நேர்காணல்:
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
சந்திப்பு : பெரம்பலூர் காப்பியன்
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன் அவர்களுடன் திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி பள்ளியில் நடைபெற்ற விழாவின் பின் நடந்த நேர்காணல் இது.

‘தமிழ் பண்பாட்டு மீட்டுருவாக்கத்தில் சிற்றிதழ்கள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். மணிமேகலை நாடகத்தில், காப்பியத்தில் நாடகக் கூறுகள் என்று ஆய்வு செய்தவர். ‘தமிழ் பண்பாட்டு மீட்பர்’, ‘சீர்மிகு சிற்றிதழ் தமிழ் காவிரி’, ‘நாளை விடியும் சிற்றிதழ்’ அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். பெரம்பலூர் அரசுப் பள்ளி ஆசிரியர்)
உங்கள் எழுத்துக்களில் நாவல்கள் அதிகம் இடம் பெற்று இருக்கின்றன. இது குறித்து சொல்ல முடியுமா… இதுவரை 25 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. உங்களுடைய நூறாவது நூலாக ‘சிலுவை’ என்ற 900 பக்க நாவல் வெளிவந்திருக்கிறது.
வெவ்வேறு வகைப் படைப்புகளை எழுதும் நான் கடந்த 10 ஆண்டுகளாக நாவல்களில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். காரணம் விரிவான தளங்களில் பல விஷயங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என்பது தான் காரணம். வாசகர்கள். நாவல்களுக்கு அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
உங்களின் ‘சிலுவை’ நாவல் நூறாவது புத்தகம் அதைப்பற்றி சொல்லுங்கள்.
கிறிஸ்துவ பாதிரியாக இருந்த எபிரேம் என்ற முதியவரை பன்னிரண்டு ஆண்டுகளூக்குமுன் சேவூர் புளியம்பட்டி சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தித்தேன். பைபிளில் வரும் பல நிகழ்ச்சிகள் அந்த தேவாலயத்தின் உள்ளேயிருந்த சுவர்களில் சித்திரங்களாக வரையப்பட்டும் தூண்களாக அமைக்கப்பட்டு இருந்தன. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் அறிமுகமானார்.
அவர் ஓர் ஆய்வாளர் என்று சொல்லிக் கொண்டார். அவர் சோமனூர் என்ற பகுதியைச் சார்ந்தவர் என்ற வகையில் அவருடைய ஆய்வைப் பற்றி சொன்னார். நான் அவரின் சொந்த ஊரான சோமனூர் பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நானும் பேசினேன். அவர் ஆய்வாளர் என்ற வகையில் சோமனூர் பற்றி செய்திருக்கிற ஆய்வுகளையும் அவை கிறிஸ்துவப் பத்திரிகைகளில் வந்திருப்பது பற்றியும் நிறைய சொன்னார்.
எனக்கு பெரிய நாவல்கள் எழுதவேண்டிய ஆசை இருந்தது. ஆனால் அதற்கான களம் என் மனதில் இல்லை. என் நாவல்கள் எல்லாம் 300 பக்கங்களுக்குள் அடங்கிப் போகும் அளவில் இருந்திருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு பெரிய நாவலை சோமனூரைக் களனாகக்கொண்டு கடந்துபோன 300 ஆண்டு சரித்திரத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நான் வாழ்ந்த மக்கள், நிலம் பற்றி நான் அதிகம் எழுதவில்லை. என்னுடைய மூதாதையர்களின் தொழில் சார்ந்தும் என்னுடைய பரம்பரை சார்ந்தும் அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் நான் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனவே சோமனூரைப் பற்றி எழுதுவது என்பது என் மூதாதையர் நிலம் சார்ந்தும், என் மூதாதையர் தொழில் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது என்று பட்டது. அந்த கிறிஸ்துவ பாதிரியார் ஏறத்தாழ ஒரு முதுமை இல்லத்தில்தான் இருந்தார். அவரிடம் இருந்து சில சேகரித்துக்கொண்ட தகவல்கள் நாவல்கள் எழுத உதவின. பின்னால் அவர் வால்பாறைக்குச் சென்றுவிட்டதாக சொன்னார்கள்.
