து. பா. பரமேஸ்வரி
‘உச்சிவெயில்’ நாவல் எழுத்தாளர் பா.செயபிரகாசம் அவர்களின் ஆதிக்க சாதியினர் சிறுபான்மையின மக்களுக்கு காலங்களாக வழங்கி வரும் நெருக்கடிகளை சமூகத்தின் பார்வைக்குக் காட்சிப்படுத்துகிறது. நாவல் ஆதிக்கசாதியினரின் வக்கிர மனப்பான்மையை எடுத்துக்காட்டும் அதேவேளை பல நூற்றாண்டுகளாக மரண அவஸ்தையில் அல்லாடிக்கொண்டு தங்களை இழிவுபடுத்தியும் அவமானப்படுத்தியும் புறக் கணித்தும் புழுக்களைப்போல நடத்தும் ஆதிக்கக்குடி மக்களின் வன்மங்களில் வஞ்சிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அவமானங்களை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் பழிவாங்கும் மனநிலைக்கு ஆளாகின்றனர் என்கிற குடிமைச்சமூக உளவியலைப் பேசுகிறது ‘உச்சிவெய்யில்’.

பழிக்குப் பழி இரத்ததிற்கு இரத்தம் என்கிற வக்கிர மனம் இரண்டு குடிகளுக்கும் இடையே தன்னிலை மீறி வன்முறையில் இறங்குவதை நாவல் வலியுடன் காட்சிப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் ஆதிக்கக்குடியின மக்களுக்கும் விளிம்பு சாதி குடியிருப்பு மக்களுக்கும் இடையே ஓய்வில்லாமல் நடந்து வந்த சாதிக்கலவரத்தை மையப்படுத்தி உருவான கதையாக இந்த நாவல் இரண்டு தரப்பிலிருந்தும் வெடிக்கும் சாதிவன்முறைகளின் பாதிப்புகளை பாரபட்சமின்றி பொ துவாகச் சுட்டிக்காட்டுகிறது. பொதுவெளியில் மட்டுமல்ல, கல்விச்சாலையிலும் அரசு அலுவலகங்களிலும்கூட உயர் சாதி ஆக்கிரமிப்பும் அவமரியாதையும் தனது ஆதிக்கத்தைக் காட்டுகிறது.
அரசு பொதுப்பணித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்குள் கொழுந்துவிட்டு எரியும் சாதித்தீயில் சிறுபான்மை சாமான்ய மக்கள் வெந்தும் வேகாமலும் அவிந்து தவிக்கும் நிலையைக் காட்சிப்படுத்தி நகர்த்திச் செல்கிறது. கரிசல் நிலத்தின் ஊர்ஆதிக்க ஆளுமைப் பிரிவினர் சிறுபான்மை குடிகளை அடிமைப்படுத்தி அடக்கியாளும் நோக்கில் சாதிவிளிம்பு மக்கள் கல்வியிலும் அரசுப் பணியிலும் உயர்ந்த இடத்திற்கு வருவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் அவர்களுக்கெதிராகச் செயல்படுகின்றனர். அவர்களுக்குக்கீழ் தாங்கள் பணிபுரிவதைக் குல இழிவாகக் கருதும் மேட்டிமை சாதியினர் இந்த சனங்களை விரட்டவும் நசுக்கவும் கையாளும் சூழ்ச்சிகளை ஆசிரியர் தனது கரிசல் மொழிநடையில் சந்திரமதி சந்திக்கும் பிரச்சனைகளைப் பதிவு செய்துள்ளதை வாசிக்க, மனம் சோர்ந்து போகிறது.
நாவலின் பிரதான பாத்திரமாக சந்திரமதி, தாழ்த்தப்பட்ட குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த நாற்பது வயதைக் கடந்த முதிர் கன்னி. மீனாட்சிபுரத்து நடுநிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக மாற்றலாகி வருகிறாள். கள்ளம் கபடம் அறியாத மீனாட்சிபுரத்துப் பள்ளிப் பிள்ளைகள் கலாவதி, தேனு, ஞானம், மனோகரன், செந்தூரன், தேவநாதன், லோகேஸ்வரி, துளசிமணி என பிள்ளைப் பட்டாளம் எந்த பேதமுமின்றி சந்திரமதியிடம் நெருங்கிப் பழகுகின்றனர்.
