நேர்காணல்: அய்ஜாஸ் அகமது
சந்திப்பு: விஜய் பிரசாத்
அய்ஜாஸ் அகமதின் எழுத்துகளைப் பற்றிச் சிந்திக்காமல் என்னால் சிந்திக்க முடியாது” என்று கூறும் பேரா.விஜய் பிரசாத், “2019ஆம் ஆண்டில், சுதன்வா தேஷ்பாண்டே, மொலாயாஸ்ரீ ஹஷ்மி ஆகியோரோடு நானும் அய்ஜாஸ் அகமதுவுடன் சில நாட்கள் கழிக்க பயணம் செய்தோம். அவரது வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றி இந்த நீண்ட நேர்காணலை அந்த நாட்களில் நடத்தி, பல ஆண்டுகளாக அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர் தனது நேரத்தையும் ஞானத்தையும் தாராள மனதுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த காலத்தைப் பற்றிய தனது கருத்துகளையும், வரலாற்றை முன்னோக்கிச் செலுத்தும் முரண்பாடுகளையும் விளக்கி நம் மனதையும் இதயத்தையும் நிரப்பினார்.” என்று பதிவு செய்துள்ளார். அவர்கள் நடத்திய நீண்ட கலந்துரையாடல் அய்ஜாஸ் அகமத் அவர்களின் இளம் பருவம், பாகிஸ்தானில், அமெரிக்காவில், பிறகு இந்தியாவில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பாகிஸ்தான் அரசியல், மத்திய கிழக்கு அரசியல், உலக அரசியல், சித்தாந்தம், இலக்கியக் கோட்பாடுகள், உருது இலக்கியம், ஃபாசிஸம், மார்க்சியம், சோவியத் யூனியன் காட்டும் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பாடங்கள் மற்றும் வேறுபல எல்லாம் தொட்டுச் செல்கின்றது.
அந்த உரையாடல் ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ என்ற பெயரில் (Nothing Human is Alien to Me – Leftword Books) தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியீடாக வரவுள்ளது. இங்கு அதிலிருந்து ஒரு சிறுபகுதி முன்னோட்டமாக…
(விபி): உங்கள் இளமைக் காலத்தில் நீங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
(அஅ): நான் படித்த புத்தகங்களா? ஆர்வமூட்டும் கேள்வி. மின்சாரமோ பள்ளிக்கூடமோ இல்லாத ஒரு கிராமத்தில் நான் வளர்ந்தேன். ஆகவே நான் வீட்டிலேயே படிக்க வைக்கப்பட்டேன். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன் தான் பள்ளிக்குச் சென்றேன். ‘கிராமத்து நிலக்கிழார்’ என அழைக்கப்படும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் நான். ஓரளவுக்கு வசதியாக இருக்குமளவுக்கு நிலம் இருக்கும். ஆனால் படாடோபமான அளவுக்கு கிடையாது.
1940களின்போது புதுக்கருத்துகள் இடத்தை காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, கம்யூனிசம் போன்ற விஷயங்களையும் எடுத்துக் கொண்டன. அரசியலில் நேருவும் இலக்கியத்தில் ப்ரேம்சந்தும் மிகப் பரிச்சயமான பெயர்களாக இருந்தன.
விடுதலைக்கு சில ஆண்டுகள் முன் நான் பிறந்தேன். பள்ளிக்குச் சென்றிடாத பெண்களும் கல்லூரிக்குச் செல்லாத ஆண்களும் இருந்த ஒரு சூழல். ஆனால் வீட்டில்மட்டும் ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தன. மேலும் மாவட்டத் தலைநகரான முசாஃபர்நகரிலிருந்து ஒரு பயணிகள் பேருந்து தினமும் மதியம் எங்களுக்கான தபால், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரும்.
இச்சூழலில் இருந்த நான் முற்போக்கு இலக்கியமும் கவிதையும் அதிகம் கொண்ட உருது இலக்கியத்தை வாசித்து வளர்ந்தேன். இதில் சுவாரஸ்யம் ஒன்றும் இருக்கிறது. பெண்கள் பர்தா அணிவார்கள். பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இஸ்மத் சுக்தாய், மண்டோ போன்றவர்களின் புத்தகங்கள் வாசிக்கத் தடை இருந்ததில்லை.
