சுரேஷ் இசக்கிபாண்டி
மார்க்சிய சிந்தனையை எளிய முறையில் கற்கவும், கற்பிக்கவும் உதவும் நூல்களில் முதன்மையான நூலாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இனியும் இருக்கும் என்ற உணர்வை இப்புத்தகத்தை வாசிக்கும்போது அனைவருக்கும் தரும். பல ஆண்டுகாலம் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்களிடையே மார்க்சியம் கற்க உதவிய ஒரு அற்புத நூலாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
எட்டுப் பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இப்புத்தகம், வெறும் 95 பக்கத்திற்குள் அனைத்தையும் சொல்லி வாசகனை சிந்திக்கத் தூண்டி விடுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வாசனோடு உரையாடும் பாணியில் உதாரணத்துடன் எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். உலகம்: ஓர் அறிவியல் பார்வை என்னும் முதல் பகுதியில் துவங்கி, நாம் என்ன செய்ய வேண்டும் என கூறும் 8வது பகுதியோடு நிறைவடைகிறது இப்புத்தகம்.
உலகம்: ஓர் அறிவியல் பார்வை
மனித சமூகம் நேற்று, இன்று, நாளை, எப்படி எல்லாம் இருந்தது.. இருக்கிறது.. இனி இருக்கும்.. என்பதை மார்க்சும், ஏங்கெல்சும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் உருவான அறிவியல் கோட்பாடே மார்க்சிய தத்துவம் ஆகும். புற உலகில் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போலவே சமூக மாற்றங்களும் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே நடக்கின்றன என்ற ஆய்விற்கு இறுதியாய் அவர்களை வர வைத்தது. அத்தகைய ஆய்வு கோட்பாடானது இந்த உலகில் உள்ள மதம், இனம், வர்க்கம், பாலினம், தனிமனித துதி என அனைத்து பிற்போக்குத்தனமான தத்துவங்களுக்கும் கருத்துக்கும் எதிரானதாக இருந்தது.
சமூக வளர்ச்சி விதிகள் என்னும் இரண்டாவது பகுதியில், “முரண்பட்ட வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே மனித சமூக வளர்ச்சியின் உந்து சக்தியாக இருந்து இருக்கிறது என்கிற பார்வையை வரலாறு குறித்த மார்க்சிஸ்டுகளின் அணுகுமுறையாகும். முதலாளித்துவம் ஆளும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய போராட்டமே முதலாளித்துவ புரட்சிக்கு மேற்கத்திய நாடுகளில் வழிகோலியது” என்கிறது மார்க்சிய தத்துவம்.
முதலாளித்துவ சமூகத்தில் மிகை உற்பத்தி காரணமாக முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடியில் சிக்கும். அதன் விளைவாக முதலாளித்துவம் சமூக முன்னேற்றத்திற்கு தடையாக மாறும் நிலை உருவாகும். இந்த சூழலில்தான் கற்பனைவாத சோசலிசத்திற்கு மாற்றாக விஞ்ஞான சோசலிச சிந்தனைகள் பொருளிய நிலைமைகளிலிருந்துதான் எழும் என்பது உண்மைதான். இருப்பினும், அப்படி எழுகிறபோது அவை மனிதனின் செயல்பாட்டின் மீதும், அதன் விளைவாக சமூக போக்கின் மீதும், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பழைய உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்ட கருத்துகள் பிற்போக்கானவை: அவை மனிதனின் செயலாக்கத்தை பின்னுக்கு இழுக்கும் என்கிறார் ஆசிரியர்.
முதலாளித்துவ சமூகம்
நிலப் பிரபுத்துவ சமூகத்திலிருந்தும், அதன் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு அதிகாரத்தை கைப்பற்ற தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து தனது பொது எதிரியை வீழ்த்தி நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி, அதில் தனக்கு சாதகமான நபர்களை அதிகாரத்தில் அமர வைக்கும் முதலாளித்துவம்.
மேலும் இச்சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஆலையிலும் அல்லது நிறுவனத்திலும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி அவர்களால் உருவாக்கப்படும் பொருளின் முழு மதிப்பிற்கு நிகரானதல்ல: மாறாக பாதியாகவோ அல்லது அதைக்காட்டிலும் குறைவானதாகவோ இருக்கிறது. அதாவது வேலை நேரத்தில் சிறு பகுதி தனக்காகவும் எஞ்சிய பெரும் பகுதி முதலாளிக்காகவும் தொழிலாளி உழைக்கிறான்.
