கமலாலயன்
என்.சங்கரய்யா – விடுதலைப் போரினில் வீழ்ந்த மலர்களை நினைத்துக் கண்ணீர் சிந்திய கொள்கை மலர்… ச.லெனின் தொகுத்த ஒரு நூலை முன்வைத்து… கமலாலயன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழவின் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் தொடங்குகிறது இந்த நூல்: அதில் அவர் குறிப்பிடும் ஒரு நிகழ்வு இது:
தோழர் என்.எஸ். அவர்கள் தமிழ் மொழியின் மீதும், இலக்கியங்களின் மீதும் மாறாத பற்றுக் கொண்டவர். சிக்கல் நிறைந்த இந்திய மொழிப்பிரச்னைக்கு ஆக்கபூர்வமான தீர்வினை முன்மொழிந்தவர். சட்டமன்றத்தில் அவர் இது பற்றி அன்றைய முதல்வர் அண்ணாதுரை அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது முன் வைத்த தீர்வு இது:
‘இன்று இந்தியாவிலுள்ள 14 மொழிகளும் (இப்போது 22 மொழிகள்) மத்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழிகளாக வேண்டும். தமிழ் மற்றும் இதர தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குத் தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும்தான் எழுத வேண்டுமென்று கூறுவது அவர்களின் உரிமையைப் பறிப்பதாகும். எனவே, இந்திய தேசிய மொழிகள் அனைத்திலும் தேர்வுகளை எழுதலாம் என முதலமைச்சரின் தீர்மானத்தில் ஒரு திருத்தத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்! மேலும், நம்முடைய அரசாங்கத்திலும் சரி,நீதிமன்றத்திலும், கல்வியில் எல்லா மட்டங்களிலும் சரி, தமிழைக் கொண்டுவருவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று’ என்.எஸ். அவர்கள் மேற்கண்ட தீர்மானத்தில் வலுவாக வலியுறுத்தினார்.
இந்த நூலில் சங்கரய்யா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியின் மாநாடுகள்,பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளின் போது ஆற்றிய உரைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த பகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இப்படியொரு புத்தகத்தைத் தொகுக்க வேண்டுமென்கிற எண்ணம் லெனினுக்கு எப்படி ஏற்பட்டது? அவரே சொல்லியிருக்கிறார்:
“2021 -இல் தோழர் என்.எஸ். அவர்கள் தனது நூறாவது பிறந்த நாளில் அடியெடுத்து வைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு பாரதி புத்தகாலயத்தில் தோழர் சிராஜுதீனுடன் உரையாடலில் இருந்தேன்.அப்போது, என்.எஸ். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் குறித்தும் பேச்சு வந்தது. ‘தோழரின் உரைகளோ, எழுத்துகளோ எதுவும் புத்தக வடிவில் இதுவரை இல்லை. இந்தச் சந்தர்ப்பத்திலாவது அப்படியொரு புத்தகத்தைக் கொண்டு வரலாமே?’ என்று பேசினோம். அதுவே இந்த நூல் உருவாக்கத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது…”
அவ்வாறு தொகுக்கப்பட்ட இந்த 144-பக்கங்கள் கொண்ட நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் சங்கரய்யா என்ற மாபெரும் ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை நம்மால் பார்க்க முடிகிறது. 102 வயது வரை வாழ்ந்தவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், இறுதி மூச்சுவரையில் ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்துகொண்டும், தனது கருத்துகளையும், விமரிசனங்களையும், ஆலோசனைகளையும் வெள்ளம்போல் பெருகி வரும் உரைகளில் கணீர்க்குரலில் வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தவர்கள் மிக மிக அரிது. அநேகமாக, சங்கரய்யாதான் இந்த நூற்றாண்டில் நாம் கண்ட அத்தகைய ஓர் அரிய பெருந்தலைவர் எனலாம்.
வலைத்தளங்களில் பதிவாகியிருந்தவை, ‘இளைஞர் முழக்கம்’ இதழில் வெளியான இரு நேர்காணல்கள், தோழர் நரசிம்மன் அவர்களின் சேகரிப்பில் இருந்த சில கட்டுரைகளின் நகல்கள், ‘தினமணி’ நாளிதழில் வெளியான கட்டுரை,பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்கள் என்.எஸ். அவர்களிடம் எடுத்த நேர்காணல், ‘செம்மலர்’ இதழில் வெளியான சு.வெங்கடேசன் என்.எஸ்.அவர்களிடம் எடுத்த பேட்டி, ‘தீக்கதிர்’ நாளிதழ், ‘ஜூனியர் விகடன்’, ‘ஆனந்த விகடன்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியான பேட்டிகள், கட்டுரைகள், உரைகள் போன்ற ஆவணங்களின் நேர்த்தியான தொகுப்பு இந்த நூல்.
