ச.சுப்பாராவ்
நல்ல வசதி, அமைதியான சூழல், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடிகிற சுதந்திரம் எல்லாம் அமையப் பெற்றவர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதிலும் வியப்பில்லை. ஆனால், அடுத்த வேளை உணவு – உணவை விடுங்கள் – அடுத்த நாளில் உயிரோடு இருப்போமா என்பதே நிச்சயமற்ற நிலை, சொந்த நாட்டின் ராணுவத்தாலேயே வேட்டையாடப் படுதல், சொந்த நாட்டிலேயே அகதியாக ஊரைவிட்டுத் துரத்தப்பட்டு முகாமில் அடைக்கப்படுதல் என்ற நினைத்துப் பார்க்க முடியாத துயரங்களுக்கு நடுவிலும், தாம் விரும்பும் ஒன்றை விடாப்பிடியாகச் செய்தல், அதையும் சமூக நலனுக்காகச் செய்தல் என்பது எத்தனை பெரிய விஷயம்! அரபு எழுச்சியின்போது சிரியா நாட்டில் அப்படி ஒன்று நடந்தது.

மைக் தாம்சன் எழுதிய Syria’s Secret Library – Reading and Redemption in a Town Under Siege என்ற நூல் அப்படியான ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லும் புத்தகம். ஓயாத குண்டுவீச்சுக்கு நடுவே ரகசியமாய் ஒரு நூலகத்தை ஆரம்பித்து நடத்திய சில புத்தகக் காதலர்களின் உண்மைக் கதை.
மைக் தாம்சன் பிபிசியின் செய்தியாளர். ஏராளமான விருதுகள் வாங்கியவர். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா, வட கொரியா. காங்கோ, சியாரா லியோன் போன்ற உலகின் மிக பிரச்சினையாக இடங்களுக்கு எல்லாம் துணிந்து சென்று, செய்தி சேகரித்து உலகிற்குச் சொன்னவர். லிபியா, ஜிம்பாப்வே, மியான்மர் போன்ற இடங்களுக்கெல்லாம் ரகசியமாகப் பயணித்து செய்தி சேகரித்தவர். அவ்வாறு சிரியாவின் உள்நாட்டு யுத்தம் பற்றி செய்தி சேகரித்த போது அவரை வியப்படையச் செய்த அனுபவங்களே இந்தப் புத்தகம்.
பத்தாண்டுகளுக்குமுன் அரபுநாடுகள் முழுவதும் ஜனநாயகம் வேண்டி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதை நாம் அறிவோம். அது சிரியாவிலும் நடந்தது. சிரியாவில் சர்வாதிகாரி பாஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, கூடுதல் ஜனநாயகம் வேண்டி போராட்டம் ஆரம்பித்தது. அப்போது சிரியா படுமோசமான சர்வாதிகார ஆட்சியில் இருந்தது. அதிபர், அவரது தந்தை ஹஃபீஸ் அல் ஆசாத் ஆகியோரின் படங்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட வேண்டும். அவர்களது உரைவீச்சுகள் பள்ளிக்குழந்தைகளுக்கு மனப்பாடப் பகுதிகளாக பாடங்களில் இருந்தன.
இந்தக் கேவலமான ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை ஏற்றவர் யாஹ்யா ஷுர்பாஜி என்ற 32 வயது இளைஞர். இவர் நமது மகாத்மா காந்தியடிகளை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட காந்தியவாதி என்பது ஒரு வியப்பான தகவல். இவருடைய சீடர் 26 வயது தையற்காரரான கியாத் மதார் என்பவர். இவருக்கு மக்கள் அளித்த பட்டம் குட்டி காந்தி. இரு புரட்சியாளர்களும் தம்மைத் தாக்கும் போலீஸ், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் பாட்டிலும், பூச் செண்டுகளும் தரும் காந்தியவாதிகள்.
எல்லா காந்தியவாதிகள் போலவே இவர்களும் அடிபட்டார்கள். எல்லா சர்வாதிகார ஆட்சியையும் போலவே இவர்களையும் ஆட்சியாளர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். குறிப்பாக, சிரியாவில் டராயா என்ற நகரில் போராட்டம் மிகக் கடுமையாக இருந்தது. அரசின் எதிர்தாக்குதலும் மிகக் கடுமையாக இருந்தது. தன் மக்கள்மீதே அரசாங்கம் விமானத்திலிருந்து குண்டுமழை பொழிந்தது. ஊரே இடிபாடுகளாக மாறியது. மக்கள் பலரும் ஊரை விட்டு ஓடினார்கள். மின்சாரம் கிடையாது. தண்ணீர் கிடையாது. எதுவும் கிடையாது. ஆனாலும் போராட்டக் காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்? என்று புரட்சியாளர்கள் யோசித்தார்கள். போராட்டம் பற்றி வெளியுலகிற்குத் தெரிவிக்க வேண்டும். வெளியுலகோடு தொடர்பு கொள்ள, நடப்பதை வெளியே சொல்ல ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் நிறைய வேண்டும். இரண்டும் தெரிந்த பலர் ஏற்கனவே ஊரைவிட்டுப் போய்விட்டார்கள். எனவே, ஆங்கிலம், பிரெஞ்சு கற்றுத் தரும் மையங்கள் அமைக்க வேண்டும் என்று யோசித்தார்கள்.
