நேர்காணல்: முனைவர். ச. சௌந்தரராஜப்பெருமாள்
சந்திப்பு: ஆயிஷா இரா. நடராசன்
முனைவர் ச.சௌந்தரராஜப்பெருமாள் வானியல் விஞ்ஞானி, சென்னை (பெரியார்) தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர், தமிழ் அறிவியலின் புத்தெழுச்சி தரும் புதியகுரல் செயல்வீரர். பழனியில் ஒரு தமிழாசிரியையின் மகன் வைனு பாப்பு வானியல் ஆய்வுக் கூடத்தில் நடந்த தன் எக்ஸ் – கதிர் நிறமாலை ஆய்வு முதல் – சமூகத்தை அறிவியல் மயமாக்குவது குறித்த தனது செயல்திட்டம் வரை இந்த நேர்காணலில் பலவற்றை ‘புத்தகம் பேசுது’ வாசகர்களிடம் பகிர்கிறார்.
சந்திப்பு:- ஆயிஷா இரா. நடராசன்.
கே: தங்களது இளம் பருவக் கல்லூரி நாட்கள் பற்றியும் பெற்றோர்கள் குறித்தும் சொல்லுங்கள்?
ப: வணக்கம். நான் பழனியைச் சேர்ந்தவன். பழனி நகரில் பள்ளி கல்லூரிப் படிப்புகளை மேற்கொண்டேன். தந்தை தெய்வத்திரு எஸ்.எல்.சண்முகம் அவர்கள். அவர் மருந்தாளுனராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நான் கல்லூரி முதலாமாண்டு படித்தபோதே அவர் காலமானது எங்கள் வாழ்வில் பெருந்துயரத்தைத் தந்தது. என் தாயார் திருமதி காளியம்மாள் சண்முகம். பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இன்றும் எங்கள் வழிகாட்டி அவர்தான். நான் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் முதுகலை இயற்பியல் பயின்ற பின், தாயார் அறிவுரைப்படி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் பட்டம் பெற்றேன்.

பின்… வானியல் எப்படி உங்களை ஈர்த்தது? வானியல் ஆய்வு.. முனைவர் பட்டம் நோக்கி எப்படி சென்றீர்கள்?
பள்ளிப்பருவத்திலேயே வானியல் என்னைக் கவர்ந்து விட்டது. நுலகத்தில் படித்தது எல்லாம் வானியல் நூல்கள்தான். வானிலுள்ள விண்மீன்களை – நட்சத்திர மண்டலங்களை அடையாளம் கண்டு அவற்றிலுள்ள ஒளிமிகுந்த விண்மீன்களின் பெயர்களைக் கண்டறிந்து நினைவில் கொள்ளும் பயிற்சியை சிறுவயதிலேயே மேற்கொண்டேன். கல்லூரிக்கல்வி நிறைவேறிய ஆண்டில் வைனு பாப்பு வானாராய்ச்சி நிலையத்தில் 10 நாட்கள் நடந்த குளிர்கால வானவியல் பயிற்சி வகுப்பில் பிடிவாதமாகக் கலந்து கொண்டேன். அங்கே வானியலில் நான் காட்டிய ஆர்வம், அங்கு பணியிலிருந்த வானியல் அறிஞர் பேராசிரியர் காஜல்குமாரை ஈர்த்தது. இதன் மூலம் அங்கே ஆய்வு மாணவராக இணையும் வாய்ப்பு கிடைத்தது.
இன்று நம் மண்ணின் முன்னணி வானியல் அறிஞர்களில் ஒருவர் நீங்கள். உங்கள் ஆய்வு… கண்டுபிடிப்பு குறித்து சொல்லுங்கள்…
விண்ணில் தொலைதூரத்தில் உள்ள, நமது பேரண்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ஆற்றல்மிகு குவாசர்களை எக்ஸ் கதிர் நிறமாலை பகுப்பு முறையில் நான் ஆய்வு செய்தேன். அதீத அயினியாக்கம் பெற்ற இரும்பின் (Fe) எக்ஸ் கதிர் நிறமாலை மிக அதிக அளவில் அகன்று காணப்பட்டது வியப்பளித்தது. ஒரு நிறமாலை வரி அகலமாகக் காணப்படுகிறது எனில் அதை வெளிப்படுத்தும் குவாசர்களில் உள்ள துகள்கள் அதிவேகமாக சுழல்வதாக அர்த்தம். இந்த நிறமாலை வரியின் அகலத்தைக் கொண்டு நான் ஆய்வு செய்த குவாசர்களின் மையத்தில் உள்ள வாயுத்திரள் ‘ஒளியின் வேகத்தில் ஒரு பகுதி’ என்ற அளவுக்கு அதிவேகமாய் சுழல்வதாக கணக்கிட்டேன்.