ஒரு கட்டத்தில் நான் அதிகமாக புனைவுகளை வாசிக்கிறேன் என்பதை என் தந்தை கண்டுபிடித்து விட்டார். அவற்றில் பெரும்பான்மை வீண் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. அவர் என்னை அழைத்து நான்கு புத்தகங்களைக் கொடுத்தார். ஒன்று – கம்பெனி ரூல் (கம்பெனி கி ஹுக்கூமத்) என்ற புத்தகம். அதை எழுதியவர் பாரி அலிக் என்னும் பழைய கம்யூனிஸ்ட். இன்னொன்று – வெள்ளை மனிதனின் பொறி (ஃபராங்கி கா ஜால்) எனப்படும் புத்தகம். யார் எழுதினார் என ஞாபகம் இல்லை.
பிறகு எம்.என்.ராய் எழுதிய ’இஸ்லாமின் வரலாற்றுப் பங்கு’ என்ற புத்தகத்தின் உருது மொழிபெயர்ப்பும் லெனினின் சுருக்கமான வாழ்க்கை வரலாறும் இருந்தது. ஆகவே நான் மண்டோவிலிருந்து லெனினுக்குச் செல்லக் கூடிய ஒரு சூழலில் வளர்ந்தேன். உருது இலக்கியத்தின் பலவகையான முற்போக்கு எழுத்துகள், அபுனைவுகள் போன்றவற்றில் எனக்குப் பரந்த வாசிப்பிற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் உருது மட்டும்தான். பிறகு பள்ளிக்குச் சென்றபோது ஆங்கிலத்தில் நல்ல மாணவனாக மாறினேன்.
அதுவும் எழுதுவதிலும் படிப்பதிலும்தான். என்னுடைய இருபது வயதுகள் வரை ஆங்கிலத்தை சரளமாக பேசத் தெரியாது. உருது மொழியில் ஒரு எழுத்தாளனாகவே நான் தயாராகிக் கொண்டிருந்தேன். இந்த வகையில் என் அனுபவம் பெரிய வித்தியாசமானதாக இருக்காதென நினைக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் இருந்த பல முற்போக்கு எழுத்தாளர்களும் கம்யூனிசப் போராளிகளும் – குறிப்பாக, இஸ்லாமியர்கள் – குட்டி நிலவுடைமைப் பின்புலத்திலிருந்தே வந்தார்கள்.
என்னை ஈர்த்த, என்னுள் செல்வாக்குச் செலுத்திய என் முந்தைய தலைமுறையினரைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன். கிராமங்களில் வளராதோர் கூட அவர்களின் ஆரம்பங்களை அத்தகைய சமூக உலகில்தான் கொண்டிருந்தார்கள்.
விபி: உங்களின் தொடக்ககால எழுத்துகள் என்னவென உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அஅ: முதன்முதலாக நான் எழுதியது ஒரு பள்ளி நாடகம். திலீப் குமாரின் படங்களிலிருந்தும் பல்ராஜ் சாநியின் Do Bigha Zamin-லிருந்தும் விவசாயத்தில் நிலவிய மோசமான சூழலை எடுத்துக் கையாளப்பட்ட கலவை அது. கல்லூரிக்குச் சென்றபிறகு தீவிரமாக எழுதினேன். பட்டப்படிப்பு படிக்கும்போதே சிறுகதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் பிரசுரிக்கத் தொடங்கினேன். கவிதைகளும் விமர்சனக் கட்டுரைகளும் பிறகுதான் நேர்ந்தது.
விபி: கல்லூரியில் எங்கே இருந்தீர்கள்? என்ன படித்தீர்கள்?
அஅ: இந்தியாவில் இருக்கும்போது பதினைந்து வயதுக்கு முன்னமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். அநேகமாக பதின்மூன்று வயதாக இருக்கலாம். என்னுடைய பிறந்த தேதி எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு நாங்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தோம். லாகூரிலிருந்த ஃபார்மன் கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தேன். இலக்கியமும் சமூக அறிவியலும் படித்தேன். மூன்றாமாண்டு படிக்கும்போது என்னுடைய எழுத்துகளைப் பிரசுரிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் முடித்தேன். ஆனால் என்னுடைய முக்கிய செயல்பாடாக இண்டிசார் ஹுசேன், நசீர் கஸ்மி, அஹ்மத் முஷ்டாக் போன்ற முதிய உருது எழுத்தாளர்களுடன் காபி மற்றும் தேநீரகங்களில் நேரம் செலவழிப்பதே இருந்தது.
விபி: அந்தக் காலகட்டத்தில் நீங்கள் படித்த முக்கியமான புத்தகங்கள் என்ன?
