மதுரை நம்பி
நூல் 1. இலங்கை ஜூலை 1983 இந்தியத் தமிழருக்கு எதிரான வன்முறை.
நூல் 2. இலங்கை மலையகத்தமிழர் மறக்கப்பட்ட மக்களா அல்லது அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சமூகமா?
இந்த இரண்டு நூல்களும் இலங்கை மலையகத் தமிழர்களின் வரலாறு குறித்தும் வதைகள் குறித்தும் வாழ்வியல் குறித்தும் விரிவாகப் பேசுகின்றன.
“அவன் நட்ட
ரப்பர் மரங்களெல்லாம்
நிமிர்ந்து நிற்கின்றன…
நடும்போது குனிந்தவன்தான்
இன்னும் நிமிரவே இல்லை.”
ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் குறித்து யாரோ எழுதிய வரிகள் இவை. இது வர்க்கச் சுரண்டலுக்குள்ளான தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமே. இரக்கமற்ற வர்க்கச் சுரண்டலுடன் இனவெறி வன்முறைக் கொடுமைகளுக்குமாளான மலையகத் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் துயரமிக்கது. இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது ஈழத் தமிழர்களைக் குறிப்பதாக மட்டுமே தமிழக மக்களின் பொதுப் புத்தியில் உள்ளது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் என்பவர்கள் வேறு, மலையகத் தமிழர்கள் ( இந்தியத் தமிழர்கள்) வேறு என்பதை இந்நூல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

நூலின் அத்தியாயங்களுக்குள் நுழைவதற்கு முன்பாக இந் நூலின் கதை என்று தலைப்பிட்டு எழுதியவை மிகச் சிறந்த எழுத்தாளரின் கைவண்ணமாக மிளிர்கிறது.ஒரு பதைபதைப்புக்கு உள்ளாக்கும் திரைப்படக்காட்சிபோல் ‘நூலின் கதை’ எழுதப்பட்டுள்ளது. அதில் ‘1983 முழு தெற்கும், மலையகமும் தீப்பற்றி எரியும்போது,மனிதாபிமானம் ஆங்காங்கே உயிர்த்து நின்று மனிதத்துக்கு அர்த்தம் சேர்த்துக்கொண்டிருந்தது.
தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் அகதிகள் முகாமுக்கு அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டுசேர்த்து, அவர்களைக் குண்டர்களோ, ஆயுதப்படையில் இருந்த இனவாதிகளோ தாக்கி விடாமல் பாதுகாத்து, அவர்களுக்கு உணவு சேகரித்து வழங்கி…இப்படியான ஆபத்தான பணிகளில் துணிவும் உதவும் மனமும் படைத்த சில சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஈடுபட்டு இருந்தனர். என்ற நம்பிக்கை ஊட்டும் அரிய தகவலையும் பதிவு செய்திருப்பது முக்கியமானதாக கருதப்படவேண்டி உள்ளது.
‘ஸ்ரீலங்கா ஜூலை 1983 இந்தியத் தமிழர்களுக்கு எதிரான வன்முறை’ என்ற தலைப்பில் இந்நூலாசிரியர் எழுதிய நூலின் வெளியீட்டு விழா தமிழகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற போதும் நூலாசிரியர் பி.ஏ.காதர் இலங்கை திரும்பி தனது அரசியல் பணியைத் தொடர வேண்டி இருந்ததால் பி.ஏ அஜந்தா என்ற புனைபெயருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு விழா மேடையில் ஏறாமல் இருந்தது எவ்வளவு வேதனையான விசயம்.
இனவெறி வன்முறைத்தாக்குதலின்போது உயிரை பணயம் வைத்து, சேகரித்த தகவல்களைப் பாதுகாத்து இலங்கை கடல் எல்லையைக் கடந்து இந்தியக் கடற்படையிடம் சிக்கியதை மர்ம நாவலைப்போல் விறுவிறுப்பாக எழுதிச் செல்கிறார் நூலாசிரியர். இந்தியக் கடற்படை அதிகாரி வடநாட்டுக்காரராக இருந்தபோதும், அவர் மனிதாபிமானத்துடனும் உணர்வுபூர்வமான அன்பை வெளிப்படுத்தியதையும், கஷ்டப்பட்டுத் திரட்டிய தகவல்களைப் பத்திரமாகச் சேர்ப்பித்ததையும், ஆனால் தமிழ்நாட்டு அதிகாரி ஒருவர் அலட்சியம் காட்டியதையும் வேதனையுடன் விவரிக்கிறார் நூலாசிரியர்.
