நேர்காணல்:
இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன்
சந்திப்பு : கமலாலயன்
ந.முருகேசபாண்டியன் மதுரையை அடுத்த சமயநல்லூர்க்காரர். இவர் பிறந்தது மதுரையில்தான் என்றாலும் சமயநல்லூர்தான் இவருடைய மூதாதையரின் ஊர். பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் அதே ஊரில் படித்தவர், நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இருபத்தெட்டு ஆண்டுகள் மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுத் தற்சமயம் மதுரையில் வசிக்கிறார். பள்ளிப் பருவத்தில் கிளை நூலகத்தில் குழந்தை இதழ்களை வாசிக்கத்தொடங்கிய இவருடைய ஆர்வம், எழுபதுகளில் சிறுபத்திரிகை சார்ந்த வாசகராக மாறுவதற்குப் பின்புலமானது.

புத்தகங்கள் இல்லாத உலகை ஒருபோதும் கற்பனை செய்ய இயலாது என்று நம்புகிற இவர், இலக்கிய விமர்சகரானது ஒருவகையில் தற்செயலானது. ஓவ்வொரு புத்தகமும் ஒரு புதிய உலகை அறிமுகம் செய்கின்றது என்ற இவருடைய வாசிப்பு அனுபவம், முடிவற்று நீள்கின்றது. எழுபதுகளில் கவிதை, சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர், 90களின் தொடக்கத்தில் தான் வாசித்த புதிய புத்தகங்கள் பற்றிய கருத்துகளைப் பத்திரிகைகளில் பதிவுசெய்த சூழலில் விமர்சகராக அறிமுகமானார். பின்னர் பல்வேறு இதழ்களில் காத்திரமான விமர்சனக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கின்றார்.
இவர், இலக்கியக் கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிலரங்குகளில் பங்கேற்றுத் தன்னுடைய கருத்துகளை ஆழமான உரைகளாக வழங்குவதில் ஆர்வமுடையவர். பொதுவாக நவீன இலக்கியவாதிகளில் சிலர் சங்க இலக்கியம் உள்ளிட்ட மரபார்ந்த கவிதை நூல்களை வாசிப்பதுடன் அவற்றைப் பற்றித் தங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பதிவாக்குதல் என்ற அளவில்தான் இருப்பார்கள். ஆனால், முருகேசபாண்டியன், 41 சங்கப் பெண் கவிஞர்கள், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் எழுதிய கவிதைகளில் மனதைப் பறிகொடுத்துத் தான் பெற்ற இன்பத்தை எளிய உரையுடன் இளைய தலைமுறையினரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
உடலால் இந்தியர்களாகவும், மனத்தால் அமெரிக்கர்களாகவும் வாழ விழைகின்றவர்கள் நிரம்பியுள்ள சூழலில், தமிழ்ப் படைப்புகளை இளையோருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் பழந்தமிழ்ப் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளதாகக் கூறுகிறார். இலக்கிய விமர்சனம் மட்டுமின்றி சமூகம், அரசியல், பண்பாட்டுப் பிரச்சினைகளை விவாதிக்கும் கட்டுரைகளைச் சமூக அக்கறையுடன் எழுதிக்கொண்டிருக்கிறார்.
சென்னையில் இலக்கியக்கூட்டத்தில் பங்கேற்றிட வந்திருந்தவரை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தில் சந்தித்து சில மணிநேரம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் இலக்கியப் படைப்புகள், விமர்சனங்கள், இலக்கிய இஸங்கள் மட்டுமின்றி, சமகால அரசியல், சமூகப் பின்புலத்தில் தனது அனுபவங்களையும், பார்வைகளையும் பகிர்ந்து கொண்டார் முருகேசபாண்டியன்.
சாதாரணமாக, நூலகப்பணியில் சேருவதற்குப் பலரும் ஆர்வம் காட்டுவது இல்லை. கல்லூரிப் பேராசிரியர் பணியுடன் ஒப்பிடும்போது நூலகர் பணியின் மதிப்புக் குறைவானது என்ற நம்பிக்கை நிலவும் சூழலில் நீங்கள் நூலகர் பணியைத் தேர்வு செய்ததற்குக் காரணம் என்ன?
நீங்கள் சொல்கிற சூழல் நிலவுவது உண்மைதான். ஆனால், என்னுடைய தேடல் வேறுவகையானது. எழுபதுகளில் சிறுபத்திரிகைக்காரனாக நான் திரிந்தபோது எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றத் தோன்றியது. அதேவேளையில் புத்தகங்கள் மீது மாளாத காதல் இருந்தது. பிறரை அதிகாரம் செய்திடும் அரசாங்கப் பணி எனக்குப் பொருந்தாது என்று நம்பினேன். பொதுவாக நம்முடைய சமூக அமைப்பில் பெரும்பாலானோர் ஏதாவது பட்டம் பெற்று அதற்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லாமல் ஏதோ ஒருபணியில் இருப்பார்கள்.
விவசாயம் படித்துவிட்டுக் காவல்துறையில் பணியாற்றுதல், மருத்துவம் அல்லது கால்நடை மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாகச் செயலாற்றுதல், பி.இ. படிப்பில் இயந்திரவியல் படித்தவர் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுதல், பி.இ. படித்தவர் வங்கியில் வேலை செய்தல் என்று இங்கு பலருக்கும் எதுக்காகப் படிக்கிறோம் என்ற நோக்கமே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் நூல்களுடன் இருக்கின்ற நூலகர் பணி என்பது கவர்ச்சியானதாக இருந்தது.
