ரா.பி.சகேஷ் சந்தியா
‘ஆயிரம் குழந்தைகள்
ஆயிரம் நூல்கள்,
ஆயிரம் நூல் அறிமுகங்கள்’
என்ற முழக்கத்தோடு குழந்தைகள் தின சிறப்பு நிகழ்வுகளாக பள்ளிகளில் வாசிப்புத் திருவிழா நடத்தப்பட்டன. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், BOOKS FOR CHILDREN அமைப்போடு இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா குழந்தைகளிடம் பல பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதை உணர்கிறோம். நம் கல்விமுறையில் குழந்தைகள் வாசிப்புக்கு அந்நியப்பட்டவர்களாகவே வளர்க்கப்படுகிறார்கள்.

திறக்கப்படாத நூலகங்கள், தூசி படிந்த புத்தகங்கள், ஓய்வறையாகப் பயன்படுத்தப்படும் நூலகங்களைக் கொண்ட பள்ளிகள்தான் தமிழகத்தில் ஏராளம் உண்டு. குழந்தைகள் பாடநூல்களைப் படிக்கிறார்கள் ஆனால் வாசிப்பதற்குப் பழக்கப்படுத்தவில்லை. குழந்தைகளிடம் வாசிப்பை பண்பாடாக்க வேண்டும் என்றால் நல்ல நூல்களும், நூலகமும் குழந்தைகளுக்கு அருகில் இருக்க வேண்டும்.
இன்றைய எதார்த்த சூழலில் வாசிப்புப் பண்பாடு குழந்தைகளிடம் இல்லாதது சமூகத்தின் அறிவு வளர்ச்சியில் பெரும் தொய்வை ஏற்படுத்தியது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால் தான் பகுத்தறிவு மண்ணில், மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. அதற்குப் பல காரணங்களை பட்டியலிடுவார்கள் அவைகள்:
• குழந்தைகள் அனைவரும் ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள்
• குழந்தைகள் வீடியோ கேம் விளையாட்டையே அதிகம் நேசிக்கிறார்கள்
• பள்ளிப் பாடம் படிக்க, வீட்டுப்பாடம், சிறப்பு வகுப்புகள் நாள் முழுவதும் நடைபெறுகிறது.
• பள்ளிப் பாடங்களை படிப்பதற்கே நேரம் இல்லை, இதில் கூடுதலாக புத்தகங்களை எப்படி வாசிப்பது?
• சிலம்பம், கராத்தே, மொழிப் பயிற்சி விளையாட்டு பயிற்சி என்று எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களால் வாசிக்க இயலாது.
இவையெல்லாம் குழந்தை வாசிப்புக்கு பெரும் தடையென்று பொதுவெளியில் திட்டமிட்டு கட்டமைத்துள்ளார்கள். அது உண்மையல்ல என்பதை வாசிப்புத் திருவிழா நமக்கு உணர்த்தியுள்ளது. குழந்தைகள் புத்தகங்களை அதிக ஆர்வத்துடன், விருப்பத்துடன் தேடி வந்தது புது நம்பிக்கையை தந்தது. நான்கு பள்ளிகளில் 1,200 மாணவர்கள் சுமார் 6,500 புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள்.
காலை ஒன்பது மணியளவில் பள்ளியின் பொது அமர்வில் வாசிப்பை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். இதில் எழுத்தாளர் அறிமுகம், நூல் அறிமுகம் நடைபெறும். புத்தகங்களை காட்சிப்படுத்தி மாணவர்களே தங்களுக்குத் தேவையான நூல்களைத் தேர்வு செய்யத் தூண்டுவோம். மாணவர்களும் ஆசிரியர்களும் வட்டமாக அமர்ந்து வாசிப்பார்கள். மாலை மீண்டும் பொது அமர்வில் மாணவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களை பற்றிப் பேசுவார்கள். இந்த வாசிப்புத் திருவிழா சில படிப்பினைகளையும் நமக்கு கற்றுத் தருகிறது.
