ஜமாலன்
Necessity is blind until it becomes conscious. Freedom is the consciousness of necessity” – Karl Marx
“அவசியம் விழிப்புணர்வை அடையும் வரை குருடாகவே இருக்கும். தேவையின் உணர்வுதான் சுதந்திரம்” – கார்ல் மார்க்ஸ்
இந்திய ஒன்றியத்தில் வாழும் மக்களாகிய நமக்கு ஒரு பொதுவான மனநிலை உண்டு. அந்த மனநிலை ஒருவகை இல்லற (லௌகீக) வேதாந்த நிலை என்றுகூட சொல்லாம். “இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை” என்கிற அரசியலற்ற மனநிலை. அது நமது அரசு (state), அரசாங்கம் (government), நீதிமன்றம், சட்டங்கள் ஆகியவை பற்றி அதிகமாகவும், ஆழமாகவும் எதையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமற்று இருப்பது. அதைத் தெரிந்து கொள்வதன் அவசியம்கூட நமக்குத் தெரியாது. நாம் யார்? நாம் யாரால் ஆளப்படுகிறோம்? நாம் எப்படி ஆளப்படுகிறோம்? நம்மை ஆள்வது என்பதன் சரியான பொருள் என்ன? நாம் ஏன் ஆளப்படுபவர்களாக மட்டுமே உள்ளோம்? என்பது குறித்தும் அதிகம் தெரியாது.

அடிப்படையில் வரலாற்று உணர்வு அற்றவர்களாக, அரசியல் அற்றவர்களாக திருவாளர் பொதுஜனம் என்ற பெயரில் பாரதி பதறியபடி சொன்னதைப்போல “வீண் கதைகள் பேசி வேடிக்கை மனிதர்களாக” வாழ்வதையே ஒரு உயர்ந்த கலையாக, பண்பாடாகக் கொண்டிருக்கிறோம். ‘புண்ணிய பாரத பூமி’யின் புதல்வர்களாக வாழ்வது என்பது இப்படி ஓர்மையற்ற மனிதக் கூட்டமாக வாழ்வதுதான் என்பது மிகையாகாது. இந்திய ஒன்றியம் எண்ணற்ற அந்நியர்களால் ஆளப்பட்டதற்கும், இன்றுவரை ஆளுகைச் செய்யப்படுவதற்கும்கூட இதனை ஒரு காரணமாக கருதமுடியும்.
மார்க்ஸ் கூறியதைப்போல தனது தேவைகள் என்ன? அல்லது தனது அவசியம் என்ன? என்பதை உணராதவரைச் சுதந்திரம் சாத்தியமில்லை. அப்படியே சுதந்திரம் என்று கிடைத்தாலும் அதைச் சுதந்திரமாக உணரும் தன்மையும் இருக்காது. இந்திய ஒன்றியத்தின் மக்கள் தங்கள் தேவைகள் என்றுமே உணர்ந்ததில்லை. அதை உணராமல் பெற்ற காலனிய விடுதலை ஒருவகையில் இன்றைய அரசியல் குருட்டுத்தனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தம். இந்தக் குருட்டுத்தனத்தை அறிய, நம்மை ஆள்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை ஓரளவு தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். அந்த அவசியத்தை நிறைவு செய்கிறது ‘சந்தியா பதிப்பகம்’ வெளியிட்டுள்ள தோழர் சிகரம் ச. செந்தில்நாதனின் “இந்திய அரசமைப்புச் சட்டம் (விளக்கங்கள் – விமர்சனங்கள் – தீர்ப்புகள்)” என்ற 520 பக்கங்கள் கொண்ட நூல்.
இன்று இந்திய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசாகக் கருதப்படும் நடுவணரசு (மத்திய அரசு), மைய அரசு என்கிற சொல்லாடலின் பின்னுள்ள அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு, இந்தியாவை ஒன்றியம் என்றும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் கூறும் மாநிலத் தன்னாட்சி உரிமை சார்ந்த சொல்லாடல்கள் முன்னுக்கு வந்துள்ளது. இந்தியா ஒரு நாடு என்பதை தகர்ப்பமைப்புச் செய்து ‘இந்திய ஒன்றியம்’ என்கிற சுதந்திரமான தன்னாட்சி உரிமையை வெளிப்படுத்தும் சொல்லாடல் அது. அச்சொல்லாடல் முன்னுக்கு வந்து, இந்தியாவில் தன்னாட்சி குறித்த ஓர்மை மாநிலங்களில் அதிகரித்துவரும் இச்சூழலில் இந்திய அரசமைப்பு தன்னை ஒரு கூட்டமைப்பாக (federal system) அதன் முகவுரையில் அறிவித்திருப்பது எத்தனை தூரம் ஆழ்ந்த சிந்தனையுடனும், தொலைநோக்குடனும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு குடிமகனுக்குத் தந்துள்ள உரிமைகள், ஆளும் அமைப்புகளின் எல்லைகள், பணிகள், அதிகாரம் ஆகியவற்றை வரையறுத்து இந்தியாவில் ஒரு சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம, மதச்சார்பற்றக் குடியரசாக இந்திய குடியாண்மைச் சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கை வெளிப்படுத்தும் ஒரு விரிவான ஆவணமாக உள்ளது. மதங்கள் எப்படி தங்களது புனிதமறைகள் வழியாக உலகை ஆள நினைக்கிறதோ, அதைப்போல நவீனச் சமூகங்களுக்கு அரசமைப்புச் சட்டம் அவசியமானதாகிறது. உலகிலேயே பெரிய அரசமைப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம்தான் என்கிறார் செந்தில்நாதன் இந்நூலில். அப்படி அமையக் காரணம், “இந்திய சமூக அமைப்பு தான்!. பல்வேறு மொழிகளையும், சாதிகளையும், பண்பாடுகளையும் கொண்ட நாடு இந்தியா. சாதிய அமைப்புப் பிரச்சனை பல நாடுகளில் இல்லை. உண்மையில் வேறு எங்குமே இல்லை.” (பக். 508) என்று இந்தியாவின் பன்முகத்தன்மையே பெரிய அரசியலமைப்புச் சட்டம் உருவாகக் காரணம் என்பதை விளக்குகிறார்.
