மயிலம் இளமுருகு
லட்சுமிஹர் என்னும் சிறுகதை ஆசிரியர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் தற்போது திரைப்படத்துறையில் படக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இலக்கியப் படிப்பும் எழுதத் தூண்டும் எண்ணங்களுமே இவரைத் தமிழ் படைப்பாளராக ஆக்கி இருக்கின்றது. இவர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பே ‘ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்’ என்ற இந்நூலாகும். மேலும் இவர் ‘டார்லிங்’ என பெயர்ச்சூட்டப்பட்ட சித்தாந்தம் என்ற இன்னொரு சிறுகதைத் தொகுப்பு நூலையும் எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நூலில் மொத்தம் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு கதைக்கருக்களைப் பேசுகின்றன.

1.ஆப்பிள் பாக்ஸ், 2. கடிந்து, 3. ஆம்,4.ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள், 5.சதுக்கபூதம், 6. ஸ்டார், 7. ஆண்ட்ராய்ட் வெர்ஷன், 8. காடு மழை தாண்டி, 9. இளவரசி ஆயிஷாவின் பலூக்குகள், 10. புலிசாரை,11.மன்யாவின் உடல்கள், 12. வெற்றோசை என்பனவாகும்.
தற்சமயம் தமிழில் சிறுகதைகள் புத்தெழுச்சி பெற்று வருவதைக் காணமுடிகிறது. அவற்றை இரண்டு வகையாகப் பார்க்கலாம் என நினைக்கிறேன். அதிலொன்று சிறு சிறு உள்ளடக்க மாற்றங்களோடு வரும் மரபு வழியான நவீன சிறுகதைகள் என்றால் மற்றொன்று துண்டித்துக்கொண்டு வேறொரு முறையில் இனங்காணாத வகையில் எழுதப்படுகின்றன எனத் தோன்றுகிறது. இதில் இரண்டாவது வகையானது ஒரு மரபான சிறுகதை வாசிப்பாளருக்கு பொது அமைதியைக் கொடுத்தாலும் அவற்றில் சில வித்தியாசமான சிறுகதைகள் அம்மரபு வாசகரை துணுக்குறவும் செய்துவிடுகின்றன.
ஏனெனில் கதைகள் என்று சொல்லப்படும் அவற்றில் மரபு வாசகர் தன் அடையாளங்களைத் தேடி ஏமாந்து போகிறார் அல்லது குழப்பம் அடைகிறார். கலை எப்போதும் மிகை நாடுவது மட்டுமல்லாமல், புலன்களோடு ஒரு ரகசிய இன்பங்களை துன்பங்களை ஈடுசெய்துகொள்ளவே முயல்கிறது என்ற யவனிகா ஸ்ரீராமின் பதிவு இங்கே கவனிக்கத்தக்கது.
ஒரு புதிய படைப்பாளி உண்மையில் நாம் தவறவிட்டதைத்தான் எழுதுகிறார் அல்லது நாம் எழுத முடியாததை அவர் கண்டுபிடித்து விடுகிறார். அப்படியெனில் ஒரு புதிய படைப்பாளியை வழக்கம்போலவே நாம் ஓர் அமைப்பிற்குள் வைத்துதான் பார்க்க வேண்டுமா? அல்லது நமது நம்பிக்கைகள் மாறிவிட்ட காலத்தில் புதிய வரவாக அவன் தோன்றுகிறானா? என்பதையே இங்கு ஒரு வாசிப்பாய் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பீடிகைகளிலிருந்து ஒருவேளை நம் சுயத்தை சற்றே தள்ளிவைத்துவிட்டால் இளம் சிறுகதையாசிரியராக அறிமுகமாகும் லட்சுமிஹர்-இன் தொகுப்பிற்குள் சுலபமாக நுழைந்து விடலாம்.
