கெஜலட்சுமி
முரண்களாலும், இணைவுகளாலும், விருப்பு, வெறுப்புகளாலும் ஆன நூதனம் சிறுகதை. உலகில் நடைபெறும் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் நமது சொந்த அனுபவத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள இயலாது. மண்புழுக்கள், மண்ணை வளப்படுத்தி உயிரோட்டமாக வைத்திருப்பதைப்போல, நம்மைச் சுற்றி நடைபெறும் கதைகள், நம் மன அடுக்குகளிலுள்ள அழுக்குகளைக் களைந்து, மறைக்கப்பட்டிருக்கும் மனிதத்தை வெளிக்கொணர்கிறது.
வரிகளால் விரியும் கதைகளின் உள்ளே உழைக்கும் மக்களின் வாழ்வனுபவங்களை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது, பதினாறு கதைகளை உள்ளடக்கமாகக் கொண்ட இக்கதைத் தொகுப்பு.

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி, பிடித்த இடத்தில் போய் நின்று கொள்வதில்லை. சமயங்களில், அனைவரும் இதை மறந்து, நம் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றிக்கொண்டு, ஏங்கித் தவிக்கிறோம். அப்படியான கந்தசாமி குடும்பத்தைப் பற்றிய கதைதான் ‘பிடிமானம்’. வாழ்வாதாரங்கள் அனைத்தையும் தங்களுக்கு அனுபவமில்லாத கடை, வியாபாரம் முயற்சியில் தொலைத்துவிட்டு, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள ஆள்அரவமில்லா கிணறு இருக்கும் இடத்தைத் தேடி, இறுதிப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவர்களைப்போல முடிவெடுத்து வரும் ஓர் இளம் காதல் ஜோடியைச் சந்திக்கிறார்கள்.
வாழ்வைப் பற்றிய புதிய தைரியத்தையும், நம்பிக்கையையும் பரஸ்பரம் பிஸ்கட் என்னும் குறியீடு மூலம் பரிமாறிக்கொள்வதாக முடிகிறது கதை. வறட்சி, பொருளாதாரத்தில் இல்லை. மனதின் நன்னம்பிக்கையில்தான் இருக்கிறது, போகிற போக்கில் எளிமையாக, சக மனிதர்களிடத்தில் பட்டுப்போகும் மனவறட்சியைச் சுட்டிக் காட்டுகிறது. மாறாக மனிதம் முற்றிலும் இழந்து விடவில்லை. பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத் துய்ப்பில், புதைந்துதான் போயிருக்கிறது என்கிறது ‘எதிர்விளைவு’ கதை.
மருந்துக்குக்கூட டீக்கடை இல்லாத விருதுநகர் குக்கிராமத்தில், தானிய மூடைகளைக் கிராமங்களிலிருந்து அலைந்து வாங்கி கமிஷன் மண்டிக்கு அனுப்ப தேனியிலிருந்து வரும் நரேந்திரனுக்கு வேலை முடியவே மாலை மூன்று மணியாகிவிட்டது. பசியைவிட பசியாற்றிக் கொள்ள வழியே இல்லை என்ற நினைப்புதான் பெருங்கொடுமை. மறுபடியும் மூன்று கிலோமீட்டர் நடந்து மெயின் ரோடு வந்து ஊர் சேர்வதற்குள்…. என்ற நினைப்பு உடல் சோர்வைவிட உளச்சோர்வை ஏற்படுத்தியிருந்தது நரேந்திரனுக்கு.
எதிர்பாரா நேரத்தில், தானியம் விற்பதற்கு அழைத்திருந்த விவசாயி வீட்டில் மதிய உணவிற்கு இவனை அழைக்கிறார்கள். வாசகர் நம் உள்ளமே ஈரத்தால் நிறைகிறதென்றால் நரேனுக்குக் கேட்கவும் வேண்டுமா!