வால்பாறை போன்ற இடங்களின் சீதோஷ்ணம் அவருடைய உடல்நிலைக்கு எப்படி ஒத்துவரும் என்பதுதான் என்னுடைய கவலையாக இருந்தது. ஆனால் எந்தத் தொடர்பும் இல்லாமல் தான் இருந்தேன். அவரை தேடிச் சென்ற ஒரு முறை அவர் இறந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனாலும் அவர் சொன்னபடி இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம்தான் சென்று சேரவேண்டும் என்பதால் நான் அதை ஒரு நாவலாக்கும் பணியில் உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த நாவலை நான் எழுதினேன்.
இந்த நாவல் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது அச்சிலும் புத்தகமாகவும் வருவது என்பது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக இதை எதிர்பார்த்து இருந்தேன். இடையில் வந்த கொரோனா காலம் இந்த தாமதத்தை அதிகப்படுத்தி விட்டது. அந்த வகையில் இந்த நாவல் என்னுடைய நூறாவது புத்தகமாகவும் அமைந்துவிட்டது.
கலாச்சார சரித்திரம் என்பது அரசியல் சரித்திரம் மற்றும் கடந்து போகும் ஆண்டுகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் என்றபடி இருக்கும். இந்தக் கலாச்சார சரித்திர நிகழ்வுகளை ஒரு நாவலுக்குள் கொண்டு வருவது, அந்த மனிதர்கள் வாழ்க்கையை இதற்குள் வைத்துப் பார்ப்பது எனக்கு தேவையானதாக இருந்தது.
சோமனூர் என்ற பகுதியில் திப்பு சுல்தான் போன்றவரின் வருகை கிறிஸ்தவர்களின் முக்கிய இடமாக இருந்த சத்தியமங்கலம், கொடிவேரி போன்று சோமனூர் விளங்கிய விதம், நெசவாளர் குடும்பங்களின் நிலை, பஞ்ச காலங்கள், மக்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிய வித்தைகள் என்று தொடர்ந்தது. என் நாவல் பின்னால் இரண்டாவது பாகமாக சோமனூர் மற்றும் கோவை பகுதிகளில் தொழிற்சங்க வரலாற்றுப் பதிவுகளாவும் மாறிவிட்டது. இன்னொரு பகுதியாக நான் அவர்களை திருப்பூருக்கு கொண்டுபோனேன்.
காரணம் 10 வயது வரைதான் அந்த செகடந்தாளி கிராமத்தில் நான் வசித்து வந்தேன், தண்ணீர் பிரச்சினை, மேல் சாதி ஆதிக்கவாதிகளின் வன்முறை காரணமாக திருப்பூருக்கு குடி பெயர்ந்த நெசவாளர் குடும்பங்களில் என் குடும்பம் ஒன்றாகிவிட்டது. எனவே என் நாவலை அங்கு நகர்த்துவதும் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அந்த நெசவாளி குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் பொதுவுடமை இயக்கம் சார்ந்த நடவடிக்கைகளும் தலைமறை வாழ்க்கையும் என்று தொடர்ந்தது. பின்னால் திருப்பூரில் பின்னலாடை வளர்ச்சியும் நவீன யுகத்தில் மற்றும் உலகமயமாக்களில் தொழிலாளர்கள் நிலைமை என்று தொடர்ந்தது.
என் வாழ்க்கை அனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்டவற்றையும் சோமனூர், திருப்பூர். திருப்பத்தூர் என்று விரிவாக்கிக் கொண்டேன். நினைவுகளை, கலாச்சார பதிவுகளை பகிர்ந்துகொள்கிற அனுபவத்தில் இந்த நாவலை வடிவமைத்தேன், எனது பல படைப்புகளுக்குள் வந்து அமைந்திருந்த பின்னல் தொழிலும் விசைத்தறித் தொழிலும் நெசவுத் தொழிலும் இயல்பாகவே இந்த நாவலுக்குள்ளும் வந்துவிட்டன.