லட்சுமிஹர் தன்னுடைய படைப்பின் வழியாக தன் அனுபவத்தையும், தான் சார்ந்து இருக்கின்ற பணியின் கற்பனை சார்ந்த விவரங்களையும் மையக் கருத்தாக வைத்து பல்வேறு கதைகளைத் தன்னுடைய மொழிநடையில் நவீனத் தன்மையோடு சிறுகதைகளை எழுதியுள்ளார். இவை வாழ்க்கையின் விசாலமான பார்வையைக் கதைகளாகப் பேசுகின்றன.
நூற்றாண்டுகளாக கடவுள், மதம், அரசு, லட்சியம், அதிகாரம், குற்றம், தண்டனைகள், பாவபுண்ணியம், குற்றவாளி அல்லது அதற்கு பதிலாக வன்முறையாக அதிகாரத்தை கை கொள்ளல் போன்ற இருத்தலியல் காரணிகளோடு ஓர் சமூக மனதின் பழக்கப்படுத்தப்பட்ட பிரஜைகளாகவும், நாம் ஏற்ற கருத்தியலுக்கு நாம் விரும்பிய அதிகார உறவைத் தக்க வைத்துக்கொண்டு வந்திருப்பதையே இங்கே கைவிட வேண்டியவர்கள் ஆகிறோம்.
இளம் கதாசிரியன் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறான். நாம் மீண்டும் மீண்டும் அடுக்கிக் கொண்டிருக்கின்றோம். அவன் காதைப் பிடித்து திருகி கண்டிக்கும் அவசியம் ஏற்பட்டுவிடுவதை உணருகிறோம். உலகம் அபாயகரமானது என்று அவனிடம் எச்சரிக்கிறோம். அவன் இந்த உலகத்தில் வாழ முடியாது என அஞ்சுகிறோம். ஆனால் அவனோ இளவரசி ஆயிஷாவின் பலூக்குகளில் அருகமர்ந்து சற்றே மதுவருந்தி கடந்தகால புனைவை வைத்து தனது உலகை தன்னிலைப்படுத்திக் கொள்கிறான்.
அந்த இளவரசி ஆயிஷா நமக்கு யுகங்களிலிருந்து இறங்கினாள், அவனுக்கு சட்டென கைபிடித்து நடந்து போகும் காதலியாகிவிடுகிறார். இந்த இடத்தில் கால்வினோவின் ‘குளிர்கால இரவில் ஒரு பயணி’ ஞாபகத்திற்கு வருகிறது. இப்படியாக லட்சுமிஹர்-இன் மொத்தக் கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ் உறவாக தொடரமுடிகிறது.
“ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்” அவனுடைய கனவாகவும் மாய்மையாகவும் இருக்கிறது. “ஆண்ட்ராய்ட் வெர்ஷனில்’ இருள் உடன் உரையாடும் தர்க்கம் நமது காலத்தைப் போல் இருளின் மீதான அச்சத்தை இழந்து இருளின் கூடாகவே, அதைக் காதலாகவும் காமமாகவும் பேணுவதோடு ரகசிய இன்பங்களாக மாற்றிக் கொள்வதில் முனைப்பு கொள்கிறது. இதைத்தான் பிரதியின் கள்ள இன்பம் என்றான் ரொலான் பாத். முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதைத் கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர்.
ஒன்று, கார்ல் மார்க்ஸ் சொன்ன உழைப்பிலிருந்து அந்நியமாவது. இன்னொன்று புதிய தலைமுறைகள் மூலதனத்திலிருந்து அந்நியமாவது. அதற்கான பிரதிகளையேதான் லட்சுமிஹர் அவ்வளவு பிறழ்வுடன் எது குறித்த மைய மற்றும் தன்மேல் கவிழ்ந்த சாயல்களை புறம்தள்ளி தனது சிறுகதைகளை இத்தொகுப்பில் வைத்து தனது மொழியை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்.
தொகுப்பில் முக்கியமான ‘சதுக்கபூதம்’ எனும் கதையில் தாயின் இடுப்பிலிருந்து நிலத்திற்கு இறங்க மறுக்கும் குழந்தை கரிசல் நிலத்தை பூதம் என்கிறது; இப்பூதம் தன்னையும் அம்மாவையும் விழுங்கிவிடும் என அலறிக்கொண்டே அம்மாவின் உடலின் மீது அச்சத்துடன் ஏறி பற்றிக்கொள்கிறது.
