பிரேமா இரவிச்சந்திரன்
ரஷ்யப் புரட்சிக்கு முன்பு அங்கு ஆண்டு வந்த ஜார் மன்னரது ஆட்சியில் எளிய மக்களது வாழ்க்கை மீதான எழுத்துகள் நவீன இலக்கியங்களாகப் பிறந்தன. இதற்கு முதல் முக்கியக் காரணமான அலெக்சாண்டர் புஷ்கின், தனக்கென தனித்துவமான எழுத்துநடையைக் கொண்டு நவீன இலக்கியங்களைப் படைத்து பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தவர்.
அவர்களுள் முக்கியமானவர்களான லியோ டால்ஸ்டாய்,தஸ்தாவஸ்கி மற்றும் மாக்சிம் கார்க்கி ஆகியோர் நூறாண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிறுகதைகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள். இம்மாமேதைகளைத் தொடர்ந்து பல ரஷ்ய எழுத்தாளர்கள் உருவானதில் முக்கியமானவர், ஆன்டன் செகாவ் எனும் இளம் மருத்துவர், 30 ஆண்டுகள் வயதில் இடைவெளியைக் கொண்டு அவர்களோடு பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்.
சிறிய துணுக்குகளாக சம்பவங்களை எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து தனது வருமானத்திற்காக பல கதைகளை எழுதி வந்தார். 600க்கும் மேற்பட்ட இவரது படைப்புகளில் சிறந்தவையாக 400க்கும் மேற்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டு இன்றளவும் வாசிப்பில் இருந்து வருகின்றன. இவை யாவும் மனித மனங்களின் ரணங்களையும் எளிய மக்களின் வாழ்வையும் ஏராளமாகப் பதிய வைத்திருக்கின்றன.

அன்றைய அரசியலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசும்படி இவரது கதைகள் இல்லாவிட்டாலும், மக்களது வாழ்க்கையோடு பிணைந்திருப்பதால் அவை வெளிப்படும்படி அமைந்திருக்கின்றன. செகாவ்வின் கதைகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வரை பேசப்படலாம் என்பதாகத்தான் அவரது நம்பிக்கை இருந்தது என்றாலும், இன்றளவும் வாசிக்கும் வண்ணம் இருப்பதும், அதன் தேவையும், பெரியதாக மனதளவில் மாறிவிடாத சமுதாயத்தையே காட்டுகிறது.
வேறு மண்ணில் எழுதப்பட்ட இவரது கதைகள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாட்டு மக்களால் வாசிக்கப்பட்டு வெகுவான எண்ணிக்கையில் இலக்கியவாதிகளை உருவாக்கி இருக்கின்றன.
ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு புரட்சி வெடித்த போது அதனை இந்திய உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் மொழி தமிழாகும். தேசியக் கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பத்திரிகை உலகில் இயங்கி வந்த பொழுது, ரஷ்யாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தி வந்தார். இதன் வாயிலாகவே ரஷ்ய இலக்கியங்களும் தமிழ் உலகிற்கு அறிமுகமாயின.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அந்நூல்கள் அன்றைய தமிழக சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எளிதில் கிடைக்கப்பெற்று அதன் வாயிலாக தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியவாதிகள் உருவாகினர். பாரதியாரின் கவிதைகள் பேசப்பட்ட அளவிற்கு அவரது கதைகள் பேசப்படவில்லை என்றாலும் அவரைத் தொடர்ந்து சிறுகதைகளைப் படைத்த புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி,தி.க.சிவசங்கரன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் ரஷ்ய இலக்கியங்களின் தாக்கத்தால் உருவானவர்கள்.
களங்கள் மாறினாலும் மனித மனங்களும் இயல்புகளும் எதிர்கொள்ளும் துன்பங்களும் துயரங்களும் எல்லா இடத்திற்கும் ஏற்றவையாக இருப்பதால், ரஷ்ய இலக்கியத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான ஆன்டன் செகாவ்வின் கதைகள் இன்றைய எழுத்தாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள், தமிழ் மொழிக்கு அடிப்படையாக அமைந்து, அவரது குறைந்த எண்ணிக்கையிலான கதைகள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இவ்வகையில் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கும் நூல் மொழிபெயர்ப்பாளர் சூ. ம. ஜெயசீலன் அவர்கள் தொகுத்து தமிழாக்கம் செய்த ‘ஆன்டன் செகாவ் சிறுகதைகள்’ எனும் இந்த நூல் ஆகும்.
இந்திய நாட்டில் மொழியை அடிப்படையாகக் கொண்டு எல்லை வகுத்திருக்கும் மாநிலங்களுக்கு இடையே கதைகளை மொழிபெயர்த்து அண்டை மாநில மக்களிடம் கொண்டுசேர்ப்பதிலேயே சவால்கள் நிறைந்திருக்கின்றன எனும்பொழுது, வேறு கண்டத்தில் வாழும் மக்களது மாறுபட்ட கலாச்சாரங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் மத்தியில் அவர்களது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு உள்வாங்கி கதைகளை மொழிபெயர்த்து, கருத்துக்களை பிரதியெடுத்து தமிழ் மண்ணிற்கு அளிப்பதில் இருக்கும் சிக்கல்களையும், அறிந்திருக்கவேண்டிய விசாலமான மொழி அறிவையும் என்னவென்று நாம் குறிப்பிட வேண்டியதில்லை.
இதுவரை மொழிபெயர்க்கப்படாத கதைகளைத் தேர்ந்தெடுத்து, நூல் ஆசிரியர் தமிழக வாசகர்களுக்கு நூலாக்கம் செய்து கொடுத்திருப்பது போற்றத்தக்கது. மூல நூலிலிருந்து கருத்துகளில் வேறுபாடு இல்லாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மூலநூலில், எவ்வாறான தேர்ந்தெடுத்த சொற்களை கையாண்டிருக்கக்கூடும் என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூல் எளிமையான சொற்களைக்கொண்டு எளிய நடையில் அமைந்திருக்கின்றது.
பொதுவாக திரையுலகத்திலும் நாவல்கள் வடிவத்திலும் கதைகளில் இடம் பெற்றிருக்கும் நாயகன்கள் தனிப்பட்ட குண நலன்களில் மேம்பட்டவர்களாகவும் எதிராளியாக இடம்பெறுபவர்கள் கீழான குணங்களைக் கொண்டிருப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுவது இயல்பு. இதிலிருந்து மாறுபட்டிருக்கும் வங்கமொழி எழுத்தாளரான சரத் சந்திர சட்டோபாத்யாய அவர்களது ‘தேவதாஸ்’ எனும் நாவலில் இடம்பெற்றிருக்கும் நாயகன் மதுப்பழக்கமும் பல பெண்களோடு உறவும் கொண்டிருப்பவனாக இருந்தாலும், காதலுக்கு காவியம் எழுதும்படியாக அவனது வாழ்வு சித்தரிக்கப்பட்டு இறுதியில் இறக்கும்பொழுது நாவலை வாசிப்பவர்களது கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீராவது வடிவதை எவராலும் தடுக்க முடியாதபடி உருக்கமாக அமைந்திருக்கிறது.
பொதுவாக எழுத்துலகில் இவ்வாறான எதிர்மறை குணங்களைக்கொண்ட கதாபாத்திரங்களை வெறுக்கும்படியாகவே வாசகர்கள் உணர்வது வழக்கம். தேவதாஸ் நாவலில் இதற்கு முரணாக அமைந்திருப்பதுதான் அந்த நூலின் வெற்றியாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
ஆன்டன் செகாவ் எழுதிய ‘த கோரஸ் கேர்ள்’ எனும் சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் இசைக்குழுவில் பாடும் பெண்ணானவள், வேசியாக பலரோடு தொடர்புகொண்டு வாழ்கிறாள். தனது கணவனது அன்பானது, இப்பெண்ணோடு பகிரப்படுவதாக எண்ணிய ஒருவனது மனைவி, அவரது பணமும் பறிபோகிறது என்கிற எண்ணத்தில் வேசிப்பெண்ணிடம் கடுமையாக சண்டைபோட்டு கெஞ்சுகிறாள். அவ்வாறு பணம் ஏதும் பெறாத அவள், அப்பாவியாக, தான் வைத்திருக்கும் பணத்தை வந்தவள் மீது இரக்கம் கொண்டு கொடுத்து விடுகிறாள்.
தனது மனைவி மாற்றாளிடம் கெஞ்சும் நிலை தன்னால் வந்தது என்பதை எண்ணி வருந்திய கணவனும் இறுதியில் அப்பாவிப்பெண்ணிடம் கடுமையாகப் பேசியபடி தனது மனைவியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறான். தனது வாழ்வின் நிலை அப்படித்தான் அமைந்திருக்கிறது என்பவளாக ஏமாந்து மனமுடைந்து நிற்கும் வேசிப்பெண் மீது வாசிப்பவர்களுக்கும் கருணை உண்டாகிறது.
