நேர்காணல்: நீதியரசர் கே. சந்துரு
சந்திப்பு: ச. தமிழ்ச்செல்வன்
தோழர் சந்துரு அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை.சமூக அக்கறையும் சமூகப்பொறுப்புணர்வும் மிக்க ஒரு நீதிபதி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான வாழ்க்கை அவருடையது. அத்தைகைய ஒரு பாதையை அவர் தேர்வு செய்ததில் புத்தகங்கள் வகித்த பங்கு என்ன என்பது பற்றிப் புதிய புத்தகம் பேசுது வாசகர்களுடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார். அரசியல், தத்துவ நூல்களோடு தன் இலக்கிய வாசிப்பு பற்றியும் விரிவாகப் பேசியுள்ள இந்நேர்காணல் இளம் வாசகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்புகிறோம். வாசிப்பு பற்றி மட்டுமான இந்நேர்காணலுக்கு உடனே ஒப்புக்கொண்டு கேள்விகளுக்கு உடனே பதிலளித்த தோழருக்கு புதிய புத்தகம் பேசுதுவின் நன்றி.
பள்ளிப்பருவத்தில் என்ன புத்தகங்கள், இதழ்கள் வாசித்தீர்கள்? அவை பற்றியும் அவ்வாசிப்பு ஏற்படுத்திய உணர்வுகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?குடும்பச் சூழல் வாசிப்புக் கலாச்சாரத்தில் இருந்ததா?
பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் இதழ்களான கண்ணன், அம்புலி மாமா, மஞ்சரி போன்ற இதழ்கள் எங்களால் வாசிக்கப்பட்டது. தினசரி செய்தித்தாள் ஹிந்துவைத் தவிர வேறு நாளிதழ்கள் கிடைக்கப்பபெறவில்லை. பொருளாதார ரீதியாக வாரஇதழ்கள் வாங்குவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்டை வீடுகளிலும் முடித்திருத்தும் நிலையம், காபிக்கொட்டை வறுத்து அரைத்துத் தரும் கடை இவற்றில் வார இதழ்களை வாசிக்க முடிந்தது.
அறுபதுகளில் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாவட்ட கிளை நூலகம் துவங்கப்பட்டது. அங்கும் சென்று இதழ்களை வாசிப்பதுண்டு. சகோதரர்கள் நான்கு பேரும், சகோதரி ஒருவரும் அனைவருமே வாசிப்பை விரும்புபவர்கள். வாசிப்பு கலாச்சாரம் குடும்பத்தில் பரவலாக இருந்தது. மேலும், பொழுதுபோக்கு என்று சொல்லக்கூடியது சினிமாவும், வானொலியும்தான் இருந்தன. எனவே விளையாட்டு நேரம் போக, வாசிக்கும் பழக்கம் பலருக்கும் அன்று இருந்தது.

கல்லூரிக்காலத்தின் புத்தகங்களாக எவை இருந்தன?புத்தக வாசிப்பில் தங்கள் சக பயணிகளாக, வழிகாட்டி போல இருந்தவர்கள் யாரேனும் உண்டா?
கல்லூரி ஆரம்பக்காலங்களில் வார இதழ்களில் வந்த தொடர் நாவலின் பக்கங்களை பிரித்தெடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கும் நாவல்களை படிக்க முடிந்தது. ஆனால், அரசியல் பிடிப்பு ஏற்பட்ட பிறகு வாசிப்பு பன்மடங்கு அதிகரித்தது. புத்தக வாசிப்பில் சகபயணிகளாக இருந்தவர்கள் இந்திய மாணவர் சங்க தோழர்களும், சில தொழிற்சங்கத் தலைவர்களுமே. அச்சமயம் ஹிந்து நாளிதழில் உதவியாசிரியர் பணியில் சேர்ந்த ராம் அவர்கள் பல நூல்களை வாங்குவார். அவர் படித்து முடித்த பிறகு அந்த நூல்கள் படிப்பதற்காக சுற்றுக்கு விடப்படும். இது தவிர, சென்னையிலுள்ள பெரிய நூலகங்களான கன்னிமாரா, மாவட்ட மத்திய நூலகம், பல்கலைக்கழக நூலகம், அமெரிக்க தூதரக நூலகம் இவையெல்லாமும் புத்தகப் பசிக்கு தீனியிட்டன.
மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் துவக்கி நடத்தி வந்த தோழர் செந்தில்நாதன் நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதனால் புதிய தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் படிப்பதற்கும் தூண்டுதலாக இருந்தன. சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது, பிரசுரங்களுக்குச் சென்று நூல்களை குறைந்த விலையில் பெற்று மாணவர்களிடம் விநியோகிக்கும் பழக்கமும் இருந்தன. கல்லூரி விடுதியில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய “குருதிப்புனல்” (தமிழ்ப் புத்தகாலயம்) நாவலை பல மாணவர்களுக்கும் வாங்கிக் கொடுத்தோம். அது பற்றி சிறிது விமர்சனம் ஏற்பட்டாலும், மலையாளத்தில் அந்த வாரிகை சிந்தாவாரிகை தொடராக வெளியிட ஆரம்பித்தவுடன் அவ்விமர்சனங்களும் அடங்கியது. இன்குலாப் எழுதிய கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்ட இளவேனிலுடன் தொடர்பு இருந்ததனால் இன்குலாப் கவிதைகளை நூற்றுக்கணக்கில் மாணவர்களிடம் கொண்டுசேர்த்தோம்.
அச்சமயத்தில் பல மாணவர்களையும் கவர்ந்தது ராகுல் சாங்கிருத்தியாயனின் “வால்கா முதல் கங்கை வரை” புத்தகம்தான். இதுதவிர அன்று வெளியான புதிய சிற்றிதழ்கள் பல மாணவர்களிடையே உலா வந்தன. முழுநேர ஊழியராக இருந்தபோது பொதுக்கூட்டங்களில் புத்தகங்களின் விற்பனையும் செய்ய நேர்ந்தது. இயக்க இதழ்கள் விநியோகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது, தோழர்கள் சிலர் வைத்துள்ள பாக்கி கணக்கு விவரங்கள் இன்னும் என்னிடம் உள்ளன.
வழக்குரைஞர் வாழ்க்கையைத் தேர்வு செய்தமைக்குப் புத்தகங்கள் எவ்வகையில் தூண்டுதலாக இருந்தன?அவ்வயதில் வாழ்வின் திசை மாற்றிய புத்தகங்கள் என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? அப்புத்தகங்களின் பேசுபொருள் என்னவாக இருந்தது?
நான் சட்டம் படிக்க நேர்ந்தது தற்செயலாக நடந்தது. மாணவர் மத்தியில் முழுநேர வேலை செய்வதற்காக உகந்த இடம் சட்டக்கல்லூரி என்பதனால் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தான் சட்டக்கல்லூரியில் நுழைந்தேன். அனைத்து கட்சி மாணவர்களுக்கும் அங்கே அமைப்புகள் இயங்கியதனால் அவர்களுக்கு உடனடியாக பதில் கூறுவதற்கு சகலவிதமான இதழ்கள் கட்டுரைகள் படிக்க நேர்ந்தன. இன்னும் அரசியலை கூர்மையாக புரிந்து கொள்வதற்காக ஆழமான மார்க்சிஸக் கட்டுரைகள் வாசிக்க நேர்ந்தது.
எழுபதுகளின் ஆரம்பத்தில் மாசேதுங்கின் எழுத்துகள் பலவகையிலும் கவர்ந்தன.
அவருடைய கவிதைகள் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்து இளவேனிலின் கார்க்கி இதழில் வெளியிட்டுள்ளேன். சட்டப் பாடங்களையும் தீவிரமாக கற்க நேர்ந்ததனால் வழக்கறிஞர் தொழில் துவங்கியபின் அதிகமாக சட்ட சஞ்சிகைகளை வாசிக்க நேர்ந்தது. ஆரம்பகட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததனால் அனைத்துவகையான நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசிக்க முற்பட்டேன். ஈழத் தமிழறிஞர்கள் கலாநிதிகைலாசபதி, கலாநிதி சிவதம்பி இவர்களுடைய எழுத்துகளும், சமீபத்தில் மறைந்த கணேசலிங்கனின் நாவலும் பெரிதும் ஈர்த்தன.
