ச.சுப்பாராவ்
காதல் என்றாலே அது சற்று இயல்புக்கு மாறுபட்டதாக, மீறியதாக, விபரீதமானதாக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத்தான் அமையும் போலும். புத்தகக் காதலும் அவ்விதமே. புத்தகக் காதலின் வினோதங்கள், வினோதமான புத்தகங்கள், அவற்றை உருவாக்கியவர்கள், அவற்றை சேகரிப்பவர்கள் பற்றிய நம்பமுடியாத, வியப்பூட்டும் தகவல்கள் நிறைந்த புத்தகம் Edward Brooke Hitching எழுதியுள்ள ‘The Madman’s Library – The Greatest Curiosities of Literature’ என்ற தொகுப்பு. மிகப் பொருத்தமான தலைப்பு – ஹிட்சிங்கின் நூலகம் பைத்தியக்காரர்கள் உருவாக்கிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூலகம்தான்.

பதினெட்டு வயதில் அவர் லண்டனில் ஒரு ஏலம் போடும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஏலம் போகாத அபூர்வமான புத்தகங்கள் அனைத்தையும், தானே வாங்கி தனது நூலகத்தை பெருக்குகிறார். ஒரு கட்டத்தில் முதலாளி ‘தம்பி! இந்த அபூர்வ புத்தக ஏலக் கடையை நீயே நடத்துப்பா’, என்று கடையை இவரிடம் ஒப்படைத்து விடுகிறார். இது வரை நான் இத்தொடருக்காகப் படித்த அத்தனை புத்தகங்களிலுமே, புத்தகக் கடை முதலாளிகள் தம் கடையை புத்தகக் காதலனான தனது ஊழியன் ஒருவனிடம் ஒப்படைக்கும் சம்பவம் வந்துள்ளது வியப்பாக உள்ளது. நமது நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்று. இந்த மனநிலையை அவர்களது வாசிப்புக் காதல்தான் தந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியான கடை நடத்திக்கொண்டிருக்கும் ஹிட்சிங்கின் அனுபவங்கள் – அவர் கேள்விப்பட்ட, அவர் தேடிய, அவர் சேகரித்த, அதிசயப் புத்தககங்களின் கதைதான் இந்தத் தொகுப்பு. கண்ணுக்குப் புலனாகாத ரகசிய மையால் அச்சடிக்கப்பட்டவை, பக்கங்களைத் திருப்ப மின்சார மோட்டார் பொருத்தியிருக்கும் அளவிற்கு, மிகப் பெரிய புத்தகங்கள், உணவாகச் சாப்பிடக் கூடிய புத்தகங்கள், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பொருட்களில் எல்லாம் அச்சடிக்கப்பட்டவை என்று எத்தனை எத்தனையோ அதிசயப் புத்தகங்கள் பற்றிய சுவையான தகவல்கள் உள்ள புத்தகம். அந்த அதிசயப் புத்தகங்களில் பல அவரிடமே உள்ளன. சில மிக மிக அரிதானவை என்பதால் மிகப் பெரிய அருங்காட்சியகத்தில் மட்டுமே உள்ளன.
காகிதம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அச்சுப் புத்தகம் வருவதற்கு முன் இளம் ஆடுகளின் தோலில்தான் புத்தகங்கள் எழுதப்பட்டன. வேலம் என்றழைக்கப்பட்ட மெல்லிய ஆட்டுத் தோலில்தான் புத்தகங்கள் எழுதப்பட்டன. எனக்கு ஒரு பைபிள் வேண்டும் என்று புத்தகக் கடையில் ஆர்டர் செய்யப் போனால், கடைக்காரர் ‘பைபிளா, அதுக்கு 50 -70 ஆட்டுக்குட்டி பிடிக்கணுமே! ரொம்ப செலவாகுமே!’ என்பார். ஆடுகளை அறுத்து, தோலைப் பதப்படுத்தி, ஒவ்வொரு பக்கமாக எழுதி காயவைத்து, புத்தகமாக நம்மிடம் தரும்போது, ஒரு வருடத்திற்குமேல் ஆகிவிடும்.