ஒவ்வொரு பிரிவினரையும், மதச்சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழைகள், விளிம்பு நிலையினர் என அனைத்து வகை மக்களுக்கும் ஒரு நியாயம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொலைநோக்குப் பார்வையிலான சட்ட வரைவுகள் இதனுள் எப்படி அமைந்துள்ளன என்பதையும் விளக்கிச் செல்கிறது இந்நூல். இந்தியாவின் விரிவான அரசமைப்புச் சட்டத்தின் 22 பாகங்கள் (பகுதிகள்) அதன் உட்கூறாக அமைந்துள்ள 395 சரத்துகள் (கூறுகள்) இதில் விரிவாக அதன் சட்டதிருத்தங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. Articles என்ற ஆங்கிலச் சொல்லைக் கூறுகள் என மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர், அது பொருத்தமானதாக இல்லை. சரத்துகள் என்பது புழக்கத்தில் உள்ளது. அல்லது சட்டப்பிரிவு என்பதைக்கூட பயன்படுத்தலாம். கூறு என்பதை ஒரு சட்டச்சொல்லாடலாகக் கருதமுடியவில்லை.
முதலில் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வது இந்நூலை முழுமையாக உள்வாங்கப் பயன்படும். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு சமுகம் தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்வதற்கான விதிமுறைகள். இதனை அச்சமூகத்தின் ஆளும் வர்க்கம் தனக்கானதாக மாற்றியமைத்துக் கொள்கிறது. அதாவது, ஆளும் வர்க்கம் தனது பொருளியல் தேவைக்கானதாக இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறது. அல்லது மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படையில் கூறினால், சட்டம் என்பது அந்த சமூகத்தின் பொருளாதார அடிப்படையைக் காப்பதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிக் கொண்ட ஒரு ஆளுகை தொழில்நுட்பமே. அது ஒவ்வொரு சமூகத்தின் அரசோடும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது. காரணம், அரசு என்பதே ஆளும் வர்க்கத்தின் ஒரு பாதுகாப்புப் படையாகச் செயல்படுவதுதான். அதனால், அது ஆளும்வர்க்கப் பொருளியல் நலனிற்கானதாகச் சட்டங்களை உருவாக்கிப் பாதுகாக்கிறது.
நிலவுடமைச் சமூகத்தில், அதாவது மதங்களின் காலங்களில் மன்னராட்சி அமைப்பில் புனிதமறைகளாகவும், மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகளில் அரசமைப்புச் சட்டமாகவும் மாறியுள்ளது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள அதாவது ஒரு சமூகத்தின் அடிப்படையை உருவாக்குவது சட்டம். சட்டத்தின் ஆட்சி என்பதே நவீன அரசமைப்புகளின் ஆட்சிமுறை. “சட்டத்தின் ஆட்சி” என்பது ஒரு முதலாளிய ஜனநாயக அரசியல் சொல்லாடல் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மார்க்சியம் அரசு (state), அரசாங்கம் (government) என்ற இரண்டு முதலாளிய அமைப்புகளையே இன்றைய ஆட்சியமைப்பு முறையாகப் பகுத்துக் காட்டுகிறது. அதில் அரசு மாறாத ஒரு அமைப்பாகவும், அரசாங்கம் மாறக்கூடிய மக்களால் தேர்வு செய்யக்கூடிய ஒன்று என்கிறது.
இவ்விரண்டு அமைப்புகளையும் இணைப்பதே அரசமைப்புச் சட்டம். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்க முடியாத அரசையும் (நீதிமன்றம், இராணுவம், காவல்துறை, சிறைச்சாலை), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் (பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள்) ஒற்றை அதிகார எல்லைக்குள் வைக்கும் ஒரு ஆவணப் பாதுகாப்பு அமைப்பே அரசமைப்புச் சட்டம். அதாவது அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டின் அரசியலை வழிநடத்தும் ஒரு கோட்பாடு.
இக்கோட்பாட்டின் பின்னிருப்பது ஒரு குறிப்பிட்டவகை சொல்லாடல். அச்சொல்லாடலே “சட்டத்தின் ஆட்சி” என்பது. இச்சொல்லாடல் சமூகத்தின் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக, வழிநடத்துவதாக இருக்கும். இச்சொல்லாடலின் பின்னிருப்பது இராணுவம், காவல்துறை என்கிற வன்முறை எந்திரமும், முன்னிருப்பது நீதித்துறை, சிறைச்சாலை என்கிற கருத்துருவ எந்திரமும் ஆகும். சட்டம் அதிகாரத்துடன் பிணைந்த ஒரு ஆணை. இச்சட்டத்தின் முன்பின் நகர்வுகள் வழியாக இயக்கம் கொள்வதே அரசமைப்புச் சட்டம் என்பது. இதனை சரியாக அனைத்து மக்களும் புரிந்துகொள்வதன் வழியாகவே தனக்கு இந்த அமைப்பிற்குள் உள்ள உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை உணர முடியும். அதற்கேற்ப தனது இயங்குப் புலத்தை அமைத்துக் கொள்ளமுடியும்.
