முனைவர் இரா. மோகனா
வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் உயர்குடி மக்களின் வாழ்க்கையைக் கதையாக எழுதாமல், அடக்குமுறையால், ஒடுக்குமுறையால் ஏற்படும் சமூக முரண்கள் நிறைந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நாவலாசிரியர் இமையம்.

‘500 ரூபாய் பணத்திற்கும், ஒரு புடவைக்கும்’ வெங்கடேசப் பெருமாளினால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆண்டாள், கண்ணகி, சொர்ணம் ஆகிய கதாபாத்திரங்களின் உரையாடலின் வாயிலாக இமையம் ‘வாழ்க வாழ்க’ எனும் குறுநாவலின் கதையை நகர்த்துகிறார்.
அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டங்கள் மக்களுக்கானதாக, சமூக முன்னேற்றத்துக்கானதாக இல்லாமல் முழுக்க முழுக்க வணிகமயமாக்கப்பட்ட சூழலை அப்படியே பதிவு செய்கிறது நாவல். எங்கும் பணம் எதிலும் பணம் என்பது இன்றைய அரசியலில் மறைக்கமுடியாத உண்மை. அதை இலைமறை காய்மறையாகக் கூடச் சொல்லாமல் நேரடியாக வாசகனுக்குக் கடத்துகிறார்.
அரசியல் அதிகாரத்தால் களையப்பட வேண்டிய எல்லா முரண்களும், அவலங்களும், அசிங்கங்களும் இந்த மாதிரியான அரசியல் கட்சிகளால்தான் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதை அங்கு நிகழும் சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கிறார்.
குறிப்பாக மூன்று பெண்கள் சேர்ந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை நாற்காலியிலிருந்து எழுந்திரித்துப் போகச் சொல்லும்போது, இன்றும் ஊருக்கும் காலனிக்குமான இடைவெளியை அறிய முடிகிறது. “நீ ஊரு இல்ல. பறத்தெரு, பழவங்குடியா இருந்தாலும் நீ பறத்தெரு, ஊரு வேற, பறத்தெரு வேற” என்று வரும் வரிகள் இன்றைய சமூக மேம்பாட்டுத்தளம் எவ்வாறாக உள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.
நாற்காலிக்குச் சண்டை போடும் பெண்களின் மூலம் அவர்களுக்கு இருக்கும் அதிகாரப் பசியைக் கண்கூடாகக் காண முடிகிறது. இவையெல்லாம் அந்தக் கூட்டத்தின் சலசலப்பில் மிகவும் எதார்த்தமான உரையாடல்களின் மூலம் அறிய முடிகிறது.
வெங்கடேசப் பெருமாளின் பேச்சு தனக்குத்தான் எல்லா விஷயமும் தெரியும் என்ற தோரணையில் இருக்கும். வெங்கடேசப் பெருமாள் எவ்வாறு இருந்தாலும் ஊர்க்காரர்கள் அவனை ஆயிரம் கேள்விகள் கேட்டாலும், ஆயிரம் குற்றம், குறை சொன்னாலும் அவனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஊரே ஒன்றாகக் கூடிவரும். 500, 600 வீடுகள் இருக்கின்ற தெருவில் அனைத்தும் ஒரே சாதிக்காரர்களின் வீடுகள்தான். இவனுடைய பண்பு தன்னை வளர்த்துக்கொள்வதில் மட்டும் அக்கறையாக இருந்தான் என்று இல்லை. தன்னைத் தாண்டி கட்சியில் எவனும் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும் வெங்கடேசன் கவனமாக இருப்பான்.
கட்சிக் கூட்டத்திற்கு அனைவரையும் அழைத்துச் செல்வதில் வேகம் காட்டிய வெங்கடேசப் பெருமாள் மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைக் கூண்டோடு அழைத்துச் சென்றான். ‘எங்க தலைவி வரும்போது எல்லார் தலையிலும் தொப்பி இருக்கணும்’ என்று உத்தரவு போட்டான். ‘தலைவி வரும்போதும் பேசும்போதும் மீட்டிங் முடிஞ்சு போகும்போதும் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அவ்வாறு தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும்’ என்று சொன்னான்.
அவனுடைய வார்த்தையைக்கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த பெண்கள் அங்கு ஒருவன் தள்ளாடிக்கொண்டு வருவதைப் பார்த்தார்கள். மேலே விழுந்துவிடப் போகிறான் என்று அனைவரும் சிறிது தள்ளி உட்கார்ந்துகொண்டார்கள். “மீட்டிங்குக்கூட சாராயத்தைக் குடிச்சிட்டா வரணும்?” என்று ஒரு பெண் சொல்ல… “சாராயக்கடையெல்லாம் மூடித் தொலைச்சா தேவலாம்” என்று கண்ணகி கூற ஆரம்பித்தாள். “பொம்பள ஆட்சிதான் நடக்குது; ஆனா, சாராயக்கடையை மட்டும் மூடல” என்று நக்கலாக கூறிக்கொண்டார்கள். அதற்குள் அங்கிருந்த ஒரு பெண்ணிற்கு அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய தேவை இருந்தது. அவள் சிறுநீர் கழிக்கின்ற இடத்திற்குப் போய் வர எண்ணினாள்.
