ச.சுப்பாராவ்
புத்தகக் காதலர்கள் வாசிப்பதோடு நின்றுவிடுவதில்லை. வாசிப்பின் சுவையை, எதை வாசிக்க வேண்டும் என்பதை, முக்கியமாக ஏன் வாசிக்க வேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் தம் அனுபவம் சார்ந்து பதிவு செய்தும் வைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புத்தகக் காதலர்தான் மைக்கேல் டிர்டா.

1978லிருந்து தொழில்முறை இலக்கிய விமர்சகராக இருப்பவர். ‘வாஷிங்டன் போஸ்’ட்டில் பல வருடங்களாக புத்தக விமர்சனம், வாசிப்பு பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, பல புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அவை அனைத்தையும் பற்றி எழுத தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பதால், சமீபத்தில் நான் படித்த அவரது ‘Book By Book’ என்ற ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லா புத்தகக் காதலர்களையும் போலவே டிர்டாவும் மிகச் சிறிய வயதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தவர். மிகச் சிறிய வயதிலிருந்தே தனக்கென ஒரு குட்டி நூலகத்தைப் பராமரிக்க ஆரம்பித்தவர். வாசிப்பு பற்றியும், எழுதுவதைப் பற்றியும் தொடர்ந்து படித்துப் படித்து பெரிய வாசகனாகவும், எழுத்தாளனாகவும் வளர்ந்தவர். அந்த அனுபவங்களை சின்னச் சின்ன கட்டுரைகளாக இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார்.
ஏன் வாசிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரிடமும் பல விடைகள் உள்ளன. டிர்டாவிடமும் ஏராளமான விடைகள் உள்ளன. இன்றைய உலகம் அவசரமான உலகம். நாம் எல்லோருமே எப்போதுமே அவசர அவசரமாக பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்பவர்களாகவேதான் இருக்க நேருகிறது. மல்டி டாஸ்கிங் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது. ஒவ்வொன்றிற்கும் பாஸ்வேர்ட் போட வேண்டிய கட்டாயம். போக்குவரத்து சிக்னலில் சற்று நேரம் அதிகமாக நிற்க நேர்ந்தாலும் பதட்டம்.
தினமும் 10-12 மணிநேர உழைப்பு. ஒரு ஹலோ சொல்லவும், குட்பை சொல்லவும்கூட நேரமில்லை. கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே I’m late, I’m late, I’m late என்று கத்திக்கொண்டே ஓடும் அலீஸின் வொண்டர்லாண்ட்டின் வெண்முயல் போன்றவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். நின்றி நிதானித்து யோசிக்கவும், சற்றே ஓய்வாக ஒன்றைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாத காலகட்டம். இந்தப் பதட்டத்தை ஓரளவிற்கு, ஓரளவிற்கு என்ன, பெருமளவிற்குத் தணிப்பது வாசிப்பு மட்டுமே.
வாசிப்புதான் மனிதனுக்கு நிதானத்தைத் தருகிறது. வாசிப்புதான் உங்களுக்கு ஒரு பார்வையைத் தருகிறது. வாசிப்புதான் உங்களுக்கு கவனக்குவிப்பைத் தருகிறது. எதையும் திட்டமிட்டுச் செய்து முடிக்கும் திறனைத் தருகிறது என்கிறார் டிர்டா. அதனால்தான் ஸ்டென்தாலால் ‘The Charterhouse of Parma’ என்ற 600 பக்க மாபெரும் படைப்பை 53 நாட்களில் எழுதி முடிக்க முடிந்தது. கஸ்டவ் ஃபிளாபர்ட் தனது படைப்பில் ஒரு வரியில் குறிப்பிட்ட இடத்தில் அரைப்புள்ளி இடுவதா அல்லது முக்கால் புள்ளி இடுவதா என்று மணிக்கணக்காக, நாள்கணக்காக வேறு எந்த சிந்தனையுமின்றி யோசிப்பாராம்.
