ஸ்ரீதர் மணியன்
அதிதி எனும் சொல் வடமொழியிலிருந்து தமிழுக்கு வரவு. ஆழப்பொருளுடையது. மனித வாழ்வின் அநித்தியத்தினை உணர்த்துவது. மனித வாழ்வில் எதுவும் நிலைத்த தன்மை கொண்டது அல்ல என்பதனையும் கூறுவது. இத்தகையதொரு சிறப்பான சொல்லினைத் தலைப்பிட்டு தோழர். வரத.ராஜமாணிக்கம் ஒரு அருமையான குறுநாவலை உருவாக்கியுள்ளார். கதை நெடுகிலும் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை நகர்த்திச் செல்வதுபோல கோவிந்துவை அவனது மாமனாரும், அவரது நண்பரும் கண்டுபிடிப்பார்களோ, அல்லது அவன் கிடைக்காமல் போய்விடுவானோ என்ற வினாவுடன் கூடிய பரபரப்பு வாசகனைத் தொற்றிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மனித வாழ்வில் எத்தருணத்திலும் தவிர்க்கவியலாத துணையாக, இணையாக அமைவதனை நூல் அருமையாக உணர்த்துகிறது. வாழ்வு, தாழ்வு, சிறப்பு, பெருமை என அனைத்தும் பெண்ணால் என்ற கருத்தினை வாசகனுக்கு அடியோட்டமாக அதிதி கூறுகிறது. தன் தாயிடம் இழந்ததை தன் மனைவி சசியிடம் பெற விழையும் ஒரு எளிய மனிதனாக கோவிந்துவின் உலகம் இருக்கிறது. தன் மனைவியின் நடத்தையைக் கண்ட பின்னர் அவன் அதனை எதிர்கொள்ளத் திராணியற்று அதனைக் கடந்து செல்ல முயற்சிக்கிறான். தன் மனைவியின் பிறழ்வினைக் கூட அவன் ஏற்றுக்கொண்டு அவனது வாழ்க்கைக்கான விடையினைத் தன் தாயினைக் கண்டுபிடித்தலின் வாயிலாகக் கண்டடைய முயல்கிறான். அவளிடமே அதற்கான முறையான விளக்கத்தினையும் பெறவியலும் என்கிற வெள்ளந்தியான, சாமானியனாக கோவிந்து கதை நெடுகிலும் வருகிறான்.
தமிழ்ச்செல்வன் அவரது அணிந்துரையில் குறிப்பிட்டது போல ஆண்களே அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் திராணியற்று ஓடிப்போகின்றனர். இருப்பினும் இக்கதைப் பரப்பில் வாசகன் சந்திக்கும் பல பெண்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வேறிடம் நாடிச் செல்கின்றனர். எனினும் படைப்பு முன்வைக்கும் கருத்து எளியதாகவே இருக்கிறது. வாழ்வென்பது பிரச்சினைகளாலும், சிக்கல்களாலும் பின்னப்பட்டது, பிணைக்கப்பட்டது. அதனைத் தவிர்த்து வாழ்ந்திடவே பால்பேதமற்று மனித இனம் வாழப் பிரயாசைப்படுகிறது. இதனைச் சந்தித்து, சமாளித்து வாழ்ந்து தீர்த்திட வேண்டியது தவிர்க்கவியலாதது. துணிவுடன் அறிவின் துணை கொண்டு எதிர்கொள்ளவேண்டியதே வாழ்வு என்பதைத் தனது கதைமாந்தர்கள் வழி நிறுவுகிறார் தோழர்.வரத.ராஜமாணிக்கம்.