சிரிய மக்கள் மதப் பற்று மிகுந்தவர்கள். எனவே, குரானின் போதனைகளிலிருந்து அரசியல், வரலாறு, விளையாட்டு என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி உரைகள் நிகழ்த்த வேண்டும் என்றொரு யோசனை வந்தது.
ஆனால் போராட்டக்காரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மிகப் பெரிய உற்சாகமான வரவேற்பைப் பெற்றது, நகரத்தின் புத்தகங்களை அழிந்து விடாமல் காக்க வேண்டும் என்பதுதான். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் நிறைய உண்டு. உலகின் முதல் நூலகம் உருவான இடம் சிரியாதான். 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் புகழ்பெற்ற எல்பா வம்சத்து ஆட்சியின் போதுதான் உலகின் முதல் நூலகம் அமைக்கப்பட்டதாக வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள்.
அந்தக் காலத்திலிருந்து சிரியர்களுக்கு புத்தகங்கள், வாசிப்பு ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மார்க் ஆன்டனிக்கும், கிளியோபாட்ராவிற்கும் ஆசிரியராக இருந்த நிகோலஸ் டமாஸ்கஸ் சிரியாக்காரர்தான். அவர் மிகப் பெரிய எழுத்தாளர். அன்றைய உலக வரலாற்றை 144 பாகங்களாக எழுதியதோடு ஏராளமான நாடகங்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் எழுதிக் குவித்தவர்.

இந்தப் பாரம்பரியத்தில் வந்த சிரியர்கள் இயல்பாகவே புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களாக இருந்தார்கள். ஊரை விட்டு ஓடியவர்கள் பலரது வீடுகளிலும் ஏராளமான சிறந்த புத்தகங்கள் இருந்த அற்புதமான நூலகங்கள் இருந்தன. இடிந்துகிடக்கும் அந்த வீடுகளில் இறைந்துகிடக்கும் அந்தப் பொக்கிஷங்களைக் காப்பாற்றி ஓரிடத்தில் பத்திரப்படுத்துவது நமது கடமை என்று டராயாவின் அந்த போராளிகள் முடிவு செய்தார்கள். இவர்கள் பெரும்பாலானோர் உள்நாட்டுச் சண்டையால் கல்லூரிப் படிப்பை பாதியில் விட நேர்ந்த மாணவர்கள். படிப்பாளிகள்.
முன்னாள் சிவில் இஞ்சினீயரிங் மாணவரான அனாஸ் ஹபீப், முன்னாள் பொருளாதார மாணவரும், மருத்துவமனை உதவியாளருமாகிய அப்துல் பாசித், பல் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டவரான அய்ஹம் அல் சக்கா, மருந்தாளுநர் படிப்பை இடையில் விட்ட ஹோமம் அல்துன், பின்னாளில் ஆசிரியையான சாரா மதார், புரட்சிப்படை வீரரான ரெதெப் அபூ ஃபயஸ், இவர்களோடு பதினான்கு வயதான பள்ளி மாணவனாக அம்ஜத் ஆகிய எல்லோருமாகச் சேர்ந்து புத்தகப் பாதுகாப்புப் படை ஒன்றை உருவாக்கினார்கள்.
இடைவிடாத குண்டுவீச்சிற்கு நடுவே, இடிந்து சிதிலமாகிக் கிடக்கும் வீடுகளுக்கு இந்தக் குழுவினர் போவார்கள். அங்கு சிதறிக் கிடக்கும் புத்தகங்களையெல்லம் சாக்குப் பைகளில் அள்ளிக் கொண்டு வருவார்கள். சில இடங்களில் சாக்குப் பைகள் போதாது என்ற அளவிற்கு புத்தகங்கள் இருக்கும். குண்டுமழைக்கு நடுவே கார் ஓட்டுவது மிகவும் ஆபத்து என்றாலும் கூட, அந்த மாதிரி இடங்களுக்கு காரில் சென்று அள்ளிக் கொண்டு வருவார்கள்.
ஒரு முறை குண்டு வீச்சில் சேதமடைந்த சர்ச் ஒன்றிலிருந்து ஏராளமான கிறிஸ்துவ நூல்களை எடுத்து வந்தார்கள். ‘இவற்றைக் காப்பாற்ற வேண்டுமா?’ என்ற கேள்வி அந்த இஸ்லாமிய இளைஞர்களிடம் இயல்பாகவே எழுந்தது. ஆனால் மதப்பற்றை விட புத்தக் காதல் வலுவானதல்லவா? புத்தகத்தில் ஏது முஸ்லீம்? கிறிஸ்து? எந்தப் புத்தகமாக இருந்தால் என்ன? புத்தகம் என்பது காப்பாற்றப் பட வேண்டியதுதான் என்று அள்ளிக் கொண்டு வந்து விட்டார்கள். எல்லாவற்றையும், ராணுவ வாகனங்கள் எளிதில் வரமுடியாத ஒரு சந்தில் இருந்த பெரிய இடிந்த கட்டிடத்தின் பாதாள அறையில் போட்டு வைத்தார்கள்.
