யாழன் ஆதி
கவிப்பித்தனின் தற்போதைய நாவல் ‘சேங்கை’. சேங்கை என்றால் பாழடைந்த நீர் நிலை. ஆனால் ‘சேங்கை’ நாவல் சென்னையை அடித்தள நிலமாகக் கொண்டது. லாரி தொழிலில் இருக்கும் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய அப்பட்டமான பதிவும் அந்த மக்களின் வாழ்வின் பின்புலங்களும் ‘சேங்கை’யில் மிகச்சிறப்பாக பதிவாக்கி இருப்பார் கவிப்பித்தன்.

கவிப்பித்தன் நாவல்களில் பாத்திரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அவ்வளவு முக்கியத்துவம் அந்தப் பாத்திரங்கள் வாழும் நிலங்களுக்கும் இருக்கும்.
‘சேங்கை’ நாவல் தொடக்கமே சென்னைதான். கதையின் நாயகர்கள் மணியும் சுந்தரும் சென்னையில் இருக்கும் ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில்தான் வேலை செய்வார்கள். மணி இரவில் அந்த அலுவலகத்திலேயே தங்கிவிடுவான், அலுவலகத்தின் வரைபடத்தை இப்படி ஆரம்பிப்பார் கவிப்பித்தன்.
‘சென்னைத் துறைமுகத்தின் முதுகுப்பக்கமாக எழுந்த சூரியன் நிதானமாக மேலே ஏறிக்கொண்டிருந்தான்…’ இப்ராகிம் சாலை முட்டும் தம்புசெட்டித்தெரு… அங்கே மாடிப்பூங்காவுக்கு எதிரில் உள்ள மஞ்சள்வண்ணக் கட்டிடத்தில் இரண்டாவது மாடி வராந்தாவில் மணி நிற்கிறான். கதைநாயகனைக் காட்டும் முதல் காட்சி இதுதான். கடற்கரைச் சாலை ராயபுரம், கண்புருவத்தைப்போல மேடிட்ட ராயபுரம் மேம்பாலம், அதில் மிகுந்திருக்கும் வாகனங்கள் கிழக்கு மேற்காகப் படுத்திருக்கும் கடற்கரைச் சாலை நோக்கியும் தங்கச்சாலை நோக்கியும் தயக்கமாகப் பிரிந்து பயணித்தன என சென்னையின் முக்கியப் பகுதிதான் நாவலின் தொடக்கம்.
அந்த மஞ்சள் நிறக்கட்டிடத்தில் இருக்கும் பாவனா டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில்தான் நாவலின் முக்கிய பாத்திரங்களான மணி, சுந்தர், லீனா, அலுவலக மேனேஜர் மாதவன், இடையில் அதிகாரியாக வந்து போகும் சைமன் ஆகியோர் நாவலில் உயிர்பெறுகிறார்கள். இந்தக் கட்டிடத்தின் மேலிருந்துதான் மணி சென்னையை மட்டுமல்ல, தன் காதலியையும் பார்க்கிறான். குறைந்த சம்பளத்தில் வெளியூரிலிருந்து வந்து அலுவலகத்திலேயே தங்கி வேலை பார்க்கும் லாரி அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஓர் இளைஞனின் வாழ்வு இங்குதான் நிகழ்கிறது.
சுந்தர் ஜோலார்பேட்டையிலிருந்து வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸில் தினமும் தன் ஊரிலிருந்து சென்னைக்கு வருபவன். அந்த ரயில் மிகவும் முக்கியமானது. வட மாவட்டங்களான தற்போதைய திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம் குறிப்பாக அரக்கோணம் அதனைச் சுற்றியுள்ள ஊர்கள், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருபகுதி என பரந்திருக்கும் இந்நிலப்பரப்பிலிருந்து வேலைக்கு செல்லும் கல்லூரிக்குச் செல்லும் மக்கள் ஏராளமாக இருப்பார்கள். அந்த ரயிலில் முதல்வகுப்பு ஒரே பெட்டிதான். அதில் பெரும்பாலும் ரயில்வேயில் பணியாற்றும் உயரதிகாரிகள் பயணம் செய்வார்கள்.