சந்திரமதியும் பிள்ளைகளை ‘என் செல்லமே!’ எனக் கொஞ்சி அழைத்தும் சிவந்து பழுத்திருக்கும் செந்தூரனின் கன்னங்களைக் கிள்ளி மகிழ்ந்தும், மாணவர்களுடன் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்குச் சென்று தனது ஆசிரிய, மாணவ நல்லிணக்கத்தை விதைத்தும், தலைமை ஆசிரியர் என்கிற மிடுக்கின்றி அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அரவணைத்தும், தவறுகள் நடக்கும்போது கண்டிப்பான ஆசிரியராக திருத்தியும் மனசாட்சிக்கு உண்மையோடும் நேர்மையோடும் தனது கல்வி அடையாளத்திற்கு சத்தியத்தோடும் ஆசிரியர் பணிக்கான முழு ஈடுபாட்டுடனும் செயல்படுகிறாள் சந்திரமதி.
ஆதிக்க குடிப்பிரிவைச் சேர்ந்த மக்கள் நிறைந்த அந்தப் பகுதியில் உயர்குடி ஆசிரியர்கள் அதிகமாகப் பணிபுரிகின்றனர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சந்திரமதி தங்களுக்குமேல் தலைமையாக வந்ததில் ஆளுமை சாதி ஆசிரியரான சின்னசாமிக்கு ஆத்திரம் தீமூளுகிறது. ‘புதிதாய் வருகிற தலைமையாசிரியர் ஒரு பெண். தமக்கு மேலே ஒரு பெண், அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகம். அந்த அளவுக்கு நம் சமூகம் ஊனமாகிப் போனதோ?’ என்று இங்கே சின்னச்சாமிக்கு ‘முஸ் முஸ்’ என்று கோபம் கொப்பளித்தது. சந்திரமதிக்குக்கீழ் ஆசிரியராகப் பணி புரிவதை இழிவாகக் கருத்தும் சின்னசாமி அவளை அறவே வெறுக்கிறார்.
பள்ளியின் அன்றாட முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தனது சாதி எதிர்ப்பை மறைமுகமாகப் பள்ளிச் செயல்பாடுகளின் பல இடங்களிலும் நேரடியாகக் காட்டுகிறார். அவர் மட்டுமல்லாது, மீனட்சிபுரத்து மேட்டுக்குடி முக்கியப் பிரமுகர்கள், ஒரு தாழ்த்தப்பட பெண், பள்ளி ஆசிரியராகத் தங்கள் முன் உலவுவதை ஏற்க முடியாமல் தவிக்கின்றனர். இவளைப் பார்த்து கீழ்ச்சாதிக் குடியிருப்பு சனங்கள் கல்வியில் தேர்ந்து பதவியிலும் அந்தஸ்திலும் உயர்ந்து விடுவார்களோ என்றும் அச்சம் கொள்கின்றனர்.
‘நம்ம பொண்ணுகளையும் மேப்படிப்பு படிக்க வச்சி இப்பேர்ப்பட்ட உத்தியோகம் பாக்க அனுப்பணும்னுதான் ஒவ்வொருத்தர் நாவும் பேசுது..’ கூடுதலாக சந்திரமதியின் வருகையால் தெலுங்கு பேசும் இதர மேட்டுக் குடிச்சாதிப்பிரிவினரும் சாதி பாரபட்சத்திலிருந்து விலகி தங்களுக்குச் சமமாக கீழ்மைக்குடிகளுடன் பழகக் கற்று விடுவார்கள் என நம்பினர். அதற்கு ஏற்றார்போல பள்ளியில் அவளை நேசிக்கும் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவி கலாவதி குடும்பம் நல்லுறவு கொள்கிறது.
