கவிஞர் சூர்யநிலா
தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன்
என்கிறார் வெய்யில்.“இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன என்கிறார் அகரமுதல்வன்.

இந்த கூற்றுகளை உள்வாங்கியோ அல்லது புறந்தள்ளியோ இளங்கோவின் கவிதைக்குள் நுழைந்தால்கூட மேற்கண்ட அச்சொற்றொடர்கள் உண்மையின் மேலடுக்கில் தேங்கி தேங்கி சேகரமாகின்றன என்பதை தொகுப்பை வாசிக்கும் போது ஒரு கட்டத்தில் நம் மனக்கீற்றுகளில் மெல்ல மெல்ல மீதுருவாகி விடுகின்றன.
நவீன கவிதைகளில் இருண்மையின் புனைவென்பது, பல நல்ல கவிதைகளை வாசக மனங்களிலிருந்து நழுவி போய் விடும் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளன. ஆனால், நவீன கவிதையிலுள்ள சொல்லின் எளிமை. எல்லோரிடத்திலும் அதை கொண்டு போய்விடுகிறது. அப்போதுதான் அந்த கவிதைக்கான கொண்டாட்ட மனநிலைகள் பலரிடம் எழுகின்றன.
பூடகமற்ற தன்மை, அல்லது பூடகத்தை அந்த கவிதையில் எங்காவது உடைத்து வெளிக் காட்டிவிடுதல் கவிதையின் சாரத்தை ஒரு எளிய வாசகனிடம் கொண்டு போய் விடுகிறது. கவிதை எளிமை என்பதற்காக இற்றுப் போன தன்மையுடனோ கிளிஷேவான சொற்களுடனோ எழுதுதல் அன்று. அது மேம்போக்கான ஆழமான வார்த்தைகளை சற்று எளிமைப்படுத்திச் சொல்வது. பெருங்கவிஞர் ஞானக்கூத்தன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் நவீன கவிதையாக்கம் மேற்சொன்ன வகைமையை உள்ளடக்கியதாக. எனது வாசிப்பில் உணர்ந்தேன்.
இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளின் பொருண்மையும் இவர்களின் நவீன எளிமைச் சாயலினை உள்ளடக்கியதாகவேயிருக்கிறது. “பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்” தொகுப்பில் பறவை என்ற தலைப்பிலான கவிதை இப்படி பேசுகிறது.
இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள
பறவை பூமியைக் கடந்து செல்கிறது
அதன் அலகை சங்கக் கவி எழுதினான்
வாலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதையின் பிடிபடும் தன்மையில் எளிமை. ஆனால் அதன் உள்ளடக்கில் வினாக்கள் தொக்கிய ஆழம். இப்படியானதுதான் இளங்கோ கிருஷ்ணனின் கவிதையாக என் அகத்தில் பதிகிறது.
சொற்களின் மிகைக் கூற்றுத்தன்மை வாசகனைக் குழப்ப நிலைக்கு இட்டுச் செல்வதில் இவருக்கு உடன்பாடில்லை. ஆற்றொழுக்கான அதே நேரம் படிமங்கள் கரைந்துப் போகத் தன்மை இவரது எழுத்துகளில் காணக் கிடைக்கின்றன.
‘வியனுலகு வதியும் பெருமலர் எனும் தொகுப்பு காலங்களின் பரிமாணங்களாக நீள்கிறது. பசியின் கதை, மரணத்தின் பாடல்கள், பேரன்பின் வேட்டை நிலம், எனும் சொற்கள், நீர்மையின் பிரதிகள் என்ற ஐந்து காதைகளின் வாயிலாக நமக்கு இத்தொகுப்பின் வாயிலாக கவிதைகள் கிடைக்கின்றன. பசியின் எழுத்து உக்கிரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. மானுடத்தின் பெரும்பசியின் ஓலம். கவிதைகளின் வாசிப்பு தளத்தை இரணமாக்குகிறது.
“இந்த பசிக்கும்
அடுத்த பசிக்கும்
இடையில்
உள்ளதென் வாழ்வு.
நேற்றைய பசிக்கும்
இன்றைய பசிக்கும்
இடையில்
உள்ளதென் வரலாறு
என்ற வரிகளில் தொக்கி நிற்கும் வயிற்றுக்கான போராட்டம் ‘பசித்திரு’என்ற ஆன்மீக கோட்பாட்டை கேள்விக்குறியாக்குகிறது.
“அவர்கள்
மூன்றாயிரம் மைல்
நீளமுள்ள பசியை
எதிர் கொள்ளத் தயாராகிவிட்டனர்
என்ற வரிகளில் இயைந்தோடும் வேதனைக்கு யார் பொறுப்பு? இளங்கோவின் எழுத்து ஒரு போர் பிரகடனத்தை பசிக்கு எதிராக எழுப்பியிருக்கிறது.
‘தூத்துக்குடி-1 என்ற தலைப்பிட்ட கவிதையின் சம்மட்டி அடி இன்னமும் மனதை இரணப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
“போராட்டங்களுக்கு எல்லாம்
ஏன் போகிறீர்கள்?
உங்களுக்குத்தானே
ஐ.பி.எல் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
சினிமா இருக்கிறது
உங்களுக்காகத்தானே
டாஸ்மாக் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
பேஸ்புக் இருக்கிறது
உங்களுக்காகத்தானே
யூடியூப் இருக்கிறது.
என மேலும் நீளும் இக்கவிதையின் நேர்ச் சித்திரம் சொல்லும் சேதி அதிகாரத்திற்கெதிரான கூக்குரலின்றி வேறென்ன? விவசாயிகள் பிரச்சினையை திசை திருப்ப ஒன்றிய நாவுகள் என்னென்ன பொய்கள் சொன்னது? வேறெதற்குமில்லாத போக்குகளை உடைக்க அது எப்படியெல்லாம் பிரயத்தனப் பட்டது?

“உயிர் பெறும் சொற்கள் என்ற தலைப்பிலான கவிதை சுவாரஸ்யமிக்க கவிதையொன்றை நமக்குத் தந்துள்ளது.
“ஒரு மகாகவி கவிதை எழுதிக் கொண்டிருந்தார்
படிப்பறிவற்ற ஈ ஒன்று
எழுதப்பட்ட வரிகளின் மேல் அமர்ந்தது
அவர் அதை கவனிக்கவில்லை
திடீரென கணுக்கால் அரிக்கிறது
மகாகவி சொறிந்து விட்டு நிமிரவும்
ஈ எழுந்து பறக்கிறது
தன்னுடைய சொல் ஒன்று உயிர் பெற்று
பறப்பதை பார்த்த மகாகவி
மூர்ச்சையானார்
எல்லாம் கலைவாணியில் அருள் அன்றோ.
இளங்கோ கிருஷ்ணனின் இந்த தொகுப்பின் கவிதைகள் புதிய சொல்லாக்கத்தில் மிளிர்கின்றன. சொற்சேர்க்கையில் தெளிவும், பாடுபொருளின் புரியும் தன்மையும் நவீன கவிதைகள் புரியாத்தன்மை வாய்ந்தவை என்ற அசட்டை சொல்லிலிருந்து விலகும்படி கவிதையாக்கம் செறிவடைந்துள்ளன. கொண்டாட்டங்களின் மகத்துவங்களை உணரும் தருணத்தை ஏற்படுத்திய சிறந்த தொகுப்புதான் ‘வியனுலகு வதியும் பெருமலர்’