தன் வேலைநாள் ஒன்றில் தொழிலாளி உற்பத்தி செய்யும் இந்த உபரி மதிப்பை முதலாளி ஒட்டு மொத்தமாகத் தனதாக்கிக் கொள்கிறான். எனவே உபரி மதிப்பை கூட்டுவதற்கு முதலாளி எப்பொழுதும் தொடர்ந்து முயற்சிக்கிறான். இதனை அவன் பல வழிகளில் சாத்தியமாக்கலாம். உதாரணமாக, தொழிலாளியின் கூலியை குறைப்பதன் மூலம் சாத்தியப்படுத்தலாம்; எட்டு மணி நேர உழைப்பில் கூலிக்கு நிகரான உழைப்பு நேரத்தின் பங்கு குறைந்து போக கூடுதல் பங்கு முதலாளிக்குச் சென்றுவிடுகிறது என்பது இதன் பொருள். உழைப்பின் செறிவைக் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது உழைப்பின் வேகத்தை உயர்த்துவதன் மூலமோகூட இதே விளைவை பெற முடியும்.
வேலை நேரத்தை நீட்டிக்கும் போதும் முதலாளிக்கான பங்கு கூடுகிறது. மறுபுறம், தன் நிலைமையை முன்னேற்றுவதற்காகத் தொழிலாளி, கூலி உயர்வு கோரியும் வேலை நேரத்தைக் குறைக்கக் கோரியும் மற்றும் உழைப்பு வேகப்படுத்தப்படுவதை எதிர்த்தும், போராடுகிறான்.
முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய கட்டம்
முதலாளித்துவத்தின் அடுத்தகட்ட பரிமாணம் தான் நிதிமூலதனக்குழுக்களின் ஏகாதிபத்திய கட்டம். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள நிதிமூலதனக் குழுக்களின் கையில் செல்வம் மையப்பட்டுக் குவிவதன் விளைவாக பெரும் வல்லரசுகளுக்கிடையில் மிகப்பெரிய போர் ஏற்படுகிறது. தோற்றத்தில் முழுக்க முழுக்க ஒரு பொருளாதார நிகழ்முறையாகத் தெரிகிற உற்பத்தியும், மூலதனமும் மையப்படுத்துவதுதான் சமூக அழிவைத் தரும் போருக்கு இட்டுச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி விதி விளைவிக்கிற சமூக அழிவு இதுமட்டுமல்ல. உற்பத்தி சக்தியின் பெரும் வளர்ச்சியும், ஏகபோகக் குழுக்களுக்கு இடையிலான போட்டியும் இணைந்து முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன.
நாட்டின் பெருமளவு தொழிலாளர்களின் நலன்களைப் புறந்தள்ளி விட்டு அந்த தலைவர்கள் தங்கள் பகுதியினரின் சார்பாக முதலாளிகளோடு இணைந்து கொண்டனர், ஏகாதிபத்திய காலகட்டம் வளர்ச்சியடைய அடைய தொழிலாளிகள் மற்றும் சோசலிச இயக்கத்தின் தலைமைப் பகுதி தங்கள் நாட்டின் நிதி மூலதன குழுக்களின் ஏகாதிபத்திய கொள்கையோடு நெருக்கமாக இணைந்து கொண்டது. இது உலகப் போரின் போது வெளிப்படையாகத் தெரிந்தது; அச்சமயம் தொழிலாளி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைமை உலகெங்கும் (மார்க்சிஸ்ட்களாக போல்ஷ்விக்குகள் இருந்த ரஷ்யா நீங்கலாக) ஏகாதிபத்திய போரோடு தங்களை இணைத்துக்கொண்டன.
பகுதியினர் பிற நாட்டு தொழிலாளிகளைக் காட்டிலும் உயர்தரமான ஆளும் வர்க்கத்தின் நலன்களோடு தங்கள் நலன்களை அடையாளப்படுத்திக் கொண்டதன் விளைவாக வர்க்கப் போராட்டத்தை புறந்தள்ளிய இத்தகைய சந்தர்ப்பவாத பார்வை பல நாடுகளில் சோசலிச இயக்கம் மார்க்சிய நிலைப்பாட்டை கைவிடுவதற்கான அடிப்படையாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.
மேலும் இப்போது உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் முதலாளித்துவ சுரண்டலின் தவிர்க்க முடியாத விளைவு என்பதும், ஏகாதிபத்திய குழுக்களைத் தூக்கி எறிகிறபோதுதான் அப்போராட்டங்கள் முடிவுறும் என்பதும் மார்க்சிஸ்ட்களின் பார்வை. எனவே, அவர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதனக் குழுக்களை காலனி மக்களுக்கும் தங்களுக்குமான பொது எதிரியாகப் பார்க்கின்றனர்.