முந்தைய நிலவுடைமைச் சமூகத்தில் மன்னராட்சி அமைப்புகளில் சட்டங்கள் இருந்தன. ஆனால் அவை அன்றைய ஆதிக்கச் சொல்லாடல் புலமாக அமைந்த மதங்களின் வழிகாட்டுதலைக் கொண்டதாக இருந்தன. மதங்கள் தங்களது இறைச் சட்டங்களையே மன்னராட்சிச் சட்டங்களாகக் கடைப்பிடிக்கச் செய்தது. அச்சமூகங்களில் அனைத்தையும் தீர்மானிப்பது அன்றைய மதங்களின் சட்டங்களே. ஆனால், மதங்களில் இருந்து விடுதலை பெற்ற, அதாவது மதத்தையும் அரசையும் பிரித்துவிட்ட, மதத்தைப் பொதுத் தளத்திலிருந்து தனித்தளத்திற்கு நகர்த்திவிட்ட, நவீன முதலாளியச் சமூகம், புனிதமறைகள், மதங்கள் இவற்றை அரசமைப்புச் சட்டம், அறிவியல் ஆகியவற்றில் மாற்றீடு செய்தது. அதன் அடிப்படையில் உருவான ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சியானது காலனிய நாடுகளை உருவாக்கி அதன்வழியாக, உலகளாவிய மனிதன் என்பதையும் உலகளாவிய ஆளுகை (governance) என்பதையும் உருவாக்கியது. நவீனத்துவம் உருவான இந்தப் புள்ளிதான் இன்றைய ஒற்றை உலகை உருவாக்கியது.
இவ்வுலகில் மதங்களின் இடத்தில் அறிவியல் ஆதிக்கச் சொல்லாடல் புலமாகியது. கடவுள் மையம், கடவுள்முதன்மை ஆகியவை மனிதமையம், மனிதமுதன்மை என்பதாக மாறியது. இந்த அடிப்படையிலேயே உலகளவில் அரசமைப்புச் சட்டங்கள் உருவானது. அதன் ஒரு அங்கமாக இந்தியாவில் அரசமைப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தொகுப்பு பல்வேறு நாட்டு அரசமைப்புச் சட்டங்களின் வழியாக எடுத்து இணைத்துத் தொகுக்கப்பட்டதுதான். இந்தத் தொகுப்பு குறித்து இந்நூலில் விடுபட்டுள்ளது. நூலின் உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டிருக்கலாம். என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கென்று சில தனித்தன்மைகள் உண்டு.
சுருக்கமாக, அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு நில எல்லைக்குள் உள்ள அனைத்து மக்களையும் ஆள்வதற்கான விதிமுறைகள், நடைமுறைகள், வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு. அத்தகையதொரு தொகுப்பே 1947 இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டு 1950 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டம். அதன் நீண்ட நெடிய வரலாற்றை இந்நூல் முதலில் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
குறிப்பாக அர்த்தசாத்திரம் என்ற நால்வருண தருமக் கோட்பாடுதான் முதல் இந்திய அரசியல் சட்டத் தொகுப்பு என்பதில் துவங்கி, அது எப்படி வள்ளுவரின் திருக்குறளின் அறம் சார்ந்த கோட்பாடில் வேறுபடுகிறது என்பதைச் சொல்கிறார். குறிப்பாக வழக்கமாகச் சொல்லப்படும் “பிறப்பொக்கும்” என்கிற வள்ளுவ அறம் எப்படி சனாதன வருணக் கோட்பாட்டில் வேறுபடுகிறது என்பதைக்கூறி அர்த்தசாத்திரம் மறுக்கப்படுகிறது. ஆனால் இந்திய அரசில் அமைப்புச் சட்டத்தின் பகுதி-3ல் அடிப்படை உரிமைகளில் வள்ளுவ அறத்தின் அடிப்படையில் உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. குறிப்பாக சரத்துகள் 14-15 ஆகியவை ‘பிறப்பு அடிப்படை’ என்கிற வருணக் கோட்பாட்டை மறுத்து ‘எல்லோரும் சமம்’ என்பதை முன்வைக்கிறது.
இந்நூலின் அமைப்பில் முதலில் இந்திய அரசமைப்புச் சட்ட வரலாறு சுருக்க முன்னோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதன்பின் அரசமைப்பு நிர்ணயச் சபை உருவாக்கம் அதில் நிகழ்ந்த முக்கிய உரையாடல்கள் 36 பக்கங்களில் தேவையான அறிமுகமாகப் பேசப்பட்டுள்ளது. அதன்பின் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்றழைக்கப்படும் முகப்புரையும் அதன் உருவாக்க வரலாறு, அதன்மீது நிகழ்ந்த திருத்தங்கள் என அரசமைப்புச் சட்டம் குறித்த அறிமுகம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் 22 பகுதிகள் தனித்தனி அத்தியாயங்களாகவும், அதன் உட்கூறுகளாக உள்ள 395 சட்டங்கள் அல்லது சரத்துகளை கூறுகள் என்று விவரிக்கிறது.
ஒவ்வொரு சட்டத்தையும் கூறி அதன் திருத்தங்கள், அதன்மீது நிகழ்ந்த முக்கியமான வழக்குகள், அதன் விரிவுரை பின் அதன் மீதான ஆசிரியரின் கருத்துரை ஓரிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுள்ளது. அதன்பின் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 12 அட்டவணைகள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. இவை அரசமைப்புச் சட்ட உள்ளடக்கங்கள் மற்றும் அது குறித்த விளக்கங்கள் (பக்.39-448). நூலின் பெரும்பகுதியும், முக்கியமான பகுதியும் இதுவே. இதில் ஒவ்வொரு சட்டச் சரத்துகளும் விளக்கப்பட்டுள்ளது.