மீதியெல்லாம் முன்பதிவு செய்ய முடியாத பெட்டிகள். அலுவலகம் போகக்கூடியவர்கள், கட்டிடத் தொழிலாளிகள், மாணவர்கள் என அந்த ரயில் உட்கார இடமில்லாமல் நிரம்பி வழியும். பெண்களும் இதில் அடக்கம். அந்த ரயில் சென்னை சென்ட்ரலில் வருவதற்கு முன்பு சிக்னல் இல்லாத காரணங்களால் பேசின்பிரிட்ஜ் நிலையத்தில் நிற்கும்.
வடமாவட்டங்களையும் சென்னையையும் இணைக்கும் அந்த ரயில் நாவலில் இடம்பெறுவது மிகவும் முக்கியமானது. உழைக்கும் மக்கள் பயணிக்கும் மிக எளிய வாகனமது. சுந்தர் அதில் பயணித்து ராயபுரம் வரை கடற்கரை மின்ரயிலில் பயணித்து அலுவலகம் வருவான். நாவலில் சுந்தரின் வாழ்வுதான் இரண்டாம் பகுதியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் இந்த நாவலில் பதிவாகியிருக்கும். இந்தத் தொழிற்சாலைகளிலிருந்துதான் லோடு ஏற்றிக்கொண்டு வட மாநிலங்களுக்கு லாரிகள் செல்லும்.
“ஆனாலும் இந்தச் சென்னைக் கிளை அலுவலகத்திலிருந்துதான் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். அதுவும் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குத்தான் அதிக ஒப்பந்தம்.
கிண்டியில் ஓர் இரும்புத் தொழிற்சாலை, அம்பத்தூரில் ஒரு மிதிவண்டித் தொழிற்சாலை, ஆவடியில் இரும்பு உருக்குத் தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் இரும்பு பைப் நிறுவனம்,சோழவரத்தில் ஒரு பிளாஸ்டிக் பைப் நிறுவனம், நீலாங்கரையில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் நிறுவனம் எனப்பல நிறுவனங்களில் ஒப்பந்தம்.
இந்த நிறுவனங்களில் லோடு ஏற்றும்போது நடைபெறும் நிகழ்வுகள், அதில் உள்ள சிக்கல்கள், கம்பெனிகளுக்கு லாரி குறித்த நேரத்திற்குப் போகாவிட்டால் செய்யப்படும் தகிடுதத்தங்கள், மணி மாதிரியான புரோக்கர்கள் வாங்கும் வசவும், லோடு ஏற்றுவதில் உள்ள நெளிவு சுளிவுகள் என நாவலில் இழையோடும் காட்சிகள் நம்மை மிக வெகுவாக இங்கெல்லாம் இட்டுச்செல்லும்.

சென்னையில் லாரி ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் அனைத்து இடங்களும் இந்த நாவலில் பேசப்படுகின்றன என்பதை நாம் உறுதியாக நம்பலாம். லாரியின் வழித்தடங்கள், சிக்னல்கள், சென்னை சாலைகளின் போக்குவரத்து நெரிசல்கள். லாரி ஓட்டுநர்களின் பிரச்சினைகள் என சென்னை சாலைகள் இந்த நாவலில் வருகின்றன.“ெங்குன்றம் நூறடி சாலையில் இறங்கினான் மணி .
“செங்குன்றத்திலிருந்து மாடிப்பூங்கா போக ஒன்றரை மணிநேரம் ஆகும். ஆனால் அந்த நேரத்தில் மாடிப்பூங்காவுக்கு நேரடிப் பேருந்து கிடைக்காது. மூலக்கடைக்குப்போனால் அங்கிருந்து தங்கசாலை அல்லது ராயபுரம் பேருந்தைப் பிடிக்கலாம். இந்தச் சாலை ஓரங்களில் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் டீக்கடைகள், அங்கு சுடப்படும் வடை, சாலையோர உணவுவிடுதிகள் என நாவலின் போக்கில் அனைத்தும் சொல்லப்பட்டிருக்கும்.
