நிகழ் அய்க்கண்
இந்நூலின் மலையாள மூல ஆசிரியரான பாபு – கே – பண்மனா தனது முன்னுரையில் கூறும்போது புத்தெழுச்சி வரலாற்றில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த அய்யன்காளியையும், அவரின் போராட்டங்களையும் தற்போதுள்ள சமூக – அரசியல் பின்புலத்தில் அறிந்துகொள்வதற்கான முயற்சியே இந்நூல் என்கிறார். இந்நூலினை தமிழில் மொழிபெயர்த்த முனைவர் ரமணி கூறும்போது, மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அடிமைமுறை இருந்தது எனக்கூறுவோருக்கு, வரலாற்றின் வாயிலான மறுப்பு மட்டுமல்லாது வர்க்க அணிதிரட்டலின், சாதி அணிதிரட்டலின் பங்கு குறித்தும் இந்நூல் பாடம் புகட்டுகிறது என்கிறார். அய்யன்காளி குறித்து இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தினைக்கீழே காணலாம்.
1838–ல் அய்யா வைகுண்டசாமி நிறுவிய ‘சமத்துவ சமாஜமே’ கேரளாவின் முதல் சமூகr; சீர்திருத்த இயக்கமாகும். கேரளாவின் புத்தெழுச்சி இயக்கத்தின் மும்மூர்த்திகளாக சட்டம்பி சாமிகள்; திரு நாராயணகுரு; அய்யன்காளி இருந்திருக்கின்றனர். கேரளாவில், தாழ்த்தப்பட்டோர்களை ஊக்கப்படுத்தியது 1822-ல் நடந்த சன்னார்(நாடார்) கலவரமாகும். அதன்பின்னர் திரு நாராயணகுரு இம்மக்களை மனிதர்களாக ஏற்றுக்கொண்டு 1888-ல் அருவிபுறத்தில் சிலை நிறுவுதல் வழியாக மேல்சாதி ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை வலுப்பெறச்செய்தார்.
அய்யன்காளி நடத்திய புலையர் கலவரம் போன்ற போராட்டங்களானது தாழ்த்தப்பட்டோர்களுக்கு ஆற்றலாகவும், விழிப்புணர்வுமிக்கதாகவும் மாறின. அய்யன்காளி (1863-1941) அனைத்துவகையிலும் ‘கேரளாவின் ஸ்பார்ட்டகஸ்‘ என அழைத்திடத் தகுதியுடையவர். ‘ஓரடிக்கு திருப்பி ஈரடி’ என்பதே இவரின் முழக்கம். இவரது வாழ்க்கை சாதி- பண்ணையார்; நாட்டாமை; அரசாட்சி இவைகளின் கொடுமைகளுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டங்களை நடத்திய உழைப்பாளி; வர்க்கத்தின் போராட்ட நாயகர். திருவிதாங்கூர் சட்டப்பேரவைக்கு நியமிக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்டவரும் இவரே.
இந்தியாவில், அதிலும் குறிப்பாக கேரளாவில் வடிவெடுத்த புத்தெழுச்சி இயக்கங்கள் விடுதலைக்கான, மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் மட்டுமல்ல, அவை சாதி அமைப்புக்கு எதிராகவும் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் மனித மதிப்பீடுகளுக்காகவும் நடைபெற்ற போராட்டங்கள் ஆகும். தாழ்த்தப்பட்டோர்களின் புத்தெழுச்சி இயக்கங்கள் வலுவாகச் செயல்படத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்தபின்னரே, மேல்சாதி புத்தெழுச்சி இயக்கங்கள் தங்களது மிகக்குறுகிய நோக்கங்களுக்காக செயல்படத் தொடங்குகின்றன. மேல்சாதி புத்தெழுச்சி, நீண்டகாலமாக கருத்துப் பிரச்சாரம் செய்து, மெதுவாக செயல்வடிவுக்கு வந்தது. ஆனால், தாழ்த்தப்பட்டோரின் புத்தெழுச்சியானது செயல்பாடுகளின் வாயிலாக கருத்தியலுக்குள் புகுந்தது.
வெறுமனே ஒரு தாழ்த்தப்பட்டோரின் தலைவர் அல்லர் அய்யன்காளி. தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட மேல்சாதி- கீழ்சாதி இந்துமத சிறுபான்மை விவசாயத் தொழிலாளர்களின் தொடக்ககாலத் தலைவர் அவர். அய்யன்காளி இயக்கத்தின் சாதி எதிர்ப்பு நிலைபாடுகளும் ஜனநாயக சாரம்சமும் மேல்சாதி புத்தெழுச்சி இயக்கத்தில் அதிர்வலைகளை உருவாக்கி அவர்களை சீர்திருத்தப்பாதையில் முன்னேறக் கட்டாயப்படுத்தியது.