நான் கல்லூரிப் பேராசிரியராகச் சிறிது காலம் வகுப்பறையில் மாணவர்களிடம் பேசியபோது, எந்தவொரு விஷயம் குறித்தும் ஆர்வத்துடன் பேசவேண்டிய பாவனை, எனக்கு அலுப்பூட்டியது. இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நூலகர்களாகப் பணியாற்றிய ஆளுமைகள் பற்றி இங்குப் பலருக்கும் தெரியாது. சீனப் புரட்சியாளர்கள் மாவோ, சூ என்லாய் போன்றவர்களும் எழுத்தாளர்கள் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ், லூயிஸ் கரோல் போன்ற பலரும் நூலகர்களாகப் பணியாற்றியுள்ளனர். என் பதின்பருவத்தில் எந்த வேலையில் சேர்ந்திட வேண்டும் என்று எனக்குத் தெளிவான பார்வை இருந்தது. நான் கல்லூரி நூலகராகப் பணியாற்றிட வாய்ப்புக் கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும் பேறு.
நூலகத்துடனும் நூல்களுடனும் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு பற்றி…
நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது தினத்தந்தி நாளிதழை எழுத்துக்கூட்டி வாசித்தேன். எழுத்துகள் எனக்குள் புதிய உலகை அறிமுகப்படுத்தின. கன்னித்தீவு, சிரிப்பு, கருத்துப் படம் போன்ற பகுதிகள் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை. சமயநல்லூர் போன்ற கிராமத்தில் எங்கள் வீட்டுக்குத் தினத்தந்தி வரவழைத்த என் தந்தையார் மூ.வ.நடராஜன் புத்தகங்கள் மீது ஆர்வமுடையவர். அவர்தான் எனது வாசிப்புக்கு வித்திட்டவர்.
எங்கள் ஊரில் கிளை நூலகம் இருந்தது. எனக்கு எட்டு வயதானபோது தற்செயலாக அங்கு சென்று அம்புலிமாமா, கண்ணன் போன்ற சிறுவர் பத்திரிகைகளை வாசித்தேன். அதில் வெளியாகியிருந்த கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. ஆறாம் வகுப்புப் படிக்கும்போது நூலகரிடம் கதைப் புத்தகங்களை வாசிக்கக் கேட்டேன். அவர் முதலில் கொடுக்க மறுத்தார்.
என் அண்ணன் பெயரில் நூலக உறுப்பினராகப் பதிவுசெய்த பின்னர் கதைப்புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். தமிழ்வாணனின் ‘இருளில் வந்த இருவர்’ நாவல்தான் நான் வாசித்த முதல் நாவல். அப்புறம் சாண்டில்யன், கல்கி, எழுதிய வரலாற்று நாவல்களை ஆர்வத்துடன் வாசித்தேன். நாஞ்சில் பி.டி.சாமி, மாயாவி எழதிய துப்பறியும் கதைகளும் திகில் நாவல்களும் எனக்குள் ஊடுருவின.
பதின்பருவத்தில் வே.ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ.வே.ரா.சிந்தனைகள் மூன்று தொகுதிகளையும் கிளை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன். என்னுடைய புத்தக வாசிப்பு அனுபவத்திற்கு அடித்தளமிட்டது கிளை நூலகம்தான். அப்புறம் நான் படித்த கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நூலகங்கள் என்னுடைய ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சரி, கல்லூரி நூலகரான பின் உங்கள் ஆர்வங்கள் மதிக்கப்பட்டனவா ?
1987 ஆம் ஆண்டு கல்லூரி நூலகராகப் பணியேற்றேன். தமிழ்க்கல்லூரி என்பதால், தமிழைப் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான நூல்களை வாங்கிச் சேர்த்ததுடன் என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டுமென்று என் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழி காட்டவும் செய்தேன்.
குறிப்பாக ஆய்வுக் கட்டுரை, ஆய்வேடு எழுதுவதில் தரவுகளைத் திரட்டல், எழுதுதல் பற்றி மாணவர்களுக்கு நிரம்பப் போதித்தேன்.
அதேவேளையில் புதிய தகவல்களையும் நவீனப் போக்குகளையும் மாணவர்களிடம் இருந்து அறிந்தேன். என் நூலகப் பணி, வாசிப்பு, எழுத்து, பேச்சாற்றல் மீது கல்லூரி முதல்வர்களும் நிர்வாகத்தினரும் பேராசிரியர்களும் மாணவர்களும் மரியாதை வைத்திருந்தனர். நானும் நூலகப் பணியுடன் கல்லூரி தொடர்பான பொதுவான பணிகளையும் ஆர்வத்துடன் செய்தேன்.
உங்கள் நூலகப் பணியில் மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் உண்டா? வாசகர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாமா?
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகச் செனட் உறுப்பினராக இருந்தபோது, தமிழ் அல்லாத பிற துறைகளில் தமிழில் ஆய்வேடு அளித்து, டாக்டர் பட்டம் பெற்றிட அனுமதி கேட்டுச் செனட்டில் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. 1999 ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நூலகம் தகவல் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் அல்லாத பிற துறையில் முதலாவதாகத் தமிழில் ஆய்வேடு சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்றது நான்தான். அப்புறம் ஒரு விஷயம் நூலகம் தகவல் அறிவியல் துறையில் தமிழில் ஆய்வேடு அளித்து முதன்முதலாக டாக்டர் பட்டம் பெற்றதும் நான்தான்.
கல்லூரி நூலகருக்கு முனைவர் பட்ட ஆய்வாளருக்கு நெறியாளராக இருக்க வாய்ப்பு வழங்கிட வேண்டுமெனப் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்து போராடி ஒப்புதல் பெற முயன்ற எனது முயற்சி, வெற்றியடைந்தது. நான் நெறியாளரானேன். நூலகம் தகவல் துறையில் முனைவர் பட்ட நெறியாளரான முதல் கல்லூரி நூலகர் நான்தான். எனது வழிகாட்டுதலின்பேரில் 24 ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெறுள்ளனர். அதில் ஒன்பது ஆய்வாளர்கள் பெண்கள்.
கல்லூரிப்பணியில் நூலகர்களை வெவ்வேறு பணிகளுக்கும் பயன்படுத்துவது உண்டல்லவா? அந்த மாதிரிப் பணிகள் ஏதேனும் செய்தீர்களா ?
