ஆயிஷா இரா. நடராசன்

ஒருமுறை இருமுறை அல்ல, கல்நெஞ்சக் கயவர்களால் மூன்று முறை தீயிட்டுக் கொளுத்தப்பட்ட அந்தப் பெருங்கனவுக்கு பெயர் யாழ் நூலகம். நூலகங்களை எரிப்பதற்கு என்று ஆங்கிலத்திலும் கிரேக்க மொழியிலும் தனிப் பதங்களே உள்ளன. ஏனெனில் மனிதகுல வரலாறு முழுமைக்குமே நூலகங்களை தீயிட்டு கொளுத்துவது கொடிய போர்களின் பகுதியாக இருந்தே வந்துள்ளது. ஒரு நூலகத்தை எரித்து அழிப்பது ஒரு சமூகப் பிரிவின் வழிவழிவந்த வரலாற்று இலக்கிய செல்வங்களை அழித்து விடுவதே ஆகும்.
ஒரு நூலகத்தை எரித்து அழிப்பதற்கு லிப்ரிசைடு எனவும் பிப்லியோ கிளாசம் எனவும் தனிப்பதங்களே உள்ளன. ஆனால் உலகிலேயே மூன்று முறை தொடர்ந்து எரித்து அழித்து ஒழிக்கப்பட்ட நூலகம் யாழ் நூலகம் மட்டும்தான்.
யாழ் நூலகம் வெறும் நூலகம் அல்ல. ஒரு பேரினத்தின் பெருங்கனவு. அதற்குமுன் போர்கள் மட்டுமல்ல, இயற்கை பேரிடர்களாலும் நூலகங்கள் அழிந்துள்ளன. சில மரைகழண்ட மாமன்னர்களின் அதிகார போதையில் அழிந்த (சீனத்தின் குவின் ஷீஹாங் மன்னன்) க்ஸியாங் அரண்மனை நூலகம் போன்ற கொடுமைகளும், ஏன் ஜூலியட் சீசரின் படைகளால் எரியூட்டப்பட்ட அலெக்சாந்திரியா நூலகம் போன்ற சுய தீமூட்டல் முட்டாள்தனங்களும் அரங்கேறியது உண்டு.
இந்திய மண்ணின் தன்னிகரற்ற பௌத்த நூலகமான நாளாந்தா பல்கலைக்கழக நூலகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை தனியாக குறிப்பிட வேண்டும். ஹர்ஷவர்த்தனர் எனும் பௌத்த மன்னரால் அவரது அறிய பௌத்த தத்துவ அறிஞர்களால் உருவான உலக பொக்கிஷம் அது. இரத்தினதாத், இரத்தினசாகரம், இரத்தினரஞ்சகம் என்று மூன்று ஒன்பது மாடிக் கட்டிடங்களில் அமைக்கப்பட்ட அற்புத பிரமாண்டம் நாளந்தா நூலகம்.
1193 துருக்கிய ஆக்கிரமிப்பாளன் பக்கிட்யா கில்ஜி இந்த பௌத்த பாரம்பரியத்தையே முற்றிலும் எரித்து அழித்ததாக வரலாறு சொல்கிறது. இந்த நூலகம் அழிக்கப்பட்டதால் நமது இந்திய மண்ணிலிருந்தே பௌத்தம் அழிக்கப்பட்டதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
யாழ் நூலகத்தின் உணர்ச்சிபூர்வமான உன்னத வரலாறு 1920-களில் தொடங்குகிறது. நம் தமிழகத்தில் சென்னையில் (அந்தக் கால மதராஸ்) கேப்டன் ஜெஸ் மிக்செல் என்பவர் மெட்ராஸ் அருங்காட்சியகம் என்னும் பழைய கட்டிடத்தில் 1860களில் சிறு நூலகத்தை அமைத்தார். அது வளர்ந்து 1896இல் கன்னிமாரா பிரபு என்பவர் சென்னை மாகாண கவர்னராக இருந்தபோது கன்னிமார பொதுநூலகமாய் பெயர் பெற்றது. இலங்கையில் கொழும்பில் பொதுநூலகம் என்று (சிலோன் யுனைடெட் சர்வீஸ் லைப்ரரி) 1910-ல் இதே பிரித்தானியர்கள் தொடங்கினார்கள். நமது கன்னிமாரா நூலகத்தில் மட்டுமல்ல, சென்னை பல்கலைக்கழக நூலகத்திலும் அப்போதே தமிழ் நூல்கள் உண்டு.