‘சேர்வாவில் தேங்காய்க்குப் பதிலாகத் தேங்காய்ப்புண்ணாக்கும், சாம்பாரில் கடலைப்பருப்புக்குப் பதிலாக கடலை மாவும், ருசிக்காக அஜினோமோட்டாவும் கலப்பார்கள் என்று சுந்தர்தான் சொல்வான்’ தங்கசாலையில் இறங்கி, இரவில் பேருந்து இல்லாததால் நடக்கத்தொடங்குவான் மணி. ஸ்டேன்லி மருத்துவனையின் இரண்டாவது நுழைவுவாயில், அதற்கு அருகே இருக்கும் பிணவறை, பாரதி கல்லூரிச் சாலை, நாய்கள் நிறைந்திருக்கும் அந்தச் சாலைகளில் கும்மிருட்டில் நடப்பது, பாலியல் தொழிலாளிகளின் இருப்பு என சென்னையின் சித்திரம் நாவலில் விரியும்.
மண்ணடி முனியாண்டி விலாஸ் சாப்பாடு, வாழையிலையில் மடித்து பிளாஸ்டிக் கவரில் போட்டுக்கொடுத்த வஜ்ஜிரம் மீன், அதை எடுத்து அலுவலகத்துக்கு வரும், மணியின் கண்களில் படும் தம்புசெட்டித் தெருவும் மண்ணடியும் ஏராளமான லாரி குடோன்கள், சிறியதும் பெரியதுமான லாரிகள், அவற்றில் ஒரு லாரியில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருக்கும் வியர்வை ஊற்றும் உடலுடைய தொழிலாளிகள், மதுவருந்தும் தொழிலாளிகள், அவர்களின் உயிர்ப்பான சென்னைத் தமிழ் உரையாடல்கள் இந்த நாவலில் சென்னையின் அடையாளங்கள்.
சென்னைத் துறைமுகம் அதில் லோடு ஏற்றுவது, அதனுள்ள இருக்கும் பிரமிப்புகள், மீனம்பாக்கம் இரும்பு நிறுவனம், லோடு லாரி செல்லும் கத்திப்பாரா முனை, நந்தம்பாக்கம், போரூர், பூந்தமல்லி, நிதி நிறுவனங்கள் நிறைந்து இருக்கும் வால்டாக்ஸ் சாலை என சென்னையின் இன்னொரு பக்கமும் நாவலில் இருக்கிறது.
சென்னையின் லாரி இயங்கு தளங்கள் எங்கெங்கு இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் மிகுந்த சிரத்தையோடு நிதானமாக யோசித்தும் தரவுகளைச் சேகரித்தும் தன் வாழ்விலிருந்த அனுபவங்களைக் குவித்தும் ‘சேங்கை’ நாவல் தன் போக்கில் இயங்குகிறது. இதனால் சென்னையில் இருக்கும் லாரி தொழிலாளர்கள், புக்கிங் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், நிறுவனங்கள் என அனைத்தும் ‘சேங்கை’யில் காணலாம்.
கதையின் இரண்டாம் பாகத்தில் கிராமங்களும் அங்கிருக்கும் ஜாதி வாழ்வு முறைகளும் அதை எதிர்க்கும் மக்களின் வாழ்வும் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்புலத்திலிருந்து வரும் சுந்தர் சென்னை அலுவலகத்தில் எதிர்கொள்ளும் லீனாவின் காதல் சென்னையின் உளவியலைக் கட்டமைப்பதாய் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
மனத்தைப் பார்த்து வரும் காதல். ஜாதியைப் பார்க்காமல் சுந்தரைக் காதலிக்கும் லீனாவின் அன்பு, கிராமத்தில் ராணியைக் காதலித்து அவளை அனுபவித்து விட்டு அவளைக் கைவிடும் ஜாதிய நிலவுடைமையாளனாகிய கோபாலின் கயமை இவற்றைக் கொண்டுவரும் நாவலில் சென்னை எத்தைகைய சமூக உளவியல் பொருளாதார மாற்றத்தை அடைந்திருக்கிறது என்பது நமக்குப் புலனாகிறது. ‘சேங்கை’ நாவலில் சென்னை ஒரு முக்கியப் பாத்திரமாகவே மிளிர்கிறது.
