எஸ்.வி.வேணுகோபாலன்
உரலை ஒட்டிச் சுருண்டு படுத்திருந்தது டைகர். இப்போதெல்லாம் பெரும்பாலான நேரம் அது அங்கேயேதான் படுத்துக் கிடக்கிறது…’
– என்றுதான் மிகவும் சாதாரணமான விவரிப்பில் தொடங்குகிறது ஒரு சிறுகதை.
ஓர் அப்பாவி நாய் ஏன் அப்படிப் படுத்துக் கிடக்கிறது என்பது அடுத்த சில பத்திகளில்கூட சொல்லப்பட்டு விடாத கவனத்துடன் நகரும் அந்தக் கதையில், கொத்த வேலைக்கு ராஜபாளையம் போன குருசாமி, ஒரு ராஜூஸ் வீட்டிலிருந்து குட்டியாக அதைத் தூக்கி வந்ததையும், கணவனைப் பறிகொடுத்த அவனது ஆத்தா அதை அன்போடு கவனித்துக் கொள்வதையும், தான் ‘டைகர்’ என்று அதற்கு வைத்த பெயர் மற்றவர்கள் அழைக்கத்தான் என்று விட்டுவிட்டு, குருசாமி மட்டும் எப்போதும் “பிரதர், பிரதர்“ என்றே சொந்தம் கொண்டாடி, ” பிரதர்.வாங்க..” , “என்ன பிரதர் சாப்பிடுவமா ..” என்று அருகருகே அமர்ந்து பேசி, அருகருகே படுத்துறங்கி எழுந்து அன்பாகப் பழகி வந்ததையும் பேசும் கதை, எங்கும் ஒன்றாகவே போய்வருதல் போலவே, குருசாமியும் டைகரும் ஒரு நாள் புறப்படும்போது, ‘ரெண்டு பேரையும் சந்தோசமாக ஆத்தா வேனில் ஏற்றி திருநெல்வேலிக்கு’ வழியனுப்பி வைத்த இடத்தில் ஏதோ பிரச்சனை ஒன்று நடக்கப் போவது போல் சூசகமாகத் தெரிவிக்கிறது.
பின்னர் ஒருபோதும் அந்தச் சிற்றூருக்கு குருசாமி திரும்பி வருவதில்லை. அவனோடு செல்லும் டைகர் மட்டும் எப்படி திரும்பி வந்தது? ஆனாலும் ஏன் எப்போதும் உரலை ஒட்டிச் சுருண்டு படுத்தே கிடக்கிறது…..? ச தமிழ்ச்செல்வனின் ‘சொல்ல வருவது’ சிறுகதை, நடப்பு காலத்தில் நேர்ந்த ஒரு நிகழ்வை, அசாத்திய புனைவு மொழியில் வெளிப்படுத்திய ஒரு முக்கியமான படைப்பு.

1999 ஜூலை மாதம் 23ஆம் தேதி, நெல்லை தாமிரபரணியின் தேன் தண்ணீரில் குருதி படிந்த நாள். தங்கள் கோரிக்கை விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கித் தங்களது கூலிப் பிரச்சனையை அரசு தீர்த்து வைக்கவேண்டும் என்று ஊர்வலம் நடத்தத் திரண்டிருந்த தொழிலாளர் மீது கண்மூடித் தனமான தாக்குதல் நடத்தியது காவல்துறை. 35 நிமிடங்களே நீடித்த அந்த வெறிபிடித்த தாக்குதலுக்குத் தப்பி எங்கே ஓடுவதென்று தெரியாது சிதறுண்டவர்களில் பலரும் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர்.