கதைகளின் களம் பெரும்பாலும் தேனி நகரைச் சுற்றியுள்ள பகுதிகள்தான். இம்மக்கள் உழைப்பில் சற்றும் சளைக்காதவர்கள். தானியங்கள், பழங்கள், கால்நடைத் தீவனங்கள், மலையில் விளையும் பொருட்கள் ஆகியவற்றை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து, பெரிய கமிஷன் மண்டிகளுக்கும், பலசரக்குக் கடைகளுக்கும் விற்று நியாயமாக கிடைக்கும் தரகு வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் எளிய மக்களின் அனுபவங்கள்தான் கதைத் தொகுப்பாக உருமாறியிருக்கிறது.
பொதுவாகவே, மக்கள் சமூகம் வளர்த்தெடுத்த அச்சில் தம்மை சரியாகப் பொருத்திக்கொள்வதே பாதுகாப்பான, ஊரோடு ஒத்துப்போகக்கூடிய வாழ்க்கை எனக் கருதி போராட்டத்தில் சிக்குண்டு வாழும் சுகத்தைச் சுமையாக்கிக் கொள்கிறார்கள். சமூகத் தளைகளிலிருந்து, கட்டுடைத்து வருவதற்கு ஆழ்மனதில் விருப்பம் துளிர்த்தாலும், உறவுகளால் புறக்கணிக்கப்படுவோமோ; தனிமைப்படுத்தபடுவோமோ என்ற அச்சத்திலேயே பிழைப்பை நடத்துகின்றனர்.
உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் செய்முறை செய்வதும், அதை வசூலிக்க தம் வீட்டுநிகழ்வுகளை விமரிசையாக நடத்துவதும், மொய்க் கணக்கை நோட்டில் எழுதிப் பத்திரப்படுத்துவதுமாக கணேசன்-தேவகி தம்பதியின் வாழ்வைக் காட்சிப்படுத்துகிறது ‘பதிலுக்குப் பதில்’ கதை.
தேனி மாவட்டத்தில், ஒரு காலத்தில் மில்லில் வேலை செய்பவர்களை, ஆபீஸ் அளவிற்கு மதித்திருக்கிறார்கள். மேலும், திரைப்படத்துறையில், இயக்குனர், இசையமைப்பாளர் எனப் பலரும் கோலோச்சியிருக்கிறார்கள். தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால், கால மாற்றத்தால் உருக்குலைந்து போன மேற்கூறிய துறை சார்ந்த நிலையை முறையே ‘கண்ணாடி’ மற்றும் ‘நாணயத்தின் இருபக்கம்’ கதைகளின் கருக்களாகியிருக்கிறார் ஆசிரியர்.
மாதமானால் சம்பளம் பெறும் மில் தொழிலாளி, காலச் சூழலால், கால்சட்டையில் தேநீர் அருந்த சில்லறையைச் சுரண்டிச் சரிபார்த்து, கடையில் சொல்ல, தேநீர் வருவதற்குள், பள்ளி இடைவெளியில், ‘ஏதாவது வாங்கிச் சாப்பிட காசு தாப்பா!’ என மகள் கேட்டிற்கு வெளியே கைநீட்ட… சில்லறை அவள் கைக்கு மட்டும் இடம் மாறவில்லை; நம் நாட்டின் பொருளாதாரமும் நமக்கில்லாமல் எங்கேயோ இ(த)டமாறிக் கொண்டிருக்கிறதைச் சூசகமாக உணர்த்துகிறது.

புகழ்பெற்ற இயக்குனராகத் திகழ்ந்தபோது, வாய்ப்புக் கேட்ட ஊர்மக்களைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டவுடன், அலங்காரத்தம்மாளுக்கு, காலம் போன காலத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அங்கலாய்க்கும் வரிகள், ‘சின்ன வயசுல நா அம்பது நடக்க மெட்ராசு போயி டைரக்டர்ட்ட சான்ஸ் கேட்ருக்கே… எங்க வூட்டுக்காரரும் பேசிப் பாத்தாரு.. உள்ளூர்னா அவருக்கு வேப்பங்காயா கசந்துச்சு… இப்ப வேற வழியில்லாமல் அவரே எறங்கி வந்திருக்காரு…’ தனியொருவருக்குக் கிடைத்த வளர்ச்சியை, வளத்தை ஊருக்கே கிடைத்தாகக் கொண்டாடும் எளிய மக்களின் ஏக்கங்கள்!