அமைதி திரும்பியவுடன் எந்த வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்டதோ, அந்த வீட்டில் அந்தந்தப் புத்தகங்களைத் திருப்பித் தரவேண்டும் என்பதற்காக புத்தகங்களின் முதல் பக்கத்தில் எந்த வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்டது என்பதைக் குறித்து வைத்து அடுக்கி வைத்தார்கள். சிறுவன் அம்ஜத் இந்த வேலையை ஆர்வமாகச் செய்தான். அவன் பின்னாளில் ரகசிய நூலகத்தின் தலைமை நூலகராகவும் ஆனான்.
புத்தகங்கள் குவியல் குவியலாகச் சேர்ந்து விட்டன. சரி, இவற்றைத் திருப்பித் தரும் காலம் வரும்வரை எல்லோரும் படிக்கலாமே, பயன்படுத்தலாமே என்ற யோசனை வந்தது. இரகசிய நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. புத்தகங்களை அடுக்கிவைக்க அலமாரிகள் வேண்டுமே? திரும்பவும் இடிபாடுகளில் தேடி அலமாரிகளை எடுத்து வந்தார்கள். மரச் சட்டங்களைத் தூக்கி வந்து தாமே அலமாரிகள் செய்தார்கள்.
வாய் வார்த்தையாகப் பரவி, நூலகத்திற்கு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். தம் பள்ளி, கல்லூரியில் பாதியில் விட்ட படிப்பை இந்த நூலகத்தில் கிடைத்த புத்தகங்கள் வழியே தொடர்ந்தார்கள். இப்போது நூலகக் குழுவே 80 பேர் கொண்ட பெரிய குழுவாகிவிட்டது. ஏராளமான உறுப்பினர்கள். வந்து செல்பவர்கள் அதிகரித்து விட்ட நிலையில் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு என ஆங்கிலம், கணிதம் இரண்டிற்கும் டியூஷன்கள் நடந்தன.
வெள்ளிக்கிழமை லீவ். மற்ற நாட்களில் 24 மணி நேர நூலகம். நூலகர்கள் 3 ஷிப்டில் வந்தார்கள். உலக வரலாறு, இலக்கியம், மதம் குறித்து விவாதக் கூட்டங்கள் நடந்தன. அணுகுண்டால் சிதைந்த ஹிரோஷிமா எப்படி மீண்டெழுந்தது? உலகப் போரில் ஜெர்மனிய விமானப் படையின் மின்னல் தாக்குதலிலிருந்து லண்டன் எப்படி மீண்டது என்றெல்லாம் கூட்டம் போட்டுப் பேசி தம்மைத் தாமே உற்சாகப் படுத்திக் கொண்டார்கள்.
நடுவில் நூலகம் இருக்கும் தெருவில் அரசாங்கம் குண்டு போட்டு நூலகத்தின் நுழைவாயில் இடிபாடுகளால் மூடுண்டது. பக்கத்தில் ஒரு துணிக்கடை பாதி இடிந்து நின்றது. அந்தத் துணிக்கடையிலிருந்து பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு நூலகத்திற்கு வாயில் அமைத்தார்கள். துணிக்கடையின் உடைந்த ஜன்னல் வழியே உள்ளே குதித்து அந்த துளையில் நுழைய வேண்டும். தவழ்ந்து தவழ்ந்து உள்ளே செல்ல வேண்டும். அப்படியும் நூலகம் சென்று படித்தார்கள் டராயா வாசிகள். இணையத்தில் சிஎன்என், பிபிசி போன்ற நிறுவனங்கள் இந்த நூலகம் குறித்து வெளியிட்ட காணொலிகள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணுவம் புரட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்து வேறொரு ஊரில் முகாமில் அடைத்தது. இராணுவ வீரர்கள் வீடு வீடாகச் சோதனை செய்தபோது நூலகம் அவர்கள் கண்ணில் பட்டது. லாரி லாரியாக புத்தகங்களை எடுத்துச் சென்றார்கள். பலவற்றை தீயிட்டு அழித்தார்கள். பலவற்றை டமாஸ்கஸ் பழைய புத்தகக் கடைகளில் விற்றார்கள். இன்றும் அந்த நூல்கள் கிடைக்கின்றன.
டமாஸ்கஸ் போக நேர்ந்தால், அங்குள்ள பழைய புத்தகக் கடையில் ஏதேனும் புத்தகம் வாங்குங்கள். நூலக வேலையும், துப்பாக்கி ஏந்திப் போரிடுவதும் ஒன்றுதான் என்று உறுதியாக நம்பிய அந்த 14 வயது சிறுவன் அம்ஜத், இந்தப் புத்தகம் இந்தத் தெருவில் இந்த கதவிலக்கம் உள்ள வீட்டிலிருந்து எடுத்துவரப் பட்டது என்று குறித்து வைத்திருக்கும் புத்தகம் ஏதேனும் உங்களுக்குக் உங்களுக்குக் கிடைக்கலாம் !