புத்தக வியாபாரம் வளர, வளர ஆடு வளர்ப்பும் சேர்ந்து வளர்ந்த காலம் அது! அச்சுத் தொழில் வந்த பிறகு புத்தக பைண்டிங்கை விதவிதமான தோல்களில் செய்வது ஒரு நாகரிகமாக இருந்தது. சில புத்தகக் காதலர்களுக்கு, தான் சேகரிக்கும் புத்தகம் மட்டுமல்ல, அதன் வடிவம், பைண்டிங் கூட முக்கியம் என்கிறார் ஹிட்சிங். ஆட்டுத் தோலன்றி வேறு வேறு தோல்களில் பைண்ட் செய்த புத்தகங்கள் எல்லாம் ஏதோ பதினாறாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தன என்று நினைக்க வேண்டாம். ஹிட்லரின் மெய்ன் காம்ஃப்பை ஒரு ஹிட்லர் – புத்தக வெறியர் ஸ்கங்க் என்ற விலங்கின் தோலில் பைண்ட் செய்திருக்கிறார்.
மார்க்ஸின் மூலதனத்தை மலைப்பாம்பின் தோலில் பைண்ட் செய்து வாசித்த தோழர் ஒருவர் உண்டு. திமிங்கல வேட்டை பற்றிய அற்புதப் படைப்பான மோபி டிக்கை திமிங்கலத் தோலில்தான் பைண்ட் செய்து தரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து திமிங்கலத் தோலில் பைண்ட் செய்து பாதுகாத்த புத்தகக் காதலர் இருக்கிறார். சார்லஸ் ஜேம்ஸ் ஃபாக்ஸ் என்பவர் தான் எழுதிய புத்தகத்தை நரித்தோலில் பைண்ட் செய்தார். கான் வித் த விண்ட்டை அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட கான்பிடரேட் ராணுவத்தின் கொடியில் பைண்ட் செய்து படித்த ஒரு புத்தக வெறியரும் உண்டு.
அமெரிக்கப் புத்தக வடிவமைப்பாளரான ‘டார்ட் ஹண்டர்’ என்பவரின் My Life with Paper என்ற புத்தகத்திலிருந்து ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்கிறார் ஹிட்சிங். சில நாட்களுக்கு முன் கணவனை இழந்த ஓர் இளம் பெண் தனது கணவன் தனக்கு எழுதிய காதல் கடிதங்களை தனது கணவனின் தோலில் பைண்ட் செய்து தரச்சொல்லி ஆர்டர் செய்கிறாள். ஹண்டர் செய்து முடித்துவிட்டார். புத்தகத்தை வாங்கிச் செல்ல புதுக் கணவனோடு வருகிறாள் அவள். ஹண்டர் அடுத்த புத்தகத்திற்கு பைண்டிங் இந்த தம்பிதான்போல என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தைத் தருகிறார்.

உண்மையில் மனிதத் தோலில் அதுவும், தான் மிகவும் நேசித்த மனிதரின் தோலில் தனக்குப் பிடித்தமான புத்தகத்தை பைண்ட் செய்வது மிக சர்வசாதாரணமாக இருந்துள்ளது. Anthropodermic Bibliopegy (மனிதத் தோல் பைண்டிங்) பற்றிய அத்தியாயம் ஒரு திகில் நாவல்போல் இருக்கிறது. எனக்கு இது போன்றவை சற்று அலர்ஜி என்பதால் அந்த விவரங்களைத் தவிர்க்கிறேன்.
ஆட்டுத்தோல் புத்தகம் பற்றி இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். தோலை வெட்டி எடுத்ததும் எழுதிவிட முடியாது. அதில் உள்ள ரோமங்கள், ஒட்டியிருக்கும் சதைத் துணுக்குகளை எல்லாம் நீக்கவேண்டுமல்லவா? அதற்கு ஆயிரமாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படுவது ஒரே வழிமுறைதான். சிறுநீரில் ஊற வைத்தல். சிறுநீரில் உள்ள அமேனியா தேவையற்றவற்றை எல்லாம் கரைத்துவிடும். ஆனால், அந்தப் புதுப் புத்தகத்தின் வாசனைதான் சற்று பிரச்சனை. ஆஹா! புதுப்புத்தகத்தின் வாசனை தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று பொங்கும் மின்புத்தக எதிரிகளுக்கு இந்த வரியை சமர்ப்பிக்கிறேன்.