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சூழலில் களத்தில் பயணிக்கின்றன. இவர் தனது எழுத்து குறித்து பின்வருமாறு கூறுகிறார். நூற்றாண்டின் சிறுகதை வெளியில் இங்கு சிதறிக் கிடக்கும் இவைகளை என்னுடையது என்று ஒரு நொடியும் உரிமை கொள்ள முடியாது. இவை அனைத்தும் எனக்கு முன், எழுதியவர்களின் நீட்சிகளாய் என் மூலம் உருகொண்டு விளையாடிய வேட்டை, அவ்வளவே! என்பது கவனிக்கத்தக்கது.
எதற்காக எழுத வேண்டும் என்கிற கேள்வியை எப்போதும் என்னுள் கேட்டிருக்கிறேன், கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன். நமக்கு முன்பு அவ்வளவு பக்கங்கள் எழுதப்பட்ட பின்னும் இங்கு இனி எழுதப்படப் போகிறவைகள் தன்னை எப்படி நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது என்கிற கேள்விக்கான விடையை எழுதி, தான் அடைய வேண்டும் என்று உணர முடிகிறது. எழுதுதல் ஒருவித மகிழ்வைத் தருவதும் காரணம். அதனால் என்னவோ நிறைய வாசித்தும், நிறைய பயணப்பட்டும் குறைவாகவே எழுதி வருகிறேன்.
காட்சிகள் சிதைப்பட்டு நிற்பதைக் காட்டுவது தொடங்கி, சமகால அரசியல் பின்புலத்தை ஏற்றுத் திரியும் சொற்களும், கதாபாத்திரத் தொடர்ச்சி அற்றுப்போவதைச் சொல்லும் இக்கதைகளின் ஓட்டத்தை நானே விலகி நின்றுதான் உற்று நோக்குகிறேன். பெரும்பாலான கதைகள் அகவெளியை பேசிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அதன் வடிவத்தின் ஊடாக கதை சொல்லும் விதம் நிறைய இடங்களில் எனக்கான தனி உலகை எதார்த்தத்திலிருந்து தனித்து இயங்கும் தளத்திற்கு முன்நகர்த்தியது.
அதனுடைய சிக்கல்களை கையாள இம்மொழிப் போக்கு கட்டாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எந்தவித சிக்கல்களும் இன்றி இத்தொகுப்பில் இருக்கும் எதார்த்தக் கதைகள் அதற்கு சான்று. எந்த வரைமுறையும் இல்லாமலேயே இதுவரை எழுதத் தொடங்கியிருக்கிறேன். கதையின் நகர்வுகளே அதை தீர்மானித்துக்கொள்கின்றன. ‘கதைதான் அதன் மொழியையும், எளிமையையும் தேர்வு செய்கிறது, எழுத்தாளன் அல்ல’ என்பதை நம்புகிறேன் என்கிறார்.
புரிதலும், சுவாரஸ்யமும் பகடி செய்து எட்டி உதைத்த கதைகளை நான் தேடவில்லை. அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். பெரும் போர் செய்து அவைகளை மீட்டெடுத்துக் காப்பது என் கடமையில்லை. தொலைந்த இடத்தில் கூடாரம் அமைத்து ஒரு பெருங்குடி அங்கு செழித்துதான் வளரட்டுமே! “டேய்! இவன் நல்லா எழுதறான்டா…” என்ற படத்தொகுப்பாளர் B.லெனின் அவர்களின் நம்பிக்கை வார்த்தைகளே இத்தொகுப்பின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது என்று தன்னுடைய இலக்கிய பிரவேசம் எப்படி அமைந்தது என்பதை நன்றி உணர்வோடு பதிவு செய்துள்ளார்.
