47-வது சென்னை புத்தகக் காட்சி 2024 ஜனவரியில் நடத்தப்பட இருக்கிறது. இம்முறை சர்வதேச புத்தகக் காட்சி என்பது 40 நாடுகளை உள்ளடக்கி, ஜனவரி 16 முதல் 18 வரை நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே நம் இன்றைய தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு புத்தக வாசிப்பை தமிழ் சமூகத்தில் மேம்படுத்திட பல்வேறு சிறப்புத் திட்டங்களோடு களமிறங்கி செயல்படுத்துவதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு நூலக மேம்பாடு, கலைஞர் நூற்றாண்டு நூலக பிரமாண்டம், மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள், பள்ளி, கல்லூரிகளில் வாசிப்பு இயக்கம் என இந்த அரசு ஒரு புத்தக வாசிப்பு ஆதரவு அரசாகவே உள்ளது.
அதிலும் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் கடினமான சோதனையான ஆண்டுகளில்கூட விடாமல் பபாசி சென்னை புத்தகத் திருவிழாவை கடுமையான போராட்டங்களோடு நடத்திய காலகட்டத்தை நாம் மறந்துவிடக்கூடாது. 2024-ம் ஆண்டுக்கான திட்டமிடல் முக்கியம். சென்ற ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலேயே நடத்தப்பட்டது. 24 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல பதிப்பாளர்கள் குறிப்பாக, தமிழ்ப் பதிப்பாளர்கள் ஒய்.எம்.சி.ஏ. பொது புத்தகக் காட்சியில் இருந்து சர்வதேச புத்தகக் காட்சி அரங்குகளுக்கு வந்து சென்றதையும் ஒரு பார்வையாளராகவாவது கலந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.
இந்த முறை உலக அளவில் 40 நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள மலேசியநாடு சிறப்பு விருந்தினர் அந்தஸ்து பெற அந்த நிகழ்வு ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறாமல் நிர்வாக வசதிகளுக்காக, நந்தம்பாக்கம் சென்னை உலக வர்த்தக மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் – உலக அளவில் பல்வேறு மொழிகள் சார்ந்த நாம் அறியாத பல எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்யவும் என உயர்ந்த நோக்கத்தோடு சர்வதேச புத்தகக் காட்சி நடக்கிறது. அரசு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தை கைவிடாமல் பல்வேறு தமிழ்ப் பதிப்பாளர்களை அந்த அரங்கிற்கு அழைத்துச் செல்ல சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சென்ற வருடம் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சான்றானது ஒரு சாதனை என்றால் இந்த கலைஞர் நூற்றாண்டு சூழலில் மொழிபெயர்ப்பு மானியமாக ரூபாய் 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் இன்னொரு சாதனை. தமிழ்ப் பதிப்பாளர்களை கைவிடாமல் தகுதி படைத்த யாவருக்கும் பலன் சென்று சேர்ந்திட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. வரும் சென்னை புத்தகக் காட்சியில் மூன்றாம் பாலினத்திற்கு ஒரு தனி அரங்கு ஒதுக்கப்படும் என்ற அருமையான அறிவிப்பு ஏற்கெனவே வந்துள்ளது. நம் தமிழ் சிறு பத்திரிகைகள் காலாண்டிதழ்கள் சார்ந்தும் ஒரு சிறப்பு அரங்கு இருக்கலாமே என்பது பலரது எதிர்பார்ப்பு.
தமிழில் இன்று பெண்கள் பலர் எழுத்துலகில் ஆளுமை அந்தஸ்து பெரும் அளவிற்கு எழுதி சிறப்பாக தங்களை நிலைநிறுத்திடவும் செய்துள்ளனர். தற்காலப் பெண் எழுத்துக்கு அங்கீகாரம் தரும் வகையில் பெண் எழுத்து குறித்த சிறப்பு அமர்வுகளை இணைக்க வேண்டும்.
இளைய தலைமுறை – குறிப்பாக கல்லூரி மற்றும் தமிழக மென்பொருள் பணி சூழலிய இணைய எழுத்துலகம் பல லட்சம் வாசகர் கொண்டதாக பெருகி வருவதை தமிழ் சூழலில் புதிய வகை அலையாகப் பார்க்கலாம். அதனை மேலும் செழிப்பாக்கிட இணைய இலக்கிய அரங்கு இணைக்கலாம். இணையத் தமிழ் என்பது உலகளாவிய விழுமியங்களை உள்ளடக்கியது. சென்னை புத்தகக் காட்சி இணைய எழுத்துலக ஜாம்பவான்களை, இதழ்களை அங்கீகரிக்கும் அமர்வுகள் அரங்கங்களை இணைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கண்டிப்பாக புத்தகக் காட்சிக்கு விஜயம் செய்ய கல்வி நிலையங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கால அட்டவணையை பின்பற்ற ஒரு துறைகள் சார்ந்த குழுக்களை அமைக்கலாம். அரசின் கல்வித் தொலைக்காட்சி உட்பட சில தொலைக்காட்சி சேனல்களில் புத்தகத் திருவிழாவின் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அரசு ஏற்பாடு செய்வது அவசியம்.
ஒரு முறை சென்னைக்கு வந்த பிரதமர் நேரு அந்த மாதம் வெளிவந்த புத்தம் புதிய நூல் ஒன்றை எடுத்து வருமாறு சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு உதவியாளர்களை அனுப்பினாராம். அவர்கள் எத்தனை தேடியும் அந்த நூல் கிடைக்கவில்லை. பிறகு யாராவது வாசகர்கள் எடுத்துப்போயிருக்கிறார்களா என்று கோப்பில் தேடினால் நூலை எடுத்துச் சென்றவர் சி.என்.அண்ணாதுரை என்று இருந்ததாம்.
இப்படியான அற்புத மாமனிகளான பேரறிஞர் அண்ணா உட்பட தமிழகத்தில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர் நூல்களுக்கு ஒரு காட்சி அரங்கமும் இன்றைய காலத்தின் தேவை. சென்னை புத்தகக் காட்சி என்பது நம் தமிழ் அறிவுலகின் இதயத் துடிப்பு. அதை உயிரோட்டமான எழுச்சி சாதனையாக்குவது நம் அனைவரின் கடமை.