சாப்பிடக்கூடிய புத்தகங்களும் கூட தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தில் அல்ல. மிகச் சமீபமாக 2012ல். பாலைவனங்களில் வாகனப் பழுதால் மாட்டிக்கொண்டுவிடுவோர் எப்படியெல்லாம் உயிர் பிழைக்கலாம் என்பதற்கான கையேட்டை லாண்ட் ரோவர் நிறுவனம் வெளியிட்டது. அதில் கிடைக்கும் பொருட்களை வைத்து கூடாரம் அமைத்தல், நட்சத்திரங்களைப் பார்த்து திசை அறிதல் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. புத்தகத்தின் அட்டை உலோகத்தால் ஆனது. அதை வைத்து சூரிய ஒளியை பிரதிபலிக்கச்
செய்து தொலைவில் செல்லும் வாகனங்களின் கவனத்தை ஈர்க்கலாம். அதை வாணலியாகப் பயன்படுத்தலாம். கடைசி வாய்ப்பாக புத்தகத்தின் பக்கங்களைத் தின்று பசி ஆறலாம். தின்னத் தகுந்த தாளில் அச்சான புத்தகம் அது. ஒரு சீஸ் பர்க்கர் அளிக்கும் சக்தியைத் தரவல்ல பக்கங்கள். புத்தகத்தை கரைத்துக் குடித்த காலம் போய் மென்று தின்னும் காலமும் வந்துவிட்டது!
யூகோஸ்லேவியா அரசியல்வாதியான மிலோவன் ஜிலா டிட்டோவை விமர்சித்ததற்காக பத்தாண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் இருந்தபடி அவருக்குக் கிடைத்த ஒரே காகிதமான டாய்லட் பேப்பரில் பேரடைஸ் லாஸ்ட் முழுவதையும் செப்பிய மொழியில் மொழிபெயர்த்தார். புத்தகக் காதல் அத்தகையது.
டி.எஸ்.எலியட் ‘இலக்கியத்தின் நோக்கம் ரத்தத்தை அச்சுக்கான மையாக மாற்றுவது.’ என்றாராம். அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டோர் பலருண்டு. காலம் காலமாக, முழுக்க முழுக்க மனித ரத்தத்தால் எழுதப்பட்ட புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த ரத்த மை எவ்வளவு மங்கலான நிறத்தில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அந்த ரத்தத்தின் உரிமையாளர் பரிசுத்தர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறதாம். அரசியல் தலைவர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் ரத்தத்தில் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பும் ரசிகர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தன் ரத்தத்தால் ஒரு பெரிய புத்தகத்தையே எழுதச் செய்த ஒரு பெரிய உலகத் தலைவர் ஒருவர் இருக்கிறார்.
1997ல் தனது அறுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சதாம் உசேன் சித்திர எழுத்து வல்லுனரான (Calligrapher) அப்பாஸ் சொஹாகீர் ஜௌடி அல்-பாக்தாதியை தனது ரத்ததால் ஒரு குரான் எழுதித் தரும்படி பணித்தார். இதற்காக, கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு சதாமிடமிருந்து சுமார் 24-27 லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டு, அதோடு சில வேதிப் பொருட்களைக் கலந்து மை தயாரித்து எழுதி முடித்தார்கள்.
குரானின் புனிதம் பற்றி ஏராளமான நம்பிக்கைகள் உண்டு. இஸ்லாமியர்கள் அதிகமான மேற்கு ஆப்ரிக்கா பகுதிகளில் நோய்கள் தீரவும், செய்வினைகள் அண்டாதிருக்கவும் குரானைக் கழுவிய நீரைக் குடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. பேனாவால் எழுதிய குரானின் பக்கங்களைக் கழுவிய மைநீரை அருந்தும் பழக்கமும் இன்றும் உண்டு. இசை மருத்துவம், மலர் மருத்துவம் போல புத்தக மருத்துவம்!