இலக்கியங்களை விரும்பி வாசித்திருப்பீர்கள்.கவிதை, கதைகள், நாவல்கள், அபுனைவு எழுத்துகள் இவற்றில் தங்கள் ஈடுபாடு எதில் அதிகம்? பாதித்த இலக்கியங்கள் (சோவியத், இந்திய மற்றும் பிற மொழி)பற்றிச் சற்று விரிவாக…
வாசித்ததில் அதிகம் ரசித்தது நாவல்களும், புனைவு எழுத்துகளும்தான். ஆரம்பத்தில் ருசிய எழுத்தாளர்கள் டால்ஸ்ட்ராயும், ஷோலகோவ் அவர்களுடைய எழுத்துகளை பெரிதும் விரும்பி படிக்க நேர்ந்தது. ஆனால், மொழிமாற்றத்தில் உள்ள சிக்கல்களில் அவற்றை படிப்பதில் தடங்கல்கள் ஏற்படுத்தின. எனவே அசலான தமிழ் எழுத்துகளை தேடி வாசிக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகள் பெரிதும் கவர்ந்தன. மேலைநாட்டினரின் மொழிபெயர்ப்பு படைப்புகளைவிட சொந்த நாட்டு எழுத்தாளர்களே பெரிதும் கவர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் வாசிப்பிலிருந்து எழுத்துக்குப் பயணப்பட்டீர்கள். இந்தப் பரிணாமம் எப்படி நிகழ்ந்தது?
வாசிப்பிலிருந்து எழுத்துக்குப் பயணப்படுவது மிகப்பெரும் தாவல். ஆரம்பகட்டத்தில் இயக்க வேலைக்காக ஆங்கில அறிக்கைகளை தமிழில் மொழிபெயர்த்து கொடுப்பதுடன், சில சமயங்கள் வெளியூரிலிருந்து வரும் தலைவர்களின் கூட்டப்பேச்சுகளை மொழிபெயர்த்துக் கூறும் முயற்சிகள் இருந்தன. தொழிற்சங்கங்களுக்கு உதவி செய்தபோது குற்றப்பத்திரிகைகளை வாங்கிவரும் தொழிலாளர்களுக்கு சமாதானம் எழுதித்தரும் வேலைதான் ஆரம்பகட்ட எழுத்து வேலையாக இருந்தன. பின்னர் மாணவர், தொழிற்சங்கம் இவற்றின் மாநாடுகளில் வைக்க வேண்டிய வேலை அறிக்கைகளே முதல் பிரசுரங்கள் ஆனது. மாணவர் இயக்கத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும் வெளியிடப்படும் துண்டு அறிக்கைகள்தான் ஆரம்பகட்ட எழுத்தாற்றலை உருவாக்கியது.
ஆரம்பகட்டத்தில் இருந்த தாழ்வு மனப்பான்மையும், குறைவான படிப்புத் திறனும் எழுத்தாற்றலை ஊக்குவிக்கவில்லை. ஆனால் வெகுஜன இயக்கத்தில் செயல்பட்ட போது இந்த மனத்தடைகள் நீங்கி எழுதுவதற்கான புதிய உற்சாகம் கிட்டியது. எழுதுவது இயக்க கடமையானதற்குக் காரணம் காரல்மார்க்ஸ் கூறியதுபோல் “ஒரு எண்ணம் மக்களைக் கவ்வும்போது அது பௌதீக சக்தியாக மாறும்.”
தொண்ணூறுகளில் ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டதனால் ஆரம்பித்ததே “ஆர்டர் ஆர்டர்” என்ற என்னுடய கட்டுரைத் தொடர். ஜூனியர் விகடனில் அவை வெளியான உடனேயே பரவலான கவனத்தைப் பெற்றது. இன்னும் நான் கட்டுரையாளனாகவேதான் இருக்கிறேனேயொழிய, கதை, கவிதை பக்கங்களுக்கு நான் ரசிகன் மட்டுமே.
நியாயம்,நேர்மை,கொள்கையில் உறுதி, உழைக்கும் மக்கள் பக்கச் சாய்வு என்று ஒரு வாழ்க்கைப்பாதையை அமைத்துக்கொண்டீர்கள்.இந்தத் தேர்வு தற்செயலாக அமைந்திருக்க முடியாது.இதில் இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம் பெரிதா உங்கள் வாசிப்பு ஏற்படுத்திய தாக்கம் பெரிதா?