திருவிதாங்கூரில் பழைமைவாத சமூக அமைப்பும் ஆட்சிமுறையும் பல்லாண்டுகள் எவ்வகை மாற்றமுமின்றி தொடர்ந்தன. சாதியும் மதமும் மேல்சாதி அதிகாரத்தின் அடையாளங்களாக இருந்த பண்ணையடிமைக்காலத்தில், அடிமைமுறை என்பது அதிகாரமைப்பின் ஆணிவேராக இருந்தது. நாயர்கள் மேற்பார்வையில் புலையரை வைத்து விவசாயம் செய்துவந்தனர். அசையும் அசையா சொத்துக்களைப்போல் இவர்களை விற்கவும் வாங்கவும் செய்தனர். பண்ணையார்களின் செல்வத்தை கணக்கிடும் அளவுகோள்களில் ஒன்று, அவர்கள் வைத்திருந்த அடிமைகளின் எண்ணிக்கையாகும்.
புலையர்கள் நாட்டு நடப்புப்படி, பிறப்பாலையே அடிமைகளாகக் கருதப்பட்டனர் 1724ஆம் ஆண்டு கொச்சியில் தயாரித்த ‘ஆள் அடகு’ முறையும், 1788 –ல் திருவிதாங்கூரின் மையப்பகுதியில் நடைமுறைக்குவந்த ஆள் அடகு ஓலை உத்தரவும் அடிமைவர்த்தகத்திற்கு சான்றாக அமைந்துள்ளன. 1838–ல் இங்கிலாந்தில் அடிமைமுறை தடை செய்யப்பட்டபோதிலும், கொச்சி, மலபார், திருவிதாங்கூர் போன்ற பகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து தடை செய்தபோதிலும், அடிமைமுறையானது எவ்வித மாற்றமுமின்றி தொடரவே செய்தன. சாதியின் பெயரால் திணிக்கப்பட்ட அடிமைத்தனமானது, சமுதாய வாழ்வின் அனைத்துமட்டத்திலும் பரவியது. இது உடையில், மொழியில், அனுபவங்களில், அலங்காரங்களில் வெளிப்பட்டது.
1863 ஆகஸ்ட் 28 –ந் தேதி, தென் திருவிதாங்கூரில் நெய்யாற்றின்கரைப் பகுதியில் வெங்ஙானூரில் பெருங்ஙாற்றுவிளை பிளாவறா எனும் ஊரில் பரமேஸ்வரன் பிள்ளா என்னும் நாயர் எஜமானரின் அடிமைகளான அய்யன் – மாலா இணையரின் பத்து குழந்தைகளில் ஒருவராக அய்யன்காளி பிறந்தார். தனது சிறுவயதில் எஜமானரின் நிலத்தில் இவரது குடும்பத்தினர் பாடுபட்டனர். உழைப்புதவிர, பல்வேறு உடற்பயிற்சி மற்றும் கிராமியக்கலைகளிலும் மூழ்கினார். இச்சமயத்தில், நிலவிய தீண்டாமை- தொடுதல்; பண்ணையார் – அடியாள்; உடைமை – அடிமை; மேல்சாதியினர் -கீழ்சாதியினர் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கண்டறிந்து மனம் வெதும்பினார்.
ஒருபக்கம் தம்மைச் சுற்றியுள்ள மக்கள்படும் கொடுமைகளையும், அனுபவிக்கும் வாதைகளையும் மறுபக்கம் சாதிப்பேயாட்டம், முடப்பழக்கவழக்கங்களை நேரில் கண்டதும், இதனை மனஉறுதியுடன் எதிர்த்துப் போராட முடிவுசெய்து அதற்கேற்ப களமாடினார். அப்பகுதியில், துன்பமும் அச்சமும் அடிமைவாழ்வின் அடையாளங்களாக இருந்து வந்தன. பணிந்து, கீழ்படிந்து அடிமை உணர்வில் மூழ்கிப்போயிருந்த அடிமைகளை சமூக வாழ்வில் பிறரைப்போல் ஆக்குவதென்பது அய்யன்காளிக்கு மிகச்சிரமமாக இருந்தது.