கிளப் கடை நடத்தும் கலாவதியின் தந்தை வெங்கிடுவும் அவர் மனைவியும், சந்திரமதி மீது கொண்ட மரியாதையின் நிமித்தம் அவரை தங்கள் மூத்த மகள் சிந்தாமணியின் திருப்பூட்டு விழாவிற்கு அழைத்து அங்கு சந்திரமதியை பெரும் மரியாதையுடன் முன்னிலைப்படுத்த அதுவே சந்திரமதிக்கு குடைச்சலாகிப் போகிறது. சந்திரமதியை அழைத்ததும் அவளுக்கு முன்னுரிமை அளித்ததும் பொறுக்க முடியாமல் ஊர் உயர் சாதியினர் திருப்பூட்டில் கலந்து கொள்ளாமல் சந்திரமதியைப் பழிவாங்கவும் ஊரை விட்டு விரட்டவும் துடிக்கின்றனர். தக்க சமயம் பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களுக்கேற்றார்போல சூழலொன்று வருகிறது.
சந்திரமதியின் அமைதியான ஆசிரியப் பணி மீனாட்சிபுரத்தில் ஆட்டங்கண்டதற்கான முக்கியக் காரணியாக இந்த திருப்பூட்டு நிகழ்வே அடித்தளமாகிறது. அதன் அடுத்தடுத்த நகர்வாக சந்திரமதியைப் பழிவாங்கும் படலங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன. பள்ளியின் விளிம்பு சாதி மாணவன் அய்யப்பனின் அண்ணன் ஆட்டு மந்தைகளுக்கு தழை வெட்டும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். ஆதிக்க சாதி ஊராளுமைகள் இந்த தன்சாவு நிகழ்வைக்கொண்டு சாதி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.
சந்திரமதி தலையிட்டு காவல் நிலையம் வரை சென்று சொந்த ஜாமீனில் சடலத்தை அப்புறப்படுத்த உதவுகிறாள். இறுதிச் சடங்கு சந்திரமதியின் முயற்சியில் அமைதியாக நிகழ்ந்ததைப் பொறுக்க மாட்டாது ஆத்திரம் கொண்டு சந்திரமதிக்கு எதிராக கல்வி உயர்மட்டத்தில் புகார் அளிக்கின்றனர் உயர் குடியினர். மேலிடத்திலிருந்து சந்திரமதிக்கு அதிகாரப்பூர்வமான விசாரணை என்கிற கண் துடைப்பு சம்பிரதாயம் நடத்தப்பட்டு முன்பே உறுதி செய்யப்பட்ட பணி மாற்ற நியமனத்தின் அடிப்படையில் ஆத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றலாகிறாள். ஆதிக்கக் குடிகளின் சூழ்ச்சி வளையத்தில் சிக்கிய வாய்மையும் சத்தியமும் வாய்பூட்டுப் போட்டுக்கொண்டன. அவளது மீனட்சிபுரத்துப் பள்ளி சார்ந்த கனவுகள் சிதைக்கப்பட்டன.
இரண்டு பிரிவாக விரியும் நாவலின் முதல் பகுதி சந்திரமதி மீனாட்சிபுரத்தில் சாதி வக்கிரத்தில் சிக்கி ஆத்தூர் பணி மாற்றலுக்கான வன்முயற்சிகளைக் கொண்டு நகர்கிறது. இரண்டாம் பாகம் ஆத்தூரில் சிறுபான்மை சாதியினருக்கிடையே ஆளுமை அதிகாரத்தின் துஷ்பிரயோகம் பொருளாதார அடிதட்டுப் பெண்கள் மீது கீழ்த்தரமான முறையில் முஷ்டியை உயர்த்தும் போது அதிகார அடக்குமுறை வன்முறைக்கு எதிராகத் தனது ஆதரவை புரட்சிப் பேராட்டக் களத்தில் அவர்களுடன் கைகோர்க்கிறாள் சந்திரமதி.
சிறுபான்மை பள்ளர் குடியைச் சேர்ந்த அரசுப் பணியில் செயலாற்றி வரும் அழகியபெருமாளின் அதிகார மமதையில் பறைசாதிப் பெண்களை உடல் கடன் கழிக்கவிடாமல் நிலஆக்கிரமிப்பு நிகழ்த்துகிறான். பறைசாதி ஏழைப் பெண்களின் மானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியில் வெடித்த புரட்சியில் விளைந்த பல கோரச் சம்பவங்கள், உயிர்ச்சேதம், அரசு காவல்துறை அதிகாரிகளின் வக்கிர செயல்கள், சமூக அவலத்திற்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலப் போராளிகளுக்கு நிகழ்ந்த துயரங்கள், அதிகார வன்முறைகள் என ஆத்தூர் சாதிப் பிரச்சனையில் இரண்டாம் பாகம் வாசகருக்கு மட்டுமல்ல, சந்திரமதிக்கும் செல்லும் இடமெல்லாம் சமூகத்தின் மனித வக்கிரங்களை காட்டித் தருகிறது.
