செ.கா
சந்திப்பு- ராம்கோபால்
ஒரு புத்தகக் கடை திறக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உதயமானது ? இது ஒருவரின் நீண்ட நாள் கனவா? அல்லது ஒத்த கருத்துள்ள நண்பர்களின் உரையாடல் வழி எழுச்சியா?
நிச்சயமாக தனிப்பட்ட ஒருவரின் கனவு இல்லை. ஒத்த எண்ணம் உடைய நண்பர்கள் பலரது கூட்டு முயற்சிதான். புத்தகக் கடை திறக்க வேண்டும் என்கிற எண்ணம் ஒரு அமைப்பின் மாநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும்பொழுதுதான் உதயமானது. அங்கே நான் 2000 ரூபாய்க்கு மேலே புத்தகம் வாங்கினேன்.
அதிகபட்சம் நான் வாங்கியதெல்லாம் பிரச்சாரம் மற்றும் விளக்கக் குறுநூல்களே. இது என்னுடன் வந்த நண்பர்களைப் பெரிதும் கவர்ந்தது. குறைந்த பக்கங்கள் மற்றும் விலையில் எளிதில் கிடைத்த இந்நூல்கள் ஏன் நம்ம ஊரில் கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கான பதிலைத் தேடிய பயணம்தான் இன்று “அறிவொளியாக” வளர்ந்திருக்கிறது.
இது ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கக் குழுவால் ஒருங்கிணைக்கக் கூடிய ஒன்று. இதற்கான குறைந்தபட்ச முதலீடு தேவையை நிறைவு செய்ய ஏலச்சீட்டில் இணைந்த 20 நண்பர்களின் தன்முனைப்பு உதவிகரமாக இருந்தது. இவை தவிர பாரதி புத்தகாலயம் நாகராஜன், சேலம் சஹஸ், பேரா.நா.மணி, இளங்கோ, கார்த்திக் பாலா, கலைக்கோவன், முருகவேள்,ஸ்ரீகுமார், பால கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இதற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிந்துள்ளனர்.
அடிப்படையான வேலைகளில் இருந்து அலங்கரித்து ஆர்ப்பரித்துக் கொண்டாடிக் கொண்டு சேர்த்த வரைக்கும் இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50க்கும் மேற்பட்டோரின் ஆர்வமும் உழைப்பும் இருக்கின்றது.

பொதுவான புத்தகக் கடைகளில் இருந்து ‘அறிவொளி புத்தகாலயம்’ எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது?
மாவட்ட அளவில் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகளுக்கு இந்த வடிவம் இன்னும் உதவும் என்று நம்புகிறோம். வாசகர்களை அடையாளங் காணாமல், வாசிப்பைக் கொண்டு சேர்க்க முடியாது. வாசகர்கள், அவரவர் பின்புலத்தில் இருந்துதான் வாசிப்பை அணுகுகின்றனர்.
வாசகரின் சுய விருப்பத்தில் இருந்து சமூகப் பொறுப்பை நோக்கி நகர்த்துவதே எங்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. லாப நோக்கமோ, எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி புகழாரம் சூட்டுவதோடு மட்டும் எங்கள் வேலை முடிந்துவிட வில்லை என்றும் நம்புகிறோம். பல தரப்பட்டோருக்கான தரமான மீட்டிங் பாயிண்ட்டாக இருக்க வேண்டும். அவரவர்கள் வயதுக்கேற்ற செயல்பாடுகள் தருகிற “Activity Centre” ஆகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.
முதலில் அறிவொளி புத்தகாலயம் என்று ஏன் பெயர் வைத்தீர்கள்? எப்படி அதனைத் தேர்வு செய்தீர்கள் ?
பெயர்த் தேர்விற்கான நன்றி பேராசிரியருக்கும், சண்முக சுந்தரம் சாருக்கும்தான் போக வேண்டும். மாவட்ட செயற்குழுவில் கேட்கப்பட்ட பரிந்துரைகளில் இருந்து சனநாயகப் பூர்வ ஓட்டெடுப்பின்படி, இப்பெயர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கலைகளின், அறிவுத்தளத்தின் எளிய மக்களுக்கான வடிவம் நமக்கு அறிவொளியில்தானே கிட்டியது. அப்படியான அணுகுமுறையைத்தான் நாங்களும் முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிற வகையில் இப்பெயர் மிகுந்த பொருத்தம் உடையதாக இருந்தது.
அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மணி, “இது ஒரு பெருங்கனவின் தொடக்கம்” என்று வாழ்த்திப் பேசினார் என்று அறிந்தோம். உண்மையில் அது ஒரு பெருங்கனவின் தொடக்கமா? அந்தப் பெருங்கனவை கொஞ்சம் விரித்துக் கூற முடியுமா?
ஆமாம். எந்த ஒரு தொடக்கமும் தன்னளவில் அதற்கான இலக்கையும் கனவையும் சுமந்துகொண்டேதான் இருக்கும். இலக்கற்ற பயணம் வீண்தான்.
அப்படிப் பார்த்தால், இதில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிற பல நண்பர்களின் கனவுகளையும் சுமந்து கொண்டுதான் அறிவொளி பயணித்துக் கொண்டிருக்கிறது. பலரது கனவும் செயல்வழியில் அரங்கேற இது ஒரு நல்ல வழியாக நினைக்கின்றனர். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிப் பார்த்தால் பெருங்கனவு என்பதை விட கனவு செயலாகக் கூடிய ஆய்வகம் என்று சொல்லலாம். அதுவே பொருத்தமாக இருக்கும்.
புத்தகக் கடைக்கு முதலில் ஓர் ஆரம்ப கட்ட முதலீடு தேவைப்படும். அதனை எப்போதும் எடுக்கவே முடியாது. பின்னர் மாதாந்திர வாடகை, கடையை நடத்துவதற்கான நபர்கள், சம்பளம் என்று செலவுகள் விரியும். இதனை எப்படிச் சமாளித்தீர்கள்? தொடர்ந்து கடையை நடத்துவதே பெரிய சவால். அதற்கான அடிப்படைத் திட்டம் என்ன உள்ளது உங்களிடம்?
நான் முன்னமே சொன்னது ஏலச்சீட்டு நல்ல வடிவம். முதல் மாதம் கமிசன் தொகை வசூலிக்கப்பட்டு அது மூலதனமாக்கப்பட்டது.
அதன் பிறகு நன்கொடை பெறப்பட்டது. புத்தகப் பரிசு கூப்பன் என்னும் வடிவிலும் புத்தகங்கள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டன. இந்நேரத்தில் சென்னிமலை ஒன்றிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். எங்களது இந்த சிறிய தீப்பொறிக்கு எண்ணெய் ஊற்றி பெரும் பந்தமாக்கி வெளிச்சம் கொடுத்து நம்பிக்கையூட்டியது அவர்களது ஆர்வம்தான். பரப்பளவில் சிறிய நிலப்பரப்பு கொண்ட எங்கள் ஒன்றியத்தில் இரண்டு நாட்களிலேயே அவர்கள் சுமார் 33000 ரூபாயைத் தந்து உதவியிருக்கிறார்கள்.
அதுபோலவே டீக்கடைக்கார நண்பர் மணி அவர்களது குடும்பத்தாரும், டீ மாஸ்டரும் கொடுத்து உதவிய 5 புத்தக அலமாரிகள் கடைக்கு அழகான அமைப்பைக் கொடுத்து செலவைக் குறைத்துவிட்டது. மாத வாடகைக்கும் தனிச் சீட்டு மற்றும் நன்கொடை மூலம் ஒரு வருடத்திற்குத் திரட்டி விட்டோம்.
புதிய புத்தகங்களைக் கொண்டு வருவதும், அடுத்தடுத்த முதலீடுகளுக்கான நிதியும் மட்டுமே இப்பொழுது எங்கள் முன் உள்ள சவால். அதற்கும் சாத்தியமுள்ள வடிவங்கள் குறித்து இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
புத்தகக் கடையை முன்வைத்து வாசகர் வட்டங்களைத் தொடங்க இருக்கிறோம் என்கிறீர்களே! அதன் நோக்கம், அதன் செயல்திட்டங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
ஏற்கனவே “சென்னிமலை வாசகர் வட்டம்” என்னும் பெயரில் ஒரு வருடமாக வாராந்திர வாசகர் வட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். முதன் முதலில் கலந்து கொண்டவர்கள், தம் மேடைப் பங்களிப்பை முதலில் நிகழ்த்திக் காட்டியவர்கள் வரை எங்களுக்கு கலவையான அனுபவங்கள் கிடைத்தன. அதுபோலவே முருகவேள் தோழரின் “புனைபாவை” நாவல் வெளியீட்டு விழாவையும் நடத்தியிருக்கிறோம். இடையில் கொரோனாவால் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மீண்டும் தொடங்கியிருக்கிறோம்.