இத்தனை விரைவாகச் சுழலும் துகள்திறன் சிதறுண்டு போகாமல் இருக்க வேண்டுமாயின், ஈர்ப்பு விசையால் அதைக் கட்டிவைத்திருக்கும் சுருங்கிய மையப் பகுதியின் நிறை சூரியனின் நிறையைப்போல மில்லியல் மடங்கு இருக்க வேண்டும். எங்களது இந்த ஆய்வின் மூலம் மீப்பெரும் கருத்துளைகள் இருப்பதற்கான சான்றுகளை கண்டறிந்து அவற்றை உலகப் புகழ்பெற்ற ஆய்வேடுகளைில் வெளியிட்டோம்.
எக்ஸ்கதிர் ஒளிர்திறன் ஆய்வின்மூலம் பேரண்டத்திலேயே அதிக ஒளிர்திறன் கொண்ட விண்பொருளாக ஒரு குவாசர் திகழ்வதைக் கணித்தறிந்து உலகிற்குத் தெரிவித்தோம். நான் ஆய்வு செய்த காலத்தில், ஷு மேக்கர் லெவி எனும் வால் நட்சத்திரம் துணைக் கோள்களாகச் சிதறி, வியாழன் கோளில் மோதியது. அப்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய வைனு பாப்பு தொலைநோக்கி கொண்டு அந்த நிகழ்வைப் படமெடுத்து உலகிற்கு வழங்கினோம்.
சென்னை கோளரங்கத்திற்கு எப்போது எப்படி வந்தீர்கள்…
சந்தன மரங்கள் நிரம்பிய இருண்ட வனப்பகுதியான ஜவ்வாது மலைத் தொடரிலுள்ள வைனு பாப்பு வானாராய்ச்சி மையத்தில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தேன். இது மிகுந்த மன நிறைவையும் வானியல் குறித்த பல்வகை புரிதல்களையும் வழங்கியது. பிறகு 1999ல் இங்கே பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் கோளரங்கத் துணை இயக்குநராகப் பணியில் அமர்த்தப்பட்டேன்.
நீங்கள் இங்கு வந்தபிறகு அறிமுகமான புதிய அம்சங்கள் குறித்து சொல்லுங்கள். இந்த கோளரங்கம் 1988ல் தொடங்கப்பட்டது அல்லவா?
பல புதிய அம்சங்களை இணைத்துள்ளோம் குறிப்பாக சிலவற்றைக் கூறலாம். சில ஆண்டுகள் முன்புவரைகூட கோளரங்குகளில் காட்சிகளின்போது, இரவு வானிலுள்ள விண்மீன்களின் அமைப்பு காட்டப்படும்போதும் வான்பொருட்கள் மற்றும் கோள்களின் இயல்புகளை விவரிக்கும்போதும், அந்தந்த வான்பொருட்களின் படங்கள் அசைவற்ற நிலைப்படங்களாக ஸ்லைடு ப்ரொஜக்டர் வாயிலாக காட்டப்பட்டு வந்தது. அதை மாற்றி அமைத்து சுவாரசியத்தை நிஜவடிவமாக்கிடத் திட்டமிட்டேன் வானவியலில் வான்கோளத்தை பகுதிகளாகப் பிரித்து வான்பொருட்களின் இடத்தைக் குறிப்பிட ஒருங்கிணைப்பு முறைகள் உள்ளன வானியலில் ஒத்திசைவு – கணக்கீடுகள் உள்ளன.
உயர்திசைக் கோணங்கள் (Attitude Azimth) வகை, பூமத்தியரேகை – ஒத்திசைவுகள் (equatorical coordinate) முறை போன்றவற்றை வகுப்பறையில் மாணவர்களுக்கு விளக்குவது கடினம். கோளரங்கத்தின் அறைக்கோள வான் திரையில் விண்மீன்கள், கோள்களின் நகர்வுகள், சூரியன் மற்றும் நிலவின் இடமாற்றத் தோற்றங்கள் போன்றவற்றை உருவாக்கிக் காட்டி அவற்றுடன் நாம் வானியல் ஒத்திசைவு – கணக்கீட்டு முறைகளை இணைத்து விளக்குவது எளிது. இதுபோன்ற வானியியல் பயிற்சிக்காகத்தான் கோளரங்கம் என்கிற ஒன்றே உருவாக்கப்பட்டது.
