நிகழ் அய்க்கண்
2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிதி அமைப்புகள் வெடித்துச்சிதறியதுபற்றியும் அதன் காரணங்கள் பற்றியும் நூலாசிரியர் கூறியதை சுருக்கமாகத் தொகுத்து கீழே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வால் தெருவை மையமாகக்கொண்டு 1971 ஆம் ஆண்டிற்குப்பிறகு உலக நாடுகளிலிருந்து கப்பம் வசூலித்துவரும் அமெரிக்க முதலாளித்துவமே அகில உலக பகாசுரன் ஆகும். இக்காலகட்டமானது, அமெரிக்காவிற்கும் பிற உலக நாடுகளுக்குமிடையே வணிகம் மற்றும் நிதிமூலதன உபரியும் பாயும் திசையில் ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்ட காலமாகும். அதாவது, அமெரிக்கா தனது வர்த்தக மற்றும் பட்ஜெட் பற்றாக்குறையை வேண்டுமென்றே அதிகரித்துக்கொண்டு அதன் மூலம் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டது.
1980 களில் லத்தின் அமெரிக்காவில் அர்ஜெண்டினா கடன் நெருக்கடியினால் வீழ்ச்சியடைகிறது, இத்துடன், மூன்றாம் உலக நாடுகள் பலவும் நச்சுத்தன்மைமிக்க கடன் வலையில் சிக்குகின்றன. இதன் தொடர்ச்சியாக, 1991 ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு, 2001 ஆம் ஆண்டில் டாட்காம் வீழ்ச்சி ஏற்படுகிறது. இப்படியான நெருக்கடிகள் எல்லாம் ஓரளவுக்கு தலமட்டத்தைச் சேர்ந்தவையாகவே இருந்தன.
2008க்குப் பிறகான பெருவீழ்ச்சி என்பது உலக அளவிலும் நவ தாராளமயத்தின் இதயப்பகுதியிலும் பேரழிவை ஏற்படுத்தியது எனலாம்.
அமெரிக்காவைப் பொருத்தவரை 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட அடமானக்கடன் நெருக்கடியானது, நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவி அனைத்தையும் பாதித்தன. அதாவது, 1980 களில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 160 சதம் என்ற அளவுக்கு இருந்த கடனானது, 2008 ஆம் ஆண்டில் 350 சதம் அளவுக்கு மாறிவிட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். பிரிட்டனும் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டரை மடங்கு அளவுக்குமேல் கடன்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு வீழ்ச்சிக்கு, தனியாரின் தரநிர்ணய முகமைகளும் மற்றும் அரசின் முறைப்படுத்தும் அமைப்புகளும் இதனோடு தொடர்புடைய அனுமானத்தை அடிப்படையாகக் கொண்ட, பங்குச்சந்தைகளுமே காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, நச்சுத்தன்மைகொண்ட நவதாராளமயமும், நிதிமூலதனமும் ஒன்றைஒன்று பலப்படுத்திக்கொள்ளும் நிகழ்முறைகளாக உருவாகியிருக்கின்றன.
பொருளாதார வீழ்ச்சிக்காண காரணத்தை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கவேண்டியுள்ளது. அதாவது, 1960 காலகட்டங்களில் அமெரிக்காவானது ஒன்று, வர்த்தகப்பற்றாக்குறை, மற்றொன்று பட்ஜெட் பற்றாக்குறையினால் தவித்துவந்தது. அமெரிக்க ஆட்சியாளர்கள் இவ்விரண்டு பற்றாக்குறைகளையும் குறைப்பதற்குப் பதிலாக, தாராளமாகவும், உள்நோக்கத்துடனும் பற்றாக்குறையை அதிகரிப்பதற்கான முடிவை எடுத்தனர்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து, பிற நாட்டு (ஜெர்மனி, ஜப்பான், சீனா) மக்களின் உபரி உற்பத்திப்பொருட்கள் மற்றும் மூலதனத்தை, ராட்சச தூசி உறிஞ்சியைப்போல தனது நாட்டிற்குள் இழுத்துக்கொண்டு பல பத்தாண்டுகள் செயல்பட்டன. ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளினால் ஈட்டப்பட்ட லாபத்தில் 70 சதவிகிதம் அளவிலானது முதலீடாக வால் ஸ்ட்ரீட்டுக்கே திரும்பிவந்தது. இந்த மூலதனப் பாய்ச்சலானது நேரடி முதலீடு, பங்கு, புதிய நிதி ஆவணங்கள் என மாறிவிட்டது.