நவீன காலத்தில் வர்க்கப் போராட்டங்கள்
உற்பத்தி முறையிலிருந்து போராட்டங்கள் பிறக்கின்றன. உற்பத்தி முறை சமூகத்தை வர்க்கங்களாகப் பிரிக்கிறது. அவ்வர்க்கங்களில் ஒன்று (அடிமை, பண்ணை அடிமை, கூலித் தொழிலாளி) உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிற போது மற்றொரு வர்க்கம் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாமல் உற்பத்திப் பொருளைச் சொந்தம் கொள்கிறது.
முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைத் தூக்கி எறிகிற புரட்சிக்குத் தயார்படுத்துவது, அப்புரட்சியைக் கட்டுவது மற்றும் ஒரு புதிய உற்பத்தி அமைப்பை – சோசலிசத்தை – கட்டுவது ஆகியவையே தொழிலாளி வர்க்கக் கட்சியின் இலட்சியமாக மார்க்ஸ் பார்த்தார்.
“போராட்டங்களின் வெற்றி உடனடி கோரிக்கைகளை வெல்வதில் இல்லை; மாறாக உண்மையான வெற்றி தொழிலாளிகளின் பரந்துபட்ட ஒற்றுமை மேலும் மேலும் தொடர்ந்து வளர்வதில்தான் உள்ளது.” இப்போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில், முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக பொதுவான நலன் கொண்ட ஒரு வர்க்கமாக தொழிலாளிகள் தங்களை உணரத் தொடங்குகிறார்கள். இவ்வளர்ச்சியை முன்னெடுக்க தொழிலாளி வர்க்க அரசியல் கட்சி உதவும்;
பொருளாதார நெருக்கடியும் போர்களும் தொழிலாளிகளுக்கு பெருந்துயர்களைத் தருகிற போது, முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்கிறவரை, வர்க்கப் போராட்டங்கள் ஏன் நடைபெற வேண்டும் என்பதை அக்கட்சி விளக்கும்; உற்பத்தி முறையை மாற்றுவதன் மூலமே மோதல்களும் துயரங்களும் முடிவுறும். ஆனால், உற்பத்தி அமைப்பை மாற்றுவது என்பது முதலாளித்துவ வர்க்கத்தை வலுக்கட்டாயமாகத் தூக்கி எறிவதில் அடங்கியிருக்கிறது என்பதையும் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சி விளக்கும்.
பிரதிநிதித்துவ நிறுவனங்களில் (நாடாளுமன்றம், சட்டமன்றம்) கூடுதல் வாக்குகள் பெறுவதால் நிலைமையில் மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடாது என்பதை மார்க்ஸ் அறிந்திருந்தார்.
உற்பத்தி அமைப்பில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் வசமே உண்மையான அதிகாரம் இருக்கும்; பிரதிநிதித்துவ நிறுவனத்தில் என்ன நிகழ்ந்தாலும் அவ்வர்க்கம் அரசு இயந்திரத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது.
பிரதிநிதித்துவ நிறுவனத்தில் ஜனநாயகம் எவ்வளவு ஆழமாக இருப்பினும் அதனால் அரசு இறுக்கமான மையத்திற்குள் ஊடுருவ முடிவதில்லை. கடுமையான பிரச்சினை எழும் வரையில் ஜனநாயக பாராளுமன்ற கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் இல்லை என்ற உண்மை வெளிப்படையாகத் தெரிவதில்லை.
சலுகைகளை வெல்லவும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தீர்மானகரமான போராட்டத்திற்கு தொழிலாளிகளைத் திரட்டவும் இன்றைய பாராளுமன்றங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும். எனவே, பாராளுமன்ற ஜனநாயகம் மூலமே புதிய சமூக அமைப்பை உருவாக்க முடியாது, அது முழுமையான போராட்டத்தின் ஒரு பகுதிதான் என்ற போதும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான போராட்டம் பயனற்றதல்ல. (மக்கள் எதிர்ப்புகளுக்கான வாய்ப்புகளை பாராளுமன்ற நிறுவனங்கள் வழங்குவதால் அவற்றை பாசிசம் எங்கும் அழிக்கிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.)