உழைக்கும் மக்களின் பக்கம் சாய்வு என்பது இயக்கத்தின் தூண்டுதல்களே. அச்சாய்விற்கு இலக்கியங்கள் பங்கு வகித்ததாக கூறமுடியாது. அதேசமயத்தில் இலக்கிய வாசிப்பு பரவலான உலகப் பார்வை அளித்ததுடன், வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இயக்கங்களில் ஈடுபாடுதான் என்னை வழக்கறிஞராகவும், பின்னர் நீதிபதியாகவும் பயணப்படுத்துவதற்கு உதவின. அதேசமயத்தில் பண்பட்ட மனிதனாக மாறுவதற்கு இலக்கியங்கள் பெரிதும் உதவின.
தங்கள் இணையரும் ஓர் எழுத்தாளர், ஆழ்ந்த வாசகர். வாசிப்பு உங்களை இணைத்ததில் ஆற்றிய பங்கு என்ன? உங்களுக்கிடையிலான வாசிப்புப் பொதுத்தளம், அதாவது இருவரையும் ஈர்த்த புத்தகங்கள் என ஏதும் உண்டா? குடும்ப வாழ்வின் அன்றாடத்தில் புத்தகங்கள் வகிக்கும் பாகம் என்ன?
இணையர் பாரதி கல்லூரி ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்னால் வாரஇதழ் ஒன்றில் பணியாற்றினார். அது தவிர கல்கியின் இலக்கியங்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். “புதிய வார்ப்புகள்” என்ற பெண்கள் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதனால் திருமணத்திற்குப் பின் வீட்டில் அனைத்துவிதமான இலக்கிய இதழ்களும் நிரம்பியது. இருப்பினும், அவர்களுடைய ரசனை வேறு, என்னுடைய ரசனை வேறு. இணையர் அது மட்டுமின்றி தலைசிறந்த பெண் எழுத்தாளர்களான ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இவர்களது நெருங்கிய நண்பராகவும் தொடர்பிலிருந்தார். சூடாமணி இறந்தபின் அவரது பெயரில் நினைவு அறக்கட்டளை ஒன்றை நிறுவி சூடாமணியின் படைப்புகளை புதுப்பித்து வெளியிட்டு வருகிறார். பல தருணங்களில் இருவரிடையே இலக்கியப் போக்குகள் பற்றி உரையாடல்கள் நிகழ்வதுண்டு.
“தமிழ் சினிமாவில் பெண்கள்” என்ற பெயரில் அவர்களது ஆராய்ச்சிக் கட்டுரை நூலாக வெளிவந்துள்ளது. அது தவிர தமிழில் இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார்கள்.
புனைவிலக்கிய வாசிப்புக்கும் அ புனைவு இலக்கிய வாசிப்புக்கும் இடையிலான வேறுபாடுகளாகத் தாங்கள் உணர்ந்தவை…
அ புனைவு இலக்கிய வாசிப்புகள் சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தும். புனைவு இலக்கியங்கள் இலக்கிய ரசனையை மேம்படுத்தும். இரு இலக்கியங்களுமே ஒன்றையொன்று செழுமைப்படுத்துமேயொழிய, ஒன்றுக்கு மற்றொன்று விரோதியல்ல. அதேசமயத்தில் புனைவு இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய பார்வைகள் தமிழ் இலக்கியத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இருப்பினும், அதையொட்டி எழுந்துள்ள இலக்கிய சர்ச்சைகள் பல சமயத்தில் தனிப்பட்ட தாக்குதல்களில் விழுந்துள்ளது வருத்தத்தைத் தருகிறது.
மறுவாசிப்பு பற்றி எல்லோரும் பேசுகிறோம்..அந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
மறுவாசிப்பு இல்லாத இலக்கியங்கள் சரித்திரத்தில் காலூன்றாது. அதேசமயத்தில் மறுவாசிப்பு என்ற பெயரில் பழமை இலக்கியங்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுவதும், புதிய கோணத்தில் அவற்றை நிராகரிப்பதும் நடைபெறுகிறது. இன்குலாப் கவிதைகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் அவர் சோழமன்னர்கள் பற்றி தனது கவிதையில் குறிப்பிட்டதுதான். அதேசமயத்தில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தால் நீக்கப்பட்டபோது, அதைக் கண்டித்த என் போன்ற பலருக்கும் கண்டனங்கள் எழுந்தன. இவையெல்லாம் ஒரு சுகாதாரமான படைப்புகளுக்கு வித்தாகாது. முறையான விமர்சனங்கள் வரவேற்கின்ற அதேநேரத்தில் காலகட்டத்தைப் பொறுத்த இலக்கியங்களை ஒழித்துக்கட்டுவதனால் புதிய இலக்கியங்கள் வளர்ந்துவிடாது.