கவனச்சிதறலற்ற அந்த யோசிப்பிற்கான பலத்தைத் தந்தது வாசிப்புதான் என்கிறார் டிர்டா. டிர்டாவும் சாதாரணமான ஆள் அல்ல. எழுத உட்காரும்போது பக்கத்தில் கடிகாரத்தோடு உட்காருவார் டிர்டா. ஒவ்வொரு கால் மணிநேரத்திற்கும் 250 வார்த்தைகள் எழுத வேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்வார். கச்சிதமாக அவ்வாறே எழுதியும் முடிப்பார். அந்தத் திறமையை அவருக்குத் தந்தது அவரது வாசிப்பு.
அதற்காக எப்போது எந்த நேரத்திலும் ஒரு சோடா பாட்டில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசித்துக்கொண்டே இருக்கும் வினோதப் பிறவியும் அல்ல அவர். காதலித்திருக்கிறார். கல்யாணம், குடும்பம், குட்டி எல்லாம் உண்டு. குழந்தைகளை பார்க்குக்கு அழைத்துச் செல்வது, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒட்டடை அடிப்பது என்று சராசரி மனிதர்களின் சராசரி வேலைகளையும் செய்பவன்தான் நான் என்கிறார்.
பல நேரங்களில் எதையோ ஒன்றைப் பற்றி யோசித்துக்கொண்டு பகல் கனவு கண்டபடி, வெட்டிப் பொழுதும் போக்குவதுண்டு. உண்மையில் ஓய்வாக இருப்பது, சும்மா இருப்பது, பகல் கனவு காண்பது எல்லாம் படைப்பாற்றலுக்கு, படைப்பூக்கத்திற்கு அவசியம் என்கிறார் அவர். ஓய்வு நேரம்தான் கலாச்சாரம் பிறப்பதற்கான ஊற்றுக்கண் என்றே மனிதகுல முன்னோடிகள் கருதினார்கள் என்கிறார். தூங்காமல் தூங்கி என்று நம் சித்தர்கள் சொன்னதை பண்டைய அறிஞர்கள் லத்தீனில் ஓடியம் என்றார்கள்.
இத்தாலியில் டோல்சே பார் நியன்டே (dolce far niente) என்றொரு சொற்றொடர் உண்டு. சும்மா இருப்பதன் சுகம் என்று இதற்குப் பொருள். தீவிரமாக வாசிக்க வேண்டும். வாசித்ததைப் பற்றி யோசித்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். அப்போது நாம் வாசித்த விஷயம் நம்மை சும்மா இருக்க விடாது. அது நம்மை இயங்க வைக்கும். நாம் வாசித்ததை பயனுள்ள வகையில் பயன்படுத்த வைக்கும் என்பதாக நான் புரிந்துகொண்டேன்.
மற்ற உயிரினங்களிடமிருந்து நம்மை வேறு படுத்திக் காட்டும் ஒரு முக்கியமான விஷயம் புதியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம். அதுதான் இன்று நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்து வந்திருக்கிறது. அப்படி நம்மை அழைத்துச் செல்லும் ஒரு வாகனம் வாசிப்பு மட்டும்தான் என்கிறார் டிர்டா. அந்த வாசிப்புதான் எதையும் ஒருபக்கச் சார்பின்றி நம்மைப் பார்க்க வைக்கும். திறந்த மனதோடு எதையும் அணுக வைக்கும். எதையும் யோசிக்காது தடாலடி முடிவுகளை எடுக்க விடாது. நாம் தவறு செய்கிறோம் என்ற உணர்வு ஏற்படும்போது, சட்டென்று நமது பாதையை மாற்றிக்கொள்ள உதவும் என்கிறார் அவர்.
இதுபோல் பல்வேறு விஷயங்களையும் எழுதிச் செல்லும்போது ஆங்காங்கே அவர் ரசித்து வாசித்த புத்தகங்கள், அவற்றில் அவர் என்றென்றும் மறக்கக்கூடாது என்று குறித்து வைத்திருக்கும் மேற்கோள்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போகிறார். அந்த மேற்கோள்கள் நமக்கு புதிய புதிய வெளிச்சங்களைத் தருகின்றன. ஓரிடத்தில் ‘எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்தவொரு மனிதனையும் அவமதித்து விடக்கூடாது’ என்று அன்டன் செகாவ் சொன்னதைச் சொல்கிறார். ‘எங்கோ தூரத்தில் மங்கலாகத் தெரிவதைக் கண்டுகொள்வதல்ல நமது வேலை. நம் கையருகே தெளிவாகத் தெரிவதை அடையாளம் காண முடிவதுதான் நமது வேலை’ என்று கார்லைல் சொன்னார் என்கிறார்.