சமீப காலம்வரை நீண்ட கடல் பயணத்தில் அலைக்கடிக்கப்படுகிற படகு வாசிகள், படகுப்பயண வாதிகள்போல இருத்தலியல் சிக்கல்களும் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் மாறி மாறி செயல்பட என் கதாபாத்திரங்கள் அமைந்து விட்டார்கள். அந்த வகையில் நினைவுகளையும் சரித்திரம் சொல்லும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் நினைவுகளாகப் பகிர்ந்துகொள்கிற வாய்ப்பும் இந்த நாவல் மூலம் ஏற்பட்டது.
உங்களின் நாவல்கள் பல மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கின்றன. அவை குறித்து?
சமீபத்தில் ‘நைரா’ என்ற நாவலை கோழிக்கோடு லிபி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இது திருப்பூரில் வாழும் நைஜீரிய மக்களின் வாழ்க்கை உள்ளூர் மக்களுக்கு அதிர்ச்சி அலைகளைத் தருவதையும் அவருடைய வாழ்க்கையையும் சொன்ன நாவல். இதைத்தவிர ‘சாயத்திரை’, ‘கோமணம்’, ‘சுடுமணல்’, ‘சப்பரம்’ போன்ற நாவல்கள் மலையாளத்தில் வெளிவந்திருக்கின்றன.. ஜெயமோகன் மொழிபெயர்த்த ‘ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும்’ என்ற சிறுகதை உட்பட ஆற்றூர் ரவிவர்மா, சாபி, ஸ்டான்லி, அஞ்சு சஜித் மொழிபெயர்த்த பல சிறுகதைகள் வந்துள்ளன.
நாவலாசிரியராக ஒரு கதையின் மையக்கருவை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
நம்மைப் பாதிக்கிற விஷயங்களை நாம் பெரும்பாலும் எழுதுகிறோம். நாவலுக்கான தளத்திலும் வடிவத்திலும் அதைச் சொல்ல முடியும் என்று தெரிகிறபோது அதை நாவலாக எழுதுகிறேன். ஆகவே அனுபவம், வாசிப்பு, பார்வை சார்ந்து மையம் தானாக சேர்ந்து வருகிற அம்சம்தான். அதை சிறுகதை ஆக்குவதோ, நாவலாக்குவதோ அதன் அனுபவம், காலம் சார்ந்திருக்கிறது. அப்படித்தான் நான் வாழ்ந்த ஹைதராபாத், திருப்பூர் உட்பட பல நகரங்களின் பாதிப்பில் உருவானவை என் நாவல்கள்.
உங்களின் பல படைப்புகள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. சுமார் 20 நூல்கள் வந்துள்ளன. அதில் முக்கியமானவை புதினங்கள். அவை பற்றி. ஆங்கில மொழிபெயர்ப்பு திருப்தி தருகிறதா?
சமீபத்தில் புஸ்தகா நிறுவனம் என்னுடைய 1098 நாவல்களையும் ‘ஓ ஹைதராபாத்’ கட்டுரை தொகுப்பையும் ஆங்கிலத்தில் கொண்டு வந்திருக்கிறது. டெல்லி ஆதர்ஷ் பிரஸ் மாலு, முறிவு போன்ற நாவல்களை வெளியிட்டு இருக்கிறது.
‘சாயத்திரை’ போன்றவை பாண்டிச்சேரி ராஜா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தது. இதுபோல சுமார் 20 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை சார்ந்த பெரிய எதிர்வினைகள் எனக்கு வந்தடைவது இல்லை. அவற்றை அனுப்பவும் பதிப்பாளர்கள் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆங்கில நூல்களுக்கு விரிவான சந்தை இருப்பது ஆறுதல் தருகிறது.
