நேர்காணல்
தோழர் என்.சங்கரய்யா
சந்திப்பு : எஸ்.ஜி.ரமேஷ்பாபு
தமிழ்நாட்டின் தொடக்ககாலத் தொழிலாளர் இயக்கம் பற்றிய உங்கள் நினைவுகளிலிருந்து தொடங்கலாமா?
ஆம்; அதுதான் சரியாக இருக்கும். 1906-ஆம் ஆண்டில், நாட்டு விடுதலைப் போரில் தூத்துக்குடி நகரின் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடி வந்தார். தூத்துக்குடியில் அன்றைக்கு இயங்கி வந்த, அந்நியர்களுக்குச் சொந்தமான ஹார்வி டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த கொடிய நிலைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தலைமையேற்று இவ்விருவரும் நடத்தினர். பேச்சுவார்த்தையும் நடத்தி ஓர் ஒப்பந்தத்திற்கு வகை செய்தனர். இதுவே தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றுவாய்.

1917-இல், ரஷ்யாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த புரட்சியைப் பாடிப் பரவசம் அடைந்த சுப்பிரமணிய பாரதி, “ஆகாவென்றே எழுந்தது பார் யுகப்புரட்சி“ என்றும், ‘மனித சமுதாயத்தின் புதியயுகம் உதித்து எழந்தது’ என்றும் வர்ணித்தார்.
1923-ஆம் ஆண்டு மே தினத்தன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சென்னை மீனவர்களின் புகழ் பெற்ற தலைவருமான சிங்காரவேலர் செங்கொடி ஏற்றிக் கொண்டாடினார். சோஷலிஸக் கருத்துகளைப் பரப்பி வந்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 1924-இல் பிரசித்தி பெற்ற கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கில் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.சிறைவாசத்தின்போது அவரின் உடல்நலம் குன்றியதால் மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு, தென் இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின்கீழ் மக்களை அணி திரட்டும் பொருட்டு மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான அமீர் ஹைதர் கான் அவர்களை 1931-இல் கம்யூனிஸ்ட் கடசித் தலைமை அனுப்பி வைத்தது. அப்போது மாணவராயிருந்த ஆந்திர மாநிலத் தலைவர் பி.சுந்தரய்யாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு கட்சியைக் கட்டும் பணியில் ஹைதர் கான் ஈடுபட்டார்.
1934-ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சியையும், அப்போது நாடு பூராவிலும் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு தொழிற் சங்கங்களையும் குற்றவியல் திருத்தச் சட்டம் 1908-இன் கீழ் சட்ட விரோதமான அமைப்புகள் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-அன்று சென்னை இளம் தொழிலாளர்கள் கழகமும்கூட சட்ட விரோத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், 1931-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் நாட்டில் 61 வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தத் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
அப்போது நடைபெற்ற முக்கியமான போராட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்…
பிரிட்டிஷ் அரசு விதித்த தடைகள், நிறைவேற்றிய கொடிய அடக்குமுறைச் சட்டங்கள் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற பல வேலை நிறுத்தங்களில் 1,60,908 தொழிலாளர்கள் அக்காலகட்டத்தில் பங்கேற்றுப் போராடியிருந்தார்கள் என்றால், அன்றைய வர்க்கப்போராட்ட உணர்வின் வீச்சை நாம் உணர்ந்து கொள்ளலாம். தொழிற்சாலைகளில் மட்டுமன்றி, நிலவரி உயர்வினைக் கண்டித்து 1933-இல் தஞ்சாவூர், செங்கற்பட்டு, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்த விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
நிலக் குத்தகை உயர்வையும் கண்டித்து 1934-இல் மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற பல மாவட்டங்களில் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை நிலவியதால் அப்பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது.
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத்தைப் பற்றிக் கூறுங்கள்…
நான் மேலே கூறியபடி, 1930-களில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின்போது போர்க்குணம் மிக்க பலர் அவற்றில் பங்கேற்றனர். அவற்றில் காங்கிரஸ் தலைவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகத் தோன்றினர். அவர்களில் பலர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், பி.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், கே.முருகேசன், சி.பி.இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.
இந்தக் கிளை, தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும், தமிழகத் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி காட்டுவதிலும் முன் நின்றது. இந்தக் கிளைதான் புகழ் பெற்ற மெட்ராஸ் டிராம் வே தொழிலாளர்கள் சங்கத்தையும், மெட்ராஸ் பிரஸ் தொழிலாளர்கள் சங்கத்தையும் உருவாக்கியதாகும்.