மனித மனதின் ஆழத்தில் உறங்கவொண்ணாது துடித்தலையும் எண்ணற்ற இனங்காண இயலா எண்ணங்கள், வேட்கை, காமம் அதன் நடைமுறை வெளிப்பாடு எனப் பல்வகைக் காரணிகளை, அதன் காரணங்களை இந்நாவல் வாசகர்கள் முன் வைக்கிறது. விளங்கிக் கொள்ள இயலா ஆழ்மனக் கூறுகளை இப்புதினம் தொட்டுச் செல்கிறது. வெளிப்பார்வைக்கு மிகத்தட்டையாக எந்த இஸங்களுக்கான வடிவங்களுமற்று நகரும் கதையிது. ஆயினும், ஆழ்ந்த வாசிப்பில் மேற்கண்ட கூறுகள் குறித்துப் பேசும் படைப்பாகவும் இதனை வகைப்படுத்த இயலும்.
சசிவர்ணத்தின் செயலுக்கு படைப்பாளி காரணத்தைக் கூற முற்படவில்லை. அதனை நியாயப்படுத்திடவோ, கண்டித்திடவோ அவர் முயலவில்லை. படைப்பினை அதன் போக்கில் தன்னிச்சையாக நடத்திச் செல்கிறார். இதுவே அதன் சிறப்பிற்கான அடிப்படையாக இருக்கலாம். எல்லாப் பிறப்புகளும், உயிர்களும் தனக்கான வாழ்வினை அமைத்துக் கொள்ள முயலும் அடிப்படை உளவியலும் படைப்பில் வெளிப்படுகிறது. கதை மாந்தர்கள் அத்துணைபேரும் தங்களுக்கான இருப்பினைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர்.
பசுபதி என்னும் பாத்திரப் படைப்பு ஒரு உன்னதமான, தூய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பசுபதி படைப்பு நெடுக சொற்பமாகவே பேசுகிறாள். தன்னைப் போன்றதொரு அவல நிலை வேறெந்தப் பெண்ணிற்கும் நேர்ந்துவிடக் கூடாதென்ற உறுதியான பிடிப்புள்ள பெண்ணாய் பசுபதி படைக்கப்பட்டிருக்கிறாள். அவள் குறித்த சித்திரம் மற்ற கதை மாந்தர்கள் வழியாகவே வாசகன்முன் வைக்கப்படுகிறது. இத்தகைய மாந்தர்கள் இன்றுள்ள சமூகச் சூழலில் அருகிவிட்டனர்.
கோவிந்துவிடம் அவன் தாய் குறித்த பார்வை தவறு எனக் கூறும் பசுபதி, அவன் முன்வைக்கும் கருத்துகள் வாசகனிடம் பெரும் சலனத்தினை உண்டாக்குபவை. ஒரு ஆண் வீட்டை விட்டுச் சென்றுவிட்டால் அதனை நியாயப்படுத்தும் சமூகம், பெண் வீட்டை விட்டுப் போய்விட்டால் அவளை நிந்தனை செய்து ஒதுக்கிவைக்கும் ஆணாதிக்கப் பார்வையினையும், சமூகத்தின் பொதுப்புத்தியினையும் மிகக் காத்திரமாக தன் படைப்பின் வாயிலாக ஆசிரியர் சாடுகிறார். பெண்களுக்கான காரணச் சூழல்கள் எவ்விதமானவை, அவள் அதனை எதிர்கொள்ளும் விதம் எவ்வாறானது என்பது பசுபதியின் கருத்துகள் தெளிவாக வாசகன் முன்பாக வைக்கப்படுகின்றன.
ஒரு ஆண் வீடு மீண்டால் அவனை ஆசுவாசத்துடன், மகிழ்வுடன் வரவேற்கும் நமது சமூகம் அதே தருணத்தில் பெண் வீடு மீண்டுவிட்டால் என்ன செய்வது என மிரளும் மனோநிலை, படைப்பில் மறைபொருளாகச் சித்தரிக்கப்படுதலை உணரலாம். பெண் என்பவள் ஊனும், உணர்வுமாக, உயிருள்ளவள் என்பதனை ஏற்காது, ஆணுக்கான உடல் மட்டும் கொண்டவள் என்ற பொதுப் பார்வை இங்கு வெளிப்படுவதைக் காணலாம். இங்கு கோவிந்துவிற்கு மாற்றாக சசி வீட்டை விட்டுப் போயிருந்தால் அவளுக்கு அவளது பெற்றோரே எதிரியாக மாறியிருக்கும் சாத்தியப்பாடும் உண்டு.