தவறுகளைச் சுத்தம் செய்வதுதானே கல்வி கற்றுத் தந்த வித்தை… சந்திரமதியின் கல்விக் கண்களும் அதையே செய்தன. மீனாட்சிபுரத்து ஆளுமை சாதியின் ஒடுக்கப்பட்ட இனம் மீது நிகழ்த்தப்பட்ட குரூரங்கள் சாதிய அடக்குமுறை என்றால் ஆத்தூர் வட்டாரம் பறைசாதிப் பெண்களின் அன்றாட உடல்கடன்களைக் கழிக்கவிடாமல் நிலஆக்கிரமிப்பு செய்யும் அரசு ஊழியனின் அதிகார ஆணவம் மற்றொரு துவேசம். அழகியபெருமாளும் அவன் மனைவி கெண்டை சித்ராவின் கீழ்த்தர செயல்களில் சந்திரமதி கொதித்துப் போகிறாள். ‘நாளை பூ உதிர்க்கவிருக்கும் இந்த நெட்டிலிங்க மரம் எத்தனை பூச்சொரியும் என இப்போது சொல்ல இயலாது’.
‘காபி கிளப் வடை, மசாலா மொச்சை, அவித்து உப்பிய மூக்கடலைப் பயறு அனைத்தும் அவள் அங்கம் ஒவ்வொன்றிலும் வடிவு கொண்டிருந்தன…” ‘மீனாட்சியைவிட சாருலதா சௌந்தரியத்துடன் பிரகாசிக்கிறாள். பயறும் கிழங்கும் ஊறிய வயிற்றில் சோற்றுப் பருக்கை விழுந்தபோது உடல் சௌந்தர்யம் கண்டது.’
இப்படி உணவைக்கொண்டு பெண்ணோவியம் வரைந்த ஆசிரியரின் ரசனை போற்றத்தக்கது.
அதே சமயம் கம்பக்கூழையும் பழைய சோற்றையும் உண்டு காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரியும் கழனி காட்டுப் பெண்சீமாட்டிகளின் பருவ வளர்ச்சி முரட்டு சுபாவமாகவே இருக்கும். தேகத்தின் முறுக்கும் செம்மையேறிய கேசத்தின் விறைப்பும் அவர்களின் உழைப்பையும் அதற்குத் தக்க உணவின் உட்கிரகித்தலையும் நமக்குப் புலப்படுத்தும். ஆனால் மேட்டிமை பொருந்திய கனவான் வீட்டுப் பிள்ளைகளின் உடல் வாகும் தோலின் மினுமினுப்பும் சவுந்தரியமும் நிறமும் தலை மயிர் உட்பட செல்வத்தின் செருக்கைப் புடமிட்டுக் காட்டும்.
இவ்வாறான சாமுத்ரிகா இலட்சணங்களின் பின்புலம் உண்ணும் உணவின் கொழிப்பு ஒருபுறமாக இருந்தாலும் இந்தப் பிள்ளைகளின் வளர்ப்புச் சூழலும் இன்பமயமான சுற்றமும் மனதில் ஆதிக்கம் செலுத்துவதன் பிரதிபலிப்புகள் பெண்பிள்ளைகளின் மேனியில் படிந்து விடும். நிலமாந்தர்களின் உழைக்கும் சாதிப் பருவஸ்திரிகள் மனமும் அதை இயக்கும் வாழ்வியலின் துன்பியல் சூழலும் அவர்களின் இறுக்கமான இறுமாப்பில் கரம்பேறிய தேகம் வறண்ட நிலம்போல கொஞ்சம் வனப்பும் வளமையும் குறைவாகவே தென்படும் என்பதும் ஆசிரியரின் மேலான கவனத்தில் நிறுத்துகிறேன்.