உலகில் எங்கே எந்த புத்தகம் வெளிவந்தாலும் அதன் ஒரு பிரதி தங்களுக்கு வர வேண்டும் என்று பிரித்தானியா கன்னிமாரா நூலகத்தை வளர்த்தனர் (இன்றும் அந்த அந்தஸ்தை ஐநா சபையே கன்னிமாரா நூலகத்திற்கு வழங்கி உள்ளது). அப்படியான ஒரு அந்தஸ்தை சிலோன் யுனேடெட் சர்வீஸ் கொழும்பு நூலகமும் அனுபவித்தது. ஆனால் அங்கே அந்த நாட்களில்கூட தமிழ் நூல்களுக்கு இடமில்லை. பௌத்த நூல்கள் என்னும் பெயரில் ஏராளமான சிங்கள நூல்களை அச்சடித்தனர். நம் தமிழகத்தின் அன்றைய சூழலில் அதே போராட்டத்தை நாம் சமஸ்கிருதத்திற்கு எதிராக நடத்திக்கொண்டிருந்தோம். மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்கியபோது நம்மை விட ஈழத்து தமிழ் சமூகம் விழிப்படைந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் அத்தகைய எழுச்சிப் பயணத்தை தொடங்கிய மாமனிதர்தான் செல்லப்பா. கே. எம். செல்லப்பா யாழ்ப்பாணத்தின் புத்தூர் மேற்கை சேர்ந்தவர். யாழ் நீதிமன்றத்தில் எழுத்தராக (அந்தப் பதவிக்கு அங்கு சட்டகத்தார் என்று பெயர்) இருந்தார். 1921-இல் வாசிப்பு உலகிற்குள் நுழைகிறார். தான் வழக்குகள் தொடர்பாக அரசாங்கப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அந்த நகரங்களின் நூலகங்களுக்கு செல்வார். இருமாதங்களுக்கு ஒரு முறை தலைநகர், கொழும்புவிற்கு அவர் செல்ல நேர்ந்தது. அவ்விதமான பயணம் ஒன்றில் கொழும்பு சிலோன் யுனைடெட் சர்வீஸ் எனும் பெரிய பொதுநூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இல்லை என்பதை கண்டார்.
தன் வீட்டில் வாசிப்பதற்கு சேகரித்த நூல்களை முன்னறையில் 12 அடுக்குகள் கொண்ட ஒரு மர அலமாரியில் அடுக்கி 1933இல் ஜனவரியில் சிறு நூலகம் ஒன்றை தொடங்கினார் தமிழ் நூல்கள் மட்டுமே என சிறுஅறிவிப்பை கையால் எழுதிவைத்து கட்டணம் இன்றி மொத்தம் 17 வாசகர்களை சேர்த்தார். மூன்று பேர் பெண்கள். இப்படித்தான் நமது யாழ் நூலகம் துவங்கியது.
அற்புதமான மனிதரான கே.எம். செல்லப்பாவின் தோழர்கள் அவரை அழைத்துக்கொண்டு அப்போது அங்கே மாவட்ட நீதிபதியாக இருந்த சி.குமாரசுவாமியை சந்தித்தனர். விரைவில் 1934இல் பிறந்தது யாழ் நூலகக்குழு. முனைவர். ஐஸக் தம்பையா, பொன்னம்பலம் போன்றவர்களும் குழுவில் இணைந்தனர். செல்லப்பாவின் இல்லத்திலிருந்து மாதம் 25 ரூபாய் வாடகையில் யாழ் நகரின் மத்தியில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதியில் ஒரு அறைக்கு நூலகம் இடம்பெயர்ந்தது. அப்போது நூலகத்தில் சுமார் 450 புத்தகங்கள் இருந்தன.