தன்னிடம் வந்துசேரும் பெண்களின் வாழ்விற்குத் தானாகவே பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டும் சிறப்பான கதைமாந்தராகப் பசுபதியை உருவாக்கியிருப்பது ஆசிரியரின் தனித்தன்மையாகிறது. பொதுவில், பசுபதியிடம் உள்ள எந்தப் பெண்களைக் குறித்தும் தன் கதை மாந்தர்கள் மூலம் குறையேதும் கூறாமல் அவர்களின் பின்னணியினைக் கூறுவதும் படைப்பின் சிறப்பாகிறது..
கதையினூடாக செங்கொடி இயக்கத் தோழர்களின் சிறியதொரு போராட்டமும் இடம் பெறுவது இயக்கத்திற்குப் பெருமை சேர்ப்பதாக அமைகிறது. ஒற்றுமையும், முயற்சியும் களத்தில் ஒன்றுபட்டால் தீர்வும், வெற்றியும் நம் வசப்படும் என்ற கருத்தினை சமூகத்தின்முன் வைக்கிறார் தோழர் வரத.ராஜமாணிக்கம். ஒன்றுபடுவதற்கு கல்வியறிவும், பொருள் வசதியும் அவசியமற்றது, உணர்வு, ஊக்கம், சார்பற்ற சிந்தனை மட்டும் நம் நோக்கத்தினை வென்றெடுக்கும் பாதை என்றும் இப்பகுதி சுட்டிக்காட்டுகிறது. அது போன்றே என்றும் மாறாத் தன்மையுடைய அதிகார வர்க்கத்தின் ஆணவம்,, உழைக்கும் மக்களின் நடைமுறை நிலை குறித்த அலட்சியம் போன்ற மனநிலையினையும் நாவலாசிரியர் இதில் பதிவாக்கியுள்ளார்.

தோழர் வரதராஜன் தான் வாழும் இடத்தினைக் களமாக்கி தன் படைப்பினை உருவாக்கியுள்ளார். நவீனமாதலின் வழி தன் முகங்களை மாற்றிக் கொண்டிருக்கும் நகரங்களின் சிதிலமான எச்சங்களை இத்தகைய படைப்புகளின் வாயிலாகவே எண்ணி சுகங்கொள்ள இயலும். தூங்கா நகரத்தின் மற்றொரு பரிமாணமும் இக்கதையில் காணக்கிடைக்கிறது. அது போலவே பழனி நகரமும்.
குதிரை வண்டிகள் புழங்கிய காலவெளியில் கதை உருவாக்கப்பட்டிருப்பினும், கோவிந்து, சசி, பசுபதி, நேத்ரா உள்ளிட்ட கதை மாந்தர்களும், அவர்கள் மனவெளிப்பாடுகளும், ஆசாபாசங்களும் என்றைக்கும் மாற்றமடையாதவை. அலைபேசிக் கொண்டே அலையும் மனிதர்களும் அவர் தம் மனவிகாரங்களும் மாறா இயல்புடன் இன்றும் நம்மிடையே காணக்கிடைக்கின்றனர் என்பது கண்கூடு.
இவ்வாறாக, தன் படைப்பினை உருவாக்கியதில் தோழர் வெற்றியடைந்துள்ளார் என்பது உறுதி.. பழனி நகரில் இடதுசாரி இயக்கத்தின் தலைவராக, வழக்கறிஞராகச் செயலாற்றி வரும் தோழர். வரத.ராஜமாணிக்கம் இதுநாள் வரை சிறுகதை ஆசிரியராக அறியப்பட்டிருந்தார். தற்போது இப்படைப்பினால் குறிப்பிடத்தக்க ஒரு நாவலாசிரியராக இலக்கியப்பரப்பில் உருப்பெற்றுள்ளார். அதிதி என்னும் இந்நாவல், ஏறக்குறைய நூற்றித் தொண்ணூறு பக்கங்களுடன் பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக வெளிவந்துள்ளது