இந்தக் கம்யூனிஸ்ட் கிளைதான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்போது மாணவர்களாக இருந்த கே.முத்தையா, ஆர். உமாநாத் போன்ற பலருடனும் தொடர்பில் இருந்தது. பின்னர் அவர்கள் முறையே 1938, 1939-ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.நெல்லிக்குப்பம் பாரி தொழிலாளர்களின் சங்கத்தில் பணியாற்றி வந்தவரான சி.கோவிந்தராஜன் 1938-இல் கட்சியில் சேர்ந்தார்.கோயம்புத்தூர் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவரும், வீரம் செறிந்த பல போராட்டங்களுக்குத் தலைமை ஏற்றிருந்தவருமான கே.ரமணி மற்றும் சிலர் 1939-ஆம் ஆண்டு கட்சியில் சேர்ந்தனர்.
சென்னையில் பிரபல வழக்கறிஞராக விளங்கிய எம். ஆர். வெங்கடராமன்
1939-ஆம் ஆண்டு தனது தொழிலைப் புறக்கணித்து விட்டு மற்ற தோழர்களுடன் தன்னை முழு நேர ஊழியராக இணைத்துக் கொண்டார். அதே சமயம், மத்திய்ண தலைமையின் முடிவுக்கிணங்க அந்தத் தோழர்கள் தமிழ் நாட்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினர்.காங்கிரஸ் கட்சி, சோசலிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு மேடைகளிலும் பிரதான கிளர்ச்சித் தலைவர்களாய் அவர்கள் விளங்கினர்.
இக்காலத்தில்தான் அகில இந்திய மாணவர் சங்கத்தின் கிளைகள் சென்னை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை மற்றும் பல்வேறு மையங்களிலும் உருவாக்கப்பட்டன. பல்வேறு கல்லூரிகளில் இருந்த மாணவர்களைத் திரட்டுவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை நடத்துவதற்கும் இந்த அமைப்புகளே முதன்மைக் காரணங்களாகும். அப்போது நடந்த அனைத்துத் தொழிலாளர் போராட்டங்களிலும் பின்னணியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளே.
1939-40-ஆம் ஆண்டுகளில் கேரளாவிலிருந்து ஏ.கே.கோபாலன் தலைமையில் மூத்த கட்சி அமைப்பாளர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்சியை உருவாக்குவதற்காக இங்கு வந்தனர். அவர்கள் வெளிப்படையாக மேடையேறி உரையாற்றி கட்சிக்கிளைகளைக் கட்டுவது சிரமமாக இருந்தபோதிலும், தலைமறைவாகவே செயல்பட்டு வந்தனர். அவர்களுடன் தொழிற்சங்கத் தலைவராக இருந்த தோழர் வி.பி.சிந்தன் சிறிது காலத்திற்குப் பின் வந்து இணைந்து கொண்டார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக வேரூன்றுவதில் கேரள மாநிலக் கட்சித் தோழர்களின் பங்கு மிகவும் சிறப்பானது.
எந்தச் சூழலில் தாங்கள் மாணவர் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முயன்றது. அந்த மாணவர்கள் நடுவில் குழப்பம் ஏற்பட்டு, பிளவு உருவானது. அகில இந்திய மாணவர் சங்கத்திலிருந்து மாணவர் காங்கிரஸ் உதயமாயிற்று. அகில இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டில் முதல் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
மதுரை மாணவர் சங்க மாநாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜர், பி.ராமமூர்த்தி ஆகியோரை உரையாற்ற வைத்தோம். அப்போது தலைவர்களை விடுதலை செய், அடக்குமுறையைக் கைவிடு, தேசிய அரசினை நிறுவு என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக மாணவர் சங்கம் சார்பாக இயக்கம் நடைபெற்றது. அதைக் காங்கிரஸ் மாணவர்கள் எதிர்த்தனர்.
நாம் அவர்களின் ஆகஸ்ட் இயக்கத்தை எதிர்த்ததால் பதிலுக்கு நமது இயக்கத்தினை அவர்கள் எதிர்த்தனர். அப்போது நெல்லையில் மாபெரும் பேரணி நடந்தது. அதற்கு நான் தலைமை தங்கினேன். பேரணி மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அதில் நான் உள்பட ஏராளமான மாணவர்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இரண்டு நாள்களில் மீண்டும் என்னைப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைத்தனர். பிறகு அங்கிருந்து கண்ணூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் கையூர்த் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டோம்.