1988ல் முதலில் உருவான கருவி எத்தகையது? கோளரங்கு வெறும் பொழுது போக்கு விஷயமாகப் பார்க்கப்படுகிறதே?
அதற்கு Go to GM II கோளரங்கு கருவி என்று பெயர். 1988இல் இருந்து செயல்பாட்டில் இருந்தது. மேற்சொன்ன வகுப்புகள் நடத்திட இந்த பழைய கோளரங்கக் கருவி பயன்பட்டது. பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. கோளரங்கு என்பது சினிமா மாதிரி என்று நினைத்து வருபவர்களும் உண்டு. உண்மையில் கோளரங்கு என்பது ஒருவகை கற்றல் நடவடிக்கை. உதாரணமாக, இரவு வானின் விண்மீன் மண்டலங்களைக் கொண்டு திசையறியலாம்.
கடல்சார் கல்லூரி மாணவர்கள் இதற்காகக் கோளரங்கம் வந்திருந்து விண்மீன்களைக் கொண்டு கடலில் திசை அறியும் அறிவியல் முறையைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பழைய அந்தக் கருவியின் இயக்கம் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், மாற்று உதிரிபாகங்கள் கிடைக்காததாலும் செயல்பாட்டை மெல்ல இழந்தது. இந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் எண்ணிலக்க கோளரங்கு கருவிகள் (Digital Planetorium) பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. முந்தைய அமைப்பு போலல்லாமல் இந்த முறையில் 15 மீட்டர் விட்டம் கொண்ட கோளரங்கின் “வானக்கோள வடிவம்” முழுமைக்கும் அதிதுல்லியமாக இயங்கு படங்களைக் காட்ட முடிகிறது. இந்த புதிய நவீன தொழில்நுட்ப முறையில் பார்வையாளர்கள் விண்ணில் பறப்பது போன்ற உள்ளார்ந்த உணர்வைப் பெறுகிறார்கள்.
2013ஆம் வருடம் உங்களது முயற்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொழில்நுட்பம் பற்றிச் சொல்லுங்கள்…
நான் அதிக ஆற்றல் கொண்ட கணினிமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஒளிப்படக் கருவிகளை 2013ல் கொண்டு வர முடிந்தது. இந்த புதிய ரக மின் – எண்ணிலக்க கோளரங்கம் 4K ரெஷலூஷன் கொண்ட 5 ஒளிப்படக்கருவிகளைக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதலில் லேசர் பார்ஸ்ஃபோர் ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தியது. நம் சென்னை பி.எம்.பிர்லா கோளரங்கம்தான் புதிய எண்ணிலக்க கோளரங்கம் – முன்னர் பயன்படுத்தப்பட்ட இயந்திரவியல் கருவியின் எல்லாச் செயல்பாடுகளையும் கொண்டது. அதுதவிர கணினியாக்கத்திற்குப் பிறகு இந்த நவீன கோளரங்கால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தேதியைக் கொடுத்தால் அன்றைய தினத்தின் இரவு வானத்தை அப்படியே நொடிகளில் காட்ட முடியும்.
அதேபோல உலகின் எந்த இடத்தின் பெயரையும் கூறி அங்கே இப்போது வானம் இருக்கும் அமைப்பை தத்ரூபமாகக் காட்டவும் முடியும். சூரியன், கோள்கள் மற்றும் தர வான்பொருட்களின் பரப்பு உட்புறம்… மேல்பரப்பு என நாம் பயணம் செய்வது போலவே மெய்நிகர் யதார்த்தப் படங்கள் காண்பிப்பதும் வானவியல் ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கிறது. பழைய அந்த இயந்திரவியல் கருவி டங்க்ஸ்டன் இழை பொருத்தப்பட்ட அமைப்பு. வெப்பம் மிக அதிகம் வெளிப்படும். இப்போது உள்ளது எல்.இ.டி. (LED)யால் ஆனது. குளிர்ச்சியே அதிகம், இது சிறிது. ஆனால் பழைய கருவியை விட ஆற்றல் மிகக் கொண்டதாகவும். பயன்படுத்த எளிதான ஒன்றாகவும், அதிக நவீன அம்சங்கள் கொண்டதாகவும் உள்ளது.
