாக புரியும்படி விளக்கியுள்ளது என் மனதை ஈர்த்தது.
இருட்டு, மலை, சேறு, இரு சக்கர வாகனத்தில் பயணம், ட்ரெக்கிங், டெலஸ்கோப், இரவில் பயன்படுத்தும் நைட் விசன் கிளாஸ், கோடாரி என வனம் சார்ந்த அனைத்தையும் சொல்லிவிட்டார். இவை மட்டுமல்ல நீர்ப் பறவைகள், செந்நாய்கள், கருஞ்சிறுத்தை, காட்டு யானை, கரடி, வௌவால், ஆந்தை, எலி, குரங்கு, தேனீ, உடும்பு, நாகப்பாம்பு, மலைப் பாம்பு என நீலகிரியில் உள்ள பாதி உயிரினங்களின் உணவு, வாழும் இடம், இனப்பெருக்கம், அழிவு என அனைத்து பற்றியுமான வன உயிரின பாடத்தை கற்றுக்கொடுத்து விட்டார் ஆசிரியர்.

இறுதியாக புகைப்படங்கள் எடுத்து பரிசும் பெற்ற ஸ்டான்லி, மிக நன்றாக புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்ட பிறகு அதன் மீது உள்ள ஆர்வத்தால் கல்லை எறிந்து வன விலங்குகளை தொல்லை செய்ய நினைத்த பொழுது டெலஸ்க்கோப் மாமா வெளிப்படுத்திய கோபத்தின் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது அவர் இயற்கையின் மீதுள்ள அக்கறை.
இப்புத்தகத்தில் வரும் வனம், பறவைகள், சாலிம் அலி, டெலஸ்கோப், பயணம், டீ என அனைத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனாலேயே எனக்கு ஆசிரியர் அனுப்பியிருக்கலாம். ஆம் நான் கோவை மாவட்டத்தில் உள்ள சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் இந்திய மாநிலங்களில் இறந்த பறவைகளை பற்றி ஆய்வு செய்து முடித்துள்ளேன். நானும் பறவைகள் ஆராய்ச்சியாளர்.
வனங்கள் சார்ந்தே என்னுடைய ஆய்வுகளும் என்பதால் படிக்க படிக்க என்னால் திரை போன்று என் மனதில் ஓடியது. ஆனால் ஆசிரியர் எட்டு புதிய இடங்களுக்கு அழைத்து சென்ற பயணத்தில் நான் நிறைய புதிய அனுபவங்களை பெற்று, கற்றுக்கொண்டேன். மிக முக்கியமாக இயற்கையை பள்ளி மாணவர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும் இரவு நேரம் கதையாக பெட் டைம் ஸ்டோரி கூட சொல்லி புரிய வைக்கும் படியான எழுத்து நடை.
டெலஸ்கோப் மாமா இறுதிப் பயணத்திற்கு பின்பு எங்கு சென்றார், என்ன செய்கிறார் என்பதையும் அவருடன் பயணிக்கும் போது நீங்களும் தெரிந்து கொள்ளலாம். எனக்கு அனுப்பிய இந்த புத்தகத்தில் ஆசிரியர் “you will enjoy” என்று எழுதி அனுப்பியுள்ளார். அதே போன்று இப்பயணத்தை நான் செமயா என்ஜாய் பண்ணுனேன். நீங்களும் இந்த டெலஸ் கோப் மாமாவுடனும், ஸ்டான்லியுடனும் பயணத்தில் பங்கு கொண்டு சுவாரஸ்யமான பல அனுபவங்களை பெற்று என்ஜாய் பண்ணலாம். வாழ்த்துகள்