கடந்த கால அனுபவங்களில் இருந்தும், இப்பொழுது முறையான அமைப்பாக மாறியிருப்பதில் கிடைத்த ஆலோசனைகளில் இருந்தும், “அறிவொளி” எனும் பெயருக்குத் தகுந்தாற்போல் வாசகர் வட்டம் மக்களைத் தேடி சென்றடைய வேண்டும். பள்ளி வாரியாக வாசிப்பு முகாம்கள், குடியிருப்ப வாரியாக வாசிப்பு முகாம்கள் உள்ளிட்ட பல வடிவங்களை யோசித்துக் கொண்டிருக்கிறோம். “புத்தகம் பேசுது” வாசகர்கள் கூட தங்களது ஆலோசனைகளை எங்கள் arivoliputhakalayam@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பி உதவலாம்.
உங்களின் குறைந்தபட்ச இலக்கு என்ன? அதிகபட்சம் எப்படியெல்லாம் விரித்துக் கொண்டு செல்வீர்கள்?
குறைந்த பட்ச இலக்கு, அறிவொளி புத்தகாலயம் என்பது அனைத்துத் தரப்பினருக்குமான Activity Centre ஆக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் கடைக்கு வரும் ஒவ்வொருவரோடும் நாம் தொடர் உரையாடல்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு அவர்களுக்கான வடிவங்களில் நெருங்க வேண்டும். அதிக பட்சம் நிறைய ஆசைகள் இருக்கு. நண்பர் குணாவிற்கு சிறார் கையெழுத்துப் பிரதி ஒன்று தொடங்க ஆசை இருக்கு.
நண்பர் சங்கருக்கோ செயல்வழி மூலம் குழந்தைகளுக்கான தொடர் பயிற்சிகளை அளிக்கவேண்டும் என ஆசை இருக்கு. நண்பர் சரவணனுக்கும், நண்பர் வேணுவிற்கும் விற்பனைக்கான கள வடிவங்களைத் தீர்மானிப்பதில் புதிய அணுகு முறைகளில் கவனம் குவித்து வருகின்றனர். எங்கள் எல்லோருடைய ஆசைகளையும் வண்ணமிகு போஸ்டர்களில் வடிவமைத்துத் தர நண்பர் நடராஜும் காத்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கோ இது பின்னாளில் அறிவியல் நூல்களுக்கான புதிய அணுகுமுறைகளை உள்ளடக்கிய ஒரு பதிப்பகமாக மாறவேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. இப்படி பலதரப்பட்ட கனவுகளை நனவாக்குகிற இடமாக, இது தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் பொதுவான இலக்காக இருக்கிறது.
வேறு புத்தக நிலையங்கள் / நிறுவனங்களின் திறப்பு விழாவிற்குச் சென்ற அனுபவம் உண்டா? அதிலிருந்து 13/02/2022 ல் நடைபெற்ற திறப்புவிழா எவ்வகையில் வேறுபட்டு இருப்பதாக உணர்கிறீர்கள்?

‘வேறுபட்டு’ என்பதை, யதார்த்தமாக இருக்க வேண்டும் என விரும்பினோம். அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களின் பங்களிப்பு இருந்தது. மேற்கு மண்டல அறிவியல் மைய இயக்குநர் முனைவர். பழனிசுவாமி அவர்களின் அறிவியல் தின சிறப்புரை எங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளித்தது. எங்களோடு இணைந்து அறிவியல் மையம் ஒன்றிய அளவில் பல முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதை அவருடைய உரை உறுதி செய்தது. அது போலவே சிறார் எழுத்தாளர் விழியனின் வருகையும்.
அன்றைய நிகழ்வில் அவர் பகிர்ந்துகொண்ட “பெற்றோர் பேரவை” என்னும் கருத்து, தற்பொழுது உருப்பெற்றுக் கொண்டு வருகிறது. விரைவில் அதற்கு முழு வடிவம் கிடைத்தவுடன், நாங்கள் அதனை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறோம். அவருடைய நூல்களை எங்களுக்கு இலவசமாக அளித்து உதவியிருக்கிறார். “வண்ணமிகு வளர் இளம்பருவம்” எனும் தலைப்பில் பெற்றோர்களுடன் விவாதித்த கருத்துகள் கூட தொகுக்கப்பட்டு விரைவில் சிறிய நூலாக வரலாம்.
அன்றைய தினத்தின் காலைப் பொழுதில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இந்நிகழ்வை தங்கள் இல்ல விசேசமாகக் கருதி ஒவ்வொருவரும் தமக்குரிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றினர். வேலைப்பகிர்வு ஒரு நிகழ்வை எளிமையாகவும், அழகாகவும் ஆக்கும் என்பதற்கு தொடக்க நிகழ்வே உதாரணம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மஹதி, திவித், தன்வந்த், இளமதி, மகிழன், சுப ஹரிணி, ஹரி ஆகியோரின் அலங்கரிப்புப் பணிகள் எங்களை திக்குமுக்காடச் செய்து விட்டன. அடுத்த தலைமுறையினரின் இந்த ஆர்வமும், அர்ப்பணிப்பும் எங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளித்தது.