சில மாதங்களிலேயே இடப் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு பொதுமக்களான ஈழத்தமிழர்கள் நூலகத்தை மொய்த்தெடுத்தனர். மாத, வார இதழ்கள், தினசரிகள் வாசிக்க சாலை ஓரமாகக்கூட இருக்கைகள் போட வேண்டியிருந்தது. கே. எம். செல்லப்பாவின் அயராது முயற்சியினால் நூலகத்தை விரிவாக்கிட 1,184 ரூபாய் 22 காசுகள் சேர்ந்தன. பக்கத்து அறையையும் வாடகைக்கு எடுக்கப்பட்டு 844 புத்தகங்கள், 30 சஞ்சிகைகள் என்று நூலகம் தரம் உயர்ந்தது. இதனை பராமரிக்க கே.எம். செல்லப்பா தனது நீதிமன்றப் பணியை துறந்தார். இவரைப் பற்றி இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.
கே. எம். செல்லப்பா. கனகசபை முத்துதம்பியர் செல்லப்பா ஆவார். 1896-ல் பிப்ரவரி 2 அன்று புத்தூர் மேற்கில் பிறந்தவர். தாய் சின்னதம்பியார் நாகமுத்து. தந்தை கந்தபிள்ளை கனகசபை. செல்லப்பா அவர்களுக்கு நான்காவது பிள்ளை. இலங்கையின் புத்தூர் மிஷன் பாடசாலை, அச்சுவேலி மிஷன் பாடசாலை என பள்ளிக்கல்வி முடித்து யாழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்க அந்த விடுதியில் இணையும்போதே அக்கல்லூரி நூலகத்தில் பலமணி நேரத்தை கழிப்பாராம்.
நீதிமன்ற அரசுப்பணியில் இணைந்து யாழ்ப்பாணம், கொழும்பு, கம்ஹா, காலி, மாத்தளை, கேகாலை புத்தளம் பருத்தித்துறை, நீர்க்கொழும்பு முதலிய நீதிமன்றங்களில் பணியாற்றியவராக எல்லா ஊர்களிலும் எப்படியோ நூலகங்களை தேடி செல்பவராக இருந்தார். அவரது துணைவியார் மயில்வாகனம் செல்லம்மா அவரும் தீவிர புத்தக வாசகர் என்கிறது வரலாறு. யாழ் புத்தகசாலை நூலகத்தில் 1936 வரை அவர்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கவில்லை.
1936இல் யாழ்ப்பாண நகரசபையின் முதலாவது முதல்வராக தேர்வான சாம் சபாபதியார் நூலகத்தை மாநகரக் கட்டிடத்திற்கும் நகர்மன்றக் கட்டிடத்திற்கு இடையே இருந்த ஒரு கட்டிடத்திற்கு இடமாற்றிட உத்தரவிட்டார். அந்த இடம் பெரிதாகவும் வசதியாகவும் இருந்தது. தவிர 5,000 புத்தகங்களுக்குமேல் இருந்தமையால் பராமரிப்பு சிரமங்களும் ஏற்பட்டன. ஒரு ரூபாய் வாசகர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கட்டணமில்லை. யாழ் புது நூலகம் என்ற பெயரையும் அது பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி, வளைகுடா நாடுகள்வரை தமிழர்கள் அந்த நூலக உறுப்பினர்களாக இருந்தனர்.