இன்றைய இந்திய, தமிழ்ச் சமூகம் பற்றிய தங்கள் வாசிப்பு என்ன? எப்படிப்பட்ட சமூகமாக இருந்து எப்படியான இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்?
வாசிப்பு பன்மடங்கு உயர்ந்திருந்தாலும் தீவிரமான வாசிப்புகள் குறைந்துவருகின்றன. அச்சு ஊடகங்கள் அர்த்தமற்றுப் போகும் நிலை உள்ளது. ஒலி, ஒளி படைப்புகள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. வலைத்தளங்களில் தகவல்களும், இலக்கியங்களும் எண்ணற்ற வகையில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், இரண்டு (அ) மூன்று நிமிடங்களைத் தாண்டி படிப்பதற்கான செய்திகளை மட்டும் வாசித்துவிட்டு ஆழமான வாசிப்புகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளும் போக்குதான் பெருகியுள்ளது. வலைத்தளங்களின் பதிவுகள் கழிப்பறை சுவர்களை விட மோசமாகி வருகின்றன. சகிப்புத் தன்மையற்ற வெறுப்பு அரசியலுக்கு மாற்றுவெளிகளாக வலைத்தளங்கள் மாறிவிட்டன. குழு மனப்பான்மையும், குரோதங்களும்தான் பெருகிவருகின்றன என்பது வேதனையளிக்கின்றது.
தங்கள் தீர்ப்புகளில் மிளிரும் அம்பேத்கரின் ஒளியைத் தரிசிக்கிறோம். எண்ணற்ற தொழிலாளருக்கான வழக்குகளில் மார்க்சிய ஒளியைத் தரிசிக்க முடிகிறது.வேறு சிந்தனைகளின்(பெரியார்,காந்தி, புத்தர், வள்ளுவர்.. போல) வெளிச்சம் பெற்ற தீர்ப்புகள் பற்றிக் கூற முடியுமா?
வழக்குகளுக்கான தீர்ப்புகளில் பதியும் எண்ண ஓட்டங்களுக்கு பல ஆளுமைகள் வார்த்த முத்துக்கள் பதிக்கும்போது, பலரது கருத்துகளைப் பதிவு செய்துள்ளேன். அவையெல்லாம் தீர்ப்பை ஒட்டியவை மற்றும் தீர்ப்புகளுக்கு ஒளியேற்றுபவை. இருப்பினும், பெரும்பாலான தீர்ப்புகளில் பொதுவுடமை கருத்துகளும், சமூக உணர்விற்கான அம்பேத்கரின் கருத்துகளும் பதிந்துள்ளேன். அதேசமயத்தில் தமிழகத்தின் சிந்தனையோட்டத்தில் தாக்கம் விளைவித்த வள்ளுவர், புத்தர், பெரியார் ஆகியோருடைய கருத்துகளும் பலமுறை பயன்பட்டுள்ளது.
விமானநிலைய அதிகார குழுமத்தில் வேலைபார்த்த கஸ்தூரி என்ற பெண் கதர் உடை அணிந்து வந்ததனால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். அவ்வழக்கில் காந்தியடிகள் கதர் அணிவதின் முக்கியத்துவத்தையும், அது இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வகித்த பங்கைப் பற்றியும் எடுத்துக்கூறி அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூர்வதும் கடமையாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நிர்வாகத்திற்கு அபராதம் விதித்ததுடன், கஸ்தூரி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தேன்.
பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தபோது, அத்தீர்ப்பில் பெரியாரின் கருத்துகளை பதிவு செய்தேன். அரசு ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தபின் அதற்கான செலவை ஈடுசெய்ய உத்திரவிட்ட வழக்கில் புத்தரின் தர்ம கூற்றுக்களை பதிவு செய்தேன்.

எழுத்தாளர் ஆர்.சூடாமணி அவர்களின் எழுத்துகள் மீதான தங்களின் பார்வை என்ன?
அவருடைய நினைவு அறக்கட்டளையை நிர்வகிப்பதில் தங்கள் குடும்பம் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னணியில் இதைக் கேட்கத்தோன்றியது.