‘அந்நியர்கள்’ என்ற புதினம் எழுத்து அறக்கட்டளை மூலம் சிறந்த நாவலுக்காக ஒரு லட்சம் ரூபாய் பரிசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பெற்றது. அது ஏற்படுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
திருப்பூர் இடம் பெயர்ந்து வாழும் மக்களின் புகலிடமாகிவிட்டது. திருப்பூரின் மக்கள் தொகையில் பாதிப் பேர் இடம் பெயர்ந்து வந்த மக்கள்தான். அவர்களை மையமாக்கி எழுதினேன். உள்ளூர் மக்கள் மெல்ல அந்நியர்கள் ஆகிற சூழல் உறுத்துகிறது
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சார்ந்து நாவல் ஏதாவது எழுதி உள்ளீர்களா?
என்னுடைய ‘கடவுச்சீட்டு’, ‘மாலு’ போன்ற நாவல்கள் மலேசியாவாழ் தமிழர்களின் வாழ்க்கை பற்றி சொல்லி இருப்பவை. சுமார் 25 சிறுகதைகளில் அவர்களின் வாழ்க்கையை இங்கிலாந்து, ஐரோப்பிய, மலேசிய, சிங்கப்பூர் சூழல்களின் பின்னணியில் எழுதி இருக்கிறேன்.

புலம்பெயர்ந்து வாழும் மலையக மக்கள் குறித்து உங்களுக்கு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
இப்போது ‘மலையகம் 200’ பற்றிய கருத்தரங்குகளும் புத்தக வெளியீடுகளும் நிறைய நடைபெறுகின்றன.இலங்கைக்கு ஒருமுறை செய்திருக்கிறேன். என்னுடைய முறிவு என்ற உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட நாவல் அங்கு உதயணன் இலக்கியப் பரிசு பெற்றபோது அதைப் பெறுவதற்காகச் சென்று கொழும்பு தமிழ்ச் சங்க விழாவில் கலந்துகொண்டேன். அப்போது மலையக மக்கள் வாழ்வைப்பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.
காந்தி கிராம பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பல்கலைக்கழகம் புலம்பெயர்ந்த மக்கள் வாழ்க்கை பற்றிய படைப்புகளையும் குறிப்பாக மலையக மக்கள் சார்ந்த படைப்புகளைப் பற்றியும் பல கருத்துக்களை நடத்தி இருக்கிறார்கள். மலையக மக்கள் சார்ந்த பல படைப்புகளைப் படித்து இருக்கிறேன். ஆனால் இன்னும் அந்தப் பகுதிக்குச் சென்று மக்கள் வாழ்வை நேரடியாக அறிந்து கொள்வது, அவற்றை தீவிரமான வாசிப்பு என்பது அவர்கள் பற்றிய நாவல் எழுதத் தூண்டும். காலம் வழி விட வேண்டும்.
உங்களின் முதல் புதினம் ‘மற்றும் சிலர்’ இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பற்றியதுதானே?
என் முதல் புதினம் ‘மற்றும் சிலர்’. இதை ஆரம்பத்தில் நர்மதா பதிப்பகம், பின்னால் மருதா டிஸ்கவரி புக் பேலஸ் ஆகியவையும் வெளியிட்டுள்ளன. இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன்.தொலைதொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது. எங்கள் குடும்பத் தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்டம் வந்து குடியேறியவர்கள்.
நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன் (திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள்).
செகந்திராபாத்தில் வசிக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில தினசரியைப் புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு.
சனி, ஞாயிறுகளில் திவோலி, லிபர்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம், இந்தியத் திரைப்படம் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும்.
தொலைக்காட்சி, தொலைபேசித் துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலகத் ‘திரைப்படம்’, இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலைத் திட்டத்தை மாற்றி வைத்துக்கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக்கொள்வேன்.
அப்படித்தான் லிபர்டி பிரத்யேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது. காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன். காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்தப் படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலைப்பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்குச் செல்வேன்.
பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது என்ற படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலைக் காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள். சத்யஜித்ரே, மிருணாள் சென் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்டி திரையரங்கில் பார்த்தேன். இது ஒரு வகை அனுபவம்.