எங்களைக் கண்ணநூர் சிறைக்குள் கொண்டு சென்றபோது அங்கு ஏராளமான தோழர்கள் எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். அந்தச் சிறைக்கு வெளியே ‘ஏ.கே. கோபாலன் ஜிந்தாபாத்! கம்யூனிஸ்ட் கடசி ஜிந்தாபாத்!’ என்ற முழக்கங்கள் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும். கையூர்த் தோழர்கள் தூக்கில் இடப்படுவதற்கு முன்பாக தோழர் பி.சி.ஜோஷி அவர்களைச் சிறைக்குள் சந்தித்துப் பேசினார். அந்தத் தோழர்கள் அளித்த நேர்காணல் மிகவும் முக்கியமானது. அந்தப் பேட்டி ‘மனிதத்துவத்தின் மலர்கள்’ என்ற தலைப்பில் அப்போது வெளியானது.
மாணவர் இயக்கத்திலிருந்து எப்போது கம்யூனிஸ்ட் கடசிப் பணிகளுக்கு வந்தீர்கள் ?
1942-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாணவர் இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், மாணவர் சங்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆனேன்.
நாட்டு விடுதலைக்கும், மக்களின் விடுதலைக்கும் பல்வேறு தியாகங்களைப் புரிந்த நீங்கள், நம் நாடு விடுதலையடைந்த போது எப்படி உணர்ந்தீர்கள்?
நான் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக ஆனபோது
வி.கே.புரம், மதுரை பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் தீரத்துடன் நடைபெற்றன.அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மதுரைச் சதி வழக்கு ஜோடிக்கப்பட்டது.என்னுடன் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் 1946-ஆம் ஆண்டில் இடைக்கால அரசாங்கத்தில் முதல்வர் ஆகி விட்டார். அப்போதுதான் இந்தச் சதி வழக்குப் போடப்பட்டது.
நூற்றுக்கணக் கானவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.அதில் முதல் குற்றவாளி பி.ராமமூர்த்தி. இரண்டாவது குற்றவாளி நான். மூன்றாவது குற்றவாளி கே.டி.கே.தங்கமணி. யாரும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 1947, ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு வரை சிறையில் இருந்தோம்.
தூக்கில் இடப்பட்ட தோழர் பாலு அப்போது அங்கு ஆயுதப்படைக் காவலராக இருந்தார். 1947, ஆகஸ்ட் 14-ஆம் நாளன்று மாலை ஆறு மணிக்கு நாங்கள் இருந்த சிறைக்கே நீதிபதி அலீம் வந்தார். இந்தச் சதி வழக்கு நடந்த அனைத்து விவரங்களையும் பரிசீலனை செய்த பின், ‘காவல்துறையால் தங்களின் கையாள்களை வைத்துப் போடப்பட்ட பொய் வழக்கு இது!’ என்று தீர்ப்புக் கூறினார்.
அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தோழர்களுடன் நாங்களும் விடுதலை செய்யப்பட்டோம்.பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாக வந்து திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்தினோம். நாங்கள் பேசி முடிக்கும்போது எல்லாக் கோயில்களிலும் சுதந்திர மணிகள் ஒலித்தன. நாங்களும் விடுதலைத் திருநாளின் செய்தியைக் கூட்டத்தில் அறிவித்தோம். 1936-இல் நாங்கள் மாணவர் சங்கத்தில் இருந்த போது எழப்பிய முழக்கம் ‘சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம்’ என்பது இன்றும் பொருத்தப்பாட்டுடன் உள்ளது.
நீங்கள் அப்போது எதைச் சாதித்ததாக உணர்ந்தீர்கள்?
அன்று தொடங்கப்பட்ட அகில இந்திய மாணவர் சங்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாணவர்களைத் திரட்டுவதில் மிகவும் முன்னணியில் இருந்தது. பின்பு இந்திய மாணவர் சங்கமாக மாறிய பின்பும் சர்வதேசச் சிந்தனையுடன் சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் என்ற முழக்கங்களுடன் மாணவர்களைத் திரட்டி இன்று வலுவான அமைப்பாக மாறியுள்ளது. இந்த முழக்கங்களுக்குப் பின்னால் மாணவர்களைத் திரட்டியதே ஒரு சாதனைதான்.
சர்வதேசச் சிந்தனையுடன் இளம் தலைமுறையை உருவாக்கியிருந்தாலும்கூட, இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் பங்கேற்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது.அதைப் பற்றி…
இல்லை, இது தவறான கருத்து. கடந்த காலங்களைவிட இப்போதுதான் அனைத்துத் தரப்பினரும் அமெரிக்காவின் அடாவடிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக அமெரிக்காவின் உள்ளேயே மக்கள் நடுவில் அவர்களுக்கு எதிர்ப்புத் தோன்றி உள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் மாணவர்கள், இளைஞர்கள் முன்புபோல ஆர்வத்துடன் பங்கேற்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் பொதுவாக இருக்கிறது. அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இதுவும் ஒரு தவறான புரிதல் என்று கருதுகிறேன். அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது நேரடியாகக் களத்தில் எதிரியைச் சந்திப்பதாக இருந்தது. அதாவது, அந்த எதிர்ப்பு தேச விடுதலையுடன், உடனடித் தேவையுடன் இணைந்து இருந்தது. ஆனால், இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடியாக ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியின் மூலம் தங்களுக்குத் தேவையானவற்றைச் சாதித்துக் கொள்கின்றனர். இங்குள்ள ஆட்சியாளர்களும் தமது கொள்கை நிலைப்பாட் டின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கின்றனர்.