கல்லூரியில் நூலகம் என்பது வெறுமனே காங்கிரீட் கட்டடம் அல்ல. அங்கு எப்போதும் மாணவர்களும் பேராசிரியர்களும் மகிழ்ச்சியுடன் குழுமி இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நூலகப் பணியைச் சேவை என்று கருதிச் செயல்பட்டேன். பேராசிரியர் வகுப்பறையில் நிகழ்த்துகின்ற உரையின் தொடர்ச்சியாகத்தான் நூலகம் செயல்பட வேண்டும். மாணவர்கள் அசைன்மெண்ட், திட்டக்கட்டுரை, எம்.பில் ஆய்வேடு, முனைவர் பட்ட ஆய்வேடு போன்றவற்றை எழுதுவதற்குப் பின்புலமாக எல்லாவிதமான உதவிகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கினேன். மாணவர்களின் எதிர்காலம் குறித்துப் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திரைப்பட வகுப்புகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கல்லூரியில் நடத்தினேன்.
ஜெயகாந்தன், பிரபஞ்சன், கந்தர்வன், பழமலய், எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, ச.தமிழ்ச்செல்வன். யவனிகாஸ்ரீராம், மனுஷ்யபுத்திரன், பா.வெங்கடேசன், இறையன்பு, தமிழச்சி, அறிவுமதி, மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, திலகவதி, சக்திஜோதி, சுகிர்தராணி, பிரேம், விக்கிரமாதித்யன், கடற்கரய், அஸ்வகோஷ், மணா, சுதீர் செந்தில் போன்ற பல படைப்பாளர்களைக் கல்லூரிக்கு அழைத்து வந்து மாணவர்களிடம் உரையாற்றிட வழி வகுத்தேன். தி.சு. நடராசன், மா.நன்னன், ஆ.சிவசுப்பிரமணியன், இராம.சுந்தரம் பா.ஆனந்தகுமார் என்று கல்லூரிக்கு உரையாற்றிட வந்த பேராசிரியர்களின் பட்டியல் நீளும்.
யதார்த்தா ராஜன், நிழல் திருநாவுக்கரசு, தமிழ் ஸ்டூடியோ அருண் போன்றவர்களைக் கல்லூரிக்கு அழைத்துத் திரைப்படப் பயிற்சி வகுப்புகளுடன் சிறந்த உலகத் திரைப்படங்களைத் திரையிட்டோம். மாணவர்களுக்கான சுற்றுலாக்கள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியபோது, நேரம் காலம் பார்க்காமல் செயல்படுவது என் இயல்பு.
மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளின்போது கல்லூரி முதல்வர்கள் பழ.முத்தப்பன், தா.மணி; பேராசிரியர்கள் தி.பூங்குன்றன், க.கனகராசு போன்றோரின் ஒத்துழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். என்னுடைய இலக்கியம், கலை சார்ந்த சோதனை முயற்சிகளில் மாணவமாணவியர் ஆர்வத்துடன் இணைந்து செய்ல்பட்டதனால்தான் வெற்றிகரமாக நடத்திட முடிந்தது.
எப்போதிலிருந்து சிறு பத்திரிக்கை உலகு உங்களுக்கு அறிமுகமாகமானது ?
எழுபதுகளில் கல்லூரி மாணவனாக இருந்தபோது கணையாழி, தீபம் பத்திரிகைகளைக் கல்லூரி நூலகத்தில் வாசித்தேன். மதுரை பேருந்து நிலையக் கடையில் இருந்து தென்மொழி, தாமரை, செம்மலர், விழிகள், வையை போன்ற பத்திரிகைகளை வாங்கி வாசித்தேன். பேராசிரியர் ஐ.சி.பாலசுந்தரம் மூலம் அஃக், கசடதபற, பிரக்ஞை போன்ற பத்திரிகைகள் கிடைத்தன. சிறுபத்திரிகைகளைத் தீவிரமாக வாசித்தபோது, அவ்வப்போது கவிதைகள், கதைகள் எழுதினேன். அவை 1975 இல் கல்லூரி ஆண்டுமலரில் பிரசுரமாயின.
என் முதல் கவிதை, சா.ஜோதிவிநாயகம் 1978 இல் வெளியிட்ட ‘தேடல்’ இதழில் பிரசுரமானது. 1981 செம்மலர் இதழில் ‘எங்கள் தாத்தா வீட்டில் எலி கூட இல்லை’ என்ற தலைப்பில் சிறுகதை வெளியானது. அதே காலகட்டத்தில் அரசியல்ரீதியான புதிய புரிதல்கள் எனக்குள் ஏற்பட்டிருந்தன. இந்தப் புரிதல் எனது பள்ளி மாணவப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது.
நான் எட்டாம் வகுப்பில் படித்துபோது, எஸ்.எஸ்.வாசன் என்ற தமிழாசிரியர் பெரியாரையும், நாத்திகத்தையும் வகுப்பறையில் அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரிக்காலத்தில் ஆர்.சண்முகசுந்தரம், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் படைப்புகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அப்பொழுது தற்செயலாக ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற ராகுல்ஜியின் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது.
அப்புறம் நண்பர் ஒருவர் பரிந்துரைத்த ஜார்ஜ் பொலிட்சரின் மார்க்சிய மெய் ஞானம், மாக்சிம் கார்க்கியின் தாய் போன்ற புத்தகங்கள், நாத்திகனாக இருந்த என்னை மார்க்சியத்தின் பக்கம் திருப்பின. என்.சி.பி.ஹெச். நிறுவனத்தில் மலிவாகக் கிடைத்த மாஸ்கோ பதிப்பக ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், என்னுடைய சிந்தனைப் போக்கை மாற்றியமைத்தன. பொதுவாக அந்தப் புத்தகங்கள் 70களில் அரசியல் பேசிய இளைஞர்களின் அரசியலைத் தீர்மானித்தன.
வெறும் புத்தக வாசிப்பு மட்டுமா அல்லது அரசியல் இயக்க ஈடுபாடும் இருந்ததா?
