நிகழ் அய்க்கண்
இந்நூலானது, கேரளாவின் முதல்வரும், தோழருமான பினராயி விஜயன் அவர்கள் 2016 -2017 களில் பொதுமேடைகளில் ஆற்றிய உரை மற்றும் எழுதிய கட்டுரையுமாகச்சேர்த்து, பத்து தலைப்புக்களின் கீழ் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பேசிய கருத்துகளைச் சுருக்கமாக்கி கீழே தரப்பட்டுள்ளது.

இந்நூலுக்குப் பதிப்புரை வழங்கியுள்ள பேராசிரியர். விஜய் பிரசாத் மற்றும் சுதன்வா தேஷ்பாண்டே கூறும்போது, “ பா.ஜ.க.வும்,ஆர்.எஸ்.எஸ்சும் சமூகத்தில் வகுப்புவாதப் பிரச்சினைகளைக் கிளறிவிட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெற முயல்கின்றன. அதற்கு எதிர்வினையாக நாம், ஆர்.எஸ்.எஸ்.சுக்கெதிராக அனைத்துப் பகுதியிலிருந்தும் மக்களைத் திரட்ட வேண்டும்” என்கின்றனர்.
தில்லி பத்திரிக்கையாளர் சங்கமும், தேசியப் பத்திரிக்கையாளர் சங்கமும் இணைந்து 2017 அக்டோபர் 15 ல் தில்லியில் நடத்திய கருத்தரங்கின் துவக்க உரையில், கேரள மாநிலம்தான், மதச்சார்பின்மை, மக்களாட்சி, சோசலிசம் ஆகிய மாண்புகளை உயர்த்திப்பிடிக்கிறது எனவும், வகுப்புவாதமோ, முதலாளித்துவமோ, பணமதிப்பிழப்போ, புதிய தாராளமயமோ எதுவாக இருந்தாலும் தனது கண்டனத்தை முதலில் பதிவு செய்யும் மாநிலமாக கேரளா இருந்து வருகிறதென்றும், பணமதிப்பிழப்பு நீக்கமானது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே நிறுத்தியது மட்டுமல்ல; நூறு உயிர்களையும் பலிவாங்கியது.
‘மாட்டிறைச்சிக்குத் தடை’ எனும்போது அது எவ்வாறு நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தைப்பாதிக்கிறது எனவும், கேரளம்தான் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் விளைநிலம் என்பதுபோன்ற பா.ஜ.க வினரின் பொறுப்பற்ற பேச்சினை மறுத்து, வகுப்புவாத ஒற்றுமை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறதென்கிறார். விடுதலைப்போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ் மக்கள் எழுச்சி எதிலும் பங்காற்றவோ, ஒத்துழைக்கவோயில்லை என்பதையும், அனைத்துச் சீர்திருத்த இயக்கங்களுக்கும் எதிராகச் செயல்பட்டதையும் நினைவுகூர்கிறார்.
2017 பிப்ரவரி 25 ல் மங்களூரில் நடந்த வகுப்புவாத ஒற்றுமைக்காண பேரணியில் உரையாற்றியபோது, ஆர்.எஸ்.எஸ், நாட்டை ஒன்றாகப் பார்க்கவோ, மக்களை ஒன்றுபடுத்தவோ ஒருபோதும் தயாராக இல்லை. அவர்கள் வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த முயலுகின்றனர். இத்தாலிய பாசிஸ்ட் முசோலினியின் ஸ்தாபனக் கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ், அப்படியே தழுவி ஏற்றுக்கொண்டது.
ஹிட்லரின் கொள்கைகளும், ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளும் ஒன்றே. இந்தியாவில், சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் இவர்கள் உள்நாட்டு எதிரிகளாகவும், ஹிட்லரின் வழியில் நின்று, கம்யூனிஸ்டுகளையும் கூட எதிரிகளாகச் சித்தரிப்பதையும் விளக்குகிறார்.