இன்னொரு பக்கம் தமிழ்த் திரைப்படங்களை பார்க்கக் கூட ஆவலாக இருக்கும். எப்போது எந்த காட்சியில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஆங்கில தினசரியில் விளம்பர பக்கத்தில் 2க்கு 2 இஞ்ச் வடிவத்தில் ஒரு சிறு செய்தியாக வந்து இருக்கும். அதைப் பார்த்து தமிழ்த் திரைப்படத்திற்குப் போகிற திட்டத்தைப் போட வேண்டும்.
வீடியோ இல்லாத காலம். தமிழ்த் திரைப்படம் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தியேட்டரின் காலைக் காட்சிக்கு செகந்திராபாத், ஹைதராபாத் இரட்டை நகரத் தமிழர்கள் தவம் இருக்க வேண்டியிருக்கும்.
ஒரே ஒரு காலை காட்சி பெரும்பாலும் இருக்கும். அப்படம் தமிழ்நாட்டில் வந்து ஐந்து ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டிய கட்டாய நிபந்தனைகளை ஒன்றாய் அதில் திரையிடப்படும் தமிழ் படங்களின் வகை இருக்கும். அப்படித்தான் ஒரு ஞாயிறு காலையில் ரிக்சாக்காரன் திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். படம் பார்க்கிற மனநிலை இல்லை ஆனால் பொழுது போக வேண்டி இருந்தது. அதனால் டிவோலி திரையரங்கிற்கு சென்று இருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் காரணமாக பதிவு பெற்று உள்ளே சென்று உட்கார்ந்தேன்.
பலர் குறிப்பிடும்படியாக தங்களின் அருகில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் ஹைதராபாத் செகந்திராபாத் பகுதிகளில் இருக்கக்கூடிய சின்னாளப்பட்டி சேர்ந்த சிறு வியாபாரிகள். மிதிவண்டிகளில் துணி மூட்டைகளை வைத்துக் கொண்டு செகந்திராபாத் ஹைதராபாத்தில் வெளிப்புற பகுதிகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்பவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை கண்டோன்மென்ட் பகுதியில் தமிழக ராணுவ வீரர்கள் குடும்பங்கள் அதையும் இவ்வகைத் துணிகளை வாங்குவார்கள் . பார்வையிடுவார்கள் பெரும்பாலும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு தான் இந்த துணி வியாபாரிகள் செல்வார்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்பது அவர்களின் வியாபாரத்தில் மிக முக்கியமான நாளாகும் .அதை விட்டுவிட்டு தமிழ் திரைப்படத்தை பார்க்க அவர்களை அவர்களில் பலர் அங்கு இருப்பது எனக்கு அதிசயமாகவே பட்டது. பிறகு அவ்வகைக் கூட்டத்தை பலர் பல சமயங்களில் பார்த்திருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
துணிமூட்டை வியாபாரிகள் என்னை பாதித்தார்கள்.அந்த சமயங்களில் அவர்கள் போல் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செகந்திராபாத்தில் இருந்தார்கள். பின்னால் நான் என் முதல் நாவலை எழுதுகிற போது அந்த சிறு துணி மூட்டை வியாபாரிகள் குடும்பங்களில் பற்றி எழுதினேன் அதுதான் என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர்,இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின் சில இந்திய ஆசிரியர்களுடைய பணி விலக்கப்பட்டது.
அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் (சின்னாளப்பட்டியைச் சார்ந்தவர்)ஹைதராபாத்திற்கு வந்து உறவினர் ஒருவருடன் வியாபாரம் செய்து வந்தார். அவர் பின்னால் தெலுங்கானா போராட்டம் ஒன்றில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது காவல்துறையால் தாக்கப்பட்டு அவரின் உடம்பு சீர்கேட்டது.
என்னதான் தமிழ், தெலுங்கு, உருது பேசக் கற்று இருந்தாலும் தெலுங்குப் பெண்ணையே கல்யாணம் செய்து இருந்தாலும் ஒரு தமிழன் எப்படி அந்த தெலுங்குப் பகுதியில் அந்நியனாக உணர்கிறான் என்பதை சொன்ன நாவல்தான் என்னுடைய முதல் நாவல் ‘மற்றும் சிலர்’.