என் தலைமுறைக்காரர்கள் வெறும் புத்தக வாசிப்புடன் நின்றதேயில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ அல்லது சிபிஐ(மார்க்சிஸ்ட்) ஆகிய அமைப்புகளின் வெகுஜன அமைப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பலரும் பணியாற்றினர். நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டம், நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சி போன்றவை இளைஞர்களைத் தெருவில் இறங்கிப் போராடத் தூண்டின.
இந்தியாவில் புரட்சி விரைவில் வரும் எனப் பலரும் கனவு கண்ட சூழலில் நான் இடதுசாரி அமைப்பில் சேர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை அறிந்தேன். எனவே சிபிஐ (மா) அமைப்பின் வெகுஜன அமைப்பான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் சமயநல்லுர்க் கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தேன். மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் எழுதிய புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து மார்க்ஸியத்தை ஓரளவு அறிந்தேன்.
அன்றைய காலகட்டத்தில் கட்சி நடத்திய தத்துவ வகுப்புகளில் பங்கேற்று இயக்கவியல் பொருள்முதல் வாதம் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொண்டேன். அப்பொழுது உள்ளூர். சிபிஐ ( மா) கட்சி நிர்வாகிகளுடன் எனக்குக் கொஞ்சம் உரசல் ஏற்பட்டது. அதிலிருந்து விலகிச் சிறிது காலம் மக்கள் உரிமைக் கழகம் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டேன். பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பில் சேர்ந்து மதுரை மாவட்டச் செயற்கமிட்டியில் நானும், பேராசிரியர் மு.இராமசாமியும் செயல்பட்டோம். அப்பொழுது கார்க்கி, பால்சாக், எமிலிஜோலா, ஷெலகோவ், செகாவ், தோல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி, லேர்மன்தவ், லூசூன் போன்றோரின் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதேவேளையில் மாவோ, லெனின், ஹோசிமின், டிமிட்ரோ, பிளாக்னேவ், ஜார்ஜ் தாம்சன் எழுதிய அரசியல் புத்தகங்கள் எனக்குள் அரசியல் உணர்வைத் தூண்டிவிட்டன.
அந்தப் புத்தகங்கள் களத்தில் இறங்கி அரசியல் பணி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தின. .உலக இலக்கிய மாஸ்டர்களின் படைப்புகளை இடைவிடாமல் வாசித்தபோது அவர்களைத்தாண்டி நாம் அப்படியென்ன படைத்துவிடப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. எதுவும் எழுதிடத் தோன்றவில்லை. கொஞ்சம் நிலை குலைந்து இருந்த காலம் அது.
அப்புறம் என்ன நடந்தது?
அப்போதெல்லாம் எங்களைப் போன்ற இளைஞர்கள் மனங்களில் புரட்சித்தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது. அடுத்துப் புரட்சி வந்து விடப்போகிறது; அது வந்தபின்னர் எப்படி அதை எதிர்கொள்வது, என்னென்ன தயாரிப்புகள் செய்வது என்றெல்லாம் தோழர்கள் பேசிக்கொண்டிருந்தோம். இடதுசாரி அரசியல் பிரச்சாரம், அணிகளைக் கட்டமைத்தல், பிற அமைப்பினரை வென்றெடுத்தல் என்று தினமும் திட்டமிட்டுச் செயலாற்றிய காலம், அது.
பொருள் முதல் வாதம், இயங்கியல் போன்ற தத்துவங்களை மணிக்கணக்கில் பேசினோம். அவை ஒருவகையில் லட்சியம் தோய்ந்த மிகவும் மனோகரமான நாள்கள்! பின்னர் அமைப்பின் இறுக்கமான நடைமுறையுடன் ஒத்துப்போகாத சூழல் காரணமாக அமைப்பில் இருந்து விலகிட நேர்ந்தது. அப்புறம் ஒரு விஷயம் அமைப்புக்குள் இருந்து போராடும் மனநிலை, இலக்கியவாதியான என்னிடம் இல்லை என்பதுதான் உண்மை.

பிறகு எப்போது இலக்கிய விமர்சகராக அவதாரம் எடுத்தீர்கள் ?
எண்பதுகளின் இறுதியில் எனக்குள் இருந்த தயக்கத்தின் விளைவாகக் கதை கவிதை என்று எதை எழுதுவதிலும் குழப்பம்; அப்படியே எதையாவது எழுதினாலும் புரட்சிகரமான இதழ்களான புதிய கலாச்சாரம், மன ஓசை இதழ்களிலோ போன்றவற்றில் வெளியிடவும் மாட்டார்கள். 1994 இல் நண்பர் சுரேஷ்குமார இந்திரஜித் தன்னுடைய சிறுகதைத் தொகுப்பான ’மறைந்து திரியும் கிழவன்’ புத்தகத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அவர், வித்தியாசமான மொழியில் புதியதாகக் கதைசொல்லியிருந்தது பிடித்தமானதாக இருந்தது. அக்கதைகளை வாசித்த அனுபவம் குறித்து அவருக்குக் கடிதம் எழுதினேன்.
அதைத் தற்செயலாகப் வாசித்துப்பார்த்த கவிஞர் ராஜமார்த்தாண்டன், அதை எடிட் செய்து தினமணி கதிர் இதழில் ஒரு பக்கம் வருகிற மாதிரி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, ராஜமார்த்தாண்டன் சில புத்தகங்களை எனக்கு அனுப்பி அவற்றைப் படித்து மதிப்புரைகள் அனுப்புமாறு கேட்டிருந்தார். அனுப்பினேன். அவை தினமணி பத்திரிகையில் அவ்வப்போது வெளியாகின. அப்புறம் ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர் கண்ணன், ‘இலக்கு’ இதழின் ஆசிரியர் தேவகாந்தன், சதங்கை ஆசிரியர் வனமாலிகை போன்றவர்கள் தமது பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து புத்தக மதிப்புரைகள் தருமாறு கேட்டனர். இப்படியாகத்தான் இலக்கிய விமரிசனத்துறையில் என் நுழைவு நிகழ்ந்தது.