1.குழந்தைகள் மரபுகளை உடைக்கிறார்கள்:-
குழந்தைகள் என்றாலே பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், விடுகதைகள், ஜோக்ஸ், துணுக்குகள், படம் பார்த்து வரைவது போன்ற நூல்களை மட்டுமே வாங்குவார்கள் என்ற புரிதல் சமூகத்தின் பொதுப் புத்தியில் இருக்கும், இருந்தது, இருக்கிறது. ஆனால் குழந்தைகள் அதைக் கடந்து வாசிக்கிறார்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் உதய சங்கர் எழுதிய ‘பேய் பிசாசு இருக்கா?’ என்ற நூல் சுமார் 200 பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
குழந்தைகள் வாசிப்புக் கதைகளைக் கடந்து சமூக விமர்சனங்களை நோக்கி நகர்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்நூலை வாங்கியது மட்டுமல்லாமல், கலந்துரையாடல் செய்கிறார்கள். சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட பேய், பிசாசு பற்றிய கற்பிதங்களையும் அது தொடர்பான சடங்கு முறைகளையும் மூடநம்பிக்கைகளையும்; குழந்தைகள் கேள்விக்குட்படுத்துகிறார்கள். சமூகம் கற்றுக்கொடுப்பதை அப்படியே உள்வாங்காமல் அதை ஆய்வுக்குட்படுத்தி தெளிவு பெற குழந்தைகள் விரும்புகிறார்கள். குழந்தைகளுக்கு அதுதான் பிடிக்கும், இதுதான் தேவை என்ற மரபுப் புரிதலை சமூகம் மாற்றி அமைக்க வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தோழர் ச. தமிழ்செல்வன் எழுதிய ‘இந்திய வரலாற்றில் இளைஞர்கள்’ என்ற நூலை ஆர்வமுடன் வாங்கி வாசித்து திறனாய்வு செய்தார்கள். இவைகள் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புக்கு ஏற்ற நூல்கள் இல்லை, இது பெரியவர்கள்; நீண்டநாள் வாசிப்பு அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்ற பொதுச் சிந்தனையைக் கட்டுடைக்கிறார்கள். குழந்தைகள்விடலாம் என்பது பழங்கதை, அவர்கள் தேடுகிறார்கள், அட்டைப்படத்தையும் பொருளடக்கத்தையும் உற்று நோக்குகிறார்கள்.
சிறார்களிடம் பொம்மைப்படங்களை வரைந்து ஏமாற்றிவிடலாம் அல்லது அவர்கள் சிந்தனையை அதே நிலையிலேயே வைத்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. கதைகளுக்கு ஏற்ற படங்களைத் தேடுகிறார்கள், தலைப்புக்கு ஏற்ற கதையை விரும்புகிறார்கள். ஒரு குழந்தை ஒரு நூலை வாசித்து அறிமுகம் செய்தால் அனைத்துக் குழந்தைகளும் வாங்கி தங்கள் கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.
எஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூல் மாணவியர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது உண்மை. அது பெண்குழந்தைகளின் அன்றாட அனுபவங்களை பதிவு செய்துள்ளளது என்பதால் அனைத்துக் குழந்தைகளும் அதை விரும்புகிறார்கள். புத்தகங்களை விற்பனை செய்ய விளம்பரங்களும் வண்ண பதாகைகளும் தேவையில்லை.
தங்கள் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் விமர்சனமே போதுமானதாக உள்ளது. பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகளும் அந்த விமர்சனங்களை ஏற்பதோடு மீள் திறனாய்வும் செய்கிறார்கள். குழந்தைகளின் வாசிப்பைக் குறைத்து மதிப்பிடுவது மிகத் தவறு என்பதை பொது சமூகத்திற்கு நினைவூட்டுகிறோம். சமூகம்தான் நல்ல நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யாமல் தடுத்து வைத்துள்ளதை எண்ணி வருந்துகிறோம்.
அறிவியல் மனநிலையை வளர்க்கிறார்கள்:-
ஆயிஷா நடராசன் எழுதிய குழந்தைகளுக்கான அறிவியல் அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு வாங்கினார்கள். தாமஸ் ஆல்வா எடிசன், எட்வர்டு ஜென்னர், ஹென்றிஃபோர்டு, சார்லஸ் டார்வின், லூயி பாஸ்டர், வாஸ்கோடகாமா, ரெனே டெக்கர்கார்ட், மேரி கியூரி, கரோலஸ் லினஸ், பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அறிஞர்களின் நூல்களை அதிகம் வாங்கினார்கள்.