இவரது எழுத்துநடையின் தன்மையை பின்வருமாறு அறியலாம். ராம் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு கையில் வைத்திருக்கும் ஆப்பிள் பாக்ஸை செட்டின் ஒரு பக்க மூலையில் போட்டு உட்கார்ந்தான். எப்போதும்போல மனதிற்குள் நினைத்துக்கொண்டான், இதுதான் லாஸ்ட் படம், அசிஸ்டண்ட்டா இனி பண்ணக்கூடாதென. ஷாட் முடிந்து லைட் சேஞ்சிங் போய்க்கொண்டு இருந்தது. செட் கொஞ்சம் பரபரப்பு இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருந்தது. ராம் என்கிற ராமகிருஷ்ணன் இங்கு வேலை செய்வது பணத்துக்காக மட்டும்தான் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான் என எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
“முன் நம் காலத்தில் பல்வேறு நீதிக் கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர்” என்கிறார் யவனிகா ஸ்ரீராம். ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப்போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மிதப்பது அல்லது பிரதிகளில் இன்பம் காணுவது என நீளும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்தக் கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ் உறவாக தொடர முடிகிறது.

காலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மைக் கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்குத் தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன. மிகச் சுதந்திரமாக, மிக எளிமையாக, மிக சாதாரண ஒரு புள்ளியிலிருந்து ஒரு சிறுகதையைத் தொடங்கி, தொய்வில்லாமல் எழுதிச் செல்கிறார். இவரின் ஒரு சிறுகதை அதுவே துவங்கிக்கொள்கிறது. இடையில் அதுவே சுவாரசியப்படுத்திக்கொண்டு பயணிக்கிறது. முடிவை அதுவே நிரப்பிக் கொள்கிறது. படைப்பாளியான லட்சுமிஹர் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துகொண்டு அரூப உருவத்தில் ஒவ்வொரு வாக்கியத்தையும் கட்டமைத்துச் செல்கிறாரோ என்கிற ஐயப்பாடுகூட வாசகனுக்கு எழும் சாத்தியம் இருக்கிறது என்கிறார் என்.ஸ்ரீராம்.
ஏனென்றால் தனித்த மொழிநடை என்கிற வரம்புக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் சுவாதீனமாக தன் படைப்பின், பிரதியை உருவாக்குபவராக லட்சுமிஹர் இருக்கிறார். வாக்கியங்களில் கவிதையின் இறுக்கமிருக்கிறது. கட்டுரையின் தளர்வு இருக்கிறது. கதையின் கச்சிதமும் இருக்கிறது. ஏதோவொரு வகையில் கதைமொழி வீரியமுடன் இயங்கி இக்கதைகளை வாசிக்கும் வாசகனுக்கு புது அனுபவமாக்கி விடுகின்றது.
ஒவ்வொரு சிறுகதையையும் பிரதான கதைமாந்தர்களின் வாழ்வுக்குத் தகுந்த மொழிநடையில் எழுதிப் பார்க்கும் வேட்கை கொண்டவராகவே லட்சுமிஹர் இருக்கிறார். தன் சிறுகதைகளில் வாழ்வை, தான் கேட்டுணர்ந்த, கண்டுணர்ந்த, வாழ்ந்துணர்ந்த வகையில் பதிவு செய்வதற்குக் கூச்சப்படாதவராகவும் இருக்கிறார். தன் கதைமாந்தர்களை, கதைக்களத்தை, கதை நிகழும் காலத்தை எவ்வித விட்டுக்கொடுக்கும் தன்மையில்லாமல் தேர்ந்தெடுக்கிறார். கச்சிதமான விவரணைச் சித்தரிப்புகள், ஒற்றை வாக்கிய உரையாடல்கள் வழியே தன் எழுத்துச் செயல்பாட்டை எவ்விதப் பதட்டமோ, பயமோ அற்று சுதந்திர மனவெளியில் அணுகிப் பயணிப்பவராக இருக்கிறார்.
சிறுகதை ஆசிரியர் லட்சுமிஹர் மேலும் மிகச் சிறப்பான கதைகளை எழுதி தமிழ் இலக்கியத்திற்கு ஆக்கம் சேர்ப்பார் என்று நம்புவோம். சிறப்பாக எழுதிய ஆசிரியருக்கும் நன்முறையில் வெளியிட்ட யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