அதுவரை லத்தியால் விரட்டியடித்துக் கொண்டிருந்த போலீஸ் படை, இப்போது கைகளில் கற்களை எடுத்துக் கொண்டு சரமாரியாகத் தாக்கியது. இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உள்பட 17 பேர் மரித்த பெருந்துயரக் கதை அது. அத்துமீறிய நடவடிக்கையைப் பின்னர் விசாரித்த நீதியரசர் மோகன் தலைமையிலான குழு, 11 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகச் சொன்னது. அப்படியானால், மற்ற ஆறு பேர்? அவர்கள் தண்ணீரில் இறங்குமுன் ‘வாங்கியிருந்த அடிகளின் ரணங்கள்’ காரணமாகத் தண்ணீரில் விழுந்து இறந்து போயிருக்கலாமாம்.
தொடக்கத்தில் காவல்துறை ‘மேற்கொண்ட லத்தி சார்ஜ் உண்மையில் தேவைப்பட்டதுதான் என்றாலும் பின்னர் ஆற்றங்கரையில் துரத்தித் துரத்தி அடித்தது அதிகார அத்து மீறல்’ என்றும் குழு தெரிவித்தது. கடைசியில், எல்லாவற்றுக்கும் ஊர்வலம் நடத்தியதே காரணம் என்றும், அரசியல் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் நல்வாக்கு அருளியது.
தமிழ்ச்செல்வன் சிறுகதை, ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ், முன்னாள் டிஜிபி, வி ஆர் லட்சுமிநாராயணன், டாக்டர் வி வசந்தி தேவி உள்ளிட்ட மிக முக்கியமானவர்கள் பங்குபெற்ற உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று விசாரித்தறிந்து வழங்கிய அறிக்கை, ஊடக புகைப்படங்கள், செய்திகள் என நீதியரசர் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்த பல்வேறு விவரங்களுக்கும் தனது கதையின் போக்கிலேயே இடமளித்து நடந்த கொடுமையின் பரிமாணத்தை எடுத்துரைக்கிறது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலம் தொடங்குவதைச் சொல்கையிலேயே அதிகார வர்க்கத்திற்கு எரிச்சலூட்டும் சாதியப் பார்வை முளைப்பதைச் சொல்லாமல் சொல்கிறது கதை. சுலோசன முதலியார் பாலத்தில் நடக்கையில் ‘ஒழுங்காக வரிசையாகப் போங்க’ என்று ஊர்வல அமைப்பாளர்களே எச்சரிக்கையோடு வழி நடத்துகின்றனர். டைகர் அப்போதும் குருசாமியோடு நடந்தபடியும், விலகி விலகிச் செல்கையில் அவன் மேல் தனது பார்வை தப்பிவிடாதபடிக்கு இணையாக விலகி ஓடிக் கொண்டும் இருக்கிறது… அப்புறம் ஏன் லத்தி சார்ஜ்?
“ஊர்வலம் கட்டுப்பாடாகவும் அமைதியாகவும் தேவர் சிலையைக் கடந்து பாலத்தைக் கடந்து எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கலெக்டர் ஆபிஸ் வரை வந்ததினால் கடும் ஆத்திரமடைந்த போலீசார், என்ன ஏது என்று சொல்லாமலே தடியடி செய்ய ஆரம்பித்தனர்… முன்னாடி பெண்கள்தான் நின்று கொண்டிருந்தனர். முதல் அடி அவர்களுக்குத்தான்…”
இப்படி அடிவாங்கியவுடன்தான் சிதறித் தற்காப்புக்காக பதட்டத்தோடு கலைந்து ஓடுகிறது கூட்டம். குருசாமியின் மண்டையில் ஓங்கி விழுகிறது காவல் துறையின் அடி ஒன்று.
அடித்தவனின் கையைக் கவ்வி வசமாகக் கடிக்கிறது டைகர். அவன் உதறிய உதறலுக்கெல்லாம் அவன் கையை அத்தனை எளிதில் விடுவிக்காது மேலும் இறுக்கமாகக் கௌவிக் கொள்கிறது டைகர். அடுத்த அடி அதன் மீதும் விழுகிறது. மண்டையில் கசியும் ரத்தம் குருசாமியை மயக்கத்தில் தள்ள, அவன் ஓடிச் சென்று தாமிரபரணியில் குதிக்கிறான். டைகரும் தான்!