கீழ்சாதியினர் பொதுப்பாதைகளில் நடப்பதற்கு உயர்குலத்தினர் என்கிற நம்பூதிரிகள் மற்றும் நாயர்களுக்கே அனுமதியுண்டு. பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தீண்டப்படாத சாதிகளுக்கு அனுமதியில்லை. 1865-ல் திருவிதாங்கூரில் பொதுப்பாதைகளில் தீண்டப்படாதோர் நடப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டும் மேல்சாதியினர் அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே, அய்யா வைகுண்டசாமின் சீடரான தைக்காடு அய்யாகுருவின் சமுதாயக்கண்ணோட்டத்தின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டிருந்த அய்யன்காளி, பொதுப்பாதையில் வில்லுவண்டி சவாரி செய்யவும், தலைப்பாகை கட்டவும், மீசை வைக்கவும், பள்ளிக்கூடம் நிறுவிடவும், ஊழியப்பணியை எதிர்க்கவும், ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கவும் தன்னை தயார்படுத்திக்கொண்டார். கீழ்சாதியினர் ஒன்றுபட பயணிக்கும் உரிமையே முதலில் தேவையானது என நினைத்து, 1893-ல், பொதுப்பாதையில் மகாராஜாவின் படத்தை தலையில் வைத்துக்கொண்டு வில்லுவண்டியில் சவாரி செய்தார்.
இந்து மதத்தின் உள்சீர்திருத்தங்களின் வாயிலாக தீண்டத்தகாத சாதியினர் சமூக விடுதலை அடைந்திட இயலாது என உணர்ந்த அய்யன்காளி 1907-ல் ‘எளியோ ர்பாதுகாப்பு நலச் சங்கத்தினை’ த்துவக்கினார். இச்சங்கத்தின் நோக்கமானது, பொதுச்சமூகத்திலிருந்து விரட்டப்பட்டோர், விலக்கப்பட்டோர் என அனைவரின் விடுதலையே இலக்காக இருந்தது. இதன் வழிகாட்டு அறிக்கையானது, சமுதாயத்தில் தூய்மை, கட்டுப்பாடு மற்றும் பயணிக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்தது. தீண்டத்தகாத சாதியினரின் உரிமைகளுக்காக போராடுவதற்கு கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்த தற்கொலைப்படைகள் இளைஞர்களைக்கொண்டு ‘அய்யன்காளிப்படை’ எனும் கலாச்சாரப்படை உருவானது.
அய்யன்காளியின் தலைமையில் அமைப்பாக அணிதிரட்டப்பட்ட அடிமைகள் தங்களது கோரிக்கைகளை பண்ணையார்களிடம் கூட்டுபேரத்தின் வழியாக வென்றெடுத்தனர்.
எளியோரின் பாதுகாவலாளியாக இருக்கவும், வாய்ப்புள்ள அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன், இச்சங்கத்தின் பாதுகாப்பிற்காக, ‘சாது ஜன பரிபாலினி’ எனும் மாத இதழ் துவங்கப்பட்டு இச்சாதியினரின் உயிர்த்தெலுதலுக்கு வினைஊக்கியாக பயன்பட்டது. அய்யன்காளி இயக்கம் நடத்திய முக்கியமான இரண்டு கிளர்ச்சிகளான அதாவது, பள்ளிக்கூட நுழைவுப்போராட்டமும் மற்றும் பெரிநாடு கலவரமும் (1915) சமூகத்தில் பரவலாகுவதற்கு இப்பத்திரிகையானது பெரிதும் ஊக்கமளித்தது.
1894–ல் திருவிதாங்கூரில் கல்வி விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. பிறசாதிக் குழந்தைகளுக்கு பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது. ஆனால், தீண்டத்தகாத சாதியினக் குழந்தைகள் கல்வி பயில அய்யன்காளி கடுமையாகப் போராடியும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. அணிதிரண்டு வலுப்பெறுங்கள் !! கல்வியால் உணர்வு பெறுங்கள்!! எனும் திரு நாராயணகுருவின் வார்த்தைகளுக்கிணங்க, 1905-ல் வெங்ஙானூர் புதுவல்விளாகம் எனும் ஊரில், தானே ஒரு குடிசைப்பள்ளிக்கூடம் கட்டினார். ஆனால் குடிசையானது அன்றிரவே நாயர் தலைவர்களால் தீ வைக்கப்பட்டது. பின்னர், எதிர்ப்புகளையும் மீறி ஆதரவாளர்களின் உதவியுடன் அதே இடத்தில் 15 மாணவர்களுடன் பள்ளிக்கூடமும், வாசகசாலையும் தொடங்கப்பட்டன.
