சா. ஜார்ஜ் டேவிட்
தமிழ்ச்சூழலில் கலை இலக்கிய படைப்பாளர்கள், விமர்சகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று கூறுபவர்களுக்கு மத்தியில் சி.முத்துகந்தனின் “இயல்பால் அறிவோம்” எனும் இந்நூல் அப்படியான பிரமிப்பையும் பிரம்மாண்டத்தையும் முன்வைத்து தனித்து நிற்கிறது. ஏழு அத்தியாயங்களின் ஐம்பத்தாறு பத்திகளும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இதுவரை பலர் பேசத் தயங்கிய பேசப்படாத பல செய்திகளையும் இந்நூல் போகிற போக்கில் மிக இயல்பாகப் பேசிச் செல்கிறது. மாணவர் பருவத்தில் பிடிபடாமலிருந்த சில உண்மைகளும் எழுத்தின் நுட்பங்களும் இதன் வாயிலாகப் புரிந்து கொள்ளமுடிந்தது.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கலை இலக்கியத்தைப் பற்றி கூறும் பொழுது “எந்தக் கலை இலக்கியம் நக்கல், கிண்டல், எள்ளல் தொனியில் இருக்கிறதோ அந்தக் கலை இலக்கியம் எதிரிகளை மிக எளிதாக வீழ்த்தும்” என்று எப்பொழுதோ படித்த அந்த வாக்கியத்திற்கான பொருள் இந்நூல் முழுவதும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாகப் படிக்கும்போதே நம்மைச் சுய பரிசோதனைக்கும் சுய விமர்சனத்திற்கும் ஆட்படுத்துகிறது. அதாவது, அதன் தன்மை எழுத்தில் அப்படியே உள்ளதால் நமக்கு இன்னும் எளிதாகின்றது.
பொதுவாகவே நம்மிடையே இருக்கும் சில பேராசிரியர்கள் அடிக்கடிக் கூறுவது “90-களில் இருந்த கலை-இலக்கியச் சூழல் தற்போது இல்லை” என்பதாகும். ஆனால் ஏன் இல்லை, எப்படிக் காணாமல் போனது, அப்போதிருந்த இலக்கிய எழுத்தாளர்கள் இப்பொழுது என்னவாக ஆனார்கள் என்று கூறுவதில் அவர்கள் கோட்டை விடுகின்றனர். தற்போதும் நன்றாக எழுதும் புதிய எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியென்றால் இவர்களைப் போன்றோர் தொடர்ந்து திட்டமிட்டே இம்மாதிரியான பேச்சுகளால் எதையோ கட்டமைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ‘பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ எனும் நூலில் “இவ்வுலகத்தின் மொத்த மக்கள் தொகையில் மிகச் சிறு குழுவினர் மட்டுமே பெரும்பாலான செல்வத்தை வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இவர்களின் வளர்ச்சியை வைத்தே ஜி.என்.பி (நிழிறி) எனும் நாட்டின் வளர்ச்சியும் கருதப்படுகிறது. இதனை முன்னிறுத்தி பெரும்பாலான மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

அவர்களின் உண்மை நிலையைப் மறைக்கிறது” என்கிறார். அதுபோல இங்கு இயங்கி வரும் சில சிறுஇலக்கியச் சூழலானது மிகச்சிறிய வட்டமாய்க் குழுவாக இயங்குகிறது. இவர்களுக்குள்ளே போட்டிகளும் கடுமையான விவாதங்களும் இருப்பதுபோல பொதுவெளியில் ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து சில எழுத்துகளை நிராகரிக்கிறது. இத்தகைய சூழலுக்கு எதிர்வினையாற்றும் விதமாகவும் “இயல்பால் அறிவோம்” அமைந்துள்ளது.