அப்படியானால் புத்தக வாசிப்பு என்பதும் மதிப்புரை எழுதுவதும் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்டவை என்று கருதுகிறீர்களா ?
ஆம் ,அதில் சந்தேகமில்லை. வாசிப்பு என்ற செயல்பாடு எனக்கும், புத்தகத்திற்குமிடையே நிலவுகிற அந்தரங்க உறவைக் கண்டறிவதற்காக நடக்கிற செயல். அது என்னை நானே புரிந்துகொள்ள முயலும் முயற்சி. வாசித்த நூல்களைப் பற்றி நான் பதிவு செய்கிறபோது,அது என் அந்தரங்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் செயலாகவே அமைகிறது. எப்படி இருந்தபோதிலும், பத்திரிகை ஆசிரியர்களின் வேண்டுகோளை ஒட்டியும், படைப்பாளிகளின் வேண்டுதல் காரணமாகவும் என் சுயவிருப்பத்தின் பேரிலும் பத்திரிகைகளில் தொடர்ந்து புத்தக மதிப்புரைகள் எழுதினேன். இதுவரை இருநூறுக்கும் கூடுதலான புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளேன். இப்பொழுது மதிப்புரை எழுதுவதில் ஆர்வமில்லை.
தமிழில் இலக்கிய விமரிசனத்துறை எப்படியிருக்கிறது?அதில் உங்கள் இடம் என்ன?
தமிழில் இலக்கிய விமர்சனத்தைப் பொறுத்தவரை இரு வகையான போக்குகள் இருகின்றன. கல்விப்புலம் சார்ந்த இலக்கிய விமர்சனப் போக்கு ஒன்று. சிறுபத்திரிகை மரபு சார்ந்து இயங்கும் விமர்சனப் போக்கு இன்னொன்று. க.நா.சு., சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் போன்றோரின் கட்டுரைகள் சிறுபத்திரிகைப் போக்கின் வெளிப்பாடுகள். தெ.பொ.மீ., மு.வ., எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்ற பேராசிரியர்கள் கல்விப்புலம் சார்ந்து இயங்கினர். இன்னொருபுறம் நா.வானமாமலை இடதுசாரி விமர்சகர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை. அவருடைய வழியினராகத் தி.சு.நடராசன், ஆ.சிவசுப்பிரமணியன், தமிழவன், வெ.கிருஷ்ணமூர்த்தி, ந.முத்துமோகன், பா.ஆனந்தகுமார் போன்ற விமர்சகர்களைச் சொல்லலாம்.
கலை கலைக்காகக் கோட்பாட்டை முன்னிறுத்திய க,நா.சு., போன்றோரின் விமர்சனப் புன்புலத்தைக் கட்டுடைத்தால் சநாதனம் பொதிந்து இருப்பதை அவதானிக்க முடியும். .. பிரதாப முதலியார் சரித்திரம் நாவலைச் செயற்கையானது என்று நிராகரித்த அன்றைய விமர்சகர்கள், ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் நாவலைத் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடினர். சநாதனக் கருத்தியல் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள கமலாம்பாள் சரித்திரம் நாவலைச் சி.சு.செல்லப்பா உள்ளிட்ட பார்ப்பன விமர்சகர்கள் ஏன் கேள்விக்குட்படுத்தவில்லை என்ற கேள்வி இன்று தோன்றுகின்றது.
இலக்கியத்தில் பிரச்சாரம் கூடவேகூடாது என்ற முழக்கத்தை முன்வைத்த க,நா.சு.குழுப் படைப்பாளிகளும் விமர்சகர்களும் தங்களுடைய படைப்புகளில் சநாதனக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்ததுதான் உண்மை. இடதுசாரி விமர்சகர்கள் விமரிசனத்துறையில் சமூக அறிவியல் சார்ந்து அடிப்படைக் கருதுகோள்களை முன்வைக்கின்றனர்.
சி.சு. செல்லப்பாவோ ஐரோப்பிய இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் வடிவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்தார்; தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டாடினர். முன்னொரு காலத்தில் கொண்டாடப்பட்ட ஜே.ஜே.சில குறிப்புகள் போன்ற நாவல்களை மறுவாசிப்புக்குபடுத்தினால், அவை தமது காலத்தைத் தாண்டி நிற்குமளவுக்குத் திராணியுள்ள படைப்புகள் அல்ல என்பது புலனாகும்.
எண்பதுகளில் தமிழ் விமர்சனத் துறையில் அறிமுகமான சரிரியலிசம், அந்ந்நியமாதல், எக்சிஸ்டென்ஸியலிசம், அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகள் இலக்கிய உலகில் நிலவிய விமர்சன மரபை மாற்றியமைத்தன. எந்தவொரு படைப்பும் சமகாலத்திய மக்களின் வாழ்க்கை, அரசியல், சமூகச் சூழல்களின் விளைபொருள்களாகவே அமைகின்றன. இவற்றையே தம் உள்ளடக்கத்தில் அறிந்தும், அறியாமலும் பதிவாக்குகின்றன.
பின் நவீனத்துவ வாசிப்பு முறை, ஏற்கெனவே கட்டியமைக்கப்பட்டுள்ள பீடங்களைத் தகர்ப்பதாக உள்ளது. இன்றைய வாசகர்கள் வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் இருப்பதில்லை. மின்னணு யுகம் என்பதால் படிக்கக் கிடைக்கிற புத்தகங்கள் பற்றி உடனே தமது கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பதிவாக்குகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் நான் இடதுசாரி விமர்சகர்களான நா.வானமாமலை, தி.சு. நடராசன், தொ.பரமசிவம், ஜார்ஜ் தாம்சன் போன்றவர்களை ஆசான்களாகக் கருதினேன். 90களுக்குப் பின்னர் ஒவ்வொரு படைப்பின் பின்புலமாகச் செயல்படுகின்ற நுண்ணரசியலை அவதானித்து மறுவாசிப்புச் செய்வதில் என் கவனம் திரும்பியது. பின்னர் எனக்கான விமர்சன மொழியை உருவாக்கிக்கொண்டேன். எல்லா இலக்கியப் படைப்புகளும் பிரச்சாரங்களே என்பதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.
