பா. கெஜலட்சுமி
தமிழ் இலக்கியத்தின் அடிப்படை வடிவம் கவிதையாகும். கால மாற்றத்தால், புதுக்கவிதை; வசனக் கவிதை, என புதுப்பித்துக்கொண்டு மற்ற தளங்களைவிட வாசகனுக்கு மிகப் பெரிய இடைவெளியை வழங்குவது கவிதைத் தளமாகும். கற்பனை, சொற்களின் அமைப்பு முறை, ஒலி நயம், குறிப்புப் பொருள் எனப் பல கூறுகளின் ஒன்றிணைந்த நுண்ணிய கலை வடிவமே கவிதை. உள்ளத்து உணர்வுகள், தூரிகை வழியாக, வண்ண ஓவியமாக மிளிர்வதுபோல, தேர்ந்தெடுத்த பொருத்தமான சொற்களால் கவிதை செழுமையாகிறது.

நம் பணி தங்குதடையின்றி நடந்தால் போதும், சுற்றி என்ன நடந்தால் நமக்கென்ன என்று சமகாலத்தில் மனிதன் மனங்களில் புரையோடும் சிந்தனையை மடை மாற்றும் வலிமை கவிதைக்கு உண்டு என்பதற்கு நம் முண்டாசுக் கவிஞனே சாட்சி! நிகழ்காலத்தில் வாழும் குழந்தை மனமே கவி(தை)க்கு வித்து. வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்நிலையை எய்தினால், மனிதம், மணம் வீசுவது திண்ணம்.
இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் அழகியலோடு, வாழ்க்கையைத் தரிசிக்க வழிகோலுகிறது. நேரடியான கவிதைகளைவிட படிமம் நிறைந்த கவிதைகள் நம் சிந்தனையைக் கூர் தீட்டுவதால் எனக்கு மிகவும் பிடித்தமாகிறது. போதாகி மலர்ந்த நாள் தலைப்பிட்ட கவிதை இவ்வகையைச் சார்ந்ததே.
சில உணவுகள் சமைத்தவுடன் சாப்பிடுவதைவிட வைத்திருந்து சாப்பிடும்போது கூடுதலாக சுவைக்கும். அதுபோல இக் கவிதையை வைத்து வைத்துப் படிக்கும்போது அதாவது சிறிது கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது புதுப்புது பரிமாணங்களை வழங்கிக் கொண்டேயிருக்கிறது. சில வரிகள் மட்டும்…
“என்னதான் செய்வது
இந்தச் சொற்களை
தலையணைக்குள் பதுங்கிக்
கொண்ட சொற்கள்
பேன் மாதிரி அரிக்க
போர்வைக்குள் பதுங்கிக் கொண்ட சொற்கள் உடலெங்கும்
ஊர்ந்து செல்கின்றன
போதாகி மலர்ந்த மலர்கள்
உதிர்ந்து கிடக்க
மொட்டுகள் சில முனை திறக்கக்
காத்திருந்தன.”
அன்றாட வாழ்வில் சொற்களோடு நாம் பின்னிப் பிணைந்திருக்கிறோம். உடலைத் தூய்மை செய்யும் விரதங்களை நமக்கேற்றாற்போல வளைத்துக் கொண்டதுபோல மனதைத் தூய்மை செய்யும் மௌனவிரதத்தை முற்றிலுமாக துறந்தோம். சொற்களின் வழியாகவே நம்மை முன்னிலைப்படுத்தவும்; அடையாளம் தேடிக் கொள்ளவும் முனைந்துகொண்டேயிருக்கிறோம். ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை மறந்து; சொற்களின் மகத்துவம்’ விளங்காமல் வீணாக இறைத்துக் கொண்டேயிருக்கிறோம். மௌனமே சிறந்த மொழி என்பதை இயற்கையோடு இணையும் தருணமே நமக்கு புலப்படும்.
ஒவ்வொரு கவிதைக்குமான தலைப்பு செழுமை. ‘பராதி’ யெனும் புதிய சொல்லின் வழியாக வாழ்க்கையின் நிதர்சனத்தைத் தொட்டுச் செல்லுகிறது இக்கவிதை
“பராதி
எண்ணங்களால் நிரம்பியது
எனது நாள்காட்டி
வீட்டிற்கு வந்த
இன்றைய நாளை
தோழியைப்போலவே உபசரித்து
அனுப்பிவைத்தவன்
நேற்றைக்கு வந்த நாள்தான்
உபசரிப்பில் குறைவென்று
பக்கத்து வீட்டில் பராதிச் சொல்லி
கடந்தது
நாளைக்கு வரும் நாளை
நாளை பார்த்துக்கொள்ளலாம்.”
இந்த மனதிடம் ஒவ்வொருவருக்கும் வாய்த்துவிட்டால், பயம், பதட்டம், ஏக்கம், தவிப்பு, புலம்பல், பெருமை ஆகிய கழிவுகளுக்கு மனதில் இடமேது!