நிலமும், உழைப்பும் சரக்குமயமாக்கப்பட்ட நிலையில் அவற்றிற்குப் பிறந்ததுதான் நிதி மூலதனமயமாக்கலாகும். இதன் வேர்களை, தொழில்துறை மற்றும் சந்தைச் சமுதாயங்கள் தோன்றிய காலங்களிலும் காணமுடிகிறது. சரக்குமயமாதல், நிதிமூலதனமாதல், மற்றும் நிகழ்முறைகளால் தவிர்க்க முடியாத விதத்தில் தோன்றுகின்ற நெருக்கடிகள் ஆகிய அனைத்தும் ஒரேநேரத்தில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டியதினால் விளைந்ததுதான் இதுபோன்ற பெருமந்தம்.
துரிதமான பொருளாதார வளர்ச்சி எப்போதுமே நீர்க்குமிழிகளை உருவாக்குவதாகவே இருந்து வந்துள்ளது. பெருநிறுவன, நிதிமூலதனம் எழுச்சியடைந்த காலம் முழுவதிலும் ஒன்றன்பின் ஒன்றாக நிதிநெருக்கடிகள் மீண்டும்மீண்டும் தோன்றிய வண்ணம் இருந்து வந்துள்ளன. ஒவ்வொருமுறையும் நெருக்கடிகள் உருவாகும்போது, வங்கிகள் கவிழ்கின்றன. தொழில்கள் வீழ்ச்சியடைகின்றன. தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாக லேஆஃப் செய்யப்படுவதும் நிகழ்கிறது.
பணமும் உழைப்பாளியும் தனிச்சிறப்புவாய்ந்த சரக்குகள் ஆகும். இந்த இரண்டு சரக்குகளுமே முதலாளித்துவ இயந்திரத்தின் தொல்லைதரக்கூடிய சக்திகளாகும். தொழிலகங்களின் முதலீட்டு அலையின் உச்சியில் இவையிரண்டிற்குமான தேவையை உணரமுடியும்.
வளர்ச்சிக்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் இயந்திரங்களைப்பயன்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தல், உழைப்பின் திறனைத்தீவிரப்படுத்துதல் ஆகியவை தேவைப்படுகின்றன. சரக்குமயமாக்கல், நிதி மூலதனமாக்கல், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் ஆகியன அதிகரிக்கும்போது சந்தைச்சமுதாயங்கள் செழித்து வளர்கின்றன.
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு, அமெரிக்கா ஒரு பிரதான கடன்வழங்கும் நாடாக உருவெடுத்தது மட்டுமின்றி, முதலாளித்துவம் தோன்றிய காலத்திலிருந்து ஒற்றை நாணயத்தை (டாலர்) நம்பியிருந்தது. அத்துடன் ஒற்றைப் புவிஅதிர்ச்சி மையத்தால் (வால் ஸ்ட்ரீட்) நிதியும் வழங்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டு, பிரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் டாலரை மையமாக ஏற்றுக்கொண்ட ஒரு பணமுறை வரைபடம் வகுக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் நாணயமும் ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை விகித அடிப்படையில் டாலருடன் இணைக்கப்படும் என்பதே இதன் பிரதான கருத்தாகும்.
அமெரிக்காவைப்பொருத்தவரை சர்வதேச அமைப்பு முறையில் போதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக டாலரின் பரிவர்த்தனை மதிப்பை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு 35 டாலர் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே ஒரு சர்வதேச மாநாட்டுரையில், கீன்ஸ் ஒரு ஆலோசனையை முன்வைத்தார்,
அதாவது, ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகிற்காக ஒரு சர்வதேச நாணய ஒன்றியம் உருவாக்கப்படவேண்டும்.
அதற்கு ஒரே பொது நாணயமும் வங்கியும் இருக்கவேண்டும் எனவும், சில நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட உபரிகள் குவிக்கப்படுவதையும், மற்ற நாடுகளில் பற்றாக்குறைகள் நீடித்திருப்பதையும் தவிர்க்கவேண்டும் என்றார். அதுமட்டுமல்லாது, இதனைத் தவிர்ப்பதற்கு ஒரு உலகளாவிய உபரி மறுசுழற்சிப் பொறியமைப்பைக் கொண்டதாக ஒரு சர்வதேச அமைப்பு இருக்கவேண்டும் எனவும், அப்படியில்லையெனில் அது ஒரு உலகளாவிய பேரிடராக ஏற்படக்கூடும் என்றும் கீன்ஸ் கூறினார்.