இறுதியில் 104 சட்ட திருத்தங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன (பக்.449-477). அடுத்து முக்கியமான சில தீர்ப்புகள், எப்படி இந்த அரசமைப்புச் சட்டத்தின் சில சட்டங்களை மேலும் துல்லியமாக விளக்கின, புரிபடாத பகுதிகளைப் புரிய வைத்தன. பல்வேறு இடையீடுகள் வழியாக மேலும் எப்படி விரிவாக்கப்பட்டு மெருகூட்டப்பட்டது என்பது விவரிக்கப்பட்டுள்ளது (பக்.478–507). இப்பகுதிகள் அவசியமான மற்றும் ஆர்வமூட்டும் பல செய்திகளைச் சொல்கிறது. இதில்தான் வழக்கறிஞராக ஆசிரியரின் மேதைமை வெளிப்படும் பகுதி. இதை வாசிக்கும்போது நமக்கு அறியாத பல விளக்கங்கள் கிடைக்கிறது. இறுதிப் பகுதி ஆசிரியரின் சில விமர்சனங்கள், சில பார்வைகளை முன்வைக்கும் தொகுப்புரையாக அமைந்துள்ளது (பக்.508-520). ஆக, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகவும் விரிவாகவும் முழுமையாக தருகிறது இந்நூல்.
சாதாரணமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தமிழ் வடிவமாக இல்லாமல், அனைத்துச் சட்டங்களும் விளக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதாவது சட்டங்களின் சரத்துகளாக ஒரு பொதுமையான நடையில் இல்லாமல், சட்டவிளக்க நடையைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இது சட்டங்கள் குறித்தப் புரிதலைத் தருவதாக உள்ளது. இதில் கவனப்படுத்த வேண்டிய பல விளக்கங்கள் உள்ளன. இந்திய எல்லை வரையறையில், இந்தியா ஒரு ஒன்றியம், அது பல மாநிலங்களையும், இணைப்புப் பகுதிகளையும் (யூனியன் பிரதேசங்கள்) உள்ளடக்கியுள்ளது என்பதைக் கூறுகிறது. அதில் மேலே குறிப்பிட்ட இந்திய ஒன்றியம் என்ற சொல்லாடல் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சொல்லாடலே. ஆனால் இன்றுவரை இந்தியாவை ஒரு ஒருமித்த நாடாக, நிலமாகக் கருதும் மனநிலையில் நமது சிந்தனை கட்டப்பட்டுள்ளது. இந்நூலில் இச்சொல்லாடல் குறித்த முக்கியத்துவம் பேசப்படவில்லை என்றாலும், ‘இந்தியா ஒரு நாடு, தேசம்’ என்கிற உணர்வு சிப்பாய்க் கலகம் என்ற புரட்சியின் வழியே பெறப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் (பக்.14). “இந்திய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சி முறையை அடித்தளமாகக் கொண்டதுதான் என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.” (பக். 47) என்பதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது.
காரணம் இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற முக்கியமானதொரு அடித்தளத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக இந்நூல் கவனப்படுத்தும் மிக முக்கியமான புள்ளிகள், அடிப்படை உரிமைகள், தனிமனிதச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற முகவுரையில் குறிப்பிட்டுள்ள கோட்பாட்டு வழிகாட்டும் நெறி, மதச்சார்பின்மை என்பதன் முக்கியத்துவம் எப்படி நாட்டை சிதறாமல் காக்கும் என்ற அடிப்படை, மதச்சார்புள்ள நாடாக மாறும் அபாயத்திற்கு போடப்பட்ட தடைக்கல்லாகச் சேர்க்கப்பட்டசட்டத்திருத்தம், இட ஒதுக்கீடு கிடைத்த வரலாற்றை வழக்குகள் வழியாக விளக்குதல் – மண்டல் கமிஷன், தமிழகத்தில் அமைக்கப்பட்ட சட்டநாதன், அம்பா சங்கர் கமிஷன், கல்வி அடிப்படை உரிமையாதல் (பக்.78), சரத்து 21ஏ கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக்கியது குறித்த விளக்கம், பாராளுமன்றம், சட்டமன்றம் துவங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரையிலான நடைமுறைகள், அதன் அதிகாரங்கள், தேர்ந்தெடுக்கும் முறை, குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களின் அதிகாரங்கள், அவர்கள் வரம்பிற்கு உட்பட்டும், மீறியும் நிகழ்த்தியவற்றால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், குறிப்பாக அவசரக் காலத்தை அமுல்படுத்த உருவாக்கிய சட்டத் திருத்தம் ஆகியவை மிகவும் நுட்பத்துடன் விமர்சன சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்வழி நிகழ்ந்த உரையாடல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மிகவும் கவனத்தைக் கவரக்கூடியது நாடாளுமன்றம் பெரிதா? அரசமைப்புச் சட்டம் பெரிதா? – என்ற உரையாடல். தீர்ப்புகள் புதியச் சட்டங்களாக, சட்ட நடைமுறைகளாக மாறுவது குறித்து இந்நுலின் வாசிப்பின்வழி அறியமுடிகிறது. எப்படி அரசமைப்புச் சட்டம் தொடர்ந்து தனது பரப்பை அதிகப்படுத்தி, மக்களது உரிமைகள், கடமைகள், பிரச்சனைகள், வழுக்குகளை முடித்துவைக்கிறது என்பது வாசிப்பவருக்கு புதியதொரு அறிவைத் தருவதாக உள்ளது. சான்றாக, பொதுமக்களின் பிரச்சனைகளில் ஒன்றான ‘குழந்தையை வெளிநாட்டினருக்குத் தத்துக் கொடுத்தல்’ (பக். 496) என்பது வழக்கின் வழியாக தீர்ப்பாகி, அதுவே சிறப்புச் சட்டமாக மாறுகிறது. இத்தகைய நீதிமன்ற நடைமுறைகள், ஒரு பொது வாசகருக்கும், அரசியல் அறிவுபெற்ற கட்சி சார்ந்த வாசகருக்கும் புதியதொரு பார்வையைத் தரக்கூடியதாக உள்ளது.