1954இல் கே. எம். செல்லப்பாவின் அயராத உழைப்பினால் நூலகத்தில் 60,000 புத்தகங்கள் இருந்தன என்று ஒரு குறிப்பு இருக்கிறது. அந்த நாட்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சா, எழுத்தாளர் கல்கி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உட்பட பலர் அந்த நூலகத்திற்கு விஜயம் செய்ததாக கோப்புக்களில் உள்ளன. போதாத நகர்மன்றக் கட்டிடத்தில் ஏன் இருக்கவேண்டும். வேறு புதிய கட்டிடம் கட்டலாம் என்று நகர்மன்ற முதல்வர் சாம். சபாபதி முடிவு செய்து அமெரிக்க தமிழ் பற்றாளர் சர் லாங் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டினார். அமெரிக்க அரசு 22,000 டாலர் நிதிஉதவி அளிப்பதாக அறிவித்தது. யாழ் நகர்மன்ற ஆலோசனைப்படி புதிய நூலகக் கட்டிடத்தை வடிவமைப்பதென்றும் முடிவாயிற்று. இந்திய தூதரகத்தின் ஆசிய வளர்ச்சி குழுமமும் நிதிஉதவி அளித்தது.
கே. எம். செல்லப்பா தமிழகத்திற்கு வந்தார். பலரை சந்தித்தார். தமிழ்நாடு அரசின் (அப்போதைய மதராஸ்) ஆஸ்தான கட்டிட இயல் நிபுணர் அன்றைய சென்னை காந்தி மண்டபம் உட்பட வடிவமைத்த தமிழகத்தின் பொறியாளர் கே. எஸ். நரசிம்மன் மற்றும் இந்திய நூலகத்துறை தந்தை என்று போற்றப்படும் பேரா. எஸ். ஆர். ரங்கநாதன் ஆகியோர் நேரடியாகச் சென்று யாழ் பொது நூலகத்தை திராவிட கட்டிட பாரம்பரியத்தோடு வடிவமைத்து கட்டிமுடித்து ஒப்படைத்தார்கள்.
1954ல் பல்வேறு தமிழறிஞர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டுவிழாவும் 1959இல் அப்போதைய யாழ்ப்பாண மாநகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவால் அது கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டது. குழந்தை கவிஞர். அழ. வள்ளியப்பா ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல 1961இல் உலகிலேயே மூன்றாவது (டென்மார்க், ரஷ்யாவுக்குப் பிறகு) குழந்தைகளுக்காகவே தனி நூலகப் பிரிவும் அங்குதான் தொடங்கப்பட்டது.

கே.எம். செல்லப்பா ஓர் ஓலைச்சுவடி சேகரிப்பவராகவும் இருந்தார். ஈழத்தமிழ் இலக்கிய புதையல் பலவற்றை தேடித்தேடி அவர் தனது நூலகத்தில் சேர்ப்பித்தார். முதல் பிரதிநிதிகள், மூலப்பிரதிகள் என்று 2,500 அபூர்வமான நூல்களை சேமித்து இருந்தார். அவற்றில் 1660இல் ராபர்ட் க்னோச் எழுதிய‘தி ஹிஸ்டர் ஆஃப் சிலோன்’ எனும் நூல் ஆனந்த குமாரசாமியின் 700 நூல்கள், ஆறுமுக நாவலர் நூல் தொகுதி, கதிர்வேல் பிள்ளையின் 600 நூல்கள், மிகப்பிரபலமான ஈழத்து சமய தத்துவ அறிஞர் ஐசக் தம்பையாவின் அனைத்து 250 நூல்களும் இதைத்தவிர தமிழில் முதன்முதல் வெளிவந்த இலக்கியக் கலைக்களஞ்சியமான ‘அபிதான கோசம்’, நம் சிங்காரவேலு முதலியார் அர்ப்பணிப்போடு தொகுத்த ‘பிரதான சிந்தாமணி’ எனும் கலைக்களஞ்சிய மூலப்பிரதி என அடுக்கிக்கொண்டே போகலாம்.
சீர் வளர்சீர் ஆறுமுக நாவலர் அந்த யாழ் நூலகத்தில் கே.எம். செல்லப்பா சேர்த்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளின் வழியேதான் சைவத்தையும், தமிழையும் அங்கே வளர்த்தெடுத்தார். தமிழகத்தின் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வ.உ.சிதம்பரனார், அருட்பிரகாச வள்ளலார் காலம் முதல் பேரறிஞர் அண்ணா ,லட்சுமணசாமி முதலியார், மு.வரதராசனார் உட்பட பலரது நூல்கள் அங்கே இடம்பெற்றிருந்தன. சுப்பிரமணிய பாரதியார். பாரதிதாசன் முதல் கண்ணதாசன் வரை அணிவகுத்த மணிமகுடங்கள் பல.