அப்படியெனில், இங்கு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சி இருப்பினும் அமெரிக்க அல்லது பன்னாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் ஆட்சி மறைமுகமாக நடக்கிறது என்று கருதலாமா ?
இல்லை. அது அடிப்படையில் தவறான முடிவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.இந்திய நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இரட்டைத் தன்மைகள் உள்ளன. ஏகாதிபத்தியத்துடன் இவர்களால் உறவாடவும் முடியும்; தேவையெனில் முரண்படவும் முடியும். இந்த இரட்டைத் தன்மைகள் இப்போதும் உள்ளன.ஆனால், இதை நக்சலைட்டுகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால்தான் நமது ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியங்களின் அடிமைகள் என்ற தவறான முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதனால், அதை அழித்தொழிப்பது என்ற முடிவை மேற் கொள்கின்றனர். எனவே, இங்கு மறைமுகமாக அமெரிக்காவின் ஆட்சி நடக்கிறது என்று சொல்வது தவறு.
உலகம் பூராவையும் ஈர்த்த ரஷ்யப் புரட்சி உங்கள் இளமைக்காலத்தில் உங்களை எப்படிப் பாதித்தது?
சோவியத் யூனியனின் உதயம் என்பது இந்திய சுதந்திரப்போரில் மிகவும் தாக்கத்தைச் செலுத்திய ஒரு மாற்றமாக இருந்தது.காங்கிரஸ்காரர்கள் உள்பட அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. அங்கு நடந்த சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.அதன் விளைவாகத்தான் இங்கு சோஷலிஸச் சிந்தனைகள் பரவின. எங்கள் மாணவப் பருவத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்த போது சோவியத் யூனியனுக்கு இங்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது.
ஜெர்மனியை எதிர்த்து சோவியத் யூனியன் நடத்திய போர் சாதாரணமானதல்ல. இரண்டு கோடி மக்களை அந்த நாடு அதில் பறிகொடுத்தது. நான் இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த 1941 முதல் 1945 வரையிலான நான்காண்டு காலம் சிலிர்ப்பான அனுபவத்தைத் தருகிறது.
1945இல் வெளிவந்த ‘பால் ஆப் பெர்லின்’ என்ற படத்தின் இறுதிக்காட்சியில் சோவியத் படைகள் பெர்லினுக்குள் நுழைந்து அங்கு கோட்டையின் மீது செங்கொடியை ஏற்றும் காட்சி மகத்தான விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. என்னைப் போன்ற இளைஞர்களை மிகவும் உத்வேகப்படுத்திய படம் அது.
உலகின் மிகப்பெரிய, மிக நீண்ட போர் அது. புதியதான ஒரு சோசலிச நாடு அதில் வெற்றியடைந்தது. அந்த வெற்றி இல்லையெனில், இந்தியா ஜெர்மனியிடம் அப்போது வீழ்ந்திருக்கும். இன்று அக்டோபர் புரட்சி நடந்து முடிந்து 90 ஆண்டுகளாகின்றன.இன்று சோவியத் யூனியன் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்களின் மகத்தான சாதனைகள் யாராலும் புறக்கணிக்கவே முடியாதவை. அவற்றின் தாக்கங்கள் இன்றும் உள்ளன. அங்கு மீண்டும் கம்யூனிஸ்ட்டுகள் மக்களின் பேராதரவைத் தற்போது பெற்று வருகின்றனர்.
அன்றுபோல இன்று ஒரேயொரு நாட்டில் மட்டும் சோஷலிச அரசு இருக்கவில்லை. கியூபா இன்று தனித்த ஒரு நாடல்ல. தென்னமெரிக்க நாடுகள் இன்று அதனுடன் இணைந்து நிற்கின்றன. சீனா, ரஷ்யா, மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத் தைச் சார்ந்த நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள ஷாங்காய் கூட்டமைப்பு அமெரிக்காவுக்குச் சவாலாக உருவெடுத்திருக்கிறது. அதனால்தான் ஈராக் போல, ஈரானை அமெரிக்காவால் நினைத்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால், அமெரிக்கா தன்னுடைய நச்சுக் கரங்களை இன்றும் உலகம் முழுக்க நீட்டிக் கொண்டேதானே இருக்கிறது? உதாரணமாக, இந்தியாவில் அது திணிக்கத் துடிக்கும் அணு ஒப்பந்தம்?