சோசலிச சமூகம்
சமூகத்தின் கூட்டு உழைப்பால் உருவாகிற உற்பத்தி பொருள் சமூகத்தின் சொத்தாக இல்லாமல் ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின் சொத்தாக உள்ளது. எனவே சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருளை சமூகத்திடம் கொடுப்பதே ஒரு சோசலிச சமூகத்தை கட்டமைக்கும் முதல் படியாக இருக்க வேண்டும்; முதலாளித்துவத்தின் கீழ் தனியார் உடைமையாக இருந்த ஆலைகள், சுரங்கங்கள், இயந்திரங்கள், கப்பல்கள் மற்றும் பிற உற்பத்திக் கருவிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகத்தின் உடைமையாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
தனிப்பட்ட உற்பத்தியையும் தனிப்பட்ட உடைமையையும் கூட்டு உற்பத்தியாகவும் கூட்டு உடைமையாகவும் மாற்றுவதே நமது முதற்பணியாக இருக்கும். இந்த மாற்றம் பலவந்தமானதாக இருக்கக்கூடாது; ஆனால், முன்னுதாரணத்தின் மூலமாகவும் சமூக உதவி வழங்குவதன் மூலமாகவும் நடைபெற வேண்டும். (மார்க்சிசத்தின் கையேடு, பக். 564)
புரட்சி நடந்த மறுநாளே சோசலிசத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் கட்டாயப்படுத்தாது. எனவே புரட்சித் தீ சோசலிசத்தை உடனடியாக சாதித்துவிடவில்லை, சாதிக்கவும் முடியாது. இது போன்ற ஏராளமான விளக்கங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.
புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு:
எமிலி பர்ன்ஸ் (Emile Burns) மற்றும் அவரது மனைவி எலினோர் (Margaret Elinor Burns) இருவரும் ஆரம்ப காலங்களில் சுதந்திர தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். எமிலி 1921இல் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPGB) சேர்ந்தார், அதைத் தொடர்ந்து 1923 இல் எலினோரும் சேர்ந்தார். செயின்ட் பான்கிராஸ் டிரேட்ஸ் கவுன்சிலின் பிரச்சார செயலாளராக பணியாற்றிய போது, பிரிட்டன் பொது வேலைநிறுத்தத்தின் போது தவிர, தொழிலாளர் ஆராய்ச்சி துறையின் செயலாளராக எமிலி பணிபுரிந்தார்.
எமிலி பர்ன்ஸ் 1930களில் லண்டன் பஸ்மேன்களின் ரேங்க் மற்றும் ஃபைல் (London busmen’s rank and file) இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார், மேலும் அதன் செய்தித்தாளான The Busmen’s Punch திருத்தினார். 1935இல், அவர் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) இன் நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், இறுதியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். அவர் கட்சிக்குள் பல பதவிகளை வகித்தார், கட்சிக்குள் பெரும்பாலும் கலாச்சார அல்லது அரசியல் கல்வி நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தினார்; கட்சியின் முதன்மை பிரச்சாரகராகவும் பணியாற்றினார். அவர் Communist Review என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணி செய்தார், பின்னர் உலகச் செய்திகளின் ஆசிரியராக இருந்தார். 1950களின் முற்பகுதியில், கட்சியின் புதிய திட்டமான (British Road to Socialism) பிரிட்டிஷ் ரோடு டு சோசலிசத்திற்கான தயாரிப்புப் பணிகளையும் அவர் செய்தார்.
எமிலி பர்ன்ஸ் ரஷ்ய, பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் இருந்து அரசியல் மற்றும் அரசியல் சாராத புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார், இதில் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸின் டூரிங்க்கு மறுப்பு மற்றும் கார்ல் மார்க்ஸின் உபரி மதிப்பு கோட்பாடுகளின் (Friedrich Engels’ Anti-Dühring, and parts of Karl Marx’s Theories of Surplus Value) என சில முக்கியமான படைப்புகளும் அடங்கும். மேலும் அவர், மார்க்சியத்தின் கையேடு, மார்க்சியம் என்றால் என்ன மற்றும் மார்க்சிசத்தின் அறிமுகம், மார்க்சியத்தின் தொடர்ச்சியான அடிப்படை விளக்கங்கள் உள்ளிட்ட பிரபலமான புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
மேலும் இந்நூலை இளகுவான தமிழில் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்த திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா.பொன்னுராஜ் மற்றும் தமிழகத்தின் முற்போக்கு பதிப்பகங்களில் தனக்கு உரித்தான பாதையில் தடம் புரளாமல் பயணிக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் எனது செம்மார்ந்த வாழ்த்துகள். அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புத புத்தகம் இது