தமிழ் எழுத்தாளர் சூடாமணி அவர்களின் நெருங்கிய நண்பராக எனது இணையர் பாரதி இருந்தார். அவர் சுய மோகி அல்ல. விளம்பரத்தை விரும்பாதவர். அவரது மறைவுக்குப் பின் அவரது சொத்துக்களை விற்று பொதுக்காரியங்களுக்குப் பயன்படுவதற்கு அவர் எழுதி வைத்த இறுதி உயிலுக்கு சட்டவடிவம் கொடுப்பதற்கு பாரதியை நியமித்திருந்தார்.
சூடாமணி தமிழக சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க சிலரில் ஒருவர் என்பதால் அவர் எழுத்துகளுக்கு மீட்டு உருவம் கொடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற அனுமதியுடன் அவரது பெயரில் அறக்கட்டளையொன்றை ஏற்படுத்தி அதன் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். சூடாமணியின் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை வெளியிட்டதுடன் அந்த அறக்கட்டளை சூடாமணியின் பெயரில் ஏழை மாணவர்கள் பயிலும் பள்ளியொன்றில் அரங்கம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. அடையாரில் உள்ள வாலின்டரி ஹெல்த் சென்டர் என்ற மருத்துவமனையில் அவர் பெயரில் அறுவை சிகிச்சை அரங்கு கட்டப்பட்டுள்ளது.
சூடாமணியின் சில கதைகளை நாடக வடிவத்தில் வெளியிடுவதற்கும் அவர் கதைகளை தொகுத்து “ஐந்து உணர்வுகள்” என்ற திரைப்படத்திற்கும் உதவிகள் செய்துள்ளது. சூடாமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளியிடுவதற்கு நூல் ஒன்றை எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
சூடாமணி அவர்கள் எழுதுவதை நிறுத்தி ஆண்டுகள் 25 ஆனபிறகும் இன்றும் சூடாமணியை பலரும் நினைவுகூர்வதற்கு அறக்கட்டளையின் முயற்சிகளே காரணம்.
ஒரு பள்ளியை நிர்வகிக்கும்/வழிகாட்டும் அனுபவத்தில் பள்ளி ஆசிரியர், மாணவர் மத்தியில் பொதுவாகப் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது?பள்ளி நூலகத்தைப் பயன்படுத்துகிறார்களா?அதில் தங்கள் முன்னெடுப்பு, தலையீடு உண்டா?
மயிலாப்பூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியொன்றில் தலைவராக நான்காண்டுகள் சேவை செய்தேன். அப்பொழுதுதான் தனியார் பள்ளிகளை நடத்துவதில் நடைமுறை சிக்கல்களையும், ஆசிரியருடைய செயல்பாடுகளையும் கண்காணிக்க நேர்ந்தது.
பள்ளி நூலகங்கள் பல கேவலமான நிலையில் உள்ளன. நூலகங்களைப் பள்ளிகளில் நிர்வகிப்பதற்கு தனியாக பணியிடம் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆசிரியர்களே முறை வைத்து செயல்படுவதனால் நூலகங்கள் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பள்ளி நூலகங்களில் இன்றும் பழமையான நூல்களே வாசிப்புக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் இலக்கியத்தில் பஞ்சம் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
நான் பதவி வகித்த பள்ளியில் நூலகம் இரண்டாவது மாடியில் இருந்தது. நூலக நேரத்தில் மாணவர்களை இட்டுச் சென்று திருப்பி அழைத்து வருவதையே பெரும்பாடாக ஆசிரியர்கள் நினைத்தனர். அவர்களுக்குத் தோன்றிய சில புத்தகங்களை மாணவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லிவிட்டு தங்கள் வேலையை பார்ப்பார்கள். மாணவர்களை நூல்கள் வைத்துள்ள அலமாரியைக்கூட சென்று பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.