இந்திய சமூக விடுதலைக்கும் மறுமலர்ச்சிக்கும் ஆங்கிலவழிக் கல்வியும் ஐரோப்பிய அறிஞர்களின் கருத்துக்களும் நீர் பாய்ச்சின என்பதை நாம் வரலாற்று அனுபங்களின் வழி அறிவோம். அதே போன்று உலக அறிஞர்களின் வரலாறும் படைப்பாற்றலும் சிந்தனைகளும் தமிழகப் பள்ளிகளில் விவாதிக்கப்படத் தொடங்கியாயிற்று. இது மாணவர்களின் அறிவை விசாலப்படுத்தும் அறிவியல் மனப்பான்மையோடு வளரப் பயன்படும்; குழந்தைகள் அறிவியலையும் ஆய்வுகளையும் அதிகம் விரும்புகிறார்கள். எனவே அறிஞர்களின் நூல்களை தேடிப்படிக்கிறார்கள்.
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய ‘மேகம் கருக்குது’, ‘அறிவாளியா முட்டாளா?’ ‘கடற்கரையோரம் ஒரு நடைபயணம்’, ‘கண்டோம் கடவுள்’, ‘தூள்’ போன்ற நூல்களை மாணவர்கள் விரும்பி வாங்கினார்கள். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மை, அறிவியல் தொடர்பான வாசிப்புகள் பெருகியுள்ளன. அவர்களை அறிவியல் மனப்பான்மையான சூழலில் நாம் வளர்க்கப் பயப்படுகிறோம் என்பதை சமூகம் உரை வேண்டும். சமயம், சாதி மூடநம்பிக்கைகள் எல்லாவற்றையும் நாம் அவர்களிடம் திணித்துள்ளோம். அதைவிட்டு அவர்கள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்பதற்கான பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம். அறிவியல்பூர்வமான வாசிப்பு அவர்களை வெளிவரத் தூண்டுகிறது.
பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலை மாணவர்கள் விரும்பித் தேர்வு செய்கிறார்கள். கடவுள் நம்பிக்கையும் சமய வழிபாடுகளும் குழந்தைகளிடம் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகள் அறிவியல்பூர்வமாக பகத்சிங் எழுதியதை தேடுகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் இந்த நூல்களை எல்லாம் விரும்பி வாங்கியது மட்டுமல்ல, கூடி வாசிக்கவும் செய்தார்கள்.
வாசித்ததை சக தோழர்களுடன் பகிர்கிறார்கள். சமயம் திணிக்கப்படுகிறது, மாணவர்கள் அதிலிருந்து மீண்டுவர விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ‘ஓர் எதார்த்தவாதி பழைய நம்பிக்கைகளை முழுமையாக எதிர்த்து நிற்க வேண்டும். இல்லையேல் அவனது வீழ்ச்சி தவிர்க்க முடியாது. பழையவற்றை நொறுக்கித் தகர்த்துவிட்டு அந்த இடத்தில் ஒரு புதிய தத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்’ என்ற பகத்சிங்கின் சொற்கள் குழந்தைகள் மனதை தொடாமல் போகாது.

வடிவமைப்பு கட்டுடைத்தல்:-
குழந்தைகளுக்கான நூல்களை வடிவமைப்பதில் புதுமைகளை குழந்தைகள் விரும்புகிறார்கள். மரபுரீதியான நூல்களையும், வடிவமைப்புகளையும் கடந்து புதுமையான படங்களை, அட்டை வடிவமைப்புகளை, நூலின் அளவுகளை விரும்புகிறார்கள். கட்டமைப்புக்குள் இல்லாமல், சுதந்திர சிந்தனைக்குள் விரிகிறார்கள். எழுத்தாளர் உதய சங்கர் எழுதிய ‘மாயக்கண்ணாடி’ நூல் மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 300 நூல்களை விற்பனை செய்தோம்.
ஒரு நூல் அதிகளவு குழந்தைகளால் கொண்டாடப்படுவதற்கு அதன் வடிவமைப்பும் மிக முக்கியக் காரணம். புத்தகங்கள் வாசிப்பு என்பதை வேப்பங்காய் சுவை அனுபவம்போல் குழந்தைகளிடம் கூறி வளர்க்கிறோம். அவர்கள் இரசித்து வாங்கத் தூண்டும் விதமாக வடிவமைப்பு இருந்தால் கட்டாயம் வாங்குவார்கள். ‘வானம் பதிப்பகம்’ இதை மிக அருமையாகச் செய்கிறார்கள். எதைக் கொடுத்தாலும் மாணவர்கள் வாங்குவார்கள் என்பதல்ல, எப்படிக் கொடுக்கிறோம் என்பது முக்கியம். புதிய சமுதாயம் மாணவர்கள் என்பதால் புதுமையான வடிவமைப்பு முறைகளும் தேவை.