பக்கத்தில் அமர்ந்திருந்த கண்ணகியோ “நீ போய்விட்டுத் திரும்பி வர முடியாது. கூட்ட நெரிசலாக இருக்கிறது. வேண்டுமென்றால் இந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டு சிறுநீர் கழித்துவிட்டு வா” என்று கூறினாள். அங்கு வந்த வெங்கடேசப் பெருமாளிடம் “பெண்களுக்கு ஒதுக்கப்புறம் எங்காவது இருக்கிறதா?”என்று கேட்க… அவனும் சுற்றி முற்றியும் பார்த்துவிட்டு “எங்கும் இல்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
பெண்கள் கூட்டமோ வெங்கடேசப் பெருமாளைச் சபித்துக் கொட்டினார்கள். மதியம் 2மணி ஆகியவுடன் அனைவருக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெயிலின் கொடுமை ஒரு புறம். தாகம் ஒருபுறம். பசி ஒரு புறம். வறுமையின் கொடுமையால் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வந்து மாட்டிக்கொண்ட மக்களின் நிலையை மிக அழகாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். சிறிது நேரம் கழித்து வெங்கடேசன் எடுத்து வந்த பிரியாணிக்கு அனைவரும் சண்டை போட்டு அதனை வாங்கிக்கொண்டார்கள்.
நேரம் செல்லச் செல்ல வெயிலின் காரணத்தினால் உடல் வேர்த்து, உடலெங்கும் கொப்புளங்களாக மாற ஆரம்பித்தன. அதற்குள் நீர் இல்லாத காரணத்தினால் ஒரு பெண் மயங்கி விழுந்துவிட்டாள். என்ன செய்வது என்றே தெரியாமல் அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கின்ற வேளையில் ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் மெல்லத் தரையைத் தொடும் சமயத்தில் மயக்கத்தில் இருந்த ஆண்டாளோ சிறிது முழித்துக்கொண்டு “தங்கத் தலைவி வாழ்க வாழ்க! தர்மத்தலைவி வாழ்க வாழ்க!” என்று தன்னால் இயன்றவரை தெம்பாகக் கத்தினாள்.
தலைவியைக் காண்பதற்காகத் தடுப்புக்கட்டைகளைச் சரித்துக்கொண்டு ஆண்கள் அதில் ஏறி நின்றனர். தடுப்புக்கட்டைகள் எல்லாம் சரிந்து விழுந்ததில் மூன்று பெண்களும் ஒரு பள்ளிக்கூடத்துப் பிள்ளையும் இறந்து விட்டார்கள். கையில் பிடித்திருந்த பதாகைக் குச்சி குத்தி ஒரு பெண் குடல் சரிந்து இறந்தாள். அனைவரும் “போச்சே போச்சே” என்று அலறியபடி தலையில் அடித்துக்கொண்டு உயிர் போகிற மாதிரி அழுகிற சத்தம் பெண்கள் வரிசையில் கேட்க ஆரம்பித்தது. உடனே பயந்து அங்கு இருக்கின்ற பெண்கள் எல்லாம் அந்த இடத்தை விட்டுத் தப்பித்து ஓட முயற்சி செய்கையில் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
பெண்கள் பகுதியில் ஏற்பட்டிருந்த கூச்சல், குழப்பம், சாவு, கை, கால் முறிவு பற்றி எதுவும் தெரியாத கழகத்தின் தலைவி “என் உயிரினும் உயிரான உடலினும் உடலான கண்ணினும் கண்ணான என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே! நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கின்றேன்” என்று கையில் வைத்திருந்த காகிதத்தைப் பார்த்துப் பார்த்துச் சத்தமாகத் தன் போக்கில் படித்துக் கொண்டிருந்தார் என்பதாக இந்தக் குறுநாவலை முடித்து இருக்கின்றார் ஆசிரியர்.

முக்கியமாக இன்றைய காலகட்ட இளைஞர்கள் இமையத்தின் படைப்புகளை வாசிக்க வேண்டும். “சமூக அவலங்கள், முரண்கள் சார்ந்து எந்தக் கேள்வியும் நமக்கு எழாமல், நாம் அம்பேத்கரியத்தையோ, பெரியாரியத்தையோ, மார்க்சியத்தையோ பின்பற்றி ஒன்றும் செய்ய இயலாது. நமக்குள் வினாக்கள் இல்லாமல் விடைகளை வைத்திருத்தல் என்பது புலியை வைத்துப் பொறியைப் பிடிப்பதுபோல என்பதாகும்.
‘வாழ்க வாழ்க’ எனும் குறுநாவல் அரசியலால் தினம் தினம் நசுக்கிப் புதைக்கப்படும் சாமானியர்களின் கதை. அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி நசுக்கி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் போக்கில் எழுதப்பட்டதே ‘வாழ்க வாழ்க’ எனும் இக் குறுநாவல்.
சமூகச் சிக்கலை மிகச் சிறப்பாகப் பதிவு செய்த எழுத்தாளர் இமையம் அவர்களுக்கும் இதைச் செவ்வனே பதிப்புச் செய்த க்ரியா பதிப்பகத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.