அனைத்து சாதிக்குழந்தைகளும் கல்வி கற்றிடும் பள்ளிகளிலேயே, தீண்டத்தகாதோரின் குழந்தைகளும் கல்வி கற்றிட வேண்டுமென்பதுதான் அய்யன்காளியின் விருப்பம். ஆனால், தீண்டத்தகாத குழந்தைகளை மேல்சாதி இந்துக்குழந்தைகளுடன் கல்வி பயிற்றுவிக்க முடியாது என மேல்சாதியினர் மறுத்தனர். எங்களது குழந்தைகளுக்கு கல்வி கற்க மறுத்தால், இந்த வயல்களில் எல்லாம் புல் புதர்களால் மண்டிவிடும் எனச் சவால்விட்டது மட்டுமல்லாது, ஓராண்டுவரை விவசாயத் தொழிலைப் புறக்கணித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யன்காளியின் அமைப்பானது, இறுதியில் வெற்றியும் பெற்றது.
விவசாயத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டமானது தீண்டப்படாத சாதியினருடான திருவிதாங்கூர் ஆட்சியாளர்களின் அணுகுமுறையில் மாறுதலைக் கொண்டுவந்தது. இதன் விளைவாக, அய்யன்காளியை திரு மூலம் மக்களவைக்கு நியமனம் செய்தனர். 1912 முதல் 1933 வரை அய்யன்காளி மக்களவை உறுப்பினராகச் செயல்பட்டார். அக்காலத்தில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தீண்டப்படாத மக்களுக்கு நிலம் வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடம் விளக்கி, உரிமைகளைப் பெற்றுத்தந்தார்.
1912 -1921 இடைப்பட்ட காலத்தில் அய்யன்காளியின் வழியான தீண்டப்படாத சாதியினரின் விடுதலைப் பேராட்டங்கள் முற்றிலும் அடிப்படை மனித உரிமைகளுக்கான போராட்டமாக இருந்தன. பொது இடங்களை பயன்படுத்துதல், விளைநிலத்திற்கான உரிமையை உறுதிசெய்தல், கல்வி கற்பதற்கான உரிமை, பயணிப்பதற்கான உரிமை, வேலைக்குக் கூலி, பெண்கள் மேலாடை அணியும் உரிமை, சந்தையில் நுழையும் உரிமை, அடிமை உணர்விலிருந்து விடுதலை என்பதாக இருந்தது.
அய்யன்காளியின் இதுபோன்ற போராட்டங்களை வரலாற்றில் புலையர் கலவரம் என்றே பதிவிட்டுள்ளனர். உண்மையில், கீழ்சாதியினருக்கு மனிதஉரிமைகளை மறுத்த மேல்சாதியினரே கலவரக்காரர்கள். தீண்டாமையும் அடிமைத்தனமும் கூடிக்குலாவிய சமுதாய சீரழிவுகளுக்கெதிராகப் போரிட்ட அய்யன்காளியின் எளியோர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் இக்காலகட்டத்தில் பல்வேறு கொடுமைகளுக்குள்ளாகினர்.
கேரள மறுமலர்ச்சி இயக்கமானது, சாதி இயக்கங்களை மையப்படுத்தி அமைந்திருந்தது. சாதி இயக்கங்களிலிருந்து கிளைச்சாதி இயக்கங்கள் உருவாகின. கிளை சாதிகளால் பிளவுபட்டுக்கிடந்த ஈழவ, நாயர் சமூகம் மறுமலர்ச்சிக்காலத்திலேயே கிளைச்சாதிகளைக்கடந்த ஒற்றுமையை உருவாக்கினர். ஆனால் கிளைச்சாதிகளால் பிளவுண்ட தலித் சமூகங்களில் கிளைச்சதிகளைக்கடந்த ஒற்றுமை உருவாகவில்லை.
1930களில், சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் ஆற்றிய பணிகளை, இந்திய விடுதலை இயக்கமும், தொழிற்சங்கமும் தொடர்ந்து மேற்கொள்ளத் தொடங்கின. இத்தகைய நிலைமையில், அய்யன்காளியின் எளியோர் பாதுகாப்பு நலச்சங்கமுங்கூட மெல்ல மெல்ல வலுவிழந்து. விவசாயத் தொழிலாளர் இயக்கத்துடன் இரண்டறக் கலந்திடத் தொடங்கியது. அய்யன்காளியின் எளியோர் பாதுகாப்பு நலச்சங்கம் உள்ளிட்ட கீழ்சாதி மறுமலர்ச்சி இயக்கங்கள் சமூகத்தளத்தில் வடிவமைத்த பண்பாட்டுச்சூழலானது, விவசாயத் தொழிலாளர் இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேரளச் சமூகத்தில் வேரூன்ற உதவியது.