கைச்சதை பிய்ந்துபோகக் கண்ட போலீஸ்காரன் வன்மத்தோடு ஆற்றில் பாய்கிற எல்லோர்மீதும் கற்களை வீசத் தொடங்குகிறான்…’நாய்க்கடி படாத போலீஸ்காரன்களும் அந்தப் பக்கம் கல் வீசிக்கொண்டுதான் இருந்தார்கள்…’ என்று எழுதுகிறார் தமிழ்ச்செல்வன்.
ஊருக்குத் திரும்பிவரும் வேனில் குருசாமியைக் காணாது அரற்றத் தொடங்குகிறாள் ஆத்தா. மறுநாள் நெல்லையில் கரையொதுங்கிய பிணங்களில் ஒன்றாகக் கிடக்கிறான் குருசாமியும். அவனுக்குப் பக்கத்தில் டைகர் குரைத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர் போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் சடலங்களைத் தொடர்ந்து மருத்துவமனைக்கும், பின்னர் அவை அடக்கம் செய்யப்படும் இடுகாட்டுக்கும் ஓடுகிறது டைகர். தலித் பிணங்களைத் தங்கள் பகுதிக்குட்பட்ட ‘காட்டில்’ புதைக்கக் கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் சொல்லிவிடவே, வெவ்வேறு இடங்களில் பிரித்துப் பிரித்து புதைத்துத் தங்கள் கடமையை அரசு நிர்வாகம் முடித்துக் கொண்டுவிட்டது.
‘ஒரு மாசம் பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதினார்கள். அப்புறம் எல்லோரும் வழக்கம்போல மறந்தே விட்டார்கள். ஆத்தா அனாதையாக வீட்டில் புலம்பிக் கொண்டு கிடந்தாள். நல்லபடியாக அடக்கம் செய்து குழிப்பால் கூட ஊத்தாமல் எம்மகனை ஓலைப்பாயில் பாத்தமானக்கி வந்துட்டமே’ என்பது அவளது மன பாரம். ‘அவனக் கொன்னதுக்காக சர்க்கார் கொடுத்த பணம் பாங்கில் கிடந்தது, அதை ஆத்தா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆறு மாசம் சோறு தண்ணியில்லாமக் கிடந்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாள்…’ என்று நகர்கிறது கதை.
ஓராண்டு முடிந்து தியாகிகள் தினமும் வந்துவிடுகிறது. ஊர்க்காரர்களோடு ஆத்தாவும் புறப்பட்டு வேனில் அமர்ந்தபடி மயானம் மயானமாகத் தேடத் தொடங்குகிறாள் மகன் புதைக்கப்பட்ட இடத்தை.
குறிப்பிட்ட புள்ளியில் மூன்று சடலங்களைப் புதைத்த இடத்தில், அதிகாரிகள் பெயரைத் தப்பாக எழுதி வைத்திருந்தாலும் அங்கே சோர்ந்துபோய்க் கிடக்கும் டைகர், குருசாமியின் சமாதியை அடையாளப்படுத்தி விடுகிறது. ஆத்தாவைப் பார்த்தவுடன் ஓடோடிச் சென்று என்னென்னவோ சொல்ல பெருங்குரலெடுத்து ஊளையிடுகிறது…..’ஏ தங்கமே’ என்று அவளும் ஆவிசோரக் கட்டிக் கொள்கிறாள்.
மகனுக்குப் பிடித்த பலகாரங்களைக் கொண்டுவந்தவள் படையலாக வைத்துவிட்டுக் கத்திக் கதறி அழுது தீர்த்துவிட்டு வேனில் புறப்படுகையில், அண்ணன் இருக்குமிடம் விட்டு வர மறுக்கும் டைகரை மிகவும் சிரமத்தோடு அங்கிருந்து அழைத்துக் கொண்டு ஊர் திரும்புகிறாள் ஆத்தா. பின்னர் படுத்த படுக்கை ஆகிவிடுகிறாள்.