அமெரிக்காவிற்கோ, வேறொரு உலகளாவிய திட்டம் இருந்தது. அத்திட்டத்தின்படி, டாலரே நடைமுறையில் உலக நாணயமாக ஆகிவிடும் எனவும், ஐரோப்பா மற்றும் ஜப்பானிடமிருந்து கிடைக்கும் நேரடி முதலீடு மற்றும் அரசியல் ஆதரவுக்கு ஈடாக பொருட்களையும் மூலதனத்தையும் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனவும், அதுமட்டுமல்லாது, அந்நாடுகளுடனான வர்த்தகத்தில் கிடைக்கும் உபரிக்குப்பதிலாக அன்னிய முதலாளித்துவ மையங்களுக்கு நேரடியாக நிதிமூலதனத்தை அடிப்படையாகக்கொண்ட அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படும் எனக்கருதி செயல்பட்டது.அதன்பின்னர், ஐரோப்பாவை டாலர் மயமாக்குவதற்கும், ஜெர்மனியை புனர்வாழ்வு அளிப்பதற்கும் மார்ஷல் திட்டம் 1947 மார்ச்சில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டது.
இதன்நோக்கம் 1929 ஆம் ஆண்டு நெருக்கடியைப் போன்றதொரு நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதேயாகும். இத்திட்டம் பெரும் அளவிலான பணம் மட்டுமின்றி, முக்கியத் தொழில் நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியை தொழில்மயமாக்கலின் மூலம் உள்ளிழுத்து, அதன்பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியது மட்டுமின்றி, ஜப்பானுக்கும் நிதியுதவி அளித்து தொழில்முன்னேற்றம் அடைய வழிவகுத்தது. சுருக்கமாகக் கூறினால், விளிம்புநிலை நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும், ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்கு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகள் என்ற பாத்திரத்தை அளிப்பதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் உலகளாவிய திட்டமானது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றபோதிலும் அந்தத் தாக்கம் சமச்சீரற்றதாக இருந்தது. உலக வணிக சமத்துவமின்மையானது அமெரிக்காவிற்கு எல்லையற்ற காலத்துக்குச் சாதகமாக இருக்கும், உலக உபரி தேசம் என்கிற அந்தஸ்து தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று வாஷிங்டன் நினைத்தது. ஆனால், உலக அசமத்துவ நிலையானது அமெரிக்கா ஒரு பற்றாக்குறை நாடு என்ற நிலையில் விட்டுச் செல்லப்படலாம் என்பதை அந்நாட்டின் கொள்கைவகுப்பாளர்கள் முன்கூட்டியே காணத் தவறிவிட்டனர்.
இதற்கிடையே, 1971 ஆம் ஆண்டின் பிரட்டன்வுட்ஸ் ஒப்பந்தத்தின்படி, 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கத்தை மாற்றிக்கொள்ளலாம் என்கிற வரையறையை முடிவுக்கு கொண்டுவருவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். இதன்விளைவு, பணவீக்கமும், வேலையின்மையும் அதிகரித்தது. அதன்பின்னர், பெட்ரோலிய எண்ணெயை டாலர் மதிப்பீட்டில் கணக்கிட்டு விற்பனை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வு மற்றும் விற்பனையால், அமெரிக்கா தனது வர்த்தக மற்றும் பட்ஜெட் பற்றாக்குறையை சரிசெய்துகொண்டு தனது மேலாதிக்கத்தை நிறுவி உலக பகாசுரன் ஆகிவிட்டது.
இக்காலகட்டத்தில்தான், வால்ஸ்ட்ரீட் உருவாகிறது. இதனையொட்டி,, அன்னிய ஆதரவாளர்களிடமிருந்தும், உள்நாட்டு லாபங்களிலிருந்தும் கைப்பற்றிக்கொள்ளுதல் மற்றும் இணைப்புக்கான நடவடிக்கை தோன்றுகிறது; வால்ஸ்ட்ரீட்டையும் தாண்டி பிற உலக நாடுகளுக்கு வால்மார்ட் குழுமம் கால்பதிக்கிறது; பெரும் பணக்காரர்களின் வாயிற்படியில் பணத்தைக் கொட்டினால் அது ஏழைகளுக்கும் பாயும் என கட்டமைக்கப்படுகிறது; போலி விஞ்ஞானம் மற்றும் கணித சூத்திரங்களுக்குப் புறம்பான நடைமுறைகள் தோன்றலாயின. வால்மார்ட்டும் வால்ஸ்ட்ரீட்டும் சேர்ந்த வணிக மாதிரியானது, ஏழைமக்களையும், மூன்றாம் உலக நாடுகளையும் மேலும் கடன் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுவிட்டதுதான் மிச்சம்..