பிரதாப முதலியார் சரித்திரம்தான் தமிழின் முதல் நாவல் என்று யாழ் நூலக ஆய்வின் மூலம்தான் முதலில் அறிவித்தார்கள். தமிழ்ப் பேரினத்தின் கனவுப் பிரதேசம் அதுதான். எங்களுக்கு பள்ளியில் தமிழாசிரியராக இருந்த கரூர் கண்ணல் என் பதினோராம் வகுப்பில் அந்த நாட்களில் அதாவது எழுபதுகளில் பாடம் நடத்தும்போது ஒருநாள் தமிழில் ஒரு நூல் சிறந்த நூலென்றால் அது யாழ் நூலகத்தில் இடம் பிடித்தால்தான் வரலாறு நம்பும் என்று கூறினார். அந்தக் கனவு 1981ல் மே 31 நள்ளிரவில் எரித்து சிதைக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் கொடிய இன நூலழிப்புகளில் உலகமே பெரும் வன்முறையாக கருதிய சம்பவம் அதுதான். தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அந்த யாழ்நூலகம் எனும் பிரமாண்ட தமிழ் கோட்டைக்கு எரியூட்டியது சிங்கள போலீஸ்காரர்கள்தான் என்று யோசிக்கும்போது இப்போதும்கூட ரத்தம் கொதிக்கும்.
1981ல் மே 31 அன்று தமிழர் விடுதலைகூட்டணி (TULF) ஒரு தேர்தல் பிரச்சாரப் பேரணியும் பொதுக்கூட்டமும் யாழ்பாணம் நாச்சியார் கோவிலடியில் நடத்தினர். மாவட்ட சபைத் தேர்தல் 1981 ஜூன் நான்கு அன்று நடப்பதாக இருந்தது. மே 26 அன்று வடபிராந்திய காவல் பிரதிநிதி மாற்றப்பட்டு சிங்கள பேரினவாதி குணவர்த்தனா நியமிக்கப்படுகிறார். அந்த அமைதிப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இருகாவலர்கள் (இருவருமே தமிழர்கள்) இறந்தார்கள். பேரணிக்குப் போன பொதுமக்களும் சிலர் (எண்ணிக்கை இல்லை) இறந்தார்கள்.
அன்றைய இரவு 12 மணிக்குமேல் சீருடையில் காவல் துறையினரும், துணை ராணுவக் குழுக்களும் (சீருடையிலும் சீருடை இல்லாமலும்) கைகளில் துப்பாக்கிகளுடனும் பெட்ரோல் குண்டுகளுடனும் பயங்கர வன்முறையில் இறங்குகின்றனர். யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் வே.யோகேசுவரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அருகில் சுண்ணாசம் சந்தையில் தமிழர்களை ஓட ஓட விரட்டி சுட்டுக்கொல்கிறார்கள் சிங்கள காவலர்கள். ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகம் தீக்கிரையானது.பிறகு யாழ் நூலகம் நோக்கி எந்தத் தடுப்பும் இல்லாமல் அந்தத் ஆயுத வெறியர்கள் சென்றனர். காவலாளியை தாக்கி மண்டையை உடைத்தனர்.