ஹிந்தி பேசும் கடற்படையினர் தங்களது கட்டில்களை இவர்களுக்கு தந்துவிட்டு தரையில் படுத்துத் தூங்கியதை நன்றியுடன் சுட்டிக் காட்டியது மிக முக்கியமான செய்தியாக உள்ளது. தமிழர்களுக்கு எதிரான இனவெறி விசிறி விடப்படும் போதெல்லாம் மலையகத் தமிழர்கள் கொடுந்துயருக்கு ஆளாக வேண்டியிருந்ததை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
‘ஈழத் தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படாத சூழலில் இறுதிக் கோரிக்கையாகத் தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். 1977 ஆகஸ்ட் மாதம் 10 ஆயிரம் தோட்டப்புற இந்தியத் தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காகத் தாக்கப்பட்டன. உண்மையில் இவர்களுக்கு ஈழத் தமிழர்களின் அரசியலோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவர்களுக்கும் தமிழீழக் கோரிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை.அவர்களின் பெரும்பாலோர் அனேகமாக அனைத்தையும் அல்லது தம்மிடமிருந்த துணிமணி, பானை சட்டி, அரிதான சேமிப்புகளை நகைகளாக மாற்றி வைத்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் அர்த்தமற்ற தாக்குதலில் முழுமையாக இழந்தனர்.’
மலையகத்தில் போலீஸ் துறை இயன்றவரை தமிழர்களைக் காக்கும் பணியில் பல சமயங்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. ராணுவமும் சில இனவெறி அரசியல்வாதிகளும்தான் இந்தப் பயங்கரத்திற்குக் காரணமாக இருந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் பி.ஏ .காதர்.
‘தமிழர்கள் சாகிரா கல்லூரியில் தஞ்சம் புகுந்தனர். குண்டர்கள் கல்லூரியிலும் நுழைந்து தமிழர்களைக் கொல்ல முயன்றனர். சுமார் 50 முஸ்லிம் இளைஞர்கள் கைகளில் கத்திகள், வாள்கள், தடிகள் ஏந்தித் தமிழர்களை பாதுகாத்தனர்’ இஸ்லாமிய மக்கள் சிங்கள இனவெறியர்களிடமிருந்து இரவு, பகலாகப் பாதுகாத்தது மட்டுமல்லாமல் உணவு உள்ளிட்ட இதர உதவிகளையும் செய்துள்ளனர் என்பது மனிதாபிமானத்திற்கும் தன்னலமற்ற சேவைக்கும் எடுத்துக்காட்டாக இதுத் அமைந்துள்ளது. இனவெறி தலைக்கு ஏறிய வன்முறையாளர்கள் ஈவு இரக்கம் பார்க்காமல் படுபயங்கரமான, மனிதாபிமானமற்ற தாக்குதல்களைத்தான் எல்லா நாடுகளிலும் செய்து வருகிறார்கள். அதையேதான் மலையகத் தமிழர்களுக்கும் செய்திருக்கிறார்கள். அங்கேயும் வாக்காளர் பட்டியலைப் பார்த்துதான் தாக்குதலில் இறங்கி இருக்கிறார்கள்.
‘இக்கொடும் வன்செயல் தாக்குதல்களுக்குப் பின்னர், மறுவாழ்வு முயற்சிகளில் மனிதாபிமான அடிப்படையிலே சேவையாற்ற நூற்றுக்கணக்கான படித்த சிங்கள இளைஞர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்’ என்று பதிவு செய்திருப்பது நூலாசிரியரின் நேர்மையான மனதைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ஜூலை வன்செயல்களுக்குப் பெரும் காரண கர்த்தாவாக இருந்தவர் பெட்ரோல், கைத்தொழில் அமைச்சர் சிறில் மேத்யூவே ஆவார். ஓர் இன வெறியன் கையில் அதிகாரம் கிடைக்கும்போது அவன் எத்தனை அக்கிரமங்களையும் செய்யத் தயங்க மாட்டான் என்பதற்கு அவனும் ஓர் எடுத்துக்காட்டு என்பதை இந்த நூலில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.