இதுவரை எழுத்தாளர்கள், புத்தக வாசகர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த எதிர்வினைகள், பின்னூட்டங்கள் என்னவாக இருக்கிறது?
நல்ல வரவேற்பு இருக்கிறது. அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தோம். இதுவரை வாசகராக சென்றதற்கும், இம்முறை புத்தகக் கடை சார்பாக சென்றதற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தோம். பலரும் ஆர்வமுடன் எங்கள் முயற்சியை ஊக்குவித்தனர். சீதை பதிப்பகம் ஜெய்கணேஷ், காலச்சுவடு அய்யாசாமி, பொன்னுலகம் குணா, ஐம்பொழில் முருகவேள், காடோடி நக்கீரன் உள்ளிட்ட பலரும் உடன் பயணிப்பதை உறுதிப்படுத்தினர். வாசகர்களில் பாலசரவணனும், கலைக்கோவனும், ராம்கோபாலும் பல விசயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கின்றனர்.
“ஒரு வருசமாவது கடையை நடத்திடுங்க… ஒரு வருசம் நடத்திட்டா கூட போதும்”, சென்னிமலை மாதிரியான சின்ன ஊர்களில் நட்டமில்லாம நடத்துவது ரொம்பக் கடினமான ஒன்று, “கை நட்டப்பட்டுக்காதீங்க” போன்ற எதிர்மறை சுட்டல்களும் வராமல் இல்லை. இதனையும் கருத்தில் கொண்டுதானே இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். இவை எல்லாவற்றையும் விட பெரிதும் உற்சாகமளித்தது நியூயார்க்கில் இருந்து வந்த அழைப்புதான். ஒரு நள்ளிரவின் இரவில் வந்த அழைப்பு அது. சென்னிமலையைச் சார்ந்த திரு.சண்முகம். தொழில் நிமித்தமாக தற்பொழுது அங்கு வசித்து வருகிறார்.
அவருக்கு எப்படியோ எங்கள் நிகழ்வின் அழைப்பு சென்றிருக்கிறது. சென்னிமலையின் முதல் புத்தகக் கடை குறித்த மகிழ்ச்சியை எங்களிடம் பகிர்ந்துகொண்டது பெரும் நம்பிக்கையும்,உற்சாகமும் கொடுத்திருக்கிறது. தினசரி மாலை பள்ளி மாணவர்கள் வந்து போகும் இடமாகவும் மாறிக் கொண்டு வருகிறது. இப்படியான எதிர்வினைகள், எங்கள் நம்பிக்கையை அதிகரித்து இன்னும் முன் செல்ல பெரும் உத்வேகத்தைத் தொடர்ந்து கொடுக்கும் என முழுமையாக நம்புகிறோம்.
அறிவொளி புத்தகாலயத்தின் அடுத்த மூன்று மாத உடனடிப் பணிகள் என்ன?
வாரச் சந்தையில் நூல்கள் விற்பது, பள்ளிகள்தோறும் சென்று ஏதேனும் ஒரு நிகழ்வின் வாயிலாக புத்தகம் விற்பது , மாவட்டத்தில் உள்ள அறிவியல் கிளைகளின் மூலம் பரவலாக அமைப்பையும், புத்தகங்களையும் கொண்டு செல்வது, குழந்தைகளுக்கான தொடர் வகுப்புகளை நடத்துவது, ஒன்றிய அளவில் இலக்கியப் போட்டிகளை நடத்தி பரிசளிப்பது, நூல் வெளியீட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொடுப்பது, ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு தொடர் நிகழ்வு ஒன்றையும் திட்டமிட்டு வருகிறோம்.
இவை எல்லாவற்றையும் நிகழ்த்துவதற்கான சாத்தியங்கள் எங்களுக்கு எல்லாத் திசைகளிலும் தென்படுகின்றன. ஒருவேளை முடியாமல் போனாலும், அந்த அனுபவத்தின் துணை கொண்டு அடுத்த நகர்வை இன்னும் செறிவாகத் திட்டமிடுவோம். எங்களுக்கு உகந்த வேகத்தில் ஒரு இன்ச் என்ற அளவிற்காவது நாங்கள் நகர்ந்து கொண்டேதான் இருப்போம்.