ஸ்ரீதர் மணியன்
ஒரு நல்ல ஆசிரியரின் வெற்றி தனது மாணவனிடம் தோற்றுப் போவதில்தான் அடங்கியிருக்கிறது. இக்கூற்று புத்தகத்தை வாசித்து முடித்த பினபும் இந்தக் குரல்தான் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (கல்வியாளர் மாடசாமி தனது முன்னுரையில்)….
ஆசிரியப் பணி தனித்துவமிக்கது. மகத்துவமிக்கது. எத்தகைய மாணவனும் தன் வாழ்நாளில் பல தருணங்களில் தனக்குக் கற்பித்த ஆசிரியர்களை நினைவுகூராது தன் வாழ்க்கையினைக் கடக்கவியலாது.

மனித வாழ்வில் மகத்தான பங்கினைப் பெறுபவர்கள் நண்பர்களும், ஆசிரியர்களும் என்பது மிகைக் கூற்றன்று. ஒரு மாணாக்கன் தனது வாழ்நாளில் பெரும் பகுதியினை தனது ஆசிரியர்களுடன்தான் கழிக்கிறான். எனவே, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்கவியலாத பங்களிப்பினை வகிப்பவர்கள் ஆசிரியர்களே கால வெள்ளத்தின் ஓட்டத்தில் நண்பர்கள், உறவினர்களைக் கூட ஒரு மனிதன் மறக்க நேரிடலாம். இருப்பினும் தனக்குப் பயிற்றுவித்த ஆசானை அவன் இறுதிவரை நினைவுகூர்வான்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தையாகவே பிறப்புக் கொள்கிறது. நாமும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமுமே அவர்களது வளர்ப்பில், அணுகுதலில் ஏற்படுத்தும் பாதிப்புகளே அவர்களது வாழ்வில் அவர்களுக்கான பாதையினை நிர்ணயிக்கிறது. குழந்தைகளின் உலகு புதுமைமிக்கது. அவர்களது அகஉலகு எல்லைகளற்று விரிந்து பரந்தது. சிறகத்துப் பறக்கத் துடிக்கும் அவர்களது கற்பனையும், சிந்தனையும் எத்தகைய முதிர்ச்சி பெற்ற மனிதனுக்கும் ஈடானது. அதனை இனங்கண்டு அவர்களுக்கு வழிகாட்டுதலே முக்கியமானது. கற்பிக்கும் ஆசிரியரே அக்குழந்தைகளுக்குப் பொறுப்பானவராகிறார். பெற்ற பிள்ளைகளுடன் ஓர் ஆசிரியருக்கு தன் வகுப்புக் குழந்தைகளும் பிள்ளைகளாகின்றனர்.
சிறந்த மாணாக்கர்களை ஓர் ஆசிரியரும் நினைவிலிருத்தியிருப்பதனையும் நாம் காணலாம்.
நம்மில் ஓர் ஆசிரியர் தன் வாழ்வில் உண்டாக்கிய மாற்றம் குறித்துக் கூறுவதனை நாம் எங்கும் காணவியலும். அஃது இயல்பானது கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்று வழங்கப் பெறும் கூற்றினை சிற்பியைச் செதுக்கிய சிற்பங்கள் எனும் இந்நூல் மெய்ப்படுத்துகிறது. யாரிடமிருந்தும் நமக்கான வழிகாட்டுதல் கிடைக்கலாம், அதனை சீர்தூக்கி ஆய்ந்து அதனைப் பெற்றுக் கொள்வதும், நம்மைச் செம்மையாக்கிக் கொள்வதும் நம்மிடமே உள்ளது என்று இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஜோல்னா ஜவஹர் என்ற ஆசிரியர் தான் கற்பித்த மாணாக்கர்களிடமிருந்து என்ன பெற்றார், அவர்கள் தன் வாழ்வில், தான் மேற்கொண்டிருக்கும் பணியில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கினர் என விரிவாகக் கூறுகிறார்.