சந்திரமதிக்கு மிக நெருக்கமான நபர்களாக சாதி பேதம் பார்க்காமல் அவளுக்கு ருசியான உணவு சமைத்துத் தந்த மேட்டுக்குடியைச் சேர்ந்த தோழியான எதிர்வீட்டு ஆண்டாளக்கா, சந்திரமதியின் நலனை எப்போதும் முதன்மையாகக் கருதும் செக்கு எண்ணெய் ஆட்டும் நல்லப்பர், மற்றும் சாதி ஆங்காரத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டு சந்திரமதி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஆத்தூர் பள்ளியின் ஆசிரியர் வெள்ளைச்சாமி. இம்மூவரும் சந்திரமதியின் போராளி வாழ்க்கையில் அவளுக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்து வந்தனர்.
வெள்ளைச்சாமி ஆத்தூர் நிலஆக்கிரமிப்பு போராட்டத்திற்குப் பக்கபலமாக இருந்த மனிதர். அவளைப் போலவே சாதி அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆர்வலர். சந்திரமதிக்கு மட்டுமல்ல, வாசகருக்கும் மனதில் பதிந்த மாமனிதர்காளாக இம்மூவர் மட்டுமின்றி, நாவலின் இன்னும் சில பாத்திரங்கள்மறக்க முடியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சில பக்கங்களில் மட்டுமே அறிமுகமாகி பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடி ஆதிக்கக்குடி அரசு அதிகாரிகளாலும் காவல்துறை ஆதிக்கசாதி அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தாளமுத்துவும், முதலாளி தாளமுத்துவிற்கு மறைமுகமாக காவல்துறை நிகழ்த்திய வன்முறை நடவடிக்கையில் தீக்குளித்து மரணித்த தாளமுத்து விசுவாசியான கடைப்பையன் சிங்கார வடிவேலுவும் இன்னமும் மனதிற்குள் ஊசலாடுகின்றனர்.
மேலும் முதல் அத்தியாயத்தின் வகுப்பறைச் சூழல்களும் பிள்ளைகளின் அட்டகாசமும் அவர்களுக்கேயுரிய மாணவக் குறும்புத்தனமும் வாசிப்பை சுவரஸ்யமாக்கின. பெண்ணாங்கியான மனோகரனின் மாணவிகளுடனான சேட்டைகளும், தலைமையாசிரியர் என்கிற அச்சமின்றி சந்திரமதியிடம் நிமிச்சலான கேள்வி எழுப்பி இறுதிவரை வாதித்ததும் பிற ஆசிரியர்களிடமும் தனது சந்தேகங்களை சட்டென துணிச்சலாகக் கேட்டுத் தெளியும் துளசிமணியும், காட்டுவேலை செய்து கடினமாக உழைத்துப் பிழைக்கும் தனது தாயின் கனவை உணர்ந்து பள்ளியிலேயே நன்றாகப் படித்து சந்திரமதியின் பிரியங்களுக்கு உகந்தவனான தாயாரம்மா மகனான செந்தூரன், அவளையே சுற்றி வரும் கலாவதி, ஞானம், தேனு என பிள்ளைச் செல்வங்கள் நிறைந்த கொண்டாட்டத் திடலாகவே முதற் பாகம் கல்வி திரைக்காணலாக வாசகரின் பள்ளிக்காலங்களை நினைவுகூரும் விதமாக அமைந்துள்ளது.
சிங்கக்குட்டி நாயக்கர் என்கிற உயர் சாதி நபருடன் மணம் முடித்து கணவனுடன் போகும் பெண்களை அவர்களது தாய், பால் ஆடுகள் கொடுத்து கணவனை அண்டியே பிழைக்காமல் சுயகாலில் நின்று பிழைத்துக்கொள்ள அறிவுறுத்தியதை பதிவு செய்து அன்றே நமது மூத்த தாய்மார்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் திருமணத்திற்குப் பின்பு ஒருவரையும் சாராது சுயமாக வாழும் சுயபாதுகாப்பைப் பற்றி யோசித்து செயல்படுத்தியதை நாவல் வழி நின்று அறிய முடிந்ததில் ஒரு பெண்ணாக நமது மூதாதய தாய்மார்களை எண்ணி பெருமை கொள்ளச் செய்கிறது.
நாவல் குறித்து ஆய்ந்து விளக்க இன்னும் பல நுணுக்கங்கள் எங்கும் குவிந்துள்ளன.