1967-இல் என்.எஸ்.அவர்கள் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டபோது, அவரைப் பற்றிய ஒரு குறிப்பு வேட்பாளர் அறிமுகம் என்ற வகையில் வெளியாகியிருக்கிறது. அதன் புகைப்பட நகலைப் பார்க்கும்போது, பரவசம் ஏற்படுகிறது. ‘மாணவர் இயக்கத்திலே மலர்ந்த தியாகச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா’ என்பது தலைப்பு. ‘அந்தக் கண்ணீருக்குப் பின்னால்…’ என்ற ஒரு தலைப்பில், ‘தினமணி’ நாளிதழில் 12.02.2002 அன்று ஒரு செய்திக்கட்டுரை வெளியாகி இருந்திருக்கிறது.
அதை டி.எம்.மூர்த்தி எழுதியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17-ஆவது தமிழ் மாநில மாநாடு கோவையில் தொடங்கியபோது, ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே…’ என்ற பாடல் இசைக்கப்பட்டபோது மேடையில் நின்றவாறே கண்ணீர் சிந்தும் சங்கரய்யாவின் புகைப்படத்தை அந்தக் கட்டுரையில் காண்கிறோம்.
ஒரு பாடலைக் கேட்டு விட்டு அவர் ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்? அந்தக் கண்ணீருக்குப் பின்னால், ஒரு தியாகத்தின் கதை இருப்பதே காரணம். இந்திய விடுதலைப்போரிலும், உழைக்கும் மக்களின் உரிமைப் போர்களிலும் இன்னுயிர் நீத்த எண்ணற்ற தோழர்களின் தியாகங்களைப் போற்றும் இந்தப்பாடலைப் படைத்தவர் இந்தி மொழியாசிரியரும், கம்யூ னிஸ்டுமான மணவாளன். பாடியவர் ஐ.வி.சுப்பையா. இசையமைத்தவர் எம்.பி. சீனிவாசன் என்ற புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர்.

தமிழ் நாட்டின் புகழ் பெற்ற பத்திரிகையாளரும், மேனாள் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியருமான சோலை அவர்களின் கட்டுரை ‘ஜெயிலில் பாதி…ரயிலில் பாதி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது, கம்யூனிஸ்ட்டுகள் வாழ்வில் பாதி நாள்கள் ரயில் பயணங்களிலும், மீதிப் பாதி நாள்கள் ஜெயிலிலும் கழிப்பதைப் பற்றிய ஓர் உணர்ச்சிமிகு சித்திரம் அது. விடுதலைப் போரினில் வீழ்ந்த மலர்களைப் போற்றிப் பாடல் படைத்த மணவாளனைப் போலீஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றது அன்றைய ஆளும் வர்க்கப் போலீஸ் படை. அ
அதைப் பாடிப் பரப்பிய ஐ.வி.சுப்பையா, சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். ஆக, விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்களைப் பாடிப் புகழ்ந்த மலர்களும் வீழ்த்தப் பட்டு விட்டன. அத்தகைய அமரத் தியாகிகளின் நினைவுகள் அலைமோதும் ஓர் உணர்ச்சிமிகு தருணத்தில், சங்கரய்யா போன்ற ஒரு தியாக சீலர், கண்ணீர் சிந்தாமல் எப்படியிருந்திருக்க முடியும்?
சங்கரய்யாவின் அருமைத்தோழரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான ஆர்.நல்லகண்ணு அவர்கள் கொள்கைப் பிடிப்பின் முன்னுதாரணம் சங்கரய்யா என்று பாராட்டியிருக்கிறார்.
சங்கரய்யா உரையாற்றும்போது அவருடைய குரலில் பொங்கும் உணர்ச்சி வேகத்தையும், வெண்கல மணியின் பேரோசையைப்போல் ஒலிக்கும் கம்பீரமான ஓசையையும் கேட்டுப் பிரமிக்காதவர்கள் யார் ? அந்தக் குரலின் கம்பீர முழக்கம் எதனால்? ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்ற பாரதி வரியைச் சொல்லி, அதுதான் கரணம் என்று சங்கரய்யாவே ஜி.ராமகிருஷ்ணனிடம் சொல்லிய அனுபவத்தை, அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரான ஜி.ஆர். அவர்கள் தனது கட்டுரையில் சொல்கிறார்.
‘பாரி’ என்ற பெயரில் ஓர் இணைய தளத்தையும், ஆவணப்பதிவுகளின் களஞ்சி யத்தையும் இயக்கி வரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத் அவர்கள், என்.எஸ். அவர்களிடம் எடுத்த ஒரு நீண்ட, வித்தியாசமான பேட்டியும் இந்த நூலில் உள்ளது. படித்துப் பார்த்தால்தான் அதில் உரையாடியிருக்கும் இரு ஆளுமைகளின் சிந்தனைத் திறத்தை, கொள்கைப்பிடிப்பை உணர முடியும்!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ‘இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்’ என்ற உணர்ச்சிமிகு கட்டுரையில் இப்படி ஒரு பத்தி இடம் பெற்றிருக்கிறது: ‘அனைத்துலகப் பார்வை கொண்ட எந்தக் கட்சியும் தாய் மொழியைத் தாங்கிப்பிடிக்கவில்லையென்றால் அது மண்ணிலிருந்து உதிர்ந்து விடும். ஆனால், சங்கரய்யா போன்ற இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தாய்மொழியாம் தமிழை அதிகார பீடத்தில் அமர்த்திப் பார்க்கவே ஆசைப்பட்டுப் பாடுபட்டார்கள்.