மின்னணு காலகட்டத்தில் நவீன இலக்கியத்தின் இடம் என்னவாக இருக்கிறது?
இன்று அச்சு ஊடகங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஐந்தரை லட்சம் பிரதிகள் விற்ற தமிழ் வெகுஜனப் பத்திரிகைகள், இன்று 50,000 பிரதிகளை விற்கமுடியாமல் திணறுகின்றன. அச்சில் பிரசுரமாகிடும் இலக்கியப் படைப்புகளின் நிலையும் சொல்லிக்கொளவதுபோல இல்லை. ஒரு பதிப்புக்கு 1,000 பிரதிகள் விற்ற நிலைமை மாறி, இன்று 300 பிரதிகள் என்று சூழல் மாறியுள்ளது. அதிலும் பிஓடி தொழில்நுட்பம் மூலம் 50 அல்லது 100 பிரதிகள் அச்சடிக்கிறபோது படைப்புப் பற்றிய பேச்சுகள் உருவாகிட வாய்ப்பு மிகவும் குறைவு.
இன்று தமிழில் அற்புதமான கவிதைத் தொகுப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கவிதைத் தொகுப்புகளின் விற்பனையும் அவை குறித்த பேச்சுகளும் உற்சாகம் அளிக்கவில்லை. பின்நவீனத்துவக் கோட்பாடு, வாசகர்கள் எல்லாரையும் விமர்சகர்களாக மாற்றியுள்ளது. ஆனால் விமர்ச்னங்கள் மின்னணு வெளியில் கரைந்து மிதக்கின்றன.
புத்தக வாசிப்பைப் பொறுத்தவரையில் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதில் இளம் படைப்பாளர்களுக்குப் பெரிதும் ஆர்வம் இல்லை. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பிரபஞ்சன் போன்றோரின் படைப்புகளை வாசிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதேவேளையில் மின்னணு ஊடகங்களில் சரளமாக எழுதிப் பழகிய இளைஞர்கள், முதல் புத்தகமாகக் காத்திரமான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிப் பிரசுரிப்பது நம்பிக்கை அளிக்கிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள், பாதிரியார் போன்றோர் அண்மையில் எழுதியுள்ள படைப்புகள், பிரமிப்பைத் தருகின்றன.
சிலர் பள்ளியில் தொடங்கி ஆங்கில வழியில் படித்தாலும் படைப்பாக்கத்தில் தமிழ் மொழியை நேர்த்தியுடன் கையாளுகின்றனர். இன்று பல்வேறு நாடுகளில் வழக்கினில் இருக்கின்ற தமிழர்களை மின்னணு வெளியானது படைப்புகளின்மூலம் ஒருங்கிணைக்கின்றது. கார்ப்பரேட்டுகளின் பொருளியல் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பண்பாட்டின் ஆதிக்கத்தில் தமிழ் இலக்கியப் படைப்புகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது.
எல்லாருடைய கைகளிலும் இருக்கின்ற ஆண்டிராய்ட் மொபைல்களில் வம்பும் கேளிக்கையும் கொப்பளிக்கிற பத்து விநாடிகள் இயங்குகின்ற படங்களைப் பார்க்கின்ற போதைக்குள் மூழ்கியிருக்கின்றவர்களுக்கு எதிர்காலத்தில் இலக்கியப் படைப்புகள் தேவைப்படுமா?
தலித்தியம், பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்கள் இன்று வலிமையுடன் பொதுவெளிகளில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சாதி என்ற வல்லரக்கப் பிடியில் இந்தியச் சமூகம், குறிப்பாகத் தமிழ்ச் சமூகம் உழன்றுகொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இலக்கியப் பிரதிகளின் முக்கியத்துவம் என்ன? அப்படியொரு முக்கியத்துவம் உண்மையில் இன்று பிரதிகளுக்கு இருக்கிறதா?
தலித்தியம், எண்பதுகளில் முகிழ்த்த நம்பிக்கைகளில் ஒன்று. எழுபதுகளில் சோசலிசப் புரட்சிக்குப் பின்னர் சாதி ஒழிந்துவிடும் என்று தோழர்கள் நம்பினோம். பெரியார் முன்வைத்த சாதி மறுப்புத் திருமணம் பரவலாகிச் சாதி தானாக அழிந்துவிடும் என்று நம்பினேன். ஆனால், சாதி இன்று வெட்டவெட்டத் துளிர்க்கும் ராட்சதச் செடியாக வளர்ந்திருக்கிறது. சாதி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஏன் இப்படி? கடந்த ஆயிரமாண்டுகளாக மநுதருமத்தின் ஆதிக்கத்தில் நிலைத்திருக்கிற வைதிக சநாதனம் இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இஸ்லாமியர் படையெடுப்புத் தொடங்கி, நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் போன்றோரின் காலனியாதிக்க ஆட்சிகளில் விளிம்புநிலையினரின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குள்ளானபோது சாதிய நிறுவனம், ஏதோ ஒருவகையில் பாதுகாப்பு வளையமாக இருந்திருக்கிறது. ஜமீன்தாரின் வரி விதிப்பை எதிர்த்துப் பள்ளுபறை அடங்கலாகப் பதினெட்டுச் சாதிகளும் ஒன்றுபட்டுப் போராட வருக என்று அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற சூழலில் வயலில் வேலை செய்த உழைப்பாளிகள் உணவுக்குக்கூட திண்டாடி இருக்கின்றனர். இன்று பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சாதியக் கட்டுமானங்களைத் தொடர்ந்து தக்கவைக்கின்ற நுண்ணரசியலைச் செய்துகொண்டிருக்கின்றன; பட்டியலின மக்களிடையில் பிளவுகளை உருவாக்கி சநாதனத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிக்கின்றன. சாதியம் எற்படுத்துகின்ற இழிவை நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களால் அறிய முடியாது. இந்தச் சூழலில் தலித் இலக்கியம் காலங்காலமாக ஒடுக்கப்படுகின்ற மக்களின் குரலைப் பதிவு செய்கின்றது. பட்டியல் இன மக்களின் இலக்கியம் சேர்ந்ததுதான் நவீனத் தமிழிலக்கியம்.