வகுப்புவாத வன்முறையைத் தூண்டிவிட இவர்கள் கடைபிடித்துவரும் முறைகளைக் கவனிக்கும்போது, கிறித்தவர்கள் இந்நாட்டின் விசுவாசமான குடிமக்களல்ல என்பது; சிறுபான்மையின மக்கள்தொகை அதிகரிக்கிறதாகக் கூறுவது; அரசு நிர்வாகத்துறைக்குள் ஊடுருவி வகுப்புவாத உணர்வைத் தூண்டிவிடுவது; பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுப்பது; எந்தவொரு அற்பச் சம்பவத்திற்கும் வகுப்புவாதச்சாயம் பூசுவதாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறார்.
2016 நவம்பர் 16 ல் ’கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரம்’ கண்காட்சித் தொடக்க விழாவில் பேசும்போது, 1957 களிலிருந்தே கேரளத்தில் ஜனநாய நீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசினை சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டிக் கவிழ்ப்பதற்கான முயற்சி நடந்தே வருகிறது. 2001 லிருந்து 2010 வரையிலான காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, கொலைகள் விகிதத்தில் கேரளத்தைவிட குஜராத்துதான் முதலிடத்திலுள்ளது. கேரளத்தில் நடக்கும் வன்முறைகுறித்துப் பேசுபவர்கள் குஜராத் பற்றிப் பேச மறுக்கின்றனர்.

ஓராண்டிற்கு முன்பு, டெக்கான் கிரானிக்கல் இதழானது, கேரளத்தில் கடந்த ஐந்தாண்டுகளில், நடந்த அரசியல் படுகொலைகளில், கொல்லப்பட்டவர்களில் 60 சதவிகிதத்தினர் இடது முன்னணியினர் என்கிறது.’, முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் மூவரும் இந்துத்துவாவிற்கு விரோத எண்ணம் கொண்டவர்கள்’ என்கிறார் கோவால்கர். இவர்களினது நோக்கமே, வகுப்புவாத ஆவேசத்தை மக்களிடையே திணிப்பதன் மூலம் ஒரு பாசிச மேலாதிக்கத்தை உருவாக்குவது, சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைப்பதன் மூலம் அதைச்செய்வது ; பிறகு ஒரு மத அடிப்படையிலான நாடாக, சிறுபான்மையினரை, விளிம்புநிலை மக்களை, வறியவர்களை ஒழித்துக்கட்டும் அமைப்பாக்குவது என்பதுதான் என்கிறார்.
2017 செப்டம்பர் 6 ல் கோழிக்கோடில் நடந்த ‘வகுப்புவாத பாசிசத்திற்கெதிரான தேசியக் கருத்தரங்கத்தில் பேசும்போது, இந்திய அரசியலமைப்புச்சட்டம் முன்வைக்கும் அடிப்படைப் பார்வைகளில் மதச்சார்பின்மை, பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சோசலிசம் ஆகியவை மிகுந்த முக்கியத்துவமுடையவை. ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையுடன் இணைந்து கூட்டாட்சி, சோசலிசம் ஆகிய இரு சிந்தனைகள் நம் நாட்டின் அடிப்படை அம்சங்களாகின்றன.
பாசிசத்திலிருந்து பெறப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் தேசபக்தி பற்றிய கருத்தானது, காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்ட வரலாற்றிலிருந்து பெற்ற கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி பற்றிய கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாகும்.
1950 களிலிருந்தே ஜனசங்கம் பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்படுவதற்கு எதிராக இருந்துவந்துள்ளது. பொருளாதாரக் கொள்கையைப் பொருத்தவரை சுதந்திரச்சந்தைக்கு ஆதரவாக நிற்பதிலிருந்தே அவர்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. வகுப்புவாதக் குவிப்பை வேகப்படுத்தும் அதேநேரத்தில், கட்டுப்பாடற்ற வகையில் சந்தையையும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். இந்த நிலையை அகற்றுவது விவசாயி – தொழிலாளி வர்க்க அரசியலின் பொறுப்பாகும் என்கிறார்.