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கயிறு நூல் மலிவு விலைப் பிரதிகள் என்றாலும், குழந்தைகளிடம் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். ஆறாம் வகுப்பு மாணவி ஜாப்ஃரின் (கூட்டப்புளி, திருநெல்வேலி மாவட்டம்) இந்நூலைத் திறனாய்வு செய்தது அருமையாக இருந்தது. பல ஆண்டுகளாக வேத நூல்களும், ஆசிரியர்களும் போதிக்க முடியாத சமத்துவச் சிந்தனையை ‘கயிறு’ சாதித்துள்ளது.
சாதி, மதம் பார்க்கக் கூடாது என்பதை கற்றுக்கொடுக்க சமூகத்திற்கு தகுதி இல்லை என்றாலும் ‘கயிறு’ புத்தகம் அதை சிறப்பாக செய்கிறது. மாணவர்கள் வாசிப்பின் மூலம் சமூகத்தை பகுப்பாய்வு செய்வதற்குப் புரிந்துகொண்டார்கள். குழந்தைகள் அனைத்தையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்பது திண்ணம்.
கதைகள், நாவல்கள், கட்டுரைகள்:-
குழந்தைகளுக்கு கதைகள் பிடிக்கும் என்பது உலகம் கண்ட உண்மை. கதைகளை தேடித் தேடி வாங்கினார்கள். குழந்தைகளையும் கதைகளையும் பிரிக்கவே முடியாது. கடவுள்களைவிட கதைகளுக்கு சக்தி அதிகம். ஏன் கடவுளையே காப்பாற்றி தக்கவைப்பது கதைகள்தான். கதைகள் மீது பேராவல் கொண்டவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். புராணக்கதைகள், மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கதைகள், பொழுதுபோக்கு கதைகளைத் தவிர்த்து, அறிவியல், வரலாறு, அறநெறி, சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் போற்றும் கதைகளை அறிமுகம் செய்வதே எமது இலக்காகக் கொண்டோம். அதில் வெற்றியும் கண்டோம்.
விழியன் எழுதிய ‘கிச்சா பச்சா’ என்ற நாவல் குழந்தைகள் விரும்பிய புத்தகங்களில் சிறப்பிடம் பெற்றது. காக்கா ஏன் கருப்பாக உள்ளது என்பதையும், அதன் தேடல் எப்படி இருந்தது என்பதையும், பல குழந்தைகள் விரும்பி வாசித்து, அப்படியே முன்வந்து பேசியது அருமை. இந்தக் கதையை எளிதில் புரிந்து கொள்கிறார்கள், அப்படியே முன்வந்து சொல்கிறார்கள். எல்லா பள்ளிகளிலும் மாணவர்களின் பெரும் வரவேற்பு பெற்ற கதைகளில் இது சிறப்பிடம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒரு மணிநேரத்தில் இதை வாசித்தார்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஆலந்தலையில் ஸ்னோபி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ‘கிச்சா பச்சா’ கதையை வாசித்து முழுவதும் மனப்பாடமாகப் பேசியது அனைவரையும் வியக்க வைத்தது.
‘1650 முன்னொரு காலத்தில்’ என்ற விழியனின் மற்றொரு நூலும் அதிக வரவேற்பு பெற்ற நூல். உத்தம் சிங், பகத் சிங் போன்ற மாபெரும் ஆளுமைகளை கதைகள் மூலம் அறிமுகப்படுத்திய பாங்கு அருமை. ஜாலியன் வாலாபாக் படுகொலையை இவ்வளவு எளிதாக குழந்தைகளுக்குப் புரியும்படி எழுத முடியுமா? என்று வியக்கும் அளவுக்கு இந்நூல் அமைந்துள்ளது. இதை வாசித்த ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை குழந்தைகள் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்கள்.