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் காலங்காலமாகப் பால்ரீதியில் ஒடுக்கப்பட்டிருந்த சூழலை எதிர்த்துப் போராடிய பெண்களின் குரல்களைப் பதிவாக்கியுள்ள பெண்ணிய எழுத்துகள், அவசியமானவை. அவை புதிய தலைமுறையினருக்கு மாறிவரும் பெண்ணியச் சூழலை அறிமுகப்படுத்துகின்றன.
உங்கள் விமர்சனப் பார்வை, அணுகுமுறைகள் பற்றி…
கடந்த இருபதாண்டுகளாக நவீன இலக்கியம் சார்ந்துதான் நான் பெரிதும் விமர்சனம் செய்கிறேன். கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் அழைப்பின் காரணமாகச் சங்க இலக்கியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை மறுவாசிப்புச் செய்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறேன். ஒப்பீட்டளவில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகள், கல்விப்புலத்தில் அசைவுகளை ஏற்படுத்தும் வல்லமையுடையன.
பொதுவாகக் கட்டுரை எழுதிட கடுமையான உழைப்புத் தேவைப்படுகிறது. தொடர்ந்து பல்துறை நூல்களை வாசிக்க வேண்டியுள்ளது. காத்திரமான எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலும் ஏதோ ஒருவகையில் என்னுடைய கருத்தியலையும் பார்வைக் கோணத்தையும் நுட்பமாக வடிவமைக்கின்றன.
இளைய தலைமுறையினருக்குச் சங்க இலக்கியம் எப்படித் தேவைப்படுகிறது?
சங்க இலக்கியப் படைப்புகளை மறுவாசிப்புச் செய்யும்போது இன்றைக்குத் தேவைப்படும் கருத்துக்களைக் கண்டறிந்திட முடியும். சங்க காலத் தமிழர், சூழலியல் சார்ந்த தாவரங்கள், உயிரினங்கள் உள்ளிட்ட பருண்மையான பொருட்கள் எல்லாம் ஐந்து பூதங்களால் ஆனவை என்று கருதினர். புறநானூறு தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள முடி நாகனார் என்ற புலவர் இயற்றிய ’மண்டினேந்திய நிலனும்’ என்று தொடங்கும் பாடல், ஐம்பெரும் பூதங்களை இயற்கை என்று வரையறுக்கின்றது. உலகம் எனப்படுவது நிலம், நெருப்பு, நீர், வளி, விசும்பு ஆகியன கலந்தவை என்று தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
சங்கத் தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர்; இயற்கையைக் கடவுள் எனக் கருதினர். இயற்கையானது ’சூழல்’ என்ற சொல்லினாலும் அறியப்பட்டது. சங்கத் தமிழர், சூழலைப் போற்றி வளர்த்துத் தங்களைக் காத்துக்கொண்டனர்; சூழல் பேணப்பட்டால்தான் தங்களுடைய வாழ்க்கை வளமடையும் என அறிந்திருந்தனர்.
அதியற்புத ஆற்றலைக் கடவுளாக்கி, கடவுளர் கட்டுக்கதைகளையும் புராணங்களையும் உருவாக்கி, மனிதர்களைப் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வைப் பிரித்திட்ட வைதிக சநாதன மரபுக்கு முற்றிலும் எதிரானது, சங்க மரபு. அந்தவகையில் சங்கப் பாடல்கள், இன்றையத் தமிழக அரசியல் சூழலுக்கும் பொருத்தமாக விளங்குகின்றன. கீழடியில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் காலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தவை. அங்கு இதுவரையிலும் கடவுள் தொடர்பான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதைச் சங்கப் பாடல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
உலகமெங்கும் செவ்வியல் மொழிகளாகக் கருதப்படுகின்ற சீனம், கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளின் படைப்புகள் பெரிதும் புராணக் கட்டுக்கதைகள், கடவுளர்கள் பற்றிய அதியற்புதப் புனைவுகளாக இருக்கும்போது, சங்கப் படைப்புகளில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று சநாதனத்தை ஒழிக்கவேண்டுமெனத் தமிழ்நாட்டில் எழும்பியுள்ள எதிர்ப்புக் குரல் சங்கத் தமிழரின் தொடர்ச்சி என்றுதான் கருத வேண்டியுள்ளது.
இலக்கிய விமர்சனம்தவிர வேறு எந்தவகையான துறையில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம்?
சமுகம், அரசியல், பண்பாடு சார்ந்து தீவிரமாகக் கட்டுரைகள் எழுதிட எனக்கு ஆர்வமுண்டு. கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது உயிர்மை, உயிர் எழுத்து போன்ற பத்திரிகைகளில் மோடி, ஜெ.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை -அதிகாரத்தில் இருக்கும்போது- கடுமையாக விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினேன். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தில் இயற்றப்பட்ட விதிகளைப் ;பட்டி டிங்கரிங்; பார்த்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்படி என்மீது உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு என்பதை அறிந்தும் செயல்பட்டேன்.
விமர்சனம் என்பது இலக்கியம் மட்டுமின்றி தமிழர் வாழ்க்கையுடன் தொடர்புடையது. என்னுடைய அரசியல், சமூக விமர்சன எழுத்து முயற்சிகளுக்குப் பல்லாண்டுகளாகப் பின்புலமாக இருக்கின்ற உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் ஆகியோரை அவசியம் இங்குக் குறிப்பிட வேண்டும். அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
உங்களுடைய புத்தகங்களில் எவற்றை ஏன் முக்கியமாகக் கருதுகிறீர்கள்?