தமிழ்ப் பேரினத்தின் கலை, பண்பாட்டு அடையாளமான அந்த யாழ் நூலகம் தீயிடப்பட்டது. திட்டமிட்டு பலமணிநேரம் எந்த அச்சமும் இன்றி 97,000 புத்தகங்கள், 4,717 ஓலைச்சுவடி கொத்துக்கள், 16,000 கையெழுத்துப் பிரதிகள் என பிறவற்றையும் மய்யத்தில் இருந்த மாடத்தில் கிடத்தி எரியூட்டிவிட்டு தமிழ்ச்சொத்து எரிய அந்த வெறிபிடித்த காவல்துறை சிங்களக் கூட்டம் அதனை சுற்றி ஆடிப்பாடி களித்தது என்கிறது வரலாறு. அவர்கள் 700 பேர் இருந்தார்களாம். ஆனால் அன்றைய தினம் அவர்கள் எரித்தது யாழ் பொது நூலகத்தை மட்டுமல்ல, யாழ்ப்பாணம் காட்லிய கல்லூரி நூலகம், யாழின் புத்தக சாலையான பூபால சிங்கம் புத்தகசாலை ஆகியவற்றையும்கூட தீயிட்டு அவர்கள் அழித்தார்கள்.
ஓர் இனத்தை அழிக்கவேண்டுமா… அதன் கலை, இலக்கியச் செல்வங்களை உருத்தெரியாமல் சாம்பலாக்கு என்று உலகிற்கு அறிவித்த அந்தக் கொடுமையிலிருந்து யாழ் பொது நூலகமும் தமிழ் இனமும் மீளவில்லையா என்ன? யாழ் நூலக எரியூட்டல் சம்பவத்தின் மூல கர்த்தாவான சிங்கள அமைச்சரை பெண்புலிகள் பின் நாட்களில் வன்மம் தீர்த்தது ஒருபுறம்.
நூலகத்தை எந்தவிதத்திலும் மாற்றது, திருத்தாது யாழ் மாநகர சபை அதை அழிப்பின் அடையாளமாக வைத்திருந்தது. பிறகு ஒரு புதிய கட்டிடத்தை முன்னிருந்ததுபோலவே கட்டிடத் தீர்மானித்தது. அதன் முழுநேர பொறியியலாளராக ந.நடேசனார் நியமிக்கப்பட்டார். கட்டிட வரைபட இயல் நிபுணராக வி.எஸ் துரைராஜா நியமிக்கப்பட்டார். 1984ல் மீண்டும் உயிர்த்தெழுந்தது யாழ் நூலகம். 1988ல் சிங்கள ராணுவம் அதை வான்குண்டுகளால் அழித்தது. மீண்டும் எரிந்தது தமிழ் இனத்தின் பெருங்கனவு.

விட்டார்களா தமிழர்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1999ல் கட்டிடத்தை புனரமைக்க அதே வி.எஸ்.துரைராஜா நியமிக்கப்பட்டு கே. எம். செல்லப்பாவின் கனவு கோட்டை மீண்டும் எழுப்பப்பட்டது. உலகெங்கும் அகதிகளாக திரிந்தும் தன் இனக் கனவுக்கு இதோ இதோ என்று நூல்கள் குவிந்தன. ஆனால் திறந்த சில நாட்களிலேயே கோரத்தாண்டவமாடிய இனவெறி அந்த நூலகத்தை முற்றிலும் சாம்பலாக்கியதோடு ஒரு சிங்கள ராணுவ செக்போஸ்ட் அங்கேயே அமைக்கப்பட்டது. இப்படி மூன்றுமுறை முற்றிலும் சாம்பலாக்கப்பட்ட உலகின் ஒரே நூலகம் யாழ் பொது நூலகம்தான்.
இன்று கே.எம் செல்லப்பாவின் தமிழின பெருங்கனவு நெடிதுயர்ந்து பழைய கட்டிட வாயிலில் இருந்த சரஸ்வதி சிலையையும் மீட்டு புதிய கட்டிட வாயிலில் திருவள்ளுவர் சிலையுமாக தமிழகம் உட்பட உலகெங்கும் இருந்து தமிழ் இன மக்கள் அளித்த பெருங்கொடையால் தமிழின அறிவுத்தேடலின் பாரம்பரிய சின்னமாய் மூன்று லட்சம் புத்தகங்களுடன் ஒரு பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்து வாசிப்பை நேசிக்கும் தமிழினம் வெல்லும்… என உலகிற்கே முழங்குகிறது