அஅ: உருது இலக்கியத்தில் எல்லாவற்றையும் படித்தேன். செவ்வியல் இலக்கியங்கள் தொடங்கி என்னுடைய சமகாலத்தவரின் படைப்புகள் வரை எல்லாவற்றையும் படித்தேன். பெர்ஷியனிலும் கொஞ்சம் படித்தேன். உங்களுக்கு உருது தெரிந்தால் ஃபார்சி மொழியைப் புரிந்துகொள்வது சுலபம். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் வேறு முடித்திருந்ததால் ஆங்கில இலக்கியத்தையும் பெருமளவு படித்தேன். பிற மொழி இலக்கியங்களையும் மொழிபெயர்ப்பின் வழியாக நிறையப் படித்தேன். என்னுடைய ஆர்வங்கள் வேகமாக மாறத் தொடங்கின. அந்த நாட்களில், பட்டப்படிப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பல்கலைக்கழக நிகர் தேர்வை எதிர்கொள்வீர்கள். பிறகு உங்களுக்கு இடைநிலை (Intermediate) சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பல்கலைக்கழகத் தேர்வு எழுதுவீர்கள்.
இளங்கலைப் பட்டம் வழங்கப்படும். இடைநிலைக்கான இரண்டு வருட காலத்தில் பொருளாதாரத்தில் நான் ஆழப் புகுந்தேன். அப்போதுதான் பொருளாதாரம் எனக்கு அறிமுகமாகியிருந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்பில் பொருளாதாரம் இருக்கவில்லை. எனக்கு சிறந்த பொருளாதாரப் பேராசிரியர் கிடைத்தார். இடைநிலைக்குப் பிறகான இரண்டு வருடங்களில் அற்புதமான இரண்டு வரலாற்றுப் பேராசிரியர்கள் எனக்குக் கிடைத்தனர். ஆகவே இளங்கலைக்கான இரு வருடப் படிப்பில் வரலாற்றில் நான் முழுமையாக மூழ்கினேன். இறுதியில் என்னுடைய முதன்மைக் கல்விக்கான விருப்பம் மீண்டும் மாறி, ஆங்கில முதுகலைப் படிப்புக்குப் பதிவு செய்தேன். இத்தகைய ’ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கும் தன்மை’ என் வாழ்க்கை முழுமைக்கும் உடன் வந்தது. அதனால்தான் என்னால் மனிதவியலுக்கும் சமூக அறிவியலுக்கும் பெரிய பேதம் கிடையாது என்பதையும், நடைமுறை அறிவுக்கும் கருத்தியல் அறிவுக்கும் இடையே இருந்த பழமையான இணக்கத்தை மீட்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
இப்படித்தான் பலவகையான கல்வித்தகுதிகளுக்கு இடையில் நான் அலைபாய்ந்தேன். அப்படித்தான் நான் மார்க்ஸ், லெனின், ஃப்ராய்டு, சார்த்தர் போன்றவர்களைப் படித்தேன். பிளாட்டோவையும் கூட அப்படித்தான் படித்தேன். எந்தளவுக்கு எனக்குப் புரியுமென்பதெல்லாம் பிரச்சினையே இல்லை. எழுத்துகளுடன் நான் மல்லுக்கட்டுவேன். அந்தக் காலகட்டத்தில் விமர்சனங்களைத்தான் முதலில் படிக்க வேண்டுமென எனக்குத் தோன்றவே இல்லை.
விபி: உங்களின் அரசியல் வாழ்க்கை எப்போது தொடங்கியதெனச் சொல்லுங்கள்.
அஅ: என்னுடைய முதல் அரசியல் நடவடிக்கை என்பது பிரிட்டிஷ், ஃப்ரெஞ்ச் மற்றும் இஸ்ரேல் நாடுகள் எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் படையெடுத்ததை எதிர்ப்பதிலிருந்து தொடங்கியது. கல்லூரி முதலாண்டான 1956ஆம் ஆண்டு இது நடந்தது. படையெடுப்பை எதிர்த்துத் திரண்ட பெரும் மாணவர் போராட்டத்தில் பங்கெடுத்தேன். பிரிட்டிஷ் எதிர்ப்பு மற்றும் காலனியாதிக்க எதிர்ப்புணர்விலிருந்து அந்த விழைவு வந்தது. இப்போது யோசித்தால் நகைச்சுவையாக இருக்கிறது. நான் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் வீட்டுக்குள் குதித்து ஒரு நாற்காலியை எடுத்து தூக்கிப் போட்டு உடைத்தேன்.