2017 செப்டம்பர் 21 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் உரையாற்றியபோது, மாநிலங்கள் மொழிகளின் வழியில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டதானது, தனிப்பட்ட அடையாளங்களுடன் மாநிலங்கள் உருவாவதற்கு வழிவகுத்தது. அடுத்து, மாநில அளவிலான கட்சிகள் ஆட்சிக்கு வந்தது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஏற்பட்ட இடதுசாரி அரசுகளும், கூட்டாட்சி குணாம்சங்களுடன் கூடிய மத்திய – மாநில உறவுகளை மீட்டுருவாக்க வேண்டிய தேவையை உணர்த்தியது என்கிறார்.
புதிய தாராளமயக்கொள்கைகளை ஏற்றுக்கொண்டதற்குப்பிறகு கட்டுப்பாடுகள் தளர்ந்துபோயுள்ளது மட்டுமின்றி, முதலாளித்துவப்போட்டியால், சுதந்திரச்சந்தைப்பொருளாதாரம் உருவாகியுள்ளது. இப்புதிய தாராளமயக்கொள்கைகள் இன்றைய கூட்டாட்சி முறையையே பலவீனப்படுத்துகின்றன என்கிறார்.
2016 டிசம்பர் 10ல் போபால் தசரா மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 11 வது தேசிய மாநாட்டில் பேசும்போது, நமது நாட்டில் நிலபிரபுத்துவ விழுமியங்களின் மிச்சச்சொச்சங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. முதலாளித்துவதுடன் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் சேர்ந்துகொண்டு பெண்களை பொதுவெளியில் இரண்டாம் பங்கை வகிக்கும்படியாகச் செய்துவிட்டிருக்கின்றது.
வேலைவாய்ப்பு – கல்வி – கூலி- பாதுகாப்பு ஆகியவற்றில் நிலவும் பாகுபாடுகள் பெண்களின் இன்றைய நிலையை வெளிப்படுவதாக இருக்கின்றன. மோடி அரசின்கீழ், புதிய தாராளமய மற்றும் தந்தைவழி ஆண்குலத்தலைமையின் ஆபத்தான பிணைவில் பெண்களுக்கு எதிரான மிகக் கசப்பான பாகுபாடு நிலவுகிறது என்கிறார்.
2017 மார்ச் 19 அன்று, 150 நாட்களில் 4000 கி.மீ, தூரம் மகாஜன யாத்திரை மேற்கொண்டு, ஹைதராபாத் நகரில் முடிவுற்ற நிகழ்வில் பேசும்போது, மகாஜன யாத்திரையானது உண்மையான நோக்கங்களின் பக்கம் நின்று மாநிலத்தின் மாற்றுக்கொள்கைகளுக்கான களத்தை வழங்குமென்பதிலும், சமூகநீதிக்கான செயல்பாட்டிற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒரு மாற்றுத்திட்டத்தை விவாதிக்கும் என நம்புவதாகக் கூறினார்.
மேலும், இம்மாநிலத்தில் 93 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடி, சிறுபான்மையினர்கள் இருக்கின்றனர். இம்மக்களுக்கு துணைத்திட்டங்கள் மூலம் நிதிஒதுக்கீடு செய்வதுதான் வளர்ச்சிக்கு வழிவகுக்குமென்றும், சமூகநீதியானது, பொருளாதார, சமூக, கலாச்சார, அரசியல், சமத்துவத்திலிருந்துதான் கிடைக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன் என்கிறார்.
2017 ஜூன் 19 அன்று ஆந்திரப்பிரதேசம் கர்நூலில் நடைபெற்ற அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்க மாநாட்டில் பேசும்போது, இந்த நாட்டில் விவசாயத்தொழிலாளர்களும், விவசாயிகளும்தான் தொழிலாளர் இயக்கங்களின் முதுகெலும்பாக விளங்குபவர்கள். நாட்டின் 50 சதவிகித மக்கள் தமது வாழ்க்கைக்கு விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
இப்படியான ஒரு தேசத்தில், புதிய தாராளமயச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு, பிரதானமாக பயிர்த்தொழில் செய்யும் பதினைந்து மில்லியன் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர். 1995 லிருந்து இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் விவசாயிகளுக்கே இந்நிலையென்றால், விவசாயத்தொழிலாளர்களின் நிலையினை சொல்லவேண்டியதில்லை. என்கிறார்.