இந்நூலில் அனைத்து சட்ட சரத்துகளும் தேவையான இடங்களில் விளக்கங்கள், அதை ஒட்டி நிகழ்ந்த உரையாடல்கள், அதற்காக அமைக்கப்பட்ட கமிஷன்கள், அதன் முடிவுகள், வழக்கு நடத்தப்பட்ட விதம் குறித்துத் தேவையான அளவிற்கு அரசு வழக்குப் பதிவு ஏடுகளில் இருந்து சான்றுக் குறிப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகச் சில குறிப்பிட்ட நீதியரசர்களின் குறிப்பிடத்தகுந்த இடையீடுகள் வழியாக, சட்டத்தின் அடிப்படைகளை விரிவாக்குதல், அதன் வழியாக சமூகத்தில், வாழ்நிலையில் உருவான மாற்றங்கள் என்று விரிந்து செல்கிறது. இதில் இன்னமும் விரிவான சமூகவியல் ஆய்வகள் தேவைப்படுகிறது என்பதை இந்நூல் உணர்த்துவதாக உள்ளது. அதாவது, இந்திய சமூக வாழ்வு எப்படி இந்த அரசமைப்புச் சட்டத்தின் வழியாக உருவாகி வந்தது என்பதும், ஒரு குடிமைச் சமூக அமைப்பின் உருவாக்கத்தில் அதன் பங்களிப்பும் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதை இந்நூல் வாசிப்பு அறிவுறுத்துவதாக உள்ளது. சட்டமும், சமூகவியலும் இணைந்த ஒரு அரசியல் பொருளாதாரப் பார்வையில் அது தனிநூலாக இவர் போன்ற வழக்கறிஞர்களால் எழுதப்பட வேண்டும்.
இந்நூலில் தீர்ப்புகள் குறித்த விளக்கங்கள் அருமையாக எழுதப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக இல்லாமல் கச்சிதமான மொழிநடையில் துறைசார்ந்த சொற்களைப் பயன்படுத்தி வாசிப்பாளரைக் குழப்பாமல் 50 முக்கியான தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில: சரத்து 356 – மாநில அரசைக் கலைத்தல் – எஸ். ஆர் பொம்மை வழக்கு (பக். 479), கேசவானந்த பாரதி வழக்கில் அடிப்படை உரிமை காக்கப்பட்டது (பக். 481-483). “இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாற்றப்படுவது ஒருவகையில் தடுக்கப்பட்டது. ஏனென்றால், அடிப்படை உரிமைகளைச் சட்டத் திருத்தத்தின் மூலம் செயலற்றதாக ஆக்க சட்டத் திருத்தங்களுக்கு வாய்ப்பு உண்டு என்பது பொய்யானது.” (பக்.482) என்று தனது பார்வையை முன்வைக்கிறார். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அமைப்பை எந்தச் சட்டத் திருத்தத்தாலும் மாற்றமுடியாது என்பதை உறுதிபடுத்திய தீர்ப்பு இது. இப்படி பல தீர்ப்புகளின் வரலாற்றை சுருக்கமாக முன்வைக்கிறார் சிகரம் செந்தில்நாதன். அவர் வழக்கறிஞர் என்பதால் இந்தத் துறையில் தனது சமூகவியல் பார்வையைச் செலுத்தி எதை வாசகருக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதைச் சரியாகச் செய்துள்ளார்.
இந்திரா காந்தி – வி. ராஜ் நாராயண் வழக்குத் தீர்ப்பு. அது இந்திராகாந்தி தனது பதவியைக் காப்பாற்றக் கொண்டுவந்த சட்டத் திருத்தம் 329ஏ செல்லாது என்ற தீர்ப்பு (பக். 483). இதன்மூலம் பாராளுமன்றச் சட்டத் திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றமுடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இதுபோன்று குறிப்பிடத்தக்க பல தீர்ப்புகள் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தமிழ்த் திரைப்படம் குறித்த தீர்ப்பு எப்படி பல மேல்முறையீடுகள் நோக்கிப் பயணித்தது என்றும், வழக்கில் உள்ளபோதே அதற்குத் தேசியவிருது வழங்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பாபர் மசூதித் தீர்ப்புப் குறித்துக் கூறும்போது ராமர் சிலை எப்படி வந்தது? என்பது மர்மமானது என்பதைச் சுட்டுகிறார். அது அங்கு எப்படி வந்திருக்க முடியும் என்பது குறித்துப் பாமர மக்கள்கூட அறிவார்கள். தானாகத் தோன்றியிருக்க முடியாத அந்த ராமர் சிலையை ஏன் நீதிமன்றம் ஆரம்பம் முதல் அகற்ற முயற்சிக்கவில்லை என்பதுதான் உண்மையில் மர்மமானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக உள்ள அந்த தீர்ப்பில் பல முரண்கள் உள்ளதாகப் பெரிய சர்ச்சைகள் எழுந்தது அனைவரும் அறிந்ததே. அந்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி பின்னால் அரசு நெறிமுறைகளை மீறி எம்.பி.யாக ஆக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறார். ஆனாலும், அந்த தீர்ப்பின் அரசியலையும், அதன் முரண்களையும் வெளிப்படுத்தியுள்ளார் (பக்.486).