‘வெற்றி பெறுவதைப் பற்றி ஏன் பேச வேண்டும்? அனைத்தையும் சமாளித்து நிற்பது போதாதா?’ என்று ரைனர் மரியா ரில்கே சொன்னதை எடுத்துக் காட்டுகிறார். கோடு போட்ட தாளில் எப்போதேனும் ஒருமுறை குறுக்காக எழுதிப் பாருங்களேன் என்கிறார் வேறொரு இடத்தில். பிடித்த கவிதையை மனப்பாடம் செய்யுங்கள் என்கிறார். அவர் எழுதியவற்றிலேயே மிகவும் பிடித்த வரி- நியாயத் தீர்ப்பு நாளில் நீங்கள் எவ்வளவு வாசித்தீர்கள் என்று கேட்க மாட்டார்கள். வாசித்தவற்றை வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்றுதான் கேட்கப்படும் – என்பதுதான். இது டிர்டாவின் சொந்தக் கூற்று. வேறு யாரோ கூறிய மேற்கோளல்ல.
இன்று நாம் சிறார்களிடம் வாசிப்புப் பழக்கம் பற்றி நிறைய பேசுகிறோம். அவர்களுக்கான புத்தகங்கள் நிறைய வரவேண்டும் என்று மிகக் கவனமாக முயற்சி செய்து வருகிறோம். சிறுவயதிலிருந்தே வாசகனாக வளர்ந்தவர் என்பதால் டிர்டா பல இடங்களில் சிறார்களிடம் வாசிப்புப் பழக்கம் ஏற்படுத்துவது குறித்து நிறைய அழகாக எழுதியுள்ளார். அரிஸ்டாட்டில் சொல்லும் ஐந்து நற்பழக்கங்களைப்போலவே வாசிப்பும் பழக்கத்தால் வருவது என்பதால் அதை சிறுவயதிலிருந்தே பழகித் தரவேண்டும் என்கிறார். அவர் சொல்பவற்றில் முக்கியமானவற்றை (அவற்றில் சில நமக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும்கூட) இங்கே எனது வார்த்தைகளில் நம் சூழலுக்கேற்ப மாற்றித் தருகிறேன்.

சிறுவயதில் வாசிப்பின் தரத்தைவிட வாசிப்பின் அளவுதான் முக்கியம். செவ்வியலக்கியங்களைப் படிக்க சிறுவர்களுக்கு வாழ்வில் நிறையவே நேரம் இருக்கிறது. எனவே சிறுவயதில் தரம் பற்றிய கவலை இன்றி நிறைய படிக்க விடுங்கள். திரைக் கலாச்சாரத்தை விடுத்து அவர்கள் வாக்கியக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டியதுதான் முக்கியம். When starting out, the young should be immersed in a culture of sentence, not the screen.
குழந்தைகளுக்கு உரக்கப் படித்துக் காட்டுங்கள். குழந்தையின் பார்வையில் படும்படி நீங்கள் வாசியுங்கள். உங்கள் குழந்தை நீங்கள் வாசிப்பதைப் பார்ப்பது நல்லதா? அல்லது நீங்கள் கைபேசியை நோண்டுவதைக் கவனிப்பது நல்லதா?
உங்கள் வீட்டை புத்தகங்களால் நிரப்புங்கள். பத்திரிகைகள், மாத நாவல்கள், காமிக்ஸ், செய்தித்தாள் என்று குழந்தை பார்க்கும் இடம் முழுக்க சிதறி இருக்க வேண்டும். புத்தகம், வாசிப்பு ஆகியவை ஒரு விசேஷ நிகழ்வாக இல்லாமல் அன்றாட வீட்டுவேலைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.குழந்தைகளை புத்தகக் கடைகளுக்கு, நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். வீட்டில் இரண்டு, மூன்று குழந்தைகள் இருந்தால், பெரிய குழந்தையை சிறிய குழந்தைக்கு வாசித்துக் காட்டச் சொல்லுங்கள். இதனால் பெரிய குழந்தைக்கு வேகமாக வாசிக்கும் திறன், உச்சரிப்பு எல்லாம் மேம்படும்.