2017 ஜூலை 29 அன்று ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ‘ஆதிவாசி அதிகார மஞ்ச்சில்’ உரையாற்றும்போது, வரலாற்று நீதியாக, நமது பழங்குடிச் சமூகங்கள் நமது காலனியாதிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திற்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் புகழ்மிக்க பங்கை வகித்திருக்கின்றனர்.
காலனியாதிக்கக் காலத்திலிருந்து இந்தியாவிலுள்ள பழங்குடியினர் மீதான சுரண்டல் என்பது, நிலத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் ,வன ஆதாரங்களிலிருந்தும் அவர்களது வசிப்பிடங்களிலிருந்தும் வன்முறை மூலமாகவும், நிர்பந்தம் மூலமாகவும் அவர்களை அந்நியப்படுத்துதல் என்பதுதான் முக்கியமான குணாம்சமாக உள்ளது. புதிய தாராளமயக் கொள்கைகளும் பழங்குடியினரின் வாழ்க்கை முறைகளை பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன. இம்மக்களின் உயிர்உரிமைகள், நிலம், வாழ்வாதார, கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பது முக்கியமான பணியாகும் என்கிறார்.
நீண்டகால காலனியாதிக்க எதிர்ப்புப்போராட்டம் மற்றும் மறுமலர்ச்சிப் பாரம்பரியத்தின் பின்னணியில் மலபாரிலுள்ள முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்கு இடதுசாரி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதே இந்தக் கட்டுரையின் முயற்சி. அரபிக்கடலில் கேரளம் பெற்றிருக்கும் சாதகமான இடமானது, அராபியாவுடன் வர்த்தகம் உள்ளிட்ட நீண்டநாள் உறவுக்கு வழிவகுத்தது. 1498 ல் போர்த்துக்கீசியர்கள் கேரளத்திற்கு வந்துசேர்ந்து அங்கும், அரபிக்கடலிலும், வர்த்தகத்திற்காக, அராபியர்களுடன் போட்டியிடத் துவங்கினர்.
இந்திய முஸ்லிம்கள், தொடக்ககாலத்தில், ஒடுக்கப்பட்ட சமூகப் பகுதிகளிலிருந்து மதம் மாறியவரே ஆவர். அவர்கள் நிலப்பிரபுத்துவ முறையின் காலடியில் வாழ்ந்து வந்தனர். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு இங்கிருந்துதான் எழுந்தது. அவர்களது எழுச்சி ‘மலாபர் மாப்பிளா கலகம்’ என்று அறியப்படுகின்றது. மாப்பிளா கலகம் அடிப்படையில் மதம்சார்ந்ததோ, உணவு சார்ந்ததோ அல்ல. மாறாக, விவசாயம் சார்ந்ததாகும். 1957ல் கேரளாவில் அமைந்த இடதுசாரி அரசுதான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக முஸ்லிம் ஒப்பந்தக்காரர்கள் நிலச்சொத்துரிமையையும் பெற்றனர்.
இந்தியாவில் வேறு எந்தப் பகுதி இஸ்லாமியச் சமூகத்தினரைவிட கேரள முஸ்லிம்கள் மிகவும் முன்னேறியுள்ளனர். கேரளத்தின் மதச்சார்பற்ற சமூகத்தை வலுப்படுத்த இடதுசாரி இயக்கம் வலுவாக இருக்க வேண்டும். சிறுபான்மைப்பகுதியினரின் பாதுகாப்புக்கும் இடதுசாரிகளின் வளர்ச்சி அவசியம் என்பதை பகுத்தறியவும் வேண்டும். என்கிறார்.