ஆட்கொணர்வு மனுத் தாக்கல் (பக்.489), கைதிகள் காவல்துறை அத்துமீறல் (பக்.490), ஷாபானு வழக்கு, விபத்துகளுக்கு அவசர சிகிச்சை மறுக்கப்படுவது குற்றம் என்ற தீர்ப்பு, கலைக்கப்பட்ட அரசு இடைக்கால அரசாகத் தொடர்தல் (கேர் டெக் கவர்ன்மெண்ட் – பக்.497), மகளிடம் பராமரிப்புத் தொகை கேட்டு, மகனற்ற, ஆதரவற்ற தந்தையின் வழக்கில், வழங்கும்படிக் கூறப்பட்ட தீர்ப்பு, ‘ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது இரவு 10 மணி–காலை 6 மணிவரை’ என்ற பொதுநல வழக்கின் தீர்ப்பு – இப்படிப் பல முக்கியமான நாம் அறிந்துகொள்ள வேண்டிய தீர்ப்புகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. “பேச்சு சுதந்திரத்தில் அமைதியாக இருப்பதும் அடங்கும்.” (பக்.504) என்பதுபோன்ற ஆர்வமூட்டும் அழிய தீர்ப்புகளும் வந்துள்ளன.
“அவசர காலத்தில் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நீதி மன்றங்களை அணுகமுடியாது என்றது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு சட்ட வரலாற்றிலும் ஒரு கருப்புப் புள்ளியாகும்.” (பக்.489) என்று ஆட்கொணர்வு மனுத்தாக்கல் வழக்கொன்றின் தீர்ப்பை விமர்சிக்கிறார் ஆசிரியர். இப்படி பல்வேறு சரத்துகள், அதன் தீர்ப்புகள் குறித்து தனது விமர்சனங்களை, பார்வைகளை முன்வைக்கத் தவறவில்லை. சில இடங்களில் அரசமைப்புச் சட்டம் தரும் உள்விளக்கங்கள் சிக்கலானதாக உள்ளன. சான்றாக, மதச் சுதந்திர உரிமை (சமயச் சுதந்திர உரிமை என்று குறிப்பிட்டுள்ளார். மதங்களும் சமயங்களும் நுட்பமான வேறுபாட்டைக் கொண்டது) குறித்தச் சட்டங்களும், சரத்துகளும் போதுமான விளக்கத்துடன் இல்லை. ஆனாலும், மதச் சுதந்திர உரிமை குறித்த சரத்துகள் அருமையாக விளக்கப்பட்டுள்ளன
(பக்.83-95). அதில் “மூட நம்பிக்கையைச் சமயமாகக் கருதமுடியாது அல்லது சமயத்தின் முக்கிய அங்கமாகவும் கருதமுடியாது. சமயத்தின் ஒன்றிணைந்த முதன்மையான, சமயத்தோடு பிரிக்கப்படமுடியாத பழக்கவழக்கங்களையும், வழக்காறுகளையும் தான் சட்டம் அங்கீகரிக்கும். அந்த உரிமைகளை பாதுகாக்கும்.” (பக்.83) என்று அதில் உள்ள சரத்துகளின் பொது விளக்கமாக முன்வைக்கிறார். இச்சரத்துகள் குறித்துப் பல தீர்ப்புகள் உள்ளதையும் அதன் முக்கிய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர் வழக்கில் ஆகமங்கள் குறித்த குழப்பம், சபரிமலைத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் மறு ஆய்வாக எடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரித்தது என்பதை எல்லாம் இப்பகுதியில் விளக்கியுள்ளார். இதில்தான் சமீபத்தில் தமிழக அரசு ஆணைபிறப்பித்த ‘அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டம் ஏற்கனவே ஒரு வழக்காகி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பும் ஆகியுள்ளது.
ரிட்மனு எனப்படும் நீதிப்பேராணைகள் குறித்து பகுதி-6, அத்தியாயம்-5 உயர்நீதி மன்றம் (THE HIGH COURTS IN THE STATES) என்ற பிரிவில் சரத்து 226 (பக்.225-235)ல் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் அந்த சரத்தை பொதுவானதாக முன்வைக்கிறது. ஆனால், அதில் உள்ள வகைகள் குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. ஆட்கொணர்வு நீதிப் பேராணை, தகுதியை வினவும் நீதிப் பேராணை, தடை விதிக்கும் நீதிப் பேராணை, செயலுறுத்தும் நீதிப் பேராணை, நெறிப்படுத்தும் நீதிப் பேராணை ஆகியவை தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. இது ஒரு சான்றுதான். இப்படியாக இந்நூலில் உள்ள சட்ட சரத்துகள் பல இடங்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதன் மீது நிகழ்ந்த வழக்குகள் அடிப்படையில் என்னென்ன வகையாக அது விரிந்துள்ளது என்பதையும் இணைத்துச் சொல்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் சரத்துகளைக் கூறி விளக்குவதுடன் தேவையான இடங்களில் அதன் வரலாற்று நிகழ்வுகளையும் சுட்டத் தவறவில்லை.
சான்றாக, பகுதி 17 அலுவல்மொழி என்பது அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான எப்பொழுதும் சூடான பிரச்சனைகள் நிறைந்தப் பகுதி. இந்திய அரசின் மொழிக் கொள்கைக்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும், கட்டுப்படுத்தும் சரத்துகளையும் கொண்ட பகுதி. 1950 அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் 15 ஆண்டுகள்வரை ஆங்கிலமும் அதன்பின் அலுவல் மொழியாக இந்தியும் இருக்கும் என்கிறது சரத்து 343. (பக்.343-344) 1965-ல், அதாவது 15 ஆண்டுகள் கழிந்து, இந்தி அலுவல் மொழியாகிவிட்டால் தமிழகத்தில் சிக்கல் உருவாகும் என்பதைக் கருத்தில்கொண்டே, தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது. அதன்பின் பண்டித நேரு அவர்களின் உறுதிமொழியால் அப்போராட்டம் கைவிடப்பட்டது என்பதை விளக்கக் குறிப்பாகத் தருகிறார் (பக்.346).