ஆமாம், அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, வடகொரியாவும், தென்கொரியாவும் இணைந்து வருவது அமெரிக்க நலன்களுக்கு நல்லதல்ல. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை இந்தியாவுக்கு எதிராக சீனாவை நிறுத்தும்.
அதனால்தான் இந்தியாவில் மக்களைத் திரட்டி இடதுசாரிகள் போராடினார்கள். அணு ஒப்பந்தப் பிரச்னையில் இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க வழியிருக்கிறது.
அப்படியிருக்கும்போது இத்தகைய தீய ஒப்பந்தம் வேண்டாமென்கிறோம். அந்த ஒப்பந்தம் 123-இல் கையொப்பமிட்டு விட்டால், நாம் இனி அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென்றால், அவர்களைக் கேட்டுத்தான் செய்யவேண்டுமென்கிற நிர்ப்பந்தம் ஏற்படும்.மற்ற நாடுகளுடன் எந்தவித ஒப்பந்தமும் போட முடியாது.
உதாரணம், ஈரானுடனான பைப் மூலம் காஸ் பெறுவதற்கான ஒப்பந்தம்.சர்வதேச அணுசக்திக்கழகத்திடம் பேச மட்டுமே அனுமதித்துள்ளோம். இந்திய நலன்களுக்குப் பாதகமான எதையும் அனுமதிக்க மாட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய கம்யூனிஸ்ட்டுகள், இன்று பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குப் போராடுகிறார்கள்.
இலக்கியப் படைப்புகளில் உங்களுக்கு மிகவும் ஈடுபாடு உண்டு என்று சொல் வார்கள். அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்…
இலக்கியம் என்றதும் மீண்டும் சோவியத்தின் நினைவு வருகிறது. ரஷ்யப் புரட்சியின் வெடிப்பிலிருந்து ஏராளமான இலக்கியங்கள் உருவாகின. உலகின் அனைத்துப் பகுதியினரையும் அவை தட்டி எழுப்பின.சோவியத் அளவிற்கு இல்லையென்றாலும் சீனாவிலிருந்தும் படைப்புகள் வந்துள்ளன.ஆனால், அவை எண்ணிக்கையில் குறைவென்பதால் பலருக்குத் தெரியவில்லை.நமது படைப்பாளிகளிடம் இந்தத் தருணத்தில் ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன்:
இந்தியாவில் நமது கட்சி நடத்துகிற போராட்டங்கள் இலக்கியப் படைப்புகளாக வருவதில் என்ன பிரச்னை?

தெபாகா, கையூர், தெலுங்கானா, சமீபத்தில் வெண்மணி…ஆனால், நாம் நீண்ட காலமாக நடத்தி வந்திருக்கும் போராட்டங்கள், (உதாரணம், சாதியப் பிரச்னைகளில் நமது தலையீடுகள்) ஏன் இலக்கியப் படைப்புகளாக வரவில்லை? நான் இதனால் நம்முடைய படைப்பாளிகளின் பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டாம்.
நாம் இப்போது நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். அவற்றுக்கான ஊழியர்களைக் கண்டெடுத்தாக வேண்டும்.
வெகுமக்களைத் திரட்டும் பணியும் நம் முன் உள்ளது. விவசாயிகளை, தொழிலாளர்களைத் திரட்டுவதுதான் நம் முன்னுள்ள வேலை. இப்போது நமது தோழர்கள் முற்போக்குப் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கென நமது இயக்கத்திலும் இதழ்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போது அமைதியாக உட்கார்ந்து இலக்கியம் படைத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரம் இதுவல்ல!
இல்லை தோழர் நமது போராட்டங்களில் இலக்கியம் படைப்பதும் ஒரு பகுதிதானே?
அது உண்மைதான். ஆனால், முன்னுரிமை அதற்கு இல்லை. அவை பின்னால் உருவாகிவரும். நாம் இப்போது அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் அரசியல் இலக்கியப் படைப்புகள் தாம் நம்மிடமிருந்து வரவேண்டும்; வரும்! தத்துவார்த்த இலக்கியங்கள் பிற்பாடுதான் வரும்!
(நன்றி: ‘புதிய புத்தகம் பேசுது’, சிறப்பு மலர், ஜனவரி 2008).