ஜெயபால் இரத்தினம்
சித்தர்கள்! தமிழ்ச் சமுதாயத்தில் மலர்ந்த அறிவர்கள், ஆன்மிகப் புரட்சியாளர்கள், அறிவியலின் முன்னோடிகள், எண்வகை சித்திகளையும் பெற்றவர்கள், இன்னும் இன்னும் எத்தனையோ உயர் பெருமைகளுக்கு உரியவர்கள். தங்களை உணர்ந்திட மற்றும் வைத்திய, யோக, ஞானக் கலைகளைக்கற்றிட விரும்பும் அறிவார்ந்த மக்கள் சித்தர்களை நாடுகிறார்கள்.
அதே நேரம், சித்தர்களின் கடைக்கண் பார்வை தங்கள் மீது பட்டால், அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டால், தாங்கள் வழங்கும் பொருளை சித்தர் ஒருவர் எற்றுக்கொண்டால் அதன்பின் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்ற ஆசைகளுடன் சாதாரண மனிதர்களும் சித்தரை நாடி ஓடி சரணடைகிறார்கள்.

ரசவாதம் கற்க விரும்புவோரும் சித்தர்களைத் தேடுவதுண்டு. உண்மையில் சித்தர் என்பவர் யார்? அவர்களது வரலாறு என்ன? அவர்களது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எவை? இப்படியான ஞானத்தேடல்கள் பலராலும் பலகாலமாக நடத்தப்பட்டு வரப்படுகின்றன. அப்படி ஒரு ஞானத்தேடலாக, ஆய்வறிக்கையாக ஒரு நல்ல அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். சித்தர்கள் குறித்து ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நூல்கள் வெளிவந்திருந்தாலும் இந்நூல் சற்று மாறுபட்ட நூலாக அமைந்துள்ளது.
இந்நூலின் ஆசிரியர் திரு. துரை. வேலுசாமி அவர்கள். இவர் பணிநிறைவு செய்த ஓர் முன்னாள் அரசு அலுவலர். தமிழ்மொழிப் பற்றாளர். பாரம்பரியமான சித்த மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். சித்தமருத்துவம் நன்கறிந்தவர் மற்றும் சித்தர்கள் குறித்த ஆய்வாளர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், செம்மொழி தமிழ்ழாய்வு மத்திய நிறுவனம் உள்ளிட்ட தகைசால் நிறுவனங்கள் நடத்திய பல தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவம் குறித்த தனது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தவர்.
இவர் எழுதிய ‘ருந்தமிழ்ச்சித்தர் போகர்’ என்ற தலைப்பிலான நூல் அண்ணமலைப் பல்கலைப் கழகத்தாலும், ‘அறிவியல் தமிழ்ச்செல்வங்கள்’ என்ற தலைப்பிலான மற்றொரு நூல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன. இது இவரது மூன்றாவது நூல்.
தமிழ்மொழி மற்றும் வரலாற்றாய்வாளரான திரு.ம.சோ.விக்டர் அவர்களின், சித்தர் என்ற தமிழ்ச்சொல்லுக்கான வேர்ச்சொல் விளக்கத்துடனும் மற்றும் நூலாசிரியரின் துறைசார்ந்த பட்டறிவு, சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் ஆகியவை குறித்த விரிவான செய்திகளுடன் கூடிய, அணிந்துரையுடனும் நூல் துவக்கம் பெறுகிறது. இந்நூலாசிரியர் தனது முன்னுரையில் தன்னிலை விளக்கமாகப் பல செய்திகளைப் பகிர்ந்துள்ளார். ‘சித்தர்கள் என்றால் யார்?’ என்ற தலைப்புடன் கூடிய கட்டுரை முதலாக ‘சித்தர் சரவியல்’ என்ற தலைப்பிட்ட கட்டுரை ஈறாக மொத்தம் பதின்மூன்று கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சித்தர்கள் யார் என்ற முதல் கட்டுரை, சித்தர்கள் குறித்து நிலவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் மாறுபட்ட கருத்துக்களுக்கான மறுப்புரை விளக்கம் ஆகியவற்றைப் பேசுகிறது. இரண்டாவது கட்டுரை சித்த மருத்துவத்தின் தொன்மை குறித்து விவாதிக்கிறது. உலகிலுள்ள பல்வேறு மருத்துவ முறைகள் தோன்றிய காலங்களையும் தமிழரின் சித்த மருத்துவம் தோன்றிய காலத்தையும் குறித்து விவரித்து தமிழன் பிறக்கும்போதே சித்த மருத்துவமும் பிறந்துவிட்டதாகக் கூறி, சித்த மருத்துவத்தின் வயது 195 கோடி ஆண்டுகள் என்று வாதிடுகிறார். மூன்றாவது கட்டுரை முகம் பார்க்கும் கண்ணாடியின் வயதை ஆராய்கிறது.
தமிழ்ச் சித்தரான போகர், கண்ணாடி உள்பட இன்று பரவலாகப் போற்றப்படும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புக்களை, தான் வாழ்ந்த காலமான சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டதாகவும் அவ்வுண்மைகளைப் பாடல்களாகப் பதிவு செய்துள்ளார் எனவும் குறிப்பிடும் நுலாசிரியர் போகரின் அப்பாடல்களையும் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
இன்று கோவில் சிற்பங்களில் மட்டுமே காணப்படும் யாளி என்ற விலங்கு கற்பனையா அல்லது உண்மையா என்பதை விவாதிக்கிறது நான்காம் கட்டுரை. இவ்விலங்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்தது எனவும், சித்தர்களது பாடல்களில் யாளிகளைப்பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன எனவும் விவரித்து அப்பாடல்களையும் பதிவு செய்துள்ளார்.