எதற்கெடுத்தாலும் மேலைநாட்டு எழுத்தாளர்களை மேற்கோள் காட்டும் நம்மவர்கள், அவர்களின் படைப்பைப் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் இங்கிருக்கும் இலக்கியச் சூழலைப் பெண் எழுத்து, விளிம்புநிலை எழுத்து என்று சொல்லித் தனிமைப் படுத்தும் நிலையையும் தொடர்கிறார்கள்.
மேலை நாடுகளில் அவர்கள் புதிய படைப்புகளைக் கொண்டாட மறுப்பதேயில்லை. இங்கு அத்தகைய போக்கே இல்லை. குழு மனப்பான்மையோடும் வாசகர் வட்டத்திற்குள்ளேயும் பேசிக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஆகவே இவர்கள் சுட்டும் மேலைய மேற்கோள்கள் இவர்களின் வியாபாரத்திற்கு மட்டும்தானா? யதார்த்தத்திற்கு இல்லையா? என்கிற கேள்வி தானாய் எழுகிறது.
இங்கு தற்கால விமர்சனப் போக்கும் தம்முடைய அறிவுத் திறனை வெளிப்படுத்துவதிலேயே முனைப்பாக இருக்கிறதேதவிர, படைப்பின் ஆன்மாவைக் கூறாது வெறுமனே வாழ்த்துச் சொல்லி நழுவிவிடுகிறது. பெரும்பாலான படைப்புகள் மனிதர்களைப் பதிவு செய்யும். அவ்வளவாக மனங்களைப் பதிவு செய்யாது. ‘இயல்பால் அறிவோம்’ மனித மனங்களைச் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதே இதன் கூடுதல் சிறப்பு.
பல படைப்புகள் சமூகத்தின் அவலங்களைப் பேசும் அதற்குப் பின்னுள்ள அரசியலை அல்லது காரணங்களைப் திட்டமிட்டே பேசாது. மிக நுணுக்கமாகப் புனைவின் ஆய்வாக எழுத்துக் கலையின் புதிய வடிவமாகவும் தம்மை முன் நிறுத்துகிறது. நல்ல படைப்பு என்பது அதிகப் பக்கங்களில் அல்ல அதில் கூறும் விசயத்தில்தான் உள்ளது என்பதை நாம் உணர்வோம். அதன் அர்த்தத்தை ‘இயல்பால் அறிவோம்’ நூலின் வாயிலாகப் படிக்கும்போது மீண்டும் அது நினைவூட்டப்படுகிறது.
சிறுகதை, புதினம் மற்றும் தேர்ந்த ஆய்வுக் கட்டுரையைப் படிக்கும் அனுபவத்தை இவ்வொவ்வொரு இரண்டு பத்திகளைப் படிக்கும் பொழுதும் ஏற்பட்டுகிறது. எப்போதுமே பண்பாட்டியல், உளவியல், மானுடவியல், வரலாறு, சூழலியல் போன்றவற்றைப் பற்றி கேட்கும்பொழுது அது ஏதோ தனித்தப் பிரிவுகள் என்கிற எண்ணம் இருந்தது. இவ்வெழுத்தின் வாயிலாகப் படிக்கும்பொழுது எவ்வாறாக நம்முடைய வாழ்வியலில் இவையனைத்தும் இரண்டற ஒன்றியிருக்கிறது என்பதனைப் போகிற போக்கில் இந்நூல் மிகச் சிறப்பாக கூறியுள்ளது.
இப்படைப்பு கூறுவதுபோல எந்தக் கலை இலக்கியம் குழந்தை மனதோடு இருக்கிறதோ அவை ஆகச்சிறந்த எழுத்துக்களாக அமையும். “இயல்பால் அறிவோம்” படிப்பவர்களையும் பாசாங்கில்லாத குழந்தை மனதை நோக்கி இழுத்துச் செல்லுகிறது. அத்துடன் நம்மையும் எழுதத் தூண்டுகிறது. இயல்பாக வாசிப்போம். வாசிப்பால் இணைவோம்.