ஹிட்சிங்கின் சேகரிப்பில் உள்ள மற்றொரு அரிய புத்தகம் ‘Harris list of Covent Garden ladies’ என்பதாகும். கோவென்ட் கார்டன் என்பது 18ம் நூற்றாண்டு லண்டனில் விபச்சாரத்திற்குப் பெயர் பெற்ற பகுதியாகும். இலண்டன் மாநகரின் அத்தனை ஆண்களும் இரவுகளில் திரியக்கூடிய இடம். அந்தப் பகுதியின் பாலியல் தொழிலாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் அவர்களது உடலமைப்பை வர்ணித்து, அவர்கள் பற்றிய முழுவிவரத்தையும தரக்கூடிய புத்தகம்.
சின்ன பாக்கெட் சைஸ் புத்தகமான இது 1757 முதல் 1795 வரை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டது. சுமார் 150 பக்கம். விலை 2 ஷில்லிங் 6 பென்ஸ். ஹிட்சிங் அந்தப்புத்தகத்திலிருந்து எடுத்துக் காட்டியிருக்கும் வர்ணனைகள் அற்புதம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தொடர்ந்து வந்து, வருடம்தோறும் சுமார் 8,000 பிரதிகள் விற்ற இந்தப் புத்தகத்தை எழுதிய அந்த ஆங்கில சாண்டில்யன் யார் என்பது இன்று வரை தெரியவில்லை என்பது மற்வொரு அதிசயம்.
புத்தகச் சேகரிப்பு என்றால் மினியேச்சர் புத்தகங்கள் இல்லாமல் நிறைவடையாது. எந்த அளவில் தயாரிக்கப்பட்டால் அது மினியேச்சர் புத்தகமாகக் கருதப்படும் என்ற மிக முக்கியமான தகவலை ஹிட்சிங்கிடமிருந்துதான் அறிந்து கொண்டேன். புத்தகத்தின் அளவு 76 மிமீ – அதாவது மூன்று அங்குலத்திற்குள் இருக்க வேண்டும் என்பதே உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதி. ஏராளமான குட்டிப் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ள ஹிட்சிங் அவை பற்றி தகவல்களும் நிறையவே தருகிறார். குட்டன்பெர்க்கை நினைவுகூரும் வகையில் மிகச் சிறிய புத்தகம் தயாரிக்கப்பட்டதாம்.
புத்தகத்தின் தலைப்பே உலகின் மிகச் சிறிய புத்தகம் என்பதுதான். இதற்கெனவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 2.4 x2.9 மிமீ அளவு எழுத்துருவை வைத்து பக்கத்திற்கு ஒன்றாக ஆங்கில எழுத்துகளை அச்சடித்து புத்தகமாக வெளியிட்டார்களாம். 100 பவுண்ட் விலை. மொத்தம் 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. புத்தகத்தை வாங்கியவுடன், வாசனை பார்க்கும் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பெண் முகத்தின் அருகே கொண்டுசெல்ல, மூச்சுக் காற்றின் வேகத்தில் புத்தகம் பறந்துவிட்டதாம். பூதக் கண்ணாடிகொண்டு தேடியும் கிடைக்கவில்லையாம். காரணம் புத்தகம் ஒரு மிளகின் அளவுதான்! இன்னும் எத்தனை எத்தனையோ விதமான புத்தகங்கள், புத்தகக் காதலர்கள் பற்றிச் சொல்லும் இந்தப் புத்தகம் ‘காலம் எனும் கடற்கரையில் எழுப்பப்பட்டு கலங்கரை விளக்கம் புத்தகங்கள்’ என்ற மேற்கோளோடு ஆரம்பிக்கிறது.
அந்த கலங்கரை விளக்கங்களையும் விதவிதமான வடிவில் வடிவமைப்பதில்தானே மனிதனின் ஆர்வமும், திறமையும் வெளிப்படுகின்றன !