இந்தியக் சமூகம் இருளடைந்து பழமைநோக்கி அதிவேகமாக இழுத்துச் செல்லப்படும் அவலநிலை நமது கல்வி உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் அரங்கேறி வருகிறது. இச் சமூகத்திற்கு ‘ஆய்வுக்கூடங்களைவிட காவிக் கூடங்களே தேவை’ என்று பகிரங்கமாக அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிக்கை விடுகிறார்கள்.
ஐ.ஐ.டி. பெயரில் அறிவியல் நாட்காட்டி என்று போலியாக அறிவித்து பிற்போக்குப் பழமைவாத விஷ விதையை விதைத்திருக்கிறார்கள். இந்திய அறிவியலாளர் குழுமம் ஏற்கெனவே பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டுவரும் நிலையில், தேர்ந்த ஆழமான அறிவியல் ஆய்வுகளுக்கு நிதி உதவி செய்வதை பகிரங்கமாக நிறுத்தி வைப்பதும் நடக்கிறது.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மூடநம்பிக்கைகளை சமூகத்தின்மீது திணிப்பதை ஒரு கூட்டம் தனது அரசியல் ‘சாணக்கியத்’ தனமாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட உண்மையான தியாக விடுதலைப் போராளிகள், அவர்கள் சமூக விடுதலைப் போராளிகளாகவும் இருந்தமையால் – குடியரசு தின அணிவகுப்பில் அவமானப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டார்கள்.
நோய்த் தொற்று இன்னமும் விடைபெறாத இந்த கொரோனா காலத்தில், அறிவியல் மட்டுமே மக்களைக் காக்கும் வழி என்பது வரலாற்றுச் சாட்சியமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் வறுமை ஒழிப்பிலிருந்து சமதர்ம சமுதாய உருவாக்கம் வரை அறிவியலே சமூகத்தின் அரணாக நிற்கிறது என்பதே வரலாறு.
மனிதனை சாதி – மதவெறி ஆபத்துகளில் இருந்து மீட்கும் பலம் அறிவியலுக்கே உரிய எழுச்சி நோக்கம் ஆகும். பரிணாமவியல் முதல் சார்பியல்வரை, பகுப்பாய்வு முதல் பகுத்தறிவு வரை சமூகத்தின்மீது அதன் பிரமாண்ட வளர்ச்சி மீது அறிவியலும் தொழில்நுட்பமும் இன்று அன்றாட மனிதனின் அங்கமாகி ஏராளமான புரட்சிகர முன்னெடுப்புகளை உலகெங்கும் விதைத்திருக்கிறது. நம் இந்திய மண்ணில் விஷமிகளின் கூடாரம் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கூட மூட-நம்பிக்கை மதவாதப் பிரச்சார கருவியாகப் பயன்படுத்தும் சூழ்ச்சியை நாம் முறியடிக்கவேண்டும்.
மக்களை அறிவியல் சிந்தனை மயமாக்கிய அறிவியலை – மக்கள் இயக்கம் ஆக்குவோம். நல்ல அறிவியல் நூல்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுத்த சந்ததிகளுக்கு விதையாக்கிட பரிசளிப்போம். அறிவியல் – விழிப்புணர்வின் மூலம் மூடநம்பிக்கைகளுக்கும் மதவாத சாதிய வெறியர்களுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுவோம். வளரச்சிக்கான ஆக்கப்பூர்வ அறிவியல் எழுச்சியை நோக்கமாக சமூகத்தில் விதைத்து மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவோம். அறிவியலே வெல்லும்.