என் முதல் நாவலை நர்மதா ராமலிங்கமும், அடுத்து வந்த பதிப்புகளை மருதாவும், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் வெளியிட்டார்கள்.
உங்களின் கதைமாந்தர்களின் நேரடி மற்றும் பிற்கால வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கவனித்து இருக்கிறீர்களா?
என் நாவலின் கதாபாத்திரங்களைக் கூர்ந்து பார்த்து அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். பின்னால் அவர்களை சந்திக்க வாய்ப்பு குறைவாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் என்னவானார்கள் என்பதைப் பற்றி நான் தகவல்களைத் தேடி அறிந்து இருக்கிறேன்.
கொங்குப் பகுதி மக்களிடம் ஆதிக்க சாதி உணர்வுகள் மேலோங்கி இருக்கிற விஷயத்தை தங்கள் நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அது பற்றி?
என்னுடைய பல நாவல்களிலும் சிறுகதைகளிலும் கொங்குப் பகுதி மக்களின் ஆதிக்க சாதி உணர்வுகள் பற்றி எழுதி இருக்கிறேன். என்னுடைய இளமையில் கிராமத்திலிருந்து திருப்பூர் நகரத்திற்கு குடி பெயர்ந்தது அது போன்ற சாதி உணர்வுகள் மேலோங்கிய காரணம்தான். அதைப்பற்றி ‘ஓடும் நதி’, ‘தேநீர் இடைவேளை’ உட்பட பலவற்றில் நான் பேசியிருக்கிறேன். அது ஒரு விவாதமாகவும் கிளம்பி இருக்கிறது. இன்றைக்கும் அவை உறை பனியாக உள்ளன.
அடுத்து தாங்கள் நாவல் எழுதும் பணியில் எந்த வகையான வகை நாவல்களை எழுதத் திட்டமிட்டீர்கள்?
இந்த நேர்காணல்கூட தங்களின் நாவல்கள் பற்றியதாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. எஸ்ஆர்வி பள்ளி விருதின்போது இடம் பெற்ற குறும்படத்தில் கூட தங்கள் நாவல்கள் பற்றிய குறிப்புகள் அதிகம் இருந்தன.
எஸ்ஆர்வி இலக்கிய விருதுக்காக தோழர்கள் தமிழ்ச்செல்வன், பாஸ்கர் சக்தி, துளசிதாசன் ஆகியோருக்கு இந்த நேர்காணல் மூலம் நன்றி தெரிவிக்கிறேன். எஸ்ஆர்வி இலக்கிய விருது பெற்றவர்களில் பலர் முக்கியமான நாவலாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் மூன்று நாவல்கள் புத்தக வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவை புத்தக வடிவம் பெற வேண்டும்.
சமீபமாய் திரைக்கதைகள் என்று என் சிறுகதைகள், நாவல்களை மையமாகக் கொண்டு திரைக்கதைகளை நான்கு நூல்களாக வெளியிட்டு இருக்கிறேன். அந்த நூல்களில் என்னுடைய வெளியான படைப்புகள் தவிர மற்றவையும் உள்ளன.
அந்த வெளியாகாத படைப்புகளை எடுத்துக்கொண்டு அந்தத் திரைக்கதையிலிருந்து நாவலாக்கும் எளிமையான முயற்சி செய்ய இருக்கிறேன். அவை பக்க அளவில் குறைவாகவும் எளிமையாகவும் இருக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். அப்படி இரண்டு நாவல்களை திரைக்கதையிலிருந்து நாவல் வடிவத்திற்கு கொண்டுவரும் பணியை சமீபத்தில் செய்திருக்கிறேன்.
அந்த வகை எளிமையான, திரைக்கதைகளிலிருந்து நாவலாகும் முயற்சிகள் எளிமையான வாசகர்களுக்கு சென்றடைய விரும்புகிறேன்.