விபி: பாகிஸ்தானுக்கு அதெல்லாம் முக்கியமான நேரம். ராணுவம் வலுக்கட்டாயமாக தன்னை நிறுவிக் கொண்டபோது பாகிஸ்தானுக்கு பதினொரு வயது. அந்த நாட்டை பற்றி உங்களுக்கு அப்போது என்ன கருத்து இருந்தது?
அஅ: அப்போது நான் மிகவும் இளையவனாக இருந்தேன். வீட்டிலேயே கல்வி புகட்டப்பட்டு நான் நேரடியாக எட்டாம் வகுப்புக்குதான் பள்ளிக்குச் சென்றேன். என்னுடைய மேல்நிலை பள்ளிப்படிப்பை அநேகமாக பதிமூன்று அல்லது பதினான்கு வயதில் முடித்தேன் என நினைக்கிறேன். இருபது வயதுக்கு முன்னமே முதுகலைப் படிப்பைத் தேர்ந்தெடுத்து விட்டேன் மறுபக்கத்தில் நாங்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். ஆனால் நாங்கள் உண்மையான முஸ்லிம் லீக்காரர்கள் இல்லை. எங்களுக்குக் கடவுள் நம்பிக்கையே இல்லை. மதரீதியான சடங்கு எதைச் செய்யவும் சிறுவயதிலிருந்தே நான் தடுக்கப்பட்டிருக்கிறேன். குழப்பத்துடன் நாங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றோம். பாதிப்புக்குள்ளாகியிருந்தோம். ஆகவே பாகிஸ்தான் மீதான வெறுப்பும் எனக்கு தனிப்பட்ட அளவிலானதாக இருந்தது.
உருது பேசும் நான், பஞ்சாபி பேசும் நகரமான லாகூரை சென்று சேர்ந்தேன். கராச்சிக்குச் செல்லவில்லை என்பதில் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். ஏனெனில் அது புலம்பெயர்ந்தோரின் முகாமாக இருந்தது. ஆனால் பெரும் இடப்பெயர்வு பற்றிய தாக்கம் இருந்தது. பாகிஸ்தான் அந்த இடப்பெயர்வை எனக்கு பிரதிபலித்தது. வீடு இழத்தலை அது எனக்கு மனதில் பதிய வைத்தது. இந்தியாதான் நீங்கள் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் நாடாக இருந்தது. பெரும்பாலான மக்கள் ஒரு வகையான இரட்டைச் சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். அதிகாரப்பூர்வமான கருத்தியலால், அதுவும் உள்ளார்ந்த விஷயமாக ஆக்கப்பட்டது. இந்தியாதான் எதிரி. ஒரு பெரும் வரலாற்று கடந்தகாலத்தை நீங்கள் புறக்கணித்த பெயராக அது இருந்தது. ஆனால் ஒருங்கிணைந்த இந்தியாவும் உங்களின் வீடாக இருந்த அந்த மீட்கமுடியாத கடந்தகாலத்தில்தான் இருந்தது. ஓர் அறிஞனும் தார்மிகக் குழப்பமும் என அந்தக் காலகட்டத்தைச் சொல்லலாம்.

இக்பால், ஃபெரோஸ் மற்றும் அய்ஜாஸ்
விபி: எப்போதிருந்து அரசியலை, குறிப்பாக பாகிஸ்தான் அரசியலை பற்றி எழுதத் தொடங்கினீர்கள்?
அஅ: பாகிஸ்தானில் இருந்தபோது அரசியல் செயல்பாடுகளில் நான் இயங்கிக் கொண்டிருந்தேன். இலக்கிய வாழ்க்கையும் இருந்தது. ஆனால் கருத்தியல் ரீதியாக அரசியலைச் சிந்திக்கவில்லை. எழுதவுமில்லை. என்னுடைய கருத்து மற்றும் அறிவு உலகமாக இலக்கியமே இருந்தது. என்னுடைய அரசியல் செயல்பாடு ராணுவ எதிர்ப்பாக, மாணவர் இயக்க பங்கேற்பாக, தலைமறைவு இடதுசாரிகளுடன் தொடர்பு கொண்டதாகவே அறியப்பட்டது. அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமறைவாக இருக்க அமெரிக்கா சென்றபோதுதான் ஒரு வார காலத்துக்குள்ளேயே வியட்நாம் போரெதிர்ப்பு இயக்கத்திலும் கறுப்பின விடுதலை இயக்கத்திலும் இணைந்து செயல்படத் தொடங்கினேன்.