குழந்தைகள் வரலாற்று நாவலையும் விரும்புகிறார்கள். சாலை செல்வம் எழுதிய அம்மாவின் சூப் என்ற நூலை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்தார்கள். அம்மாவைத் தேடி, என் அம்மா எங்கே?, நீங்கள் என் அம்மாவா?, இனி பால் வேண்டாம் அம்மா, அம்மா எங்கே? என்று ‘அம்மா’ தலைப்பில் உள்ள நூல்களையும் குழந்தைகள் விரும்பினார்கள். அம்மா குழந்தைகளுக்கு கதை சொல்வதுபோல் குழந்தைகள் உணர்கிறார்களோ என்று தோன்றுகிறது.
உதயசங்கர், விழியன், விஷ்ணுபுரம் சரவணன், யூமா வாசுகி, ஆயிஷா. நடராசன், க. சரவணன், கொ.மா.கோ. இளங்கோ, எஸ். பாலபாரதி, கதைசொல்லி சரிதாஜோ இன்னும் பல எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்கள். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்று குழந்தைகள் வாசிப்பு விரிவடைவது பெரும் அறிவு புரட்சிக்கு வித்திடும். “புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்” என்ற அறிஞரின் கருந்து நினைவாகும் என்பதற்கு இந்த வாசிப்பு இயக்கச் செயல்பாடுகள் நல்ல உதாரணம் ஆகும்.

நாம் செய்ய வேண்டியது:-
குழந்தைகளிடமிருந்து வாசிப்பை அந்நியப்படுத்தியது சமூகத்தின் கல்விமுறையின் மாபெரும் வரலாற்றுப் பிழை. அதை சரிசெய்ய பள்ளிகள் தோறும் வாசிப்பு இயக்கம் ஏற்படுத்த வேண்டும். வாசிப்புத் திருவிழா நடத்தப்பட வேண்டும். இது மாணவர்களை மாண்புடையவர்களாக, அறிவுச் சமூகமாய் மாற்றும். பெரியதாழை சிறுமலர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெரோஸி கூறியது: “என் வகுப்புக் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நூல்களை பரிசாகக் கொடுத்தேன். அதை வாசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வரும்போது அனைத்து மாணவர்களும் அமைதியாக இருந்தார்கள். ஏன் இந்த அமைதி என்றால் அனைவரும் வாசிப்பில் மூழ்கிவிட்டார்கள்” என்று கூறினார்.
வாசிப்புத் திருவிழாவின் போது ஒட்டுமொத்தப் பள்ளியே அமைதியாக இருந்தது என்பது ஆசிரியர்கள் அனுபவம். வாசிப்புத் திருவிழாவில் மிக முக்கியமானது புத்தகங்கள், மாணவர்கள், ஆசரியர்கள், பெற்றோர், சமூக செயல்பாட்டாளர்கள் என்று ஐந்து முனைகளும் இணைந்து செயல்பட்டன. பெரியதாழை பள்ளியில் வாசிப்புத் திருவிழா நடைபெற்ற போது குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள். தங்கள் வீடுகளில் இல்லம் தோறும் நூலகம் எப்படி அமைப்பது என்பதை ஆர்வத்தோடு கேட்டுச் சென்றார்கள். பெற்றோர்களும் வாசிக்கத் தொடங்கினார்கள் என்பதே வாசிப்புத் திருவிழாவின் சிறப்பு எனலாம். வாசிப்பு மாணவர்களை பண்படுத்தும், எனவே வாசிப்பை பண்பாடாக்குவோம்.
புத்தகங்கள் குறைந்த விலையில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.
மாதம் ஒருநாள் மாணவர், ஆசிரியர், பெற்றோர் வாசிப்பு கூடுகை ஏற்படுத்தப்பட வேண்டும்.
குழந்தைகள் வாசிப்பை அறிமுகப்படுத்தவும், வாசிப்புச் சூழலை ஏற்படுத்துவதுமே நமது முதன்மையான பணி என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்
கிராமங்களில் நூலகங்கள் அதிகம் இல்லை, இருந்தாலும் பராமரிக்கப்படுவதில்லை. எனவே வகுப்பறையில் வாரம், மாதம் ஒருநாள் குழந்தைகள் புத்தகங்களைப் பார்க்கும் படி காட்சிப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகள் மட்டும் அல்லாமல் வாசிப்புப் பண்பாடு அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தன்னார்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாசிப்புத் திருவிழா நடத்தப்பட வேண்டும்.
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே. – லெனின்