கோளரங்க நிகழ்ச்சிகள் எந்த மொழியில் உள்ளன. மையத்தின் பிற அம்சங்கள் என்ன?
மூன்று காட்சிகள் தமிழில்தான் நடக்கும். பார்வையாளர்களின் வேண்டுகோள் வந்தால் அரங்கம் முழுதும் ஏற்கப்பட்டால் ஆங்கிலம் உண்டு. நமது பழைய கருவியை கோளரங்க நுழைவாயிலில் காட்சிக்கு வைத்திருக்கிறோம். இம் மையத்தின் புதிய அம்சம் பிரமாண்டமாக அமைந்துள்ள நம் புவிக்கோளத்தின் அறிவியல் (Science of Earth Sphere) எனும் கருவி. வானவியல், புவியியல் உட்பட பல அறிவியல் கருத்துகளை விளக்கிட ஆறு அடி விட்டமுள்ள பிரமாண்டக் கோளத்தில், கணினி மற்றும் ஒளிப்படக் கருவிகளையும் கொண்டு அமைந்தது.
அது தேசிய கடல்வளியியல் மேலாண்மை நிறுவனம் (NOAA)இதை உருவாக்கி உள்ளது. பருவ நிலை மாற்றம், இயற்கைச் சீற்றம் என யாவற்றின் அறிவியலை அது விளக்கும் 400 சதுரமீட்டர் அறையில் அமைந்த நவீன அறிவியல் அரங்கம் அது. இவைதவிர அணுக்கரு ஆற்றல் காட்சிகள் இந்திய பாதுகாப்பு சார்ந்த ஆய்வுக்கூடக் காட்சி. ‘விண்வெளியில் இந்தியா’ எனும் ஒரு காட்சிக்கூடம், போக்குவரத்து அறிவியல், வேடிக்கை ஆடியியல் காட்சிக்கூடம், இவையும் உண்டு. சீனிவாச ராமானுஜனின் கணிதப் பங்களிப்புகளுக்காகவே தனி காட்சிக்கூடம், அறிவியல் பூங்கா, பரிணாம வளர்ச்சிப் பூங்கா என அறிவியல் கலைக் களஞ்சியமாகவே பெரியார் வளாகத்தைப் பேணுகிறோம்.
சமூகத்தை அறிவியல்மயமாக்கி பழமைவாதம், மூட நம்பிக்கையில் இருந்து மீட்டிட நீங்கள் கூறும் வழி என்ன?
அதற்கு நாம் இளைய தலைமுறையிடம்தான் செல்லவேண்டும். எதிர்கால இந்தியா அறிவியல்பூர்வமான நாடாகிட, தொழில்நுட்ப வல்லாண்மை பெற திறன்வாய்ந்த மாணவர்களை அறிவியலை நோக்கி இழுக்கவேண்டும். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய புத்தாக்க ஆய்வுநிறுவனம் இணைந்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை உதவியுடன் 2009ஆம் ஆண்டு முதல் மானக் புத்தாக்க உதவித்திட்டத்தை (இன்ஸ்ஃபையர்) செயல்படுத்துகிறோம்.
அறிவியல் ஆய்வுகளில் மாணவர்களை நேரடியாக ஈடுபட வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்கான நிதி உதவியை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை செய்கிறது. அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரிகளை செய்யவும் வடிவமைக்கவும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 10,000/- தருகிறோம். மாவட்டம் தோறும் இதைச் செய்கிறோம். பல கிராமப்புற மாணவர்களின் அற்புத அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். இதைத்தவிர சகுரா மாணவர் பரிமாற்றத் திட்டம் என்று ஜப்பானிய அரசோடு இணைந்து செயலாற்றும் ஒரு திட்டமும் உள்ளது.
நாங்கள் தமிழக மக்களோடு அறிவியல் கருத்துகளைப் பரவலாக்கிட அறிவியல் பலகை எனும் அமைப்பையும் தொடங்கி செயலாற்றி வருகிறோம். எனவே மாணவர்களை அறிவியல்துறை சார்ந்து செயல்பட ஊக்குவித்தலே சமூக மாற்றத்திற்கான வழி என்றே நான் கருதுகிறேன்.