இதையெல்லாம் மாற்றும் வகையில் பள்ளிக்கு சொந்த செலவிலும் நன்கொடை மூலமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை தருவித்து உதவினேன். இருப்பினும், மாணவர்களின் இன்றைய தேவை கதைசொல்லிகளே. ஒரு கதையை விவரித்து அனைவரையும் கேட்க வைப்பதில்தான் இனி வாசகத் திறனை வளர்க்க முடியும். வெள்ளிக்கிழமை தோறும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறநெறி வகுப்புகளில் தமிழகத்தின் பல இலக்கிய ஆளுமைகளை வரவழைத்து உரையாற்ற வைத்தேன். குழந்தை இலக்கியங்களை தருவித்து நூலகத்தை நிரப்பினோம். ஆளுமைகளின் உரைக்குப் பின் அவர்களிடம் கேள்விகள் எழுப்பும் மாணவர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கினேன்.
சென்னை ராயப்பேட்டையில் புத்தகக் காட்சி நடத்தியபோது அதில் மாணவர்களை வாரக்கடைசியில் நேரில் சென்று பார்த்து தங்களுக்கு பிடித்த நூல்களை வாங்கிக் கொள்ளவும், அதற்கான பணத்தை திங்கட்கிழமை காலை அவர்களிடம் திருப்பி வழங்கினேன். தேசிய சேவைப் பணியில் உள்ள மாணவர்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று ஒரு வார முகாம் நடத்தியதுடன், பவாவின் மானசி புத்தக நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினேன்.
எஸ்.ராவின் குழந்தை இலக்கியங்கள் ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. பாரதியின் குயில்கள் என்ற இசைப் பயிற்சி வகுப்புகளின் மூலம் மாணவர்களுக்கு பாரதியின் பாடல்களை கற்பித்தோம். திரைப்பட ரசனையை வளர்ப்பதற்கு திரைப்பட நாயகர்கள் பார்த்திபன், சூர்யா, கார்த்தி ஆகியோர் பள்ளியில் உரையாற்றியதுடன், சிறப்பான திரைப்படங்களை திரையரங்குகளுக்குக் கூட்டிச் சென்று சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தேன்.
தங்கள் வாசிப்புப் பழக்கம்-அதாவது பகலில் வாசிப்பது, இரவு நீண்ட நேரம் வாசிப்பது, அதிகாலையில் எழுந்து வாசிப்பது, நூலகங்களுக்குச் செல்வது என்பது போன்ற நடைமுறைகளை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம்?
வாசிப்பதற்கென்று நேரம், காலம் கிடையாது. சிறுவயதிலிருந்தே நூலகங்களுக்குச் செல்வது கட்டாயமாகிவிட்டது. அனேகமாக சென்னையிலிருக்கும் அனைத்து நூலகங்களிலும் தொடர்விஜயம் உண்டு. ஒரேநேரத்தில் பல நூல்களையும் படிக்கும் பழக்கம் உண்டாயிற்று. அலுவலக மேஜையில் ஒரு புத்தகம், வரவேற்பரையில் ஒரு புத்தகம், படுக்கை அறையில் ஒரு புத்தகம், பயணம் செல்லும்போது படிக்கும் புத்தகங்கள், இப்படி பலதரப்பட்ட புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது.
நூலகங்களை பாதுகாக்க வேண்டும், அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர் பருவத்திலிருந்தே உண்டு. நூலகத் துறைக்கு தகுதி பெற்ற இயக்குனரை நியமிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடுவதற்கு அம்மையார் உத்திரவிட்டபோது அதற்கு தடை விதிக்கப்பட்டு நூலகம் காப்பாற்றப்பட்டது. காலச்சுவடு இதழ் வாங்குவது நூலகங்களில் நிறுத்தப்பட்ட போது அதற்கு தடை விதித்தேன். தமிழ் எழுத்தாளர்களை இம்சைப்படுத்துவதை தடுக்கும் விதமாக தமிழருவி மணியன் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய உத்திரவிட்டபோது அதற்கு தடைவிதித்ததுடன்,“தமிழ் வாழ்க” என்று நியான் விளக்குகளில் அரசுக் கட்டிடங்களின் உச்சியில் மிளிர வைத்தால் போதாது, தமிழறிஞர்களைப் பாதுகாக்க அரசு முன்வரவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டேன்.
தமிழ்நாடுதான் உலகக் கலாச்சார தலைநகரம் என்று மியூசிக் அகாதெமி விழாவில் குறிப்பிட்ட தமிழக முதல்வரின் பேச்சை சுட்டிக்காட்டி அது உண்மையாக வேண்டுமென்றால் நாடகங்களை முன்தணிக்கை செய்யும் முறை ஒழிய வேண்டும். எனவே 1954ஆம் வருடத்திய தமிழ்நாடு நாடக நிகழ்த்து சட்டம் அரசியல் விரோதம் என்று அறிவித்தேன்.