அதிகார மையங்களில் தமிழ்தான் அரசாள வேண்டுமென்று தங்கள் எலும்புகளை எண்ணிக் கொடுத்தார்கள்.குருதியைக் கொட்டிக் கொடுத்தார்கள்…’ சங்கரய்யாவைப் போன்ற ஒரு மூத்த தலைவர், இளைஞர்களுக்கு விடுத்த ஓர் அறைகூவலைப் படித்தவுடன், அட, இப்படிக்கூட என்.எஸ்.பேசியிருக்கிறாரா என்று வியந்து போவோம்.ஆமாம்; ‘இளைஞர்களே, உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்…!’ என்கிறார் என்.எஸ். அவரின் எண்ணற்ற வேலைகளுக்கு இடையேயும் அவர் படித்துக்கொண்டிருந்தார்.
கட்டுரைகளில், தன் உரைகளில் ஏராளமான இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுவார். திரைப்படம், இசை என்று எல்லாக் கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். அதைப்பற்றி ‘ஓர் அரசியல்வாதியின் இலக்கியக் கனவுகள்’ கட்டுரை பேசுகிறது. ‘செம்மலர்’ இதழில் சு.வெங்கடேசனின் கைவண்ணத்தில் பதிவான ஒரு நேர்காணல் கட்டுரை அது.
அவர் ஆற்றிச் சென்ற ஒவ்வோர் உரையும் ஓர் ஆய்வுக்கு வித்திடும் செய்திகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. இந்தத் தொகுப்பின் பல கட்டுரைகள் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கியவையே. தலைப்புகளிலேயே அவரின் பன்முகப்பார்வையைக் காண முடியும். சில எடுத்துக்காட்டுகள்:
‘இந்தியாவில் இளைஞர்கள் சோஷலிசத்தைக் கொண்டு வருவார்கள்’, ‘சோஷலிசமே மனித குலத்திற்கான மாற்று’, ‘சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறோம்’, ‘வேலைவாய்ப்பைப் பறிப்பது சிக்கன நடவடிக்கை ஆகாது’, ‘தீண்டாமைப் பிரச்னைக்குக் கொள்கை ரீதியிலான தீர்வு இருக்கிறது’, ‘தீண்டாமைக் கொடுமையை வேரறுக்க சி.பி.எம்.-சி.பி.ஐ. தொடர்ந்து போராடும்’, தீண்டமைக் கொடுமை முற்றாக ஒழியத் தீவிர நிலச்சீர்திருத்தம் செய்திட வேண்டும்’, ‘நாட்டின் முன்னேற்றத்திற்கு லஞ்சம், ஊழல் தடையாக உள்ளது’,
‘பொதுவுடைமைச் சமூகம் காண உழைப்போம்’, ‘சாதிக் கலவரங்களுக்குத் தீண்டாமைக் கொடுமையே காரணம்’, ‘சாதி வெறியைத் தூண்டுவது தேசத்துரோகமாகும்’, ‘முற்போக்கு இயக்கங்களில் மாணவர்கள் திரள வேண்டும்’, ‘அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆளட்டும்’, ‘இரத்தம் சிந்திப் பெற்ற இந்திய விடுதலை’ – இத்தகைய தலைப்புகளில் என்.எஸ். ஆற்றிய வீர உரைகளின் செய்திக் கட்டுரைகளைத் ‘தீக்கதிர்’ நாளிதழ், ‘இளைஞர் முழக்கம்’ உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளன. அனைத்தையும் அரும்பாடுபட்டுத் தேடித் தொகுத்திருக்கிறார் தோழர் ச.லெனின் அவர்கள்.
வரலாறு முக்கியம். வரலாற்றைப் படைப்பவர்கள் மக்கள்தாம். அவர்களுக்குத் தலைமை வகித்து, வழிகாட்டி, புத்துலகம் படைக்கப் பாடுபட்டு அமரர் ஆனார் நம் அருமைத் தோழர் என்.எஸ்.அவர்கள். அத்தகைய மாமனிதரின் வரலாற்றில் இருந்து சில முக்கியமான துளிகளைத் தொகுத்துத் தந்துள்ள தோழர் ச.லெனினின் பணி போற்றத்தக்கது. அதை மிக நல்ல ஒரு நூலாக, அழகிய வடிவமைப்புடன் குறைந்த விலையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது. அனைவரும் இந்த அரிய நூலைப் படித்துப் பார்ப்பதே ஒரு பயிற்சி முகாமில் பங்கேற்றுக் கற்றுத் தெளிவதற்கு ஈடானது.
ஆவணப்படுத்துவது என்பது எவ்வளவு முக்கியம் என்ற தெளிவையும் இந்தப் புத்தகம் நமக்குக் கற்றுத்தருகிறது!