ஆண்டுக்கு ஒருமுறை தாமிரபரணியில் அந்த நாளில் பூப்போடுவதும், நினைவிடங்களுக்குச் சென்று படையல் வைக்கவோ, அஞ்சலி செலுத்தி வரவோ கழியும் நினைவுகள் சில ஆண்டுகள் தொடர்கின்றன. மனிதர்களுக்கு ஆயிரம் ஜோலி இருக்கிறது…மறந்துவிட்டுச் செல்ல..
டைகர் அந்த உரலடியில் சுருண்டு கிடக்கிறது. ஆனால், அன்றாடம் பகல் 3 மணிக்கு, குருசாமியை போலீஸ்காரன் மண்டையில் அடித்த அந்த நேரத்தில் திடீரென்று எழுந்து நின்று வானத்தைப் பார்த்து ஆக்ரோஷமாகக் குரைக்கும். நடு சாமத்தில் ஊரே நடுங்குமளவு ஊளையிட்டு அழுது கொண்டிருக்கும். மற்ற நேரங்களில் அப்படியே கிடக்கும் என்கிற தமிழ்ச்செல்வனின் கதை இப்படி முடிகிறது:
இந்த நாய் என்ன சேதியை நமக்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று நுட்பமாகப் பார்க்கு நமக்கு அவகாசமில்லை…. எத்தனையோ கொடுமைகள் நமக்கு மறந்தும் போச்சு. எல்லாத்தையும் எப்போதும் ஞாபகம் வச்சிக்கிட்டே அலைய முடியுமா.. ஆனால் அது நாய்…மனிதனின் ஆதித் தோழன். ஆதிக் குணங்களோடும் எல்லா ஞாபகத்தோடும் உரிய துயரத்தோடும் தேவையான கோபாவேசத்தோடும் – இவை அத்தனையையும் உடம்பிலே ஏற்றி உடம்பாகவே மாற்றி அந்த உரலுக்கடியில் படுத்திருக்கிறது.

அன்று நெல்லையில் நடந்தது ஒரு மினி ஜாலியன்வாலாபாக் என்று வருணிக்கப்பட்டது உள்ளிட்டு, அதற்கான நீதி வழங்கப்படாமல், அடித்து நொறுக்கப்பட்டவர்கள் மீதே பழி போடப்பட்டதை, மறைந்த மூத்த இதழாளர் எஸ் விசுவநாதன் அவர்கள் ஃபிரண்ட் லைன் (06-01-2001) இதழில் மிகக் காத்திரமான கட்டுரையாகப் பதிவு செய்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியும் முழு நிகழ்வின்போது, உள்ளூரில் இருந்தபோதும் அங்கே சென்று பார்க்கவில்லை என்பதைக் கூட நீதியரசர் மோகன் குழு அறிக்கை கண்டுகொள்ளவில்லை. அந்த இருவரும்தான், காவல்துறை எந்த அத்துமீறலையும் செய்யவில்லை என்று செய்தியளித்திருந்தவர்கள். இந்தக் கோர நிகழ்வைப் பேசிய காஞ்சனை சீனிவாசன் அவர்களது ‘ஒரு நதியின் மரணம்’ என்ற ஆவணப்படத்தையும் தடை செய்திருந்தனர்.
ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும், அரசு நியமித்த விசாரணைக் குழுவும் சொல்லாததைச் சொல்லி விட்டிருந்தார் தமிழ்ச்செல்வன். செம்மலர் இதழில் ‘சொல்ல வருவது’ சிறுகதை வெளியான போது, கோடம்பாக்கம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து வாசித்து மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வீடு திரும்பியவன், வாழ்க்கை இணையர் தோழர் ராஜியை அருகே அமரச் சொல்லி, உரக்க வாசித்துத் தேம்பித் தேம்பி அழவும், ஆவேசப்படவுமாகக் கிளர்ந்த உணர்வுகள், அடுத்து எப்போது வாசிக்கிற போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை
