கமலாலயன்
சிறை என்னும் மாய உலகம் கனத்த கோட்டைக்கதவுகளுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் உலகம். அங்கு நிகழ்பவை என்னென்ன, யாரெல்லாம் அங்கு வாழ்கிறார்கள், யாருடைய அதிகாரம் அங்கே கொடி கட்டிப்பறக்கிறது, சிறை என்பது மனிதர்களைக் கம்பிகளுக்குள் அடைத்து முடக்கிப் பாதுகாக்கும் இடம்தானா என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் பொதுவெளியில் ஊடாடும் நமக்கு ஏற்படுகின்றன. அந்த உலகுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அங்கு கொஞ்சகாலமாகிலும் வாழ்ந்திருந்தால்தான் சொல்ல முடியும்.
சிறையினுள் வாழ்பவர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள முதன்மை ஆதாரங்களாக இருப்பவை அங்கு இருப்போரின் வாக்குமூலங்கள்தாம்.அவற்றை அவர்களின் வாய்மொழியாகக் கேட்டு அறிவது என்பது எல்லாராலும் முடியாது. அங்கு சிறைக்குள் கைதிகளாக, பணியாளர்களாக, அதிகாரிகளாக இருக்கும் பலர், தமது அனுபவங்களைப் பதிவு செய்யும் வகையில் நூல்களை வெளியிடுவது அரிதுதான். எப்போதாவதுதான் இத்தகைய சுய அனுபவக் கதைகள் வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி குறிப்பிடத்தக்க ஒரு தன் வரலாற்று நூலாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புத்தகம் மதுரை நம்பியின் ‘சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்’.

இது அவரின் தன் வரலாற்றுக்கதை என்றே கூற முடியாத அளவுக்கு அவரைப்பற்றிய செய்திகள் மிக மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. அவையும்கூட மதுரை, வேலூர் என்று வெவ்வேறு சிறைகளுக்குச் சிறைக்காவலராகப் பணியேற்றுப் போனதையும், வந்ததையும் ஓரிரு வாக்கியங்களில் சொல்லிவிட்டுக் கடந்து போய்விடும் தகவல்களாகவே இடம் பெற்றிருக்கின்றன.
முற்றிலும் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த குற்றவாளிகள், சிறை அதிகாரிகள், அங்கு அவ்வப்போது ஆய்வுக்காக வரும் மேலதிகாரிகள், அங்கே கைதிகளாக இருந்து விடுதலையானபின், அமைச்சராகப் பொறுப்பேற்று அங்கே வந்து அணிவகுப்பு மரியாதையைப் பெற்றுக்கொண்டு உள்ளே கம்பீரமாக வரும் அபூர்வ மனிதர்கள் அல்லது பதவிகளில் உயர்ந்த இடத்தில் இருந்த சமயம் அந்தச் சிறைக்குள் ஆய்வு செய்ய வரும்போது அதீதமான அளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டுப் போனவர்கள், காலத்தின் கோலத்தால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுக் கைதிகளாக உள்ளே வந்து தலை நிமிர்ந்து பார்க்கவும் திராணியின்றிக் கூனிக்குறுகி வந்து செல்லினுள் முடங்கிக்கிடந்ததையும் அமைதியான தொனியில் சொல்கிறார் மதுரை நம்பி.
தமிழில் சிறைவாழ்க்கை பற்றிய நூல்கள் வெகு குறைவுதான். மறைந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தோழர் ஏ.கே. கோபாலன் அவர்கள் படைத்த ‘நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற தன் வரலாற்று நூல்; கே.பாலதண்டாயுதம் அவர்கள் தந்த ஆயுள் தண்டனை அனுபவங்கள்; ஜூலியஸ் பூசிக்கின் ‘தூக்குமேடைக் குறிப்புகள்’; ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்துக் குமுதம் இதழில் தொடராக வெளியான ‘பட்டாம் பூச்சி; நிரஞ்சனா அவர்களின் நினைவுகள் அழிவதில்லை’ நாவல்; ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் அவர்களின் நாவல்கள், சுயசரிதை; ‘வேலூர் சிறைப் போராட்டம்’ என்ற சி.ஏ.பாலனின் நூல்; அவரின் சுயசரிதையான ‘தூக்குமர நிழலில்’ பகத்சிங்கின் ‘சிறைக்குறிப்புகள்’ தியாகு அவர்கள் விகடனில் தொடர்ந்து பகிர்ந்துகொண்ட அவரின் சிறை வாழ்க்கை நினைவுகள் அடங்கிய ‘கம்பிக்குள் சித்திரங்கள்’ தொடர்;
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களும், தொண்டர்களும் வெவ்வேறு புத்தகங்களிலும், நினைவு மலர்களிலும் ஏராளமாகப் பகிர்ந்துகொண்டிருக்கும் மலரும் நினைவுகள் அடங்கிய கட்டுரைப்பகுதிகள்– என்பனவெல்லாம் தமிழ்நாட்டின், இந்தியாவின் சிறைகளுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் இன்னோர் உலகம் பற்றி நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஆனால், நான் அறிந்தவரை சிறைக்காவலரோ அல்லது சிறையதிகாரிகள் எவருமோ தங்களின் பணிக்கால அனுபவங்களைக் கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ தந்ததில்லை. அந்தவகையில், மதுரை நம்பியின் இந்த ‘சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்’ கட்டுரை நூல் ஒரு முதல் முயற்சி என்றே சொல்ல முடியும்.
முப்பத்தொரு கட்டுரைகள் அடங்கிய இந்த நூலுக்குத் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். அணிந்துரையில் எஸ்.ஏ.பி.பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “தோழர் மதுரை நம்பி அவர்களின் இந்த நூலை நான் படித்தபோது இது சிறுகதைகளின் தொகுப்பா அல்லது சிறைக்கைதிகளைப் பற்றிய அனுபவங்களின் தொகுப்பா என்ற திகைப்பு ஏற்பட்டது. இது, நிறைந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு சிறையதிகாரியின் டைரிக்குறிப்புகளாக, மொத்தமாய்ப் பார்த்தால் சிறைக்கைதிகளின் வாழ்க்கை பற்றிய தனித்தனித் தொகுப்புகள், ஒரு நாவலைப்போல் விரிகின்றன…” ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் மதிப்புரை விரிவானது; நுட்பமானது.
சிறைகளில் கம்யூனிஸ்டுகள் போராட்டங்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகம்; அவை வெளிஉலகின் கவனத்திற்கு ஒருபோதும் வருவதில்லை. கஞ்சா விற்பவர்களும், சீரியல் கொலையாளிகளும், கொடூரக் கொலைக் குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலகத் தாதாக்களும் உள்ளே செய்யும் அடாவடித்தனங்கள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிச்சமிடப்படுகையில், மக்கள் நலனுக்காகக் காராக்கிருகத்திற்குள்ளும் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் கம்யூனிஸ்டுகள் ஏன் கண்டுகொள்ளப்படுவதில்லை? இந்தக் கேள்விக்கான விடையொன்றும் அறியவே முடியாத சிதம்பர ரகசியமல்ல. வெளியே அரசுகளின், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்டுகள், சிறைகளுக்கு உள்ளேயும் அதிகார வர்க்க அத்துமீறல்களை எதிர்த்துக் களமாடுகின்றனர்.
அதை எப்படி அதிகார வர்க்கமும், ஊடக உலகமும் சகித்துக்கொள்ளும்? அந்த உண்மைகள் பொதுமக்களின் கவனத்துக்கு வந்தால் ஆளும் வர்க்கம் சித்தரித்துக் காட்டும் கம்யூனிஸ்டுகள் பற்றிய பொய்மைச் சித்திரங்களின் சாயம் வெளுத்துவிடாதா? மக்களின் நலம் நாடிப்போராடும் உண்மைப் போராளிகள் கம்யூனிஸ்டுகளே என்பதை இந்த உலகும், குறிப்பாக உழைக்கும் வர்க்கமும் அறிந்து கொண்டு, செங்கொடியின் பாதையில் அணிவகுத்து விடாதா?
சரி,சிறைக்காவலராக இருந்தும் இதை என்ன நோக்கத்துக்காக மதுரை நம்பி படைத்துத் தந்திருக்கிறார்? அவருடைய என்னுரையின் சில பகுதிகள் அதை நமக்குத் தெரிவிக்கின்றன.
ச.தமிழ்ச்செல்வன், ‘வேறொரு கோணத்து வாழ்வு’ என்ற தலைப்பிலான தன் மதிப்புரையில் சில மதிப்பீடுகளைக் கொடுக்கிறார்; “சி.ஏ.பாலன், தியாகு போன்ற பலரும் சிறைக்குள்ளிருந்த அனுபவங்களைப் பதிவு செய்திருந்தாலும் ஒரு காவலராக இருந்து தந்திருக்கும் முதல் தமிழ் நூல் இதுதான் என்று நினைக்கிறேன்… ஓர் ஆழ்ந்த வாசகராக இருக்கும் நம்பியின் ‘பார்வை’ முக்கியமானது.
புத்தகத்தின் அடிப்படையில் மலரும் ஒரு நட்பை ஒரு காதல் மலர்வதைப் போல ஓர் அத்தியாயத்தில் பேசுகிறார். வேலூர் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் கருப்பண்ணனுக்கும் இவருக்கும் இடையில் முகிழ்க்கும் அந்தப் புத்தகக் காதல் கதை, ‘காவல்கோட்டம்’ ‘என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாறு’ எனப்பல திசைகளில் பயணிக்கிறது….” இன்னபிற கருத்துகளைக் கூறும் தமிழ்ச் செல்வனின் கட்டுரை இந்த நூலின் அடிப்படைப் பாடுபொருள் இன்னதென்று கோடிட்டுக் காட்டி வாசக மனங்களை ஆற்றுப்படுத்துகிறது.
மதுரை நம்பியின் பணிக்காலத்தில் இரண்டு மரணதண்டனைக் கைதிகள் தூக்கில் இடப்பட்டிருக்கின்றனர்; மதுரையின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கைதாகிச் சிறையினுள் அடைபட்டதும், சிறையினுள் அடைபட்டிருந்தவர் விடுதலையாகிப் போன ஒரு சில மாதங்களில் சிறைத்துறைக்கே அமைச்சராகப் பொறுப்பேற்று வந்ததும் எவ்வளவு பெரிய வினோதங்கள்? இவை போன்ற சிறைச் செய்திகளையும், தகவல்களையும் தனது நண்பர்களிடமும், தோழர்களிடமும் அடிக்கடி சொல்லியிருக்கிறார் நம்பி. அப்போது யாரும் அவ்வளவு ஆர்வத்துடன் அவற்றைக் கேட்கவில்லையாம்.
சில ஆண்டுகளுக்குப்பின் சில இலக்கியவாதிகளிடம் நட்புக் கிடைத்தபின், அவர்களிடம் சிறையனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் மிக ஆர்வமுடன் கேட்டுள்ளனர். மேலும் மேலும் அவை பற்றிய உரையாடல்களை அவர்கள் விரும்பி மேற் கொள்ளவே மதுரை நம்பியும் அந்தப் பகிர்தல்களில் மூழ்கியிருந்திருக்கிறார். பிறகு பணி ஓய்வுக்குப்பின் அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதன் விளைவு, நம் கரங்களில் இந்தச் ‘சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்’ என்ற கட்டுரைத்தொகுப்பு நூலாக வந்திருக்கிறது.
ஒரு சமூக விரோதியை, ஊர் மக்களுக்கும்,வழிப்போக்கர்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் ஓயாமல் தொல்லை கொடுத்து ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வந்த சிலருடன் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நேரடி மோதல்களில் இறங்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து, அது ஒரு சமூக விரோதியின் கொலையில் போய் முடிகிறது. சட்டப்படி அவர்கள் செய்தது தவறுதான். ஆனால், சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பறை சாற்றிக்கொள்பவர்கள் உரிய நேரத்தில் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்திருந்தால், இவர்கள் ஏன் சட்டத்தைத் தமது கரங்களில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?
அப்போதெல்லாம் அந்த ரவுடிகளிடம் மாமூல் வாங்கிப்பொறுக்கித் தின்றுகொண்டிருந்தவர்கள், மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் நேரடி நடவடிக்கையில் இறங்கியபின் ஓடோடி வந்து நடவடிக்கை எடுத்து, நான்கு கம்யூனிஸ்டுகளைச் சிறையில் அடைக்கின்றனர். கணேசன், சிக்கந்தர், அசோகன், ஜீவா ஆகியோரே அந்த நால்வர். ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று அவர்கள் சிறைக்குள் வந்ததும் புரடசிமணியும், டான்யா ராஜேந்திரனும் அவர்களை அரவணைத்துக்கொள்கின்றனர்.
சிறைக்குள் வந்த மார்க்சிஸ்ட் தோழர்கள் வயதிலும், அனுபவங்களிலும் மூத்தவர்கள். எனவே சிறைக்குள் இருந்த இளம் கைதிகள் இவர்கள் வரவினால் உற்சாகம் அடைந்து, பாட்டு, விவாதம், கலந்துரையாடல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் சிறை வாழ்க்கையைச் சுவையும், பயனும் மிக்கதாக ஆக்கிக்கொள்கின்றனர். அந்த நான்கு தோழர்கள் சிறைக்கு உள்ளேயே செவ்வியக்கத்தைக் கட்டி வளர்க்கும் அளவுக்கு சக கைதிகளின் வரவேற்பும், பங்கேற்பும் மிகுந்த உத்வேகம் நிரம்பியதாகி விடுகிறது.
சிறை நிர்வாகம் இதையெல்லாம் வேடிக்கையா பார்த்துக்கொண்டிருக்கும்? இந்தக் கைதிகளைப் பிரித்து வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கிறார்கள்; புரடசிமணியைக் கடலூர் சிறைக்கே அனுப்பி விடுகிறார்கள். கணேசன் மட்டும் உள்ளே இருக்கிறார்; மற்ற மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விடுகிறது. எனவே சிறைக்குள் படிப்படியாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே போகின்றன…
இது ஓர் உதாரணம்தான். மணல்மேடு சங்கர், ஆட்டோ சங்கர் போன்ற கொடூரமான கொலைக்குற்றவாளிகள் சிறைக்குள் சகல ராஜோபசாரங்களுடனும் சுக போகிகளாகவும் இருக்கும் அதே சமயம், கம்யூனிஸ்டுகள் மட்டும் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, கொடூரமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக வேண்டிய கைதிகளின் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.பிரிட்டிஷ் இந்தியச் சிறைகள் என்றாலும், சுதந்திர இந்தியச் சிறைகள் என்றாலும் இந்த விதி மட்டும் மாறவேயில்லை. இதைப்பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை இத்தொகுதியின் கட்டுரைகள் ஏற்படுத்துகின்றன.
குருவியும் குருசாமியும், ஆர்டர்லி அழகப்பன், எலிக்கறிக்கே ஏங்கிய காலம், துயரங்கள் நிழலாய்த் தொடரும் பாதை, ஒரு நாள் பரோல், அவனின்றி அசையாது, வால்மீகியின் வாரிசுபோல்…, எங்கிருந்தோ வந்தான், வாசிப்புப்பழக்கம் வசப்படுத்தும், கந்தசாமி என்ற கம்யூனிஸ்ட் – இந்தக் கட்டுரைகளை எல்லாம் வாசித்து முடிக்கையில், நம் கண்களில் கண்ணீரும், நெஞ்சில் ஓர் ஆழ்ந்த பெருமூச்சும் வராமல் இருக்காது. மிகப்பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் துயரக்காவியங்கள் இவை. இவற்றில் வாசிப்புப் பழக்கம் வசப்படுத்தும் என்ற கட்டுரை ஒன்று மட்டும் சற்று வித்தியாசமானது.
இந்தக் கட்டுரையைத்தான் ச.தமிழ்ச்செல்வன் தன் மதிப்புரையில் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். கருப்பண்ணன் என்ற சிறை மேலதிகாரிக்கும், நம்பிக்கும் இடையே பொதுவான ஓர் இழையாகப் புத்தக வாசிப்பு அமைகிறது. அது இந்த இருவருக்கிடையே இருந்த அத்தனை இடைவெளிகளையும் உடைத்து நொறுக்கி மனரீதியில் ஒன்றுபட்ட நண்பர்களாக ஆக்கி விடுகிறது. புத்தக வாசிப்பின் வலிமை எப்பேர்ப்பட்ட அதிகார வர்க்கத்தினரையும் அசைத்துக் கட்டிப்போட்டு விடும் மந்திரக்கயிறாக இருப்பதைப் படம் பிடித்துக்காட்டும் கட்டுரை இது.
சொந்த மகனையே கொன்று விடுகிறார் ஒரு படைப்பாளி. தமிழ்நாட்டு இலக்கிய உலகம், இப்படியொரு படைப்பாளியை அதற்கு முன்பும் சரி, இன்று வரையிலும் சரி, கண்டதில்லை.சௌபா என்ற அந்தப் படைப்பாளி சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு கொள்ளையன் பற்றித் தீட்டிய சொல்லோவியம் அவரைப் புகழ் ஏணியின் உச்சியில் கொண்டுபோய் உட்கார வைத்தது.ஆனால், அவரின் மகனை அவரால் சரியான ஒரு சித்திரமாக வரைந்தெடுக்க முடியவில்லை. அவருடைய இறுதி நாள்கள் எவ்வளவு துயரமிக்கவையாகிப் போயின என்பதை மதுரை நம்பியின் கட்டுரை மனம் கலங்கும் வகையில் சொல்லியிருக்கிறது.

இந்த நூலின் மொழிநடை என்னைப் பிரமிக்க வைத்த பல அம்சங்களில் ஒன்று. மதுரை நம்பியை நான் வேலூர் சிறையில் தொழிற்சங்கப் போராட்டத்தின்போது சந்தித்தேன். அப்போது நானே ஒரு கைதி. என்னுடன் நூற்றுமுப்பத்து மூன்று தொழிலாளிகள் ரிமாண்ட் கைதிகளாக இருந்தார்கள். அப்போது சிறைக்குள் இருந்த பல்வேறு கைதிகளும், அவர்கள் தொடர்புடைய வழக்குகளும் பல ரகங்களில் அமைந்தவை. வாழ்வின் விசித்திரங்கள் என்றுதான் அவற்றைக் கூறவேண்டும்! ஆனால், இந்த நம்பி என்ற கண்டிப்பான கடமையுணர்வுமிக்க காவலரின் மனதினுள் இருந்த படைப்பாளியை என்னால் இனங்காண முடியாமற் போனது பெரிய சோகமே.
நூலின் பல இடங்களில் அவரின் பேனா எரிமலையாகக் கொதிக்கிறது. சில இடங்களிலோ பனிமலைகளின் குளிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. நூலின் முதல் அத்தியாயத்தில், மதுரை நம்பி பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்த முதல்நாள் மதுரை மத்திய சிறையின் பெருவாயிலில் கண்ட கொடுமையான காட்சியை விவரிப்பதில் தொடங்குகிறது. நூல் நிறைவடையும்போதோ, மறைந்த கம்யூனிஸ்ட் தோழர், மகத்தான உழைக்கும் வர்க்கத்தலைவர் பி.ராமமூர்த்தி அவர்களின் மகள், வழக்கறிஞர் ஆர்.வைகை அவர்கள், உச்ச நீதிமன்ற ஆணையின்படி இந்தியா நெடுகிலும் உள்ள சிறைகளில் கைதிகளின் வாழ்க்கை, அவர்களுக்கு உள்ள சுகாதார வசதிகள், உணவு, பிற மனித உரிமைகள் பற்றிய ஓர் ஆய்வின் நிமித்தம் அதே மதுரைச் சிறைக்குள் வந்து ஆய்வை முடித்துவிட்டு வெளியேறும் வாயிலில் நிற்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
‘சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்’ நூலின் தொடக்கமும், நிறைவும் இப்படிப் பொருத்தமான காட்சிகளுடன் ஒரு மத்திய சிறையின் நுழைவாயிலிலும், வெளியேறும் வாயிலிலும் அமைந்துள்ளன. இது, தான் திட்டமிட்டுச் செய்ததல்ல, தானாகவே அப்படி அமைந்து விட்டது என்கிறார் மதுரை நம்பி. இருக்கலாம். எப்படியிருப்பினும் இவற்றின் பொருத்தப்பாட்டை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த நூலை மிக அழகிய அட்டைப்படத்துடன், தெளிவான அச்சமைப்புடன் நன்கு வடிவமைத்துப் புத்தகமாக்கி இருக்கும் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தையும், மேலட்டையின் அழகையும் பாராட்டாமல் இருக்க முடியாது. மேலட்டையை வடிவமைத்துத் தந்திருப்பவர் வடிவமைப்பாளர் லார்க் பாஸ்கரன் அவர்கள். சமூக இயக்கங்களில் உள்ளவர்களும், பொதுவாக மனித உரிமைகளில் அக்கறை கொண்டிருப்போரும் அவசியம் படித்தாக வேண்டிய புத்தகம் இது. மதுரை நம்பியின் பேனாவால் இன்னும் இது போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களை இனங்காட்ட முடியும். அவர் தொடர்ந்து அதைச் செய்வார் என்றே நம்புகிறேன்…