பெரியார் எழுத்துகளுக்கு காப்புரிமை கோரிய திராவிடக் கழகத்தின் வழக்கை நிராகரித்ததுடன், சகோதர யுத்தத்தில் வழக்குக் கோப்புகளில் பெரியாரின் எழுத்துகள் மறைந்துவிடக் கூடாது என்றும் தீர்ப்பளித்தேன்.
செய்திகளை முன்கூட்டியே தடை செய்யும் வழக்கத்தை ஒழிக்கும் விதமாக ஆ.ராசா விகடன் குழுமத்திற்கு எதிராக முன்தடை கோரி போட்ட வழக்கை தள்ளுபடி செய்தேன். தன்னைப் பற்றி ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை தடை கோரிய நித்யானந்தாவின் வழக்கையும் ரத்து செய்தேன்.
தங்களின் நீண்ட வழக்குரைஞர், நீதிபதி வாழ்க்கையில் எத்தனையோ உழைக்கும் எளிய மக்களைச் சந்தித்திருப்பீர்கள். வாசிக்கிறவர்கள் எந்த அளவுக்கு அவர்களில் இருக்கிறார்கள்.அவர்களைப் புத்தகங்களை நோக்கி அழைத்துச் செல்ல அல்லது புத்தகங்களை அவர்களிடம் கொண்டு செல்ல என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றித் தங்கள் கருத்து?
கருத்தால் உழைப்பவர்களின் வாசிப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முயற்சிகள் தேவை. அவர்களுக்கு நேரமும் வசதியும் இருப்பினும், சொந்த காசில் புத்தகங்கள் வாங்குவதில்லை. கல்லூரி ஆசிரியர் ஊதிய நிர்ணயத்தில் அவர்களது பலதரப்பட்ட செய்திகளை தெரிந்து கொள்வது திறமையை வளர்க்கும் என்று கூறி பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்து அதற்கான சிறப்புப்படி ஊதியத்துடன் சேர்க்கப்பட்டிருப்பினும், 95% ஆசிரியர்கள் ஒரு நாளிதழ் கூட வாங்கிப் படிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது.
மறுபக்கம் கரத்தால் உழைப்பவர்களின் வேலை சுமைக்கிடையே அவர்களின் வாசிப்பை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் அவர்கள் வேலை பகுதிகளிலும் வாழ்விடங்களிலும் தொழிற்சங்க அலுவலகங்களிலும் நூலகங்கள் ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர் குழுக்களில் சுற்றுக்கு விடுவதன் மூலம் சுழல் வாசகர் வட்டங்களை உருவாக்க வேண்டும்.
நாங்கள் மாணவர்களாக இருக்கும்போது தொழிற்சங்க சேவைகளை செய்து வந்தோம். ஊதிய தேதியன்று அவர்களது அலுவலகங்கள் முன்னால் சங்கத்தின் சந்தா வசூலிக்கும் நேரத்தில் புத்தக விற்பனையையும் செய்வோம். அதுபோன்ற முயற்சிகளில் தற்பொழுது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கலை இரவுகளைக் காண கூடும் கூட்டத்தினரை அடுத்த கட்டமாக வாசிப்பு பயிற்சிக்கு உட்படுத்த வேண்டும்.
புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தங்கள் மனப்பதிவுகள்…
1970களின் இறுதியில் அண்ணாசாலையிலுள்ள அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் துவங்கிய புத்தகக் கண்காட்சியிலிருந்து கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சி வரை அனைத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. கண்காட்சியில் வைக்கப்படும் புத்தகங்கள், கடைகளின் எண்ணிக்கை அசுர வளர்ச்சி அடைந்தாலும், திருவிழாக்களுக்கு நடுவே இரு வாரங்களுக்கு மட்டுமே நடக்கும் கண்காட்சியில் பல அசௌகரியங்களும் உண்டு. நின்று நிதானமாக புத்தகங்களைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்து முடிவு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருப்பதைத் தவிர்க்க அரசு முன்வர வேண்டும். இதற்கு சரியான முடிவு நகரத்தில் ஒரு நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உருவாக்க முன்வருவதே