இரண்டிலுமே முற்றிலுமாக மனதப் பறிகொடுத்திருந்தேன் அங்குதான் எனக்கான அரசியலை நான் கற்றுக் கொண்டேன். தற்போது இருக்கும் உலகைக் குறித்து அரசியல்பூர்வமாக சிந்திக்கக் கற்றுக் கொண்டேன். முதிர்ந்த அரசியல் சிந்தனை கொண்டவர்களை சந்திக்கத் தொடங்கினேன். அவர்கள் அனுபவமும் சிந்தனைத்திறனும் கொண்ட செயற்பாட்டாளர்களாக இருந்தனர். அமெரிக்காவில் மட்டும் இருந்தவர்களல்ல அவர்கள். லத்தீன் அமெரிக்கா, அரபு உலகம், க்யூபா, வியட்நாம் ஆகிய நாடுகள் சார்ந்தோரையும் மற்றும் ஏமன், தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளையும் சந்தித்தேன்.
நியூயார்க் நகரத்தின் முக்கியமான இரண்டு போரெதிர்ப்புக் கூட்டமைப்புகளில் ஒன்றில் நான் இயங்கினேன். அமைதிக்கும் நீதிக்குமான கூட்டமைப்பு. (Coalition for Peace and Justice) இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்புக் கமிட்டியைத் தேர்ந்தெடுப்பார்கள். அநேகமாக 40 உறுப்பினர்கள் என நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், சிறிது காலத்திற்கு நானும்கூட அந்தக் கமிட்டிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ஒரு சந்திப்பின்போது, ஆர்வமற்ற ஓர் உரை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என சுற்றிப் பார்த்தேன். எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் எண்ணிக்கையின் உள்ளடக்கம் இப்படி இருந்தது. சர்ச் போன்ற மரபிலிருந்து வந்த ஐந்திலிருந்து ஏழு சமாதானவாதிகள், புதிய இடது என அழைக்கப்பட்ட குழுவிலிருந்து ஒரு பத்து பேர், பிறகொரு பத்து பேர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அதே எண்ணிக்கையில் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் வந்திருந்தார்கள். சரியாகச் சொல்வதெனில் எண்ணிக்கையில் பாதிப் பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாகவோ முன்னாள் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.
அந்த வருடங்களில் பல வகை மக்களுடன் நான் இயங்கியிருக்கிறேன். சில மாத காலம் சோசலிச சமாதானவாதியான டேவ் டெல்லிஞ்சருடன் செயல்பட்டிருக்கிறேன். இக்பால் அஹ்மதுடன் சில வருடங்களுக்கு இயங்கியிருக்கின்றேன்.
விபி: இந்த நேரத்தில் நீங்கள் முனைவர் ஆய்வுப்படிப்பு படித்துக் கொண்டிருந்தீர்களா?
அஅ: இல்லை. கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு ஓர் ஆறுமாதம் சென்றேன். அது வீண் வேலை என்பதை உடனடியாக உணர்ந்தேன். 1970 அல்லது 1971 ஆக இருக்கலாம். நான் பல சுவாரஸ்யமான விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் ஈடுபட்டிருந்ததால், ஆய்வுப்படிப்பு எனக்கு பெரிதாக படவில்லை.
கறுப்பின தேசிய இயக்கம், கல்லூரிப் போராட்டம் மற்றும் கல்லூரி வளாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போன்ற விஷயங்களில் ஆர்வத்துடன் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். நியூ யார்க்கில் ஒருமுறை அத்தகைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வேலையைச் செய்தபோது என் பெயரை தடுப்புப் பட்டியலில் சேர்த்தனர். நியூயார்க் மாகாண பல்கலைக்கழக அமைப்பின் நிறுவனங்களில் நான் வேலை பார்க்க முடியாமல் தடுக்கப் பட்டேன். அப்படித்தான் நான் ரட்ஜர்ஸ் ஆற்றைக் கடந்து நியூ ஜெர்சி சென்று கற்பிக்கும் வேலை பார்க்கும் சூழல் நேர்ந்தது. ஏனென்றால் நியூ யார்க்கில் என்னால் வேலை பெற முடியாது.
விபி: இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?