நீண்ட கால குடும்ப அமைப்புகளில் வேரோடிப்போன கருத்தியலை மீறி, சுயசார்பிற்காக ஏங்கித் தவித்து, தகவமைத்துக்கொள்ளும் பெண்களின் மனதைக் குறியீடாக்கும் இவ்வரிகள் என்னுள் சிலிர்ப்பூட்டுகின்றன.
“மழை வெயில் காற்றுக்கும்
தன்னைப் பதப்படுத்தி வேறு இடம் கூடி முளைக்கத் தொடங்கின தானியங்கள்.”
“செல்லும் வழியெல்லாம் முட்கள் பரப்பி சென்றான் பாதங்களைக் காயப்படுத்த.”
“காற்றாடியின் சிறையில் அடிபட்டு விரித்த சிறகுகளும் தத்தளித்து அடங்கிய பூச்சிகளையும் நினைவுகளையும் எடுத்து வெளியில் ஊற்றினேன்.” மன வலிகளை எத்துணை ஆழமாய் காட்சிப்படுத்துகின்றன இவ்வரிகள்!

ஓர் அக்குபங்சர் மருத்துவராக ‘இன்யாங்’ தலைப்பு மிகவும் ஈர்த்த காரணம், எட்டாயிரம் வருடப் பாரம்பரியம்கொண்ட சீன மருத்துவத்தின் தத்துவக் குறியீட்டிற்குப் பெயரே ‘இன்யாங்’. வாழ்வின் எதிரெதிர் நிலையான பகலிரவு; சுக தூக்கம்; ஆண், பெண் என புறத்தில் இரண்டாக வெளிப்பட்டாலும், மறைவாக இரண்டுமே ஒன்றினுள் ஒன்று அடக்கம் எனும் மகத்தான பிரபஞ்ச ரகசியத்தைப் போதிக்கும் மாபெரும் ஞானம். ஒவ்வொரு தருணத்திலும் இத்தத்துவத்தைப் பொருத்திப் பார்க்கும் இயல்பு நமக்குள் துளிர்த்தால் இயற்கையின் பரிமாணங்களைக் கண்டடைந்து ஒளிரலாம். இத்தலைப்பில் கடைசிப் பத்தியில்,
“நிர்வாணம் காண்கின்றான்
பல வருடமாக
இறந்து கிடக்கும்
அவன் சரி பாதி
உடலோடு.”
உறுப்புகள் செயலிழந்து மரணப் படுக்கையில் கிடக்கும் ஒருவரின் பாடுகளைப் பேசும் கவிதை, ‘வந்து போகும் காற்று’.இப்படியானவர்களுடன் கூட இருக்கும், உறவுகளின் ஆரோக்கிய வாழ்நாளையும் கேள்விக்குறியாக்கி, பகைவனுக்குக் கூட வரக்கூடாது என மனிதமுள்ள அனைவரையும் நினைக்க வைக்கும் அவலநிலை.
எந்த வயதிலும் மரணிக்க விரும்பாத, வாழ்வை நேசிக்கும் மனிதன், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது, கடுமையான சுதந்திர மறுப்பாக சிந்திக்கும் போக்கு வருந்துவதற்குரிய விடயமாகும். எதற்கெடுத்தாலும் மருத்துவம் இருக்கிறது என்ற குருட்டு நம்பிக்கையே முக்கியக் காரணமாகும். இதற்குக் கருபொருளாகக் கீழ்க்கண்ட வரிகள், மற்றொரு தலைப்பில் இருந்தாலும், ஆரோக்கியத்தின் பிறப்பிடத்திற்குப் பொருத்தமானதொரு வரிகள்.
“மாத்திரைகளைக் கொடுப்பதற்கு முன்
வலிகளில் கொஞ்சம்
நீங்களும் சுவைக்கலாமே”.
வலியின் மகிழ்வின் மீதுள்ள சுதந்திரத்தின் எல்லைகளை, தொகுப்பிலுள்ள கவிதை முழுமையிலும் மழைக்காலம்; பசுந்தாவரம்; பறவை, வீடு, வெளி, இரவின் குளிர்ச்சி என அனைத்திலும் இழையோடுகின்றன.
நம் கண்களுக்குப் புலப்படாத எத்தனையோ காட்சிகள், கவிஞரின் வரிகள்வழி, நம்மை இயற்கையின்பால் ஒப்புவிக்க கெஞ்சுகின்றன. புறப்பொருளோடு, அக உணர்வுகள் சந்தித்து உறவாடும் நிகழ்வே கவிதை. முடிவாக, முத்தாய்ப்பாக…
“நத்தையைப் போல்
மெதுவாக உஊர்ந்தாலும்
வழித்தடங்கள் எங்கும்
நம்பிக்கையின்
குளிர்ச்சி” – நன்றி!
அமுதா என்னும் இயற்பெயரைக்கொண்ட இந்நூலாசிரியர், தன் மகளின் பெயரைக் கூடவே சேர்த்து அமுதா ஆர்த்தி என்ற பெயரில் எழுதிவருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லாஞ்சிவிளை என்னும் ஊரில் வசித்து வரும் இவர், படிகம் புத்தக மையத்தில் தட்டச்சராகப் பணிபுரிந்து வருகிறார்.