ஆசிரியரின் பார்வைகள் சில சட்டச் சரத்துகளில் அவரது சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, முகவுரை பற்றிய விரவானப் பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது. காரணம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது இந்திய அரசின் அடித்தளமாக விளங்குவது. அதுதான் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புச் சட்டத்தினை வழிநடத்தும் முகப்பாக உள்ளது. பண்டித நேரு கூறியதைப்போல இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதை தனது அடிநாதமாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது முகவுரையில். அடுத்த முக்கியமான பகுதி அடிப்படை உரிமைகள் குறித்தது. ஆசிரியர் சிகரம் செந்தில்நாதன் தனது விளக்கவுரையில் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றுடன் இந்த அடிப்படை உரிமைகள் குறித்து பல இடங்களில் இது எப்படி அரசமைப்பு சட்டத்தின் பல்வேறு வழக்குகள் வழியாக விரிந்த பொருளைப் பெற்றது என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தில் மதஉரிமை எப்படி விளக்கப்பட்டுள்ளது என்பதை ஆகம விதி குறித்த சிதம்பரம் கோவில் வழக்கில் விவரிப்பது முக்கியமானது. உச்சநீதிமன்றம் ஆகம விதிகள் குறித்து தெளிவற்றநிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழில் பாசுரங்களைப் பாடுவது குறித்த இவ்வழக்கு முக்கியமான ஒன்று. ஆனால் அதில் தீர்ப்பு சிக்கலானதாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல் ஒருசில வழக்குகளில் உச்சநீதிமன்றக் குழப்பமான தீர்ப்புகளையும், தீர்வுகளையும் முன்மொழிகிறது. அவற்றில் காஷ்மீர் சிறப்புரிமை நீக்கம் குறித்த உரையாடல் முக்கியமானது. குறிப்பாக எப்படி இந்த அரசு புறவாசல் வழியாக வேறுபல சட்டங்களைத் திருத்தி அதன் வழியாக காஷ்மீர் சிறப்புரிமையை நீக்கியதற்கான திருத்தங்களைக் கொண்டுவந்ததையும் அடிப்படையில் அது எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்பதையும் விவரிக்கிறார் (பக். 513). அதாவது சட்டமன்றம் கூடி முடிவெடுக்க வேண்டியதை, ஆளுநரை வைத்து சட்டமாக்குதல் என்ற புதிய நடைமுறையைப் புகுத்தும் ஒன்றாக அது உள்ளது.
அதுபோன்றே, மருத்துவ இட ஒதுக்கீடு குறித்த வழக்கு, சபரிமலை வழக்கு. அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை உருவாக்கிய நடைமுறை பல முக்கியமான வழுக்குகளுக்கு ஏன் செய்யப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்புகிறார். பாபர் மசூதி தீர்ப்பு எத்தனை குழுப்பமான பல முரண்களைக் கொண்டது என்பதை விரிவாகவும், மண்டல் கமிஷன் வழக்குத் தீர்ப்பில் உள்ள சாதக பாதக அம்சங்கள் என பலவும் முக்கியமான உரையாடல்கள் இந்நூலின் வழியாக உணரமுடிகிறது. அரசமைப்புச் சட்டம் நீதியரசர்களால் சில வழக்குகளில் தீர்ப்பாகவும் (judgement), சில வழக்குகளில் நீதியாகவும் (justice) வெளிப்பட்டிருப்பதை வாசிக்க முடிகிறது. அரசுகள் தங்கள் அதிகாரப் பலத்தைக் கொண்டு தீர்ப்புகளை வழங்கலாம், ஆனால் அது நீதியானதா? என்கிற கேள்வி எக்காலத்திலும் உள்ளது.
ஆளுகைமுறையுடனான (governance) சட்ட உறவு குறித்த கோட்பாடுசார்ந்த பார்வை இல்லை. இதுகுறித்த உலகளாவிய பல கோட்பாட்டுச் சிந்தனைகள் வளர்ந்துள்ளன. மக்களிள் உயிராற்றலை எப்படி ஒரு ஆளும் வர்க்கம் அரசதிகாரம் வழியாக உறிஞ்சுகிறது, மக்களாக மாற்றி எப்படி ஆளப்படும் தன்னிலைகளாகக் கட்டமைக்கப்படுகிறது, அதில் சட்டத்தின் பணி என்ன என்பது குறித்து விரிவான பல கோட்பாட்டு உரையாடல்கள் உள்ளன. குறிப்பாக, மார்க்சியம் நீதித்துறையை அரசு எந்திரப் பகுதியாகவே கருதுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டமும், அதன் விளக்கவுரையும், திறனாய்வு மதிப்பீடும் தனித்தனியாக இல்லை. சட்டச் சரத்துகளை தந்துவிட்டு அதனை விளக்கியிருக்கலாம். ஆனால் எளிமையாக புரிய நேரடியாக சட்டச் சரத்துகளை விளக்கத் துவங்கிவிடுகிறார். அப்பொழுது சட்டத்தின் சரியான சரத்தை அதன் மூலத்துடன் ஒப்பிட்டு வாசிக்க வேண்டிய தேவை வந்துவிடுகிறது. ஒரு சட்டம் அதன் விளக்கம் – வழக்குகளும், தீர்ப்புகளும் – அது குறித்த திறனாய்வு மதிப்பீடு என்ற வடிவத்தில் அமைந்திருந்தால் நூல் சற்று விரிவடைந்திருக்கும் என்றாலும், வாசிப்பில் அது தடங்களை உருவாக்காது. அது அரசமைப்புச் சட்டத்தை வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டும் குறிப்பு நூலாக (guided reference book) அமைந்திருக்கும்.
அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுதும் இறையாண்மையுடன் உறவுடையது. இந்திய இறையாண்மை என்பதற்கான கோட்பாட்டு வழிகாட்டுதலை முகப்புரை முன்வைக்கிறது. அதில் மதச்சார்பின்மை உள்ளது. அதற்கு எதிரான ஒரு ஆட்சி அதை அழித்து தங்களது மதவாத இறையாண்மையைக் கொண்டுவர என்னவெல்லாம் இந்த அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திச் செய்யலாம் என்பதற்குச் சான்றுகள் பல சமகாலத் தீர்ப்புகளில் உள்ளது. உடனடியாக நினைவில் வருபவை 1. பாபர் மசூதி 2. சபரிமலை 3. காஷ்மீர் சிறப்புரிமை 4. குடியுரிமை திருத்தம் போன்றவை. இத்தகைய வழக்குகளும் தீர்ப்புகளும் தொடரத்தான் போகிறது. அத்தகைய வழக்குகளின் நுட்பதிட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றை எதிர்ப்பதற்கான அல்லது பரந்த உரையாடலில் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு அறிவைப் பெறுவதற்கு இந்நூல் இயக்கவாதிகள், செயற்பாட்டாளர்கள், பொதுநல வழக்குகள் போடுபவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடியதாக உள்ளது.

துவக்கத்தில் கூறியதைப்போல அனைவரும் இதனை வாசிப்பதன் வழியாக நமது தற்போதைய உரிமைகள், கடமைகள், நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு தனிமனிதர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. ஒரு குடிமகளாக அவர் மாற்றப்பட்டன பிறகே ஒரு நிலத்தில் தன்னைப் பிணைத்துக் கொள்ள முடியும். அந்தப் பிணைப்பை உருவாக்கும் ஒரு சங்கிலியே அரசமைப்புச் சட்டம். அந்தச் சங்கிலி நம்மை அடக்கும் தளையா? அல்லது மார்க்ஸ் சொன்னதைப்போல நமது தேவையை உணர்ந்து ஒரு அவசியம் பொருட்டு நம்மைப் பிணைத்துக் கொண்டுள்ள விடுதலையா? என்பதை எதிர்காலமே உணர்த்தும்.
சட்டங்கள் குறித்து மார்க்ஸ் சொன்னார் “சட்ட உறவுகள் மற்றும் அரசின் வடிவங்களை, மனித மனதின் முன்னேற்றம் என்று அழைக்கப்படுவதன் மூலம் அவற்றைப் புரிந்து கொள்ளவோ அல்லது விளக்கவோ முடியாது, ஆனால் அவை வாழ்க்கையின் பொருண்மையான நிலைமைகளில் வேரூன்றியுள்ளன.” இன்றைய நமது பொருண்மையான நிலை என்பது உலக முதலாண்மை (கார்பரேட்) மற்றும் இந்துத்துவ மதவாத பாசிச அமைப்பாக மாறிக்கொண்டுள்ள இந்தியாவில், ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் செயல்போக்கிற்கு இந்த அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
அதற்கு ஒரு வழிகாட்டுதலை இந்நூல் நிச்சயமாகத் தரும்.
“அரசமைப்புச் சட்டம் மேன்மையானதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமானதாகி விடும். எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு இருக்கும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியாது; சாதி மத பேதங்களே நம்முடைய எதிரிகள், நாட்டிற்கு மேலாக மதத்தை அரசியல் கட்சிகள் தூக்கிப் பிடிக்குமேயானால் நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆளாகும்.” என்ற அம்பேத்கரின் முன்னுணர்வு (தீர்க்கதரிசனம்) வாசகத்துடன் இதனை முடிக்கிறார்.
இன்று அம்பேத்கர் எச்சரித்த நிலைதான் வந்துள்ளது. அதாவது இன்று அதிகாரத்தில் உள்ள இந்துத்துவ மதவாதப் பாசிச சக்திகளை எதிர்த்து இரண்டாவது சுதந்திரப் போரை நிகழ்த்தும் நிலைக்கு இந்திய மக்கள் ஆளாகியுள்ளனர். இந்த அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டோ அல்லது பல சட்டத் திருத்தங்கள் என்ற புறவாசல் வழியாகவோ உயர்சாதி மற்றும் முதலாண்மை நலனுக்கான வருண தருமத்தை, சமத்துவமின்மையை பேணும் சனாதன மனு(அ)தர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாக மாற்ற முனையும், இன்றைய சூழலில் இந்நூல் முக்கியத்துவமான சட்டம், நீதி, இறையாண்மை, மதநல்லிணக்கம் சார்ந்ததொரு அறிவைத் தரக்கூடியதாக உள்ளது.
”சட்டத்தின் ஆட்சி” என்ற முதலாளிய ஜனநாயகச் சொல்லாடலைக் காப்பதற்கே இன்று போராடவேண்டிய நிலையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்நூல் அரசமைப்புச் சட்டம் குறித்த பல தெளிவுகளை தருவதாக வந்துள்ளது. இவ்வளவு விரிவான ஒரு நூலை வெளியிட்ட சந்தியா பதிப்பகத்திற்கும், பதிப்பாளரின் பல தூண்டுதல்களுக்குப் பின் விரிவாக எழுதித் தந்துள்ள தோழர். சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களுக்கும் நமது நன்றியை பதிவு செய்வோம்.