தவிர யாளியைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் பதிவிட்டுள்ளார். ’நிமி(ஷ)டம் என்றால் எவ்வளவு நேரம்?’ என்ற தலைப்பிட்ட ஐந்தாம் கட்டுரை பல சுவையான தகவல்களை அளிக்கிறது. நிமிஷம், அங்குலம், அடி, கெஜம், போன்ற அளவீட்டுச்சொற்கள் பொ.ஆ.17, 18ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களது கண்டுபிடுப்புகளுக்குப்பின் வழக்கில் வந்ததாகப் பலரும் கருதுகின்றனர் எனவும், ஆனால் அது உண்மையில்லை எனவும், அச்சொற்கள் பல ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்தில் இருந்து வந்த மற்றும் சித்தர்களது பாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எனவும், ஆனால் அவை தற்போது உள்ள அர்த்தத்தில் அல்லாமல் அப்போது நடைமுறையிலிருந்த சொற்பொருட்களின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டன எனவும் குறிப்பிட்டு அக்காலத்தில் அவை பயன்படுத்தப்பட்டபோது இருந்து வந்த பொருளையும் அதற்குச் சான்றாகத் தொடர்புடைய பாடல்களையும் பதிசெய்துள்ள நூலாசிரியர், அச்சொற்கள் தற்போது எந்தப் பொருளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விவரிக்கின்றார்.

சித்தர் பாடல்களில் காணப்படும் உளநோய்களுக்கான மருத்துவக்குறிப்புக்களை ஆறாவது கட்டுரையும், தமிழ்மொழியில் திசைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து ஏழாவது கட்டுரையும் பேசுகின்றன. அரியலூர் பெரம்பலூர் பகுதிகளில் கிடைக்கும் புதைஉயிர் படிமங்கள் குறித்தும் அவற்றின் காலம் குறித்தும் எட்டாம் கட்டுரை பேசுகிறது. நிகண்டு என்பது இடுகுறிப்பெயரா? என்ற கேள்வியுடன் துவங்கும் ஒன்பதாவது கட்டுரை, பல்வேறு காரண காரியங்களை விளக்கி. இல்லை அது காரணப்பெயர்தான் என்று ஒரு தெளிவான தீர்வுடன் முடிவடைகிறது. பத்தாவது கட்டுரை, சித்தர்களது பாடல்களில் குறிப்பிடப்படும் பதினெட்டுபாஷை என்ற சொல்லாட்சிக்கான பொருளையும் அச்சொல் பயன்படுத்தப்பட்ட விதங்களையும் பற்றியும் விவரிக்கிறது
’சோதிடமும் கன்மகாண்டமும்’ என்ற தலைப்பிலான பதினோராவது கட்டுரை, சோதிடக்கலை குறித்தும் அக்கலையின் உட்பிரிவுகளில் ஒன்றாகவும், ஒரு மனிதன் தனது இப்பிறவியில் செய்யும் நன்மை, தீமைகளின் பலாபலன்கள் அடுத்தடுத்த பிறவிகளில் எதிரொலிக்கும் என்ற கருத்தியல் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படுவதாக அமைந்ததுமான ’கன்மகாண்டம்’ குறித்தும் ஏராளமான தகவல்களை விவரிக்கிறது.
அடுத்து அமைந்த பன்னிரண்டாவது கட்டுரை எண்ணும் எழுத்தும் மனிதனுடைய வாழ்வியல் முறையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும், பண்டைய கல்வி முறையில் அவை எப்படி வெகு இயல்பாகக் கற்றுத் தரப்பட்டது என்பதையும் குறிப்பிடும் நூலாசிரியர் கணக்கியல் முறை குறித்து மிக விரிவாகப் பேசுகிறார். பண்டைய கல்வி முறையில் கணிதவியல் பயன்பாட்டில் இருந்து வந்த குறியீடுகள் அவற்றிற்கான தமிழ்ப் பெயர்கள் உள்ளிட்ட ஏராளமான செய்திகள் விவாதிக்கப் பட்டுள்ளன.
பதின்மூன்றாவதாகவும், நூலின் இறுதிக் கட்டுரையாகவும் இடம் பெற்றிருப்பது ‘சித்தர் சரவியல்’ என்ற தலைப்பிலான கட்டுரை. ‘சரவியல்’ என்பது சித்தர் இலக்கியங்களில் மனிதன் சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் இயங்கியல் பற்றிய அறிவியல் என விளக்கம் அளிக்கும், ஆசிரியர், சித்த மருத்துவத்தில் ‘சரவியல்’ முக்கியப் பங்காற்றுவதையும் விவரிக்கிறார்.
மொத்ததில், சித்தர்கள், சித்த மருத்துவம், சித்தர்கள் விட்டுச் சென்ற அறிவியல் கருத்தாக்கங்கள் ஆகியவற்றை மிகச்சிறப்பாக விவரிக்கும் ஒரு நல்ல தொகுப்பாக இந்நூல் உருப்பெற்றுள்ளது.
சித்தர்களைப்பற்றிப் புதியதாக அறித்துகொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே சித்தர்களைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், குறிப்பாக ஆய்வாளர்களுக்குப் பயனளிக்கும் நூல் இது