சம்பவங்களை மையமாக வைத்து புனையப்படும் கதைகளைவிட நுண்ணுணர்வுகளைப் பேசும் கதைகளையே மனம் நெருக்கமாக உணரும். இசைவோடும், இணக்கத்தோடும் வாழத்தான் அனைவருமே விரும்புவோம். ஆனால், ‘ஒப்பு நோக்கல்’ எனும் இருமுனை கூராயுதத்தை எந்நேரமும் ஏந்திக் கொண்டே சக மனிதர்களோடு உறவாடும் பண்பை உயர்த்திப் பிடித்திருக்கிறோம். இதனால் இயலாமையும், செருக்கும் தீய உணர்ச்சிகளுக்கு வித்திட்டு விரிசலை விரிவாக்கி, மனதையும், கதவையும் அடைத்துக்கொள்கிறது.
குடித்துவிட்டு கட்டபஞ்சாயத்தாலே காலங்கழிக்கும் முனியப்பனுக்கு, தந்திரமாகப் பேசி அரை குறையாகப் பிரிந்தவர்களைக்கூட முழுசாக வெட்டி விடுவதில் கொள்ளை ஆனந்தம். அவனும்கூட ஒருநாள், குடிசையில் அத்துவிட சொல்லிச் சண்டையிடும் கிழவன், கிழவியிடம் யதார்த்தம் புரிய வைத்து நியாயமாக நடக்கிறான். முனியனைப்போல, குடித்துவிட்டு ஒருபோதும் காசு கொடுத்து தீவனங்கள் வாங்காமல், அடாவடியாகப் பேசும்;
சைக்கிளில் இளநீர் குலைகளைக் கட்டி விற்கும் ராமன், விவசாயிகளை தரக்குறைவாக நடத்தும் கமிஷன் மண்டி முதலாளி பிரபாகரன் என எத்தனையோ, கதையில் உலவும் பாத்திரங்கள் வாசகருக்கு அவரவர் புரிதலுக்கு ஏற்ப அனுபவச் செறிவைக் கடத்துகின்றனர்.
மனிதர்களில் பல நிறங்கள் போற்றப்பட வேண்டிய பன்முகத் தன்மைதான். ஒவ்வொருவருக்குள்ளும் பல நிறங்கள் சூழலுக்கேற்ப வெளிப்படுவதை விழிப்புணர்வின்மையால் தரிசிக்கத் தவறி முன் முடிவுகளுக்குள் சிக்கிவிடுகிறோம், நாமும் அப்படித்தான் என்பதை மறந்து. இதை உணர்த்துவதற்குத்தானே கலையும், இலக்கியமும்.
“மனிதர்கள் தாமே உருவாக்கிக்கொண்ட வலைப்பின்னல்களின் கட்டுமானத்தையும், அதன் இயல்பையும் உணரக்கூடிய நுண்ணிய விழிப்புணர்வு இல்லாமல் மனம் அமைதி கொள்வதற்கான சாத்தியமே இல்லை” – ஜே. கே. சமூகத்தால் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்ட தவறான கற்பிதங்களிலிருந்து, விடுதலையாகி, மனம் ஆனந்தத்தால் நிலைத்திருக்கச் செய்வதே இலக்கியத்தின் வழிகாட்டலில் ஒன்று.
தேனி மாவட்ட மண் சார்ந்த படைப்பிலக்கியவாதிகளில் தவிர்க்க முடியாதவர், இந்நூலாசிரியர் தோழர் அல்லிஉதயன். மதுரை மாவட்டத்தில் தமுஎகசவைக் கட்டி எழுப்பிய முன்னத்தி ஏர்களில் இவரும் ஒருவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என பல சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.