அஅ: மலையளவு புத்தகங்கள் படித்தேன். எவை என நினைவுகூர்வது கஷ்டம். போரெதிர்ப்பு இயக்கத்தால் வியட்நாமைப் பற்றி அதிகம் படித்தேன். அந்தக் காலங்களில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றிப் படித்தேன். கறுப்பினத்தவர் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகியவற்றையும் படித்தேன். கறுப்பின தீவிர செயல்பாட்டு பாரம்பரியம் என இன்று குறிப்பிடப்படும் எல்லாவற்றையும் படித்தேன். இறுதியில் சொன்னதை அதிகமாகவே வாசித்தேன். ஏனெனில் ரட்ஜர்ஸ்ஸில் இருந்த என் மாணவர்களுக்கு அவற்றைக் கற்பிக்க விரும்பினேன்.
விபி: மார்க்ஸை எப்போது படிக்கத் துவங்கினீர்கள்?
அஅ: பாகிஸ்தானிலிருக்கும்போதே நான் ரகசியமாக மார்க்ஸைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, ஜெர்மானிய தத்துவம் போன்ற விஷயங்கள். கம்யூனிஸ்ட் அறிக்கையை நான் கல்லூரியில் இருக்கும்போது படித்தேன். ஃப்ரான்ஸின் உள்நாட்டுப் போர், 18ஆம் ப்ருமேர் போன்றவற்றின் சில பகுதிகள். ஃப்ரான்ஸில் வர்க்கப் போராட்டம் படித்திருக்கவில்லை. அந்த எழுத்துகள் எல்லாம் லாகூரில் கண்டுபிடிக்க முடியாது. ரொம்ப காலம் கழித்துதான் மூலதனத்தைப் படித்தேன். முடியவில்லை. மூலதனம் படிப்பதற்கான வழிமுறையை அறிந்திருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைதான் வேதாகமம்.
சில வாரங்களுக்கு முன்தான் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பற்றி பட்டதாரிகளுக்கான உரையில் பேசினேன். இப்போதும் அது புதிய விஷயங்களை எனக்குக் கற்பிக்கிறது. அற்புதமான எழுத்து அது. அதன் உரைநடை என்னை பெரிதும் ஈர்த்துக் கொண்டது. அருமையான கச்சிதம் கொண்டது. குறைந்த பத்திகளைக் கொண்டு பல விஷயங்களை அது பேசும் விதம் மீண்டும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுருக்கமும் செறிவும், எழுத்தின் நேர்த்தி. ‘எழுத்தின் நேர்த்தி’ என நான் சொல்வதில் ‘எழுத்து’ என நான் குறிப்பிடுவது உருவாக்கங்களை. அதில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கும். LeftWord-லிருந்து மறுபதிப்பு வந்தபோது, பிரதியுடன் நாங்கள் சிலர் எழுதிய கட்டுரைகளும் வெளியாகின. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் புத்தகத்தை LeftWord 1999-ல் வெளியிட்டது. மறுபதிப்பில் நான் இப்படி எழுதியிருந்தேன்.
மார்க்ஸ் தன்னுடைய வாழ்க்கைச்சூழலை எழுதுகிறார். ஆனால் அவர் எழுதிய விதம், அடுத்தடுத்த தலைமுறையினர் தத்தம் வாழ்க்கைச்சூழலைப் பார்ப்பது போல் எழுதப்பட்டிருந்தது. என்னை ஈர்த்த இன்னொரு விஷயமும் இருக்கிறது. மூலதனத்தின் தரம் என்னவெனில், எழுதப்படும் காலத்தில் முதலாளித்துவம் இருந்த நிலையை குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் முதலாளித்துவம் என்னவாக மாறும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மார்க்ஸ் அவரின் காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தவற்றின் மாறும்தன்மையை சரியாக புரிந்திருந்தார். சரியான தர்க்கவாதம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
விபி: தர்க்கவாதத்திலிருந்துதான் தீர்க்கதரிசனம் வர முடியும். வெற்று மாயாவாதங்களிலிருந்து அல்ல.
அஅ: நிச்சயமாக. முழுமையான தர்க்கவாதம். அதனால்தான் லெனின் சொன்னார் Logic படிக்காதவர்களால் Capital-ஐ புரிந்து கொள்ள முடியாதென. அது முழுவதும் தர்க்கவாதத்தாலானது. முதலாளித்துவ உற்பத்தி முறை இருக்கும் வரை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமே முதலாளித்துவ ஆய்வின் மையப் பிரதியாக இருக்கும். மார்க்ஸ் அதன் தர்க்கத்தை தெளிவாகக் கையகப்படுத்தி இருந்தார்.