1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நிலையான வேகம் கொண்ட தோற்றத்துடன் உலகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் அகில உலக பகாசுரனே. கட்டுப்பாடுகளை அகற்றுதல், தனியார் மயம், நிதிமூலதனமாக்கம் (அன்னிய நாடுகளிலிருந்து ஒரு நாளைக்கு 200 கோடி டாலர் அளவுக்கு அமெரிக்காவை நோக்கி பாய்ந்திருக்கிறது) போன்றவை தறிகெட்ட வேகத்தில் பாய்ந்து சென்ற போது உலகளாவிய திட்டம் ஒன்று இல்லாத சூழலில் உலக உபரியை மறுசுழற்சிக்கு விடும் பொறியமைவின் இடத்தில் பகாசுரன் செயல்பட்டது.

2008 க்கு முன்னர் வால்ஸ்ட்ரீட் ஒரு இணையான பணமுறையைத் துவக்குவதில் வெற்றி பெற்றிருந்ததை அறிவோம். பகாசுரனை நோக்கிய மூலதன ஓட்டத்தின் நிதி ஆதரவு பெற்ற தனியார் பணத்தின் ஒரு வடிவமாக அது இருந்தது. 2008 ஜனவரியில், உலகப்பெருமந்தம் நிகழலாம் என்ற கணிப்பை உலகவங்கி கணிக்கிறது. உடனடியாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது. வட்டி விகிதங்கள் குறைகின்றன.
பல நிதி நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. தரமற்ற வீட்டு அடமானக் கடன்கள் மீதான பத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலிஸிகளால்தான் இந்த இழப்பு என்று தெரிவிக்கப்படுகிறது. இச்சமயத்தில், அமெரிக்காவின் கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 540 சதமாகும். தொழிலாளர்களின் உண்மை ஊதியமுங்கூட 1970 களைப்போலன்றி வெகுவாகக் குறைந்துவிட்டது. பொருளாதார பெருவீழ்ச்சியானது திவாலாட்சி முறையை நோக்கிய சரிவு ஏற்பட்டதால், பகாசுரன் கீழே விழ்ந்துவிட்டான்.
ஒரு தனியார் நிறுவனம் எந்தஅளவுக்கு வெற்றிகரமாக இயங்கத் தவறுகிறதோ அந்த அளவுக்கு அதன் இழப்புக்கள் பேரிடர் தன்மை வாய்ந்தவையாக அமைகின்றன. மக்கள் வரிப்பணத்தின் தயவால் நீடித்திருக்கும் அதன் ஆற்றலும் அதேஅளவில் அதிகரிக்கிறது. சுருக்கமாகக்கூறினால், அகில உலக பகாசுரனின் பொற்காலத்தில் சோசலிசம் மரணம் அடைந்தது.
அதே சமயம், உலகப்பொருளாதாரத்தின் மீது ஆட்சிசெலுத்துவதை பகாசுரன் நிறுத்திய மறுகணமே முதலாளித்துவம் சந்தேகமின்றிக் கொல்லப்பட்டுவிடுகின்றது.
2008 பெருவீழ்ச்சிக்குப்பிறகு, மூன்று விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1. பகாசுரன் வீழ்ந்தான். அதாவது, ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தடுமாறுவதைத் தடுக்கும் விதத்தில் அவற்றின் உபரிப்பொருட்களை நுகரமுடியாத வண்ணம் நோய்வாய்ப்பட்டிருந்தான். 2, நிதிச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. 3. அகில உலக பகாசுரனின் பணிப்பெண்களுக்கு விலங்கிடும் துணிவினை அரசியல்வாதிகள் பெற்றனர்.
2008க்குப் பிந்தைய ஆண்டுகள் பதற்றம் நிறைந்தவையாக உள்ளன. அவை எதிர்காலத் தலைமுறைக்கு மனதால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கலக்கத்தை வழங்கக்கூடும் என அச்சுறுத்தி வருகிறது.