புகழ்பெற்ற இந்தக் கதையைப்போல இதுவரை மொழிபெயர்க்கப்படாத 20 கதைகளை சூ.ம. ஜெயசீலன் அவர்கள் மொழியாக்கம் செய்து கொடுத்திருப்பது மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.இந்த நூலில் உள்ள ‘முடி திருத்தும் தொழிலாளியின் கடையில்…’ எனும் முதல் கதையில், பொருளாதார வசதியற்ற ஒரு பெரியவருக்கு இனாமாக முடியைத் திருத்தம் செய்து விடும் இளைஞனது வழக்கமான ஒரு நாளில், பேச்சுவாக்கில் அவரது பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறார்.
இதுவரைதான் விரும்பி வந்த அவளை தனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டி தனது ஆசையை வெளிப்படுத்தியவனிடம், “நீ எப்படிப் பொருத்தமாக இருப்பாய்? எந்த வகையிலும் நீ பொருத்தமாக இருக்க மாட்டாய்! உன்னிடம் பணமும் இல்லை. கௌரவமான பொறுப்பும் இல்லை. நீ செய்வது ஓர் அற்பமான வேலை” என்கிற பதிலில் உடைந்து போனவனாக உறைந்து போகிறான். அதன்பிறகு முடி திருத்தம் செய்வதை பாதியோடு நிறுத்திவிடுவதைத்தவிர அவனது செயல்களாக வேறேதும் இருக்கவில்லை. இனி தனது பணியைத் தொடரவேண்டுமெனில் பணம் கொடுத்தால் மட்டுமே தன்னால் இயலும் என்பதை முன்வைக்கிறான்.
இதற்காகவெல்லாம் பணத்தை செலவழிப்பது வீண் என்கிற எண்ணத்தைக்கொண்ட பெரியவர், பாதியோடு நின்ற முடித்திருத்தமானது வளர்ந்த பிறகு சரியாகிவிடும் என்று எழுந்து வந்து விடுகிறார். இவ்வாறாக இயல்பாக முடிகிறது கதை. செகாவ்வின் கதைகளில் எப்பொழுதும் திருப்பங்கள் இருப்பதில்லை. இன்றளவில் கதைகளுக்கான இலக்கணங்கள் பல்வேறுபட்டவையாக வகுக்கப்பட்டிருந்தாலும் இவரது கதைகள் யாவற்றிற்கும் அடிப்படையாக நின்று நிலையான இலக்கணம் பேசுகின்றன.
கதைகளில் இடம் பெற்றிருப்பவைகளில் சிலவான, “ஒரு பெண்ணின் கையில் கொடுக்கப்படுகின்ற முத்தமானது மரியாதை நிமித்தமானது என்கிற ரஷ்யக் கலாச்சாரத்தையும், மணப்பெண்ணிற்கான ஆடைகளை வடிவமைத்து சேகரிப்பது வைப்பதென்பது கதை நிகழும் இடத்தில் வாழும் ஏழை மக்களின் வழக்கமாகவும், தனது பெயரோடு தந்தையின் பெயரை இணைத்து எழுதுகின்ற கட்டாயமான பழக்கத்தையும், பனி மிகுந்த பகுதியில் பயன்படுத்தப்படுகின்ற சக்கரம் இல்லாத வண்டிகளையும், பரவலாக அறிமுகமில்லாத ரஷ்யாவைச் சேர்ந்த உடைகள் பறவைகள் போன்றவற்றைக் குறிப்பிடும் சொற்களையும்” பக்கங்களின் கீழ்பகுதியில் விவரங்களோடு குறிப்பிட்டு வாசிப்பவர்களுக்கு எளிதாக விளங்கும்படி மொழிபெயர்த்திருப்பது மற்றுமொரு வெற்றியாகக் கருதலாம்.

ஆன்டன் செகாவ்வின் கதைகளை புதியதாக வாசிப்பவர்களுக்கு இந்த நூல் அவரது கதைகளின் போக்கு அமைந்திருக்கும் விதத்தினை அறிமுகப்படுத்துவதோடு ஆழ்ந்த வாசிப்பில் அதில் பொதிந்திருக்கும் அன்றைய வரலாற்றை யூகிக்கும்படியும் இருக்கும் என்பது திண்ணம்.
நகைச்சுவை உணர்வோடு கலந்து நிகழ்வுகளை சித்தரித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு உள்ளார்ந்த அர்த்தங்கள் அன்றைய காலகட்டத்தில் புரட்சிக்கு வழிவகுத்த இலக்கியங்களோடு இதன் மூலநூலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிய உதவுகிறது. மாறாத மனித உணர்வுகளை சித்தரிக்கும் இந்தப் புத்தகம் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்று.