நான் எழுதிய நூல்களில் கிராமத்துத் தெருக்களின் வழியே’ புத்தகம் முக்கியமானது. 1960முதல் 80 வரையிலான காலத்தில் எங்கள் ஊரான சமயநல்லூர் எப்படி இருந்தது என்று 41 கட்டுரைகள்மூலம் 384 பக்கங்களில் விரிவாகப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். என் கண் முன்னர் நடைபெற்ற சம்பவங்களுக்குச் சாட்சியமாக நான் இருந்தததைப் பதிவு செய்துள்ளேன். அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள், வாசிப்பின் வழியாக வாச்கர்களைப் பின்னோக்கி இழுத்துச் சென்று நினைவுகளில் மிதந்திடச் செய்திடும். சமகாலத்தின் வரலாறாக விரிந்திடும் அந்தப் புத்தகம் இன்னும் நூறாண்டுகள் கழிந்த பின்னர் வாழ்கின்ற தமிழர்களுக்குப் பண்டையத் தமிழர் வாழ்க்கை இப்படியெல்லாம் இருந்தது என்று சொல்கிற வரலாற்று ஆவணமாகிவிடும்.
’என் இலக்கிய நண்பர்கள்’ புத்தகம் நான் நேரில் கண்டு பழகிய இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவுகள். எல்லாக் கட்டுரைகளும் படைப்பாளர்கள் வாழ்ந்த காலத்தில் பிரசுரமானவை. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 15 எழுத்தாளர்களில் பிரபஞ்சன், நகுலன், கந்தர்வன், ராஜமார்த்தாண்டன், சுந்தர ராமசாமி, அப்பாஸ் அகாலமாகிவிட்டனர். என்றாலும் எனது பதிவுகள்மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 41 சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள், காரைக்காலம்மையார் பாடல்கள், ஆண்டாள் பாடல்கள் உள்ளிட்ட ’அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ தொகுப்பு நூலுக்கு நான் எழுதிய உரையும் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
விமர்சனத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?
எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. எந்தவொரு படைப்பும் காலங்கடந்து நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு லாபிகளின் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட படைப்புகள் சில பத்தாண்டுகளில் கவனிப்பு இல்லாமல் போய்விடுகின்றன. காலங்கடந்த இலக்கியப் படைப்பைப் பற்றிய பிரமை எழுத்தாளர் பலரையும் ஆட்டிப் படைக்கின்றது. படைப்பாளரே இல்லாதபோது அவர் எழுதிய படைப்பு புகழோடு நிலைத்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. எனது பதின்பருவத்தில் சிலாகித்துச் சொல்லப்பட்ட மோகமுள் நாவல் பற்றிப் பலரும் பித்துப் பிடித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த நாவல் தொடர்கதைக்கான பலவீனத்துடன் வளாவளாவென்று எழுதப்பட்டது என்பதற்கு அப்பால் சொல்வதற்கு ஏதுமில்லை என்பது கல்லூரி மாணவனான என்னுடைய கருத்து.
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பாபுக்கும் யமுனாவுக்கும் கும்பகோணத்துத் தெருக்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. கடவுளுக்குக்கூட அல்காலம் செல்காலம் பற்றிச் சொல்கிற புலவர் மரபில் வந்த நாம் காலத்தால் அழியாத படைப்பு என்று பெருமிதம்கொள்ள என்ன இருக்கிறது? படைப்புகள் காணாமல் போகும் காலத்தில் விமர்சனங்களும் காணாமல் போய்விடும். எதிர்காலத்தில் என்னுடைய விமர்சனப் புத்தகங்கள், இலக்கிய வரலாற்றில் வெறும் பெயர்களாகப் பதிவாகிடும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
உங்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி ஏதேனும் சொல்வீர்களா?
தமிழ்நாடு முழுக்கப் பரவலாகச் செயல்படுகின்ற தனியார் நூலகங்களில் அரிய தமிழ் ஆவணங்கள் புதைந்து கிடைக்கின்றன. அந்த நூலகங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுசெய்து தகவல்களைத் திரட்டி, விரிவான கையேடு தயாரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட விருப்பம் உள்ளது. அந்தக் கையேடு எதிர்காலத் தலைமுறையினருக்கு ஆவணமாக விளங்கும்.
சிலப்பதிகாரக் காப்பியம் குறித்து எதிர்மறையான கருத்து எனக்கு உண்டு என்றாலும் வணிகக் குலத்தில் பிறந்த கைம்பெண்ணான கண்ணகியைப் பத்தினிக் கடவுளாக்கிய செயல், முக்கியமானது. அந்தக் கதை, யதார்த்தத்தில் நடைபெறவில்லை என்றாலும்கூட புகார் நகரிலிருந்து கண்ணகி நடந்து சென்ற பாதையில் நடந்துபோய் ஆவணப்படம் எடுத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்ற விருப்பம், எனக்கு இருக்கிறது. சரி, பார்ப்போம்.
உங்களுடைய எழுத்துப் பணி குறித்து உங்களுடைய குடும்பத்தினரின் அபிப்ராயம் என்னவாக இருக்கிறது?
நான் தொடர்ந்து எழுதுவதற்குப் பின்புலமாக விளங்குகிறவர் என் துணைவி உஷா. என்னுடைய பெரும்பாலான படைப்புகளின் முதல் வாசகரும் அவர்தான். அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகளை வசித்துவிட்டுத் தன்னுடைய கருத்துகளை எதிர்மறையாகவும் என்னிடம் பகிர்ந்துகொள்வார். எங்கள் வீட்டிற்கு வந்த எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பட்டியல் பெரியது. அவர்கள் எல்லோரையும் வரவேற்று அவர் உபசரித்த காரணத்தினால்தான் என்னால் இலக்கியத்தளத்தில் நண்பர்களுடன் ப்ரியமுடன் இயங்கிட முடிகின்றது. என்னுடைய மகன் கௌதமும் மகள் மோனிஷாவும் எனது இலக்கியச் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டிருக்கிறர்கள்.
குடும்பப் பின்புலம் ஒத்துழைப்புத் தருவதால்தான் என்னால் தொடர்ந்து எழுதிட முடிகிறது. அது, முக்கியம் இல்லையா தோழர்?