அதற்கும் மேலாக உடன்பிறந்தோரிடையே புத்தக வாசிப்பால் வரும் பாசப்பிணைப்பு மற்ற காரணங்களால் ஏற்படும் பிணைப்பைவிட மிக கெட்டியானதான இருக்கும். டிவி, வீடியோ கேம்ஸ் நேரங்களைக் குறையுங்கள். இதிலெல்லாம் மிகவும் கெடுபிடியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்கள் நோக்கம் அவர்கள் டிவி பார்ப்பதைத் தடுப்பது அல்ல, அவர்களை சற்று அதிக நேரம் வாசிக்க வைப்பது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
புத்தகம் வாங்கித் தரும்போது இதெல்லாம் பள்ளி, கல்லூரிப் பாடங்களுக்கு உதவாது என்று அவர்கள் ஆசைப்படும் புத்தகத்தை வாங்கித் தராது ஒதுக்காதீர்கள். பள்ளிப் படிப்பிற்கு அப்பாற்பட்டதை அறிவதற்காகத்தானே வாசிப்பு என்பதே இருக்கிறது!
நீங்கள் நினைக்கும் நல்ல புத்தகங்களை மட்டுமே அவர்கள் வாசிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் குழந்தையோடு நீங்கள் வாசித்த புத்தகங்கள் பற்றிப் பேசுங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகம் பற்றிச் சொல்லுங்கள். செய்தித்தாளில் ஏதேனும் சுவாரஸ்யமான விஷயம் கண்ணில் பட்டால், ‘பாப்பா, இத படிச்சயா? ஒரு சூப்பர் நியூஸ் போட்டுருக்காங்க’ என்று ஆற்றுப்படுத்துங்கள்.
எழுதுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்களாக எழுதினால்தான் அவர்களுக்கு வாக்கிய அமைப்பு, தங்குதடையின்றி வார்த்தைகளைப் பயன்படுத்துதல், தாம் சொல்ல நினைப்பதை கோர்வையாக, தர்க்கபூர்வமாக எழுத்தில் கொண்டுவருதல், சொல்லும் விஷயத்தை ரசிக்கும்படியாக எழுதுதல் என்ற திறன்களெல்லாம் சிறிது சிறிதாக வரும்.
புத்தகக் காட்சிகளில் எழுத்தாளர்கள் எவரேனும் எதிரில் தட்டுப்பட்டால், அவரை குழந்தைக்குக் காட்டுங்கள். அறிமுகம் செய்யுங்கள். புத்தகத்தோடு நேரம் செலவிட அனுமதியுங்கள். ‘படிச்சது போதும், புக்க மூடி வெச்சுட்டு போய்த் தூங்கு’ என்று விரட்டாதீர்கள். ‘ராத்திரி பூரா எதையோ படிச்சுட்டு இருந்துட்டு, காலைல லேட்டா எந்திரிக்குது கழுத!’ என்று சொல்லாதீர்கள். புத்தக வாசிப்பிற்காக தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, காலையில் தாமதமாக எழும் குழந்தை எல்லோருக்கும் பிறந்து விடுவதில்லை!
குழந்தை படிப்பதை எல்லாம் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். படிக்கும் பரவசத்திற்காகப் படிக்கட்டும். புரிந்து படிப்பது என்பது அதன் ஒரு பக்கவிளைவாக தானாக நடக்கும். இந்தச் சிறிய புத்தகத்தில் டிர்டா இப்படி எத்தனையோ சொல்லியிருக்கிறார். அவர் எழுதியிருப்பதிலேயே எனக்கு மிகவும் பிடித்த வரி – வாசிப்பு உங்கள் வாழ்நாளை நீட்டிக்கப் போவதில்லை. ஆனால், வாழும்வரை, நல்லபடியாக, ரசனையோடு வாழ வைக்கும் – என்பதுதான்.
நான் நல்லபடியாக வாழ்கிறேன்!