பல தலைப்புககளில் தனது மாணாக்கர்கள் தன்னைச் செம்மைப்படுத்திய தருணங்களையும், தரவுகளையும் ஜவஹர் பதிவிடுகிறார். பதினெட்டு தலைப்புகளில் தன்னை செதுக்கிய மாணாக்கர்கள் குறித்து அவர் பேசுகிறார். அனைத்துமே மிகச்செறிவான கருத்துகளை உள்ளடக்கியவை. உடற்குறை உள்ளோரை நகைச்சுவைப் பாத்திரங்களாக்கி மேடையில் காட்டுதல், நூலகம் உருவாகக் காரணியான மாணவன், கணிணி கற்றுக் கொள்ள வைத்த மாணாக்கர்கள் இன்னும் இன்னும் எண்ணற்ற மாணாக்க உளிகள் ஜவஹரை மாற்றியமைத்த தருணங்களை ஜவஹர் பெருமிதத்துடன் நூல் நெடுக விவரித்துச் சொல்கிறார், செல்கிறார்.
தங்கள் ஆசிரியர்கள் குறித்து நுல் வெளியிடும் காலகட்டத்தில் தன் மாணாக்கர்கள் குறித்து அவர் கூறுகிறார். ‘ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் மாணவரே’ என்ற கருத்தினை இப்புத்தகம் மெய்யாக்குகிறது. மேலும், அண்ணல் அம்பேத்கரது பெயர்க் காரணம், பாரதிதாசன், உவமைக் கவிஞர் சுரதா, படைப்பாசிரியர் கல்கி போன்றறோரது பெயர்க் காரணங்கள் சுவையானவை. திருக்குறள், திருமூலரின் பாடல்கள், விவிலிய வாசகங்கள், சுவையான மேற்கோள்கள் போன்றவை புத்தகம் முழுக்க எடுத்தாளப்பட்டுள்ளது, ஜவஹரது பரந்த வாசிப்பனுபவத்தை உணர்த்துகிறது. இந்நூலினை வாசிக்கும் பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளின் மறைதிறன்களை இனம் காணும் புரிதலை இது அளிக்கும் என்பது உறுதி. தோழர் மாடசாமி தனது முன்னுரையினை மிகச்சிறப்பாக அளித்துள்ளது குறிப்பிட வேண்டியதாகும்.
இந்நூலினைப் பொறுத்தவரை அனைத்து அத்தியாயங்களும் செறிவுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆகையால் ஒரு குறிப்பிட்ட பகுதியினைத் தேர்வு செய்து அதனைக் குறித்துக் கட்டுரையாக்குவது எளிதானதன்று. ஆகவே பொதுவில் நூல் குறித்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே இப்புத்தகத்திற்கு ஏற்புடையதாக இருக்கும், நூலினை வாசித்த பின்னர் வாசகர்களே இதனை உணரவியலும்.

முடிவாக்கிட, ஆசிரியர்களின் அணுகுதலில் பரந்துபட்ட தோழமை உணர்வும், பொறுமையும் அத்தியாவசியக் கூறுகளாகின்றன. இவற்றினைக் கைகொள்ளும் ஆசிரியர்களே மாணாக்கர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தினை உண்டாக்குகின்றனர். ஆசிரியரும், நூலாசிரியருமான ஜோல்னா ஜவஹர் மூன்று எம்.ஃபில், எட்டு முதுநிலைப் பட்டங்களுடன், பன்முகப் பரிமாணம் கொண்டுள்ள இவர், தனது மாணாக்கர்கள்குறித்த அனுபவங்களைத் தொகுத்து அதனை நூலாக்கியதன் வாயிலாக தனது அவர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்நூலினை மாணாக்கர்களிடையே கொண்டு சேர்க்கப்படுதலே நம் முன்னுள்ள முக்கியமான பணியாகும். அஃது அவர்களிடையே ஊக்கத்தினையும், தன்னம்பிக்கையினையும் வளர்த்தெடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும். அவ்வாறே கற்பிப்போரும் இந்நூலினை வாசிக்கும் சூழல் உண்டாக்கப்படுதல் அவர்களிடையேயும் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தினை உண்டாக்கும். இத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய புத்தகத்தினைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயத்தின் பணியும் இங்கு பாராட்டுக்குரியதாகிறது.