உலகையே பதறச்செய்த வெளிக்கடைச் சிறையில் நடந்த தமிழர் படுகொலை பயங்கரத்தையும், யாழ் நூலகம் எரிக்கப்பட்டதையும் அதன் பின்னணியையும் பதைபதைக்க எழுதியிருக்கிறார் பி.ஏ.காதர். ஜூலை வன்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை இலங்கையின் அறிவுலகம் மதிக்கின்ற கலாநிதி நியூட்டன் குணசிங்க அவர்கள் எழுதிய நூலில் ‘ஜே .ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்த சந்தைப் பொருளாதாரம் தனியார் துறையை ஊக்கப்படுத்தியது, தனியாருக்கு இடையிலான சந்தைப் போட்டியில் அதுவரை சந்தர்ப்பம் மறுக்கப்பட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்தனர். இவர்களோடு சிங்கள வர்த்தர்களால் போட்டி போட முடியவில்லை. எனவே அவர்கள் தமிழர்களின் உயிரைவிட உடைமைகளை அழிப்பதில் ஆர்வமாக இருந்தனர்.அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்தச் சந்தர்ப்பம் 1983ல் கிடைத்தது அதுவேதான் தமிழர்களின் உடமைகளுக்கும் தொழில்களுக்கும் 1983ல் குறி வைக்கப்பட்டன”. என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல் நூலில் ஜூலை வன்செயல்களுக்கு அடிப்படைக் காரணங்களையும், அதனால் மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களையும் விரிவாக ஆதாரங்களுடன் விவரித்துள்ளார்.
நூல் 2-இல்… மலையகத் தமிழர் தமது வரலாறு முழுவதும் எவ்வாறு காலத்துக்கு காலம் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்களால் நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதைப் படம் போட்டுக் காட்டுவதே இந் நூலின் நோக்கம் என நூலாசிரியர் சொல்கிறார். அதை சிறப்பாகவே செய்தும் இருக்கிறார் நூலாசிரியர் பி.ஏ.காதர்.
‘இந்தியத் தமிழர்’அல்லது ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ஆகிய சொற்பதங்கள் மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் அர்த்தத்திலும் பயன்படுத்துவதோடு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இவர்களைப் பாரபட்சமாக நடத்துவதற்கும் சமூக ரீதியாக ஒதுக்குவதற்கும் துணை போகின்றன. அத்துடன் இச்சொற்பதம் மலையகத் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கும் சித்தாந்த அடிப்படையைக் கொண்டுள்ளது.’
இலங்கைப் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகக் கருதப்படும் தேயிலைத் தோட்டங்களையும் ரப்பர்த் தோட்டங்களையும் காப்பித் தோட்டங்களையும் தங்களது ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கிய தமிழர்களை, பல தலைமுறைகளாக மலையகத்தின் மண்ணோடு மண்ணாகக் கலந்து வாழ்ந்தவர்களை அந்த மண்ணின் மக்களாகக் கருதாமல் இந்திய வம்சாவளியினர் என அவர்களைக் குறிப்பிடுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் தொடக்கமாகக் கொள்ளலாம் என இந்நூலில் விவரிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 3,000 அடிக்கு மேல் காணப்படும் கிராமங்களும், நகரங்களும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பின் உருவானவையே. எனவே சிங்களர்களுக்கு அங்கே உரிமையில்லை என்பதையும் மலையகத் தமிழர்கள் தங்களது குருதி சிந்தி உருவாக்கிய பிரதேசங்களே அவை.எனவே மலையகம் தமிழர்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பிரதேசம் என நிறுவுகிறார் நூலாசிரியர்.
ஒரு தோட்டத் தொழிலாளியின் கல்லறையில் பொறிக்கப்பட்ட வாசகம் கல்நெஞ்சையும் கரையச் செய்யும் வகையிலும், அவர்களது தன்னம்பிக்கை யற்ற நிலையை விளக்குவதாகவும் உள்ளது. ‘ஏனென்று கேட்பதற்கு எனக்கெந்த அருகதையும் இல்லை. ஏனெனில் எம்பணி ஊழியம் செய்து மடிவதொன்றே’ தோட்டத் தொழிலாளர்களைக் கடன் பொறிவைத்துப் பிடித்துக் கடன் நுகத்தடியிலேயே வைத்துக் காலமெல்லாம் கடன்காரர்களாகவே வாழவைக்கும் கொடூரமான சுரண்டல் முறையையே ஆளும் வர்க்கம் பின்பற்றியதைத் தெளிவாக விவரிக்கிறார் நூலாசிரியர்.

பிரிட்டிஷாரின் ஆட்சியின்போது வர்க்க ஒடுக்கு முறை மட்டுமே இருந்தது. இலங்கை சுதந்திரம் பெற்று அதிகாரம் சிங்களவர்களின் கைக்கு மாறியவுடன் இன ஒடுக்குமுறையும் சேர்ந்து மலையக மக்களின் வாழ்க்கையைச் சூறையாடியதை ஆதாரங்களுடன் விளக்குகிறார். அது மட்டும் அல்ல பிரஜா உரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளதையும் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் பி.ஏ.காதர்.சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் உருவான பின்னணி குறித்தும், அதன்படி ஏராளமான மலையகத் தமிழர்கள் முன் அறிந்திராத இந்திய நாட்டிற்குப் பலவந்தமாக அனுப்பப்பட்டது குறித்தும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
மலையகத்தில் தாங்கள் உருவாக்கிய தோட்டங்களைச் சிங்களக் கிராமங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதற்காகத் தமிழ்த் தொழிலாளர்கள் வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொழிலாளர்கள் கீழ்ப்படிய மறுத்ததுடன் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் காணி ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இனவாத அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களை நிராகரித்தது மட்டுமல்லாமல், உணவு விநியோகத்தையும் துண்டித்துத் தமிழ்ப் பாடசாலைகளை மூடியும் பழி வாங்கினார்கள்.
ஆதரவற்ற தொழிலாளர்கள் இறுதியில் வெளியேற்றப்பட்டு நிராதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தையும் சொல்லும்போது மலையகத்தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் எனக் கொதிப்படைய வைக்கிறது. தற்போது, மலையகத்திலும் சில மேம்போக்கான முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் அது காலம் தாழ்ந்தேதான் கிடைத்துள்ளதாக நூல் ஆசிரியர் வாதிடுகிறார். மலையகத் தோட்டங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதும் சிங்களர்களுக்குத் தந்திரமாக நிலங்களை ஒப்படைப்பதும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதையும் அம்பலப்படுத்துகிறார்.
மலையகத்தில் நியாயமாகத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளும் சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்பதையும், தமிழ் இளைஞர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த ஒரே அரசுப் பணி ஆசிரியர் பணி மட்டுமே ஆகும். அதற்குக் காரணம் சிங்கள இளைஞர்களுக்குத் தமிழ்ப் பாடங்களைப் போதிக்க இயலாது என்பதே.அப்படித்தான் இந்நூலாசிரியரும் பள்ளி ஆசிரிராகியிருக்கலாம் என யூகிக்க முடிகிறது.
மலையகத்தில் தற்போது பெரும் பிரச்சனையாக இருப்பது உயர் கல்வியே. உயர் கல்வி பெறுவது பெரும்பாடாகவே உள்ளது. அதற்கான காரணங்களையும் நூல் ஆசிரியர் விவரிக்கிறார்.மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை பிரஜா உரிமை வழங்குவதும் பறிப்பதுமான நிலை இருந்துவந்துள்ளதையும், தற்போது அதற்கு நல்ல முடிவு ஏற்பட்டிருப்பதையும் நூல் ஆசிரியர் விவரிக்கிறார். ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது சம்பந்தமாக ஈழத் தமிழர்களின் தலைவர்களின் நிலை என்னவாக இருந்தது என்பது குறித்து எந்தப் பதிவும் இல்லாமல் இருப்பது ஒரு சிறு குறையே.
அதற்கு நூல் ஆசிரியரின் நல்லெண்ணம்கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதுவரை கவனம் பெறாமல், பெறாமலிருந்த மலையகத் தமிழர்களின் வரலாறும் அவர்களின் வாழ்வியலும் விரிவாகவும் ஆளமாகவும் இந்த நூலில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நூலைத் தன் அழகிய நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கமலாலயன் அவர்கள். அனைவரும் படித்துத